பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 25, 2011

சோதனைமேல் சோதனை


சோதனைமேல் சோதனை போதுமடா சாமி!

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்கிற இந்தப் பாடல் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். ஒன்றன்மேல் ஒன்றாகக் கஷ்டங்கள் வரும்போது மூளை வேலை செய்ய மறுக்கிறது. எத்தனைத் துன்பங்களைத்தான் தாங்கமுடியும்.

"பீலிபெய் சாகாடும் அச்(சு) இறும், அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"

இந்தக் குறளின் பொருள் மெல்லியதான மயிலறகாயினும், அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறிந்துவிடும் என்பது. அதுபோலத்தான், அளவுக்கு அதிகமான, மனித மனம் தாங்கக்கூடிய அளவிற்கு மேலாகத் துன்பங்கள் வந்து சேர்ந்தால் மனம் பேதலித்து விடுகிறது. ஒரு துன்பத்தின் தொடர்ச்சியாக பல துன்பங்கள் வந்தால்கூட சமாளிக்கலாம்; ஆனால் வெவ்வேறு வழிகளில் புதிய துன்பங்கள் ஏற்படுமானால் எதனைத் தாங்குவது, எதனை ஒதுக்குவது?

ஒருவருக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தனவாம். ஒருவன் வீட்டில் வளர்த்து வந்த பசு என்று கன்று போடும் என்று காத்திருந்தான். பசு கன்று போடும்போது, விழித்திருந்து ஜாக்கிரதையாகப் பசுவையும் கன்றையும் கவனிக்க வேண்டும். அப்படி அன்று கன்று போட்ட செய்தி வந்ததும் ஓடிப்போய் மிகுந்த அக்கறையுடன் அதை கவனிக்கத் தொடங்கினர். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. மாட்டுக் கொட்டகை நீர் ஒழுகத் தொடங்க, கன்று போட்ட பசுவையும் கன்றையும் காப்பாற்றுவதற்காக அவற்றை வீட்டினுள் கொண்டு வந்து கட்டினார்கள். அப்போது வீடு இடிந்து விழுந்தது. உதவிக்கு வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரியைத் தேடினால், அவளுக்கு அந்த நேரம் பார்த்து உடல் நலம் குன்றி படுத்திருந்தாள். அப்போது கொட்டும் மழையில் ஒரு நபர் வந்து அவர்கள் பண்ணையில் பணிபுரியும் பண்ணையாள் இறந்து போனான் என்கிற செய்தியைக் கொண்டு வந்து சொல்கிறான். வயலுக்கருகில் கதிர் அடித்துக் களத்தில் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துவிடப் போகிறதேயென்று அவசர அவசரமாக அதை அள்ளி மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் கடன்காரன் வந்து வழிமறித்துக் கடனுக்கு அந்த நெல்லைக் கொடு என்று தொல்லை கொடுத்தான். அந்த நேரம் பார்த்து எவனோ ஒருவன் யார் வீட்டிலோ யாரோ இறந்து விட்டார்கள் என்ற துக்கச் செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தான். எங்கே வந்து கழுத்தை அறுப்பானோ என்று பயந்து கொண்டிருந்த வேண்டா விருந்தாளி அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைய, அந்த சமயம் பார்த்து வாயிற்படியில் படுத்திருந்த பாம்பு அவன் காலில் கொத்திவிட, வாசலில் அரசாங்க அதிகாரிகள் நிலவரியை உடனடியாகக் கொடு என்று சொல்லி வந்து நிற்க, அவ்வூர் புரோகிதர் தனக்கு வரவேண்டிய தட்சிணைப் பணத்தைக் கொடுங்கள் எனக்கு செலவு இருக்கிறது என்று நச்சரிக்க, அந்தக் குடும்பத் தலைவன் படும் பாட்டைச் சற்று சிந்தித்துப் பாருங்கள், எப்படியிருக்குமென்று. ஒரு புலவர் இந்த சூழ்நிலையைப் படம்பிடித்து ஒரு பாட்டைப் பாடிச்சென்றிருக்கிறார்.

"ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ,
அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக,
மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட,
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சா வோலை கொண்டு ஒருவன் எதிரே செல்லத்
தள்ள ஒண்ணா விருந்துவரச், சர்ப்பம் தீண்டக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!"

காய்ந்து சிவந்தது?

"காய்ந்து சிவந்தது சூரியகாந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்; தொல்பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம்; அனுதினமும்
ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இரு கரமே!"

இது வள்ளல் சீதக்காதியின் மீது படிக்காசுப் புலவர் பாடிய செய்யுள். சூரியகாந்தி மலர் வெயிலிற் காய்ந்து சிவந்தது; மின்னல்கொடி போன்ற இளம்பெண்கள் கண்கள் கூடலில் தோய்ந்து சிவந்தன; பாட்டிசைக்கும் பாவலர் மனம் பழமையான இலக்கியத்தில் தோய்ந்து செம்மை அடைந்தன. மேகம் போன்ற வரையாது வழங்கும் வள்ளல் சீதக்காதியின் கரங்கள் தானம் கொடுத்துக் கொடுத்துச் சிவந்தன என்பது இந்தப் பாடல்.

இதேபோன்ற பாடலொன்றை எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்று உங்களில் சிலர் யோசிக்கலாம். ஆம்! "கர்ணன்" திரப்படத்தில் கர்ணன் அவைக்களத்தில் ஒரு புலவர் பாடும் பாட்டாக இதைப் போன்ற பாடல் வருவதைக் கேட்டிருப்பீர்கள். "மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்" எனத் தொடங்கும் பாடல் தொகுதியை திருச்சி லோகநாதன் அவர்கள் பாடியிருக்கிறார். கேட்டுப் பாருங்கள்.

1 comment:

 1. வணக்கம் ஐயா,

  "ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ,

  இந்த பாடலை அடியேன் பலமுறை வகுப்புகளில் நடத்தியிருக்கிறேன்..

  ஒரு சில இடங்களில் எமக்கு புரியாத தகவல்களையும் புரிந்து கொள்ளும்படி
  சரியான விளக்கம் தந்திருக்கிறீர்கள்.

  மிக்க நன்றி..

  ReplyDelete

You can give your comments here