பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 7, 2011

டி.ஆர்.சுந்தரம்


மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி டி.ஆர்.சுந்தரம் என்ற பெயரை முந்தைய தலைமுறையினர் நன்கு அறிந்திருப்பார்கள். அங்கு தயாரான சில படங்களின் பெயர்களைச் சொன்னால் இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்வார்கள். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடத்தை நிறுவியவர்களுள் டி.ஆர்.சுந்தரம் ஒருவர். மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் பெயரில் சேலத்தில் உருவாக்கப்பட்டது இது. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக வெளி நகரம் ஒன்றில் உருவானது இது. அந்த நாட்களில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ முழு மூச்சில் இயங்கிக் கொண்டிருந்த நாட்களில் ஆண்டுக்கு மூன்று படங்களாவது இங்கு உருவாகிக் கொண்டிருந்தன. தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிப்படங்களும் இங்கு உருவாகின. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற மொழிகளில். முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. அந்தப் படம்தான் 'அலிபாபாவும் 40 திருடர்களும்". இதில் எம்.ஜி.ஆர்., பி.பானுமதி நடித்தனர்.
டி.ஆர்.சுந்தரத்தின் முழுப்பெயர் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் என்பது. பார்ப்பதற்கு ஐரோப்பியர் போல உடை அலங்காரம் எல்லாம் இருந்தாலும் அசல் பச்சைத் தமிழர் இவர். இவர் பிறந்தது 1907இல். பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. குடும்பத்தாருக்கு வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைத்து வந்தது. இவர் இங்கிலாந்து சென்று டெக்ஸ்டைல் பொறியியல் படிப்பு படித்தார். இந்தியா திரும்பியபின் தனது குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டாலும் திரைப்படத் துறை இவரது கவனத்தை ஈர்த்தது. இந்தத் துறையில் காலடி வைக்க ஒரு துணைவர் வேண்டியிருந்தது. எஸ்.எஸ்.வேலாயுதம் பிள்ளை என்பவருடன் கூட்டுச் சேர்ந்து ஏஞ்சல் பிக்சர்ஸ் எனும் திரைப்படக் கம்பெனியை சேலத்தில் துவக்கினார்.

அந்தக் காலத்தில் தமிழ்ப் படங்கள் வட இந்திய நகரங்களுக்குச் சென்றுதான் படப்பிடிப்பு நடத்துவார்கள். பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களுக்குப் போய் படம் எடுப்பார்கள். இவர்களும் கல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் கொடுத்த லாபத்தில் சேலத்தில் ஒரு சொந்தமான ஸ்டுடியோவை நிர்மாணித்தார்கள். சினிமா அறிமுகமாகிய தொடக்க காலம் என்பதால் அது என்ன கதை, என்ன படம் என்றெல்லாம் பார்க்காமல் மக்கள் அவற்றைப் பார்க்கத் துடித்ததால் இவர்களுக்கு லாபம் கிட்டியிருந்தது. சேலத்தில் அவர்கள் துவக்கிய ஸ்டுடியோதான் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ.

முதன் முதலாக இவர்கள் சொந்த ஸ்டுடியோவில் எடுத்த தமிழ்ப் படம் 1937இல் சதி அகல்யா என்பது. அதற்கடுத்த ஆண்டு முதல் மலையாளப் படம் எடுத்தார்கள்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தலானார். சினிமாவுக்கு உரிய ஏனோ தானோ வேலைகள், கால தாமதம், சத்தம் இவைகளெல்லாம் காணமுடியாத இடம் அது. அங்கு சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அவர்களுடைய குறிக்கோள் மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்க வேண்டுமென்பதுதான். திரைப்படம் மூலமாகப் பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திறுத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. சினிமா என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம், அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும், தேவையில்லாத மற்ற பிரச்சினைகள் அதற்குள் தலையிடாத வண்ணம் சாமர்த்தியமாக, ஜாக்கிரதையாக டி.ஆர்.சுந்தரம் அவற்றை நிறைவேற்றி வந்தார்.

இங்கு நடிக்க வந்தவர்களும் ஒரு கம்பெனி பணியாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் காண்ட்ராக்ட் முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, பிரபலமானவர்கள் பட்டியல் பெரிது. அவர்களில் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இவருக்கு ஒரு அமெரிக்க இயக்குனர் அமைந்தார். அவரது பெயர் எல்லிஸ் ஆர்.டங்கன். ஆங்கிலம் பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் எடுக்க டைரக்ட் செய்தது ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய படம் என்றால் அதற்கு ஒரு மரியாதை, வரவேற்பு இருந்து வந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை வைத்து 1950இல் ஒரு படம் எடுத்தார்கள். அதுதான் 'மந்திரிகுமாரி'. இந்தப் படத்தில் எஸ்.ஏ.நடராஜன் எனும் வில்லன் கதாநாயகியை அழைத்துக் கொண்டு ஒரு மலைமேல் ஏறி அவளைக் கீழே தள்ள ஏற்பாடு செய்து விட்டுப் பாட்டுப் பாடிக் கொண்டு போவார். அந்தப் பாடல் இன்று வரை ஹிட்டாக இருந்து வருகிறது. திருச்சி லோகநாதன் பாடிய "வாராய், நீ வாராய்" எனும் அந்தப் பாடலை விரும்பாதார் யார்? அதில் எம்.ஜி.ஆர். அவர்களின் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம், விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது.

மாடர்ன் தியேட்டர்ஸ் பல வெற்றிப் படங்களை எடுத்தார்கள். 1944இல் பர்மா ராணி, 1946இல் சுலோச்சனா, 1948இல் ஆதித்தன் கனவு, 1949இல் மாயாவதி, 1950இல் எம்.என்.நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார், 1951இல் சர்வாதிகாரி, 1952ல் வளையாபதி, 1960இல் பாக்தாத் திருடன், முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும். இவர் எடுத்த சில படங்கள் விவரம் வருமாறு: தட்ச யக்ஞம், கம்பர், தாயுமானவர், மாணிக்கவாசகர், உத்தமபுத்திரன், பக்த கெளரி, தயாளன், மனோன்மணி, செளசெள, பர்மா ராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், மந்திரிகுமாரி, பொன்முடி, சர்வாதிகாரி, தாய் உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலைகொடுத்தான் தம்பி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், குமுதம், கொஞ்சும் குமரி, அம்மா எங்கே?, வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா, நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி.சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம் இப்படிப் பல படங்கள் உண்டு.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தைச் சித்தரிக்கும் பர்மா ராணி, தமிழிலக்கியத்தில் புகழ்பெற்ற வளையாபதி, இவற்றோடு சிறுவர்களுக்கான கதை அலிபாபா இவற்றை மிகவும் சுவாரசியமாக ரசிக்கும்படி படம் எடுத்திருந்தார்கள். ஆர்.எஸ்.மனோகரை வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களை எடுத்திருக்கிறார்கள். ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த ஸ்டுடியோவின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள். கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தொடக்க காலத்தில் இங்குதான் தங்கி பாடல்கள் எழுதிவந்தனர். 1963இல் டி.ஆர்.சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் ஒரு திருமண மண்டபமாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஸ்டுடியோவினால் சேலத்தின் பெருமை நாடெங்கும் பரவியிருந்தது. 

2 comments:

  1. kalaingar pugaz petathu kooda salem modern theaters than.

    ReplyDelete
  2. kalaingar pugaz petathu kooda salem modern theaters than.

    ReplyDelete

You can give your comments here