பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 14, 2011

கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு

இந்த ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் மூவரில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர். பன்முகத் திறமை படைத்த கொத்தமங்கலம் சுப்பு திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல், எழுத்தாளராக, பாடலாசிரியராக, திரைக்கதை வசனம் எழுதுபவராக, நடிகராக, இயக்குனராக, பத்திரிகையாளராக, வில்லுப்பாட்டுக் குழுவின் தலைவராக இப்படிப் பல துறைகளிலும் சிறந்து விளங்கிய மேதை. இவருடைய பெருமைக்கு ஒரே ஒரு சாம்பிள் இவர் எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" எனும் கதை. அது பின்னர் திரைப்படமாக வந்து தமிழ்நாட்டையே பிரமிக்க வைத்தது. அதில் சிக்கில் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும், மோகனாம்பாளாக பத்மினியும் வந்து அந்தந்த கதா பாத்திரங்களாக வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் தவிர நாகேஷ் சவடால் வைத்தியாகவும், பