பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 17, 2011

"ஆளவந்தார் கொலை வழக்கு".

"ஆளவந்தார் கொலை வழக்கு".

1950களில் தமிழ் நாட்டை உலுக்கிய ஒரு கொலை வழக்கு "ஆளவந்தார் கொலை வழக்கு". ஆளவந்தார் என்பவர் யார் என்பதைப் பார்ப்போம்.

சென்னை ஆவடியில் ராணுவ இலாகாவில் பணியாற்றியவர் இவர். கோமுட்டி செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இவர்கள் பொதுவாக வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். மாறாக இந்த ஆளவந்தார் என்பவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1939லிருந்து 1945 வரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இவர் ராணுவத்தில் இருந்திருக்கிறார். யுத்தம் முடிந்து ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகு ஏதாவது தொழில் செய்து பிழைக்கக் கருதி அப்போது அறிமுகமாகியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார்.

இப்போது வேண்டுமானால் தொட்டதெற்கெல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் என்றாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் முதன் முதலாக அறிமுகமான காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரும்புப் பொருட்கள் போல கனமும் இல்லை, காகிதம் போல மெல்லியதாகவும், தூக்கிச் செல்ல இலகுவாகவும் இருந்தது. விைலையும் அதிகமில்லை. இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையைத் தொடங்கினார் ஆளவந்தார். அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை (சைனா பஜார்) பகுதியில் ஜெம் அண்டு கோ எனும் பேனா கம்பெனி இருந்தது. அந்த கடையின் வாயிலில் சிறிய இடமொன்றை இவர் வாடகைக்குப் பிடித்துக் கொண்டார்.

வியாபாரி என்றால் ஒரே பொருளில் மட்டுமா கவனம் செலுத்துவார்கள். எளிதில் லாபம் கிடைக்கும் மற்ற பல தொழில்களையும் நாடுவார்கள். இவரும் மாதத் தவணை முறையில் புடவைகளை விற்கத் தொடங்கினார். இப்போதெல்லாம் தவணை முறை வியாபாரம் பழகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் அது புதிது. அறிமுகமான புதிதில் ஒரு சிறு தொகை கொடுத்து ஒரு பொருளை வாங்கிக் கொண்டு மாதத் தவணையில் மீதியைக் கொடுப்பது வாங்குவோருக்கும் சுலபமாக இருந்ததால் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதால் கிடைத்த ஓய்வூதியம் தவிர, வியாபாரத்தில் கிடைத்த வருமானம் இதில் அமைதியாக வாழ்ந்திருக்கலாம். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். இவ்வளவு நல்ல சூழ்நிலையில் இவரிடம் இருந்த ஒரு மிக மோசமான, பெரும்பாலான ஆண்களை அழிக்கும் ஒரு பழக்கம் பெண்கள் சகவாசம், அது இவரிடம் அதிகமாகவே இருந்தது. தனது ஆண்மையில் இவருக்கு அதீதமான பெருமை. தன் திறமைக்காகவே தன்னிடம் பல பெண்கள் வந்து விழுவதாக நினைத்துக் கொண்டார். இந்த ஒரு தீயபழக்கம் போதாதென்று போதைப் பொருள் பழக்கமும் இருந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் இரவு.......

ஆளவந்தாரின் மனைவி தன் கணவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கவலையுடன் அவர் கடை இருக்கும் சைனா பஜார் ஜெம் அண்டு கோவுக்குச் சென்று விசாரித்தார். அங்கு அவர் இல்லை. அங்கிருந்தவர்கள் சொன்ன விஷயம், அவர் ராயபுரத்தில் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்க போனவர் அப்புறம் திரும்ப வரவேயில்லை என்ற பதில்தான். ராயபுரத்தில் இவர் யாரைப் பார்க்கப் போனார்? மனைவிக்குக் கவலை. மேலும் விசாரித்ததில் தேவகி என்ற பெண்ணைப் பார்க்கப் போனார் என்று சொன்னார்கள்.

யார் அந்த தேவகி? கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் இந்த தேவகி. அழகும் இளமையும் கொஞ்சி விளையாடும் பருவம் அவளுக்கு. கல்லூரியில் படித்தவள், நன்றாக உடை உடுத்தி கெளரவமாகத் தோற்றமளிப்பாள். தான் சமூக சேவகர் என்று மற்றவர்களிடம் சொல்லி வந்தார். இவர் ஒரு முறை ஜெம் அண்டு கோவுக்கு பேனா வாங்க வந்தபோது அங்கு ஆளவந்தாரைச் சந்தித்து நண்பர்கள் ஆனார்கள். அப்படித் தொடங்கிய நட்பு நாட்பட நாட்பட இன்ப உறவாக மாறியது. பெண்களோடு தொடர்புடைய ஆளவந்தாருக்கு இந்தப் பெண் நூறோடு நூற்றியொன்றுதான். இதை ஆளவந்தார் ஒரு பெருமையாகவே நினைத்துக் கொள்வதோடு தெரிந்தவர்களிடம் தன்னுடைய சாதனைகளைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதும் உண்டு.

இவருடைய இந்தப் பெண்ணாசை காரணமாகவே இவர் புடவை விற்பனையில் ஈடுபட்டார். அப்போதுதானே பெண்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டேயிருக்கும். ஹாஸ்டலில் தங்கிப் படிப்போர், வேலைக்குப் போவோர், நர்சுகள் போன்றவர்கள்தான் இவரிடம் புடவை வாங்கும் வாடிக்கையாளர்கள். இவர்கள் தவிர பொழுது போகாமல் கடைகளைச் சுற்றி வரும் குடும்பப் பெண்களும் இதில் அடங்குவர். தவணைப் பணம் பலராலும் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகக் கொடுக்க முடியாது. அதனால் இவர் ஒரு சலுகையை அறிவித்தார். மாதத் தவணை கொடுக்க இயலாமல் போனால் பரவாயில்லை, தன்னோடு அந்தரங்கமாக இருக்க அழைப்பார். வருபவர்களை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் இருந்த ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்குவார்கள். பெரும்பாலும் அங்கு பொய்யான பெயர்களையே கொடுத்துவிட்டுத் தங்குவார்.

கதை இப்படிப் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் ஆளவந்தார் காணாமல் போனார், அவர் மனைவி ஜெம் அண்டு கோவுக்கு வந்து அவரைத் தேடத் தொடங்கினார். இந்த நிலையில் அந்த அம்மையாரை விட்டுவிட்டு நாம் இப்போது வேறு இடத்துக்குப் போவோம். ஒரு நாள் காலையில் சென்னை ராயபுரம் கடற்கரையில் ஒரு தலை கரை ஒதுங்கியது. ஆளவந்தாரைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் இதனைக் கேள்விப்பட்டு ஓடிப் போய்ப் பார்த்தார். அடையாளம் தெரியவில்லை. ஒரு சில நாட்கள் கழிந்து சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் போட் மெயில் எனும் விரைவு ரயிலில் மானாமதுரை ரயில் நிலையத்தில் ஒரு டிரங்க் பெட்டி வந்து சேர்ந்தது. அதில் தலை இல்லாத ஒரு முண்டம் அடைக்கப்பட்டிருந்தது. போலீசுக்கு மானாமதுரை உடலும், ராயபுரம் கடற்கரை தலையும் ஒருங்கிணைக்க வெகு நேரம் ஆகவில்லை. ஒருவழியாக ஆள் அடையாளம் தெரிந்தது. அந்த உடல் ஆளவந்தாருடையதுதான் என்பது நிச்சயமானது.

இறந்து போனது ஆளவந்தார் என்பது தெரிந்ததும் அவரைப் பற்றியும் அவருடைய தொடர்புகள் பற்றியும் போலீஸ் தீவிரமாக விசாரித்த போது அவருடைய பெண்கள் தொடர்பும் தெரிய வந்தது. உடனே அவருக்குத் தொடர்பு இருந்த பெண்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினரும் விசாரணைக்குள் வந்தனர். அப்படி விசாரிக்கும் போதுதான் இந்த ஆள் எப்படிப்பட்ட பெண் பித்தன் என்பதும் இவனுக்கு எத்தனை பெண்களுடன் தொடர்பு என்பதெல்லாம் தெரிய வந்தது. இப்படி ஆளவந்தாரின் பெண் தொடர்புகளை யெல்லாம் விசாரித்து வரும்போது தேவகி என்ற மலையாளத்துப் பெண்ணுடனான தொடர்பும் தெரிய வந்தது. உடனே அந்தப் பெண்ணையும், அவள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் விசாரிக்கத் தொடங்கினர்.

அப்போது தேவகி மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடாகியிருப்பதும், அந்தச் செய்தி ஆளவந்தாருக்கும் தெரிந்தது என்பதும் தெளிவானது. ஆனால் இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது, தேவகியுடனான தன்னுடைய தொடர்பு நின்றுவிடக்கூடாது, அதற்கு இடையூறாக வரவிருக்கும் இந்தத் திருமணம் எப்படியாவது நிற்க வேண்டுமென ஆளவந்தாருக்கு வெறி. தேவகியிடம் தங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவை வெளியிட்டுவிடுவேன். திருமணத்தைத் தடுத்து நிறுத்தி விடுவேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டி வந்திருக்கிறார்.

இவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் எங்கே இந்த ஆள் திருமணத்துக்குப் பின் தொல்லை கொடுத்துவிடுவானோ என்று முன்கூட்டியே மேனனிடம் தன்னுடைய விஷயத்தையெல்லாம் தேவகி சொல்லிவிட்டாள். உண்மைகளைக் கக்கிவிட்டாள். உடனே அந்த வருங்கால கணவன் மேனன் ஒரு முடிவுக்கு வந்தார். இந்த ஆள் உயிருடன் இருந்தால்தானே உனக்கு இதுபோன்ற தொல்லைகளைக் கொடுத்து வருவான், இவனை ஒரு வழிபண்ணி தீர்த்துக்கட்டிவிட்டால்? இந்த யோசனை இருவருக்கும் பிடித்திருந்தது. தேவகிக்கும் இதில் சம்மதமே. உடனே திட்டம் தயாரிக்கப்பட்டது.

தேவகி ஆளவந்தாரிடம் நைச்சியமாகப் பேசி ஆசை வார்த்தைகள் சொல்லி மெதுவாக அவளுடைய இருப்பிடத்துக்கு அழைத்து வரவேண்டியது. அப்படி அவன் வந்து இவர்கள் வலையில் தானாக சிக்கிக் கொள்ளும்போது மீதி விஷயங்களை முடித்துவிட வேண்டியது. இதுதான் அவர்களது திட்டம். என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், திறமைசாலியாக இருந்தாலும் பெண்பித்து என்று இருந்துவிட்டால், ஒரு பெண்ணின் புன்னகையில், அவளது இனிக்கும் பேச்சில் மயங்கி அவள் இழுத்த இழுப்புக்கு போகாத ஆண்களே இருக்க முடியாது. அதிலும் ஆளவந்தார் போன்ற மிகக் கேவலமான பெண்பித்தனைப் பற்றி கேட்க வேண்டுமா? தேவகி ஆசையோடு கூப்பிட்டதும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவள் பின் போனான்.

அங்கு போனதும் அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும். அங்கு மேனன் மற்ற விஷயங்களைக் கச்சிதமாக முடித்து விட்டான். கொன்றபின் ஆளவந்தாரின் தலையை மட்டும் தனியாக வெட்டியெடுத்து வங்கக் கடலில் வீசிவிட்டார்கள். கடலுக்குள் போடப்பட்ட தலையை மீன்கள் விட்டுவைக்கவா போகின்றன என்கிற தைரியம் அவர்களுக்கு. ஆனால் என்ன துரதிர்ஷ்டம், அந்தத் தலை முழுமையாக கரை ஒதுங்கி இவர்களைக் காட்டிக் கொடுக்க வாய்ப்பளித்து விட்டது. தலையில்லாத முண்டத்தை எப்படி அடையாளம் காண்பார்கள், அதிலும் அந்தத் தலை நானூறு ஐனூறு மைல்களுக்கு அப்பால் போய்ச்சேர்ந்து விட்டால், உடனே தலையற்ற அவனுடைய முண்டம் ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஏற்றப்பட்டது. இருவரும் மன நிம்மதியோடு வீடு திரும்பி விட்டார்கள், தலை கடலிலும், முண்டம் ரயிலிலும் போய்விட்டது என்ற மனத் திருப்தியுடன்.

இவ்வளவும் ஆன பிறகு இங்கு இருப்பதும் ஆபத்து என்று எண்ணி அவ்விருவரும் பம்பாய்க்கு ரயிலேறிவிட்டார்கள். ஆனால் பாவம், இவர்கள் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைத்து விட்டான். தலையும் கிடைத்தது, முண்டமும் கிடைத்தது, இரண்டும் ஒரே ஆளுடையது என்பதும் தெரிந்தது. அந்த நாளில் தமிழக போலீஸ் மகா திறமைசாலிகளைக் கொண்டது. ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது. விடுவார்களா, கண்டுபிடித்து விட்டார்கள். தோண்டித் துருவி, ஆளவந்தாரின் தொடர்புகளை மோப்பம் பிடித்துக் கொண்டு போய் தேவகியிடம் போய் நின்றது. ராயபுரத்தில் தேவகியைத் தேடினால், அவர்கள்தான் ஓடிவிட்டார்களே. மறுபடியும் தேடுதல் வேட்டை, மேனனும் தேவகியும் போலீசின் பிடியில் சிக்கினார்கள். சென்னையில் வழக்கு நடந்தது.

அப்போதெல்லாம் நம் நாட்டில் இதுபோன்ற வழக்குகளில் ஜூரிகள் இருப்பார்கள். அவர்கள் வழக்கின் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வருவார்கள். அவ்வப்போது அவர்களுக்கு நீதிபதிகளும் சில விளக்கங்களை அளிப்பார்கள். வழக்கின் முடிவில் ஜூரிகள் இவர்களைக் குற்றவாளிகள் என்று தங்கள் அபிப்பிராயத்தை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழ்பெற்ற ஏ.எஸ்.பி.அய்யர். இந்த வழக்கை முழுமையாக கவனித்து, குற்றவாளிகள் இருவரின் வரலாற்றையும், கொலையுண்ட ஆளவந்தாரின் நடவடிக்கை, ஒழுக்கம் இவற்றையும் மிகத் துல்லியமாகக் கணித்து ஆளவந்தாரினால் மேனனும் தேவகியும் பட்ட தொல்லைகள், மனவருத்தம், திருமணத்தை நடத்த விடாமல் அவன் செய்த மிரட்டல்கள் இவற்றையெல்லாம் அவர் கவனமாகப் பரிசீலித்தார்.

இறுதியில் அவருடைய அனுதாபம் தேவகியின் மீதும், மேனன் மீதும் ஏற்பட்டது. ஆளவந்தார் என்பவன் ஒரு சமூக விரோதி அவன் கொலையுண்டதை கொலை என்பதை விட அவனுடைய அடாவடித்தனத்துக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனை என்றும் முடிவு செய்தார். ஆகவே அவ்விருவருக்கும் ஒரு சில ஆண்டுகள் தண்டனை மட்டும் கொடுத்துத் தீர்ப்பு கூறினார். அவர்களும் சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின் வெளியே வந்து திருமணம் செய்துகொண்டு கேரளாவுக்குச் சென்று விட்டனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியின் கருணையை நினைத்து அவரை வாழ்த்தியிருப்பார்கள். கேரளாவில் ஏதோ தொழிலில் ஈடுபட்டு நல்ல வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். இந்த வழக்கு குறித்து பிரபல எழுத்தாளர் ராண்டார்கை என்பவர் மிக விரிவாக எழுதியிருக்கிறார். 

1 comment:

  1. sir, ithula character names change panniyirukkeenga... name neenga solrathu sariyaa, illa avunga solrathu sariyaanu paartthukkonga... matrabadi superb!...

    ReplyDelete

You can give your comments here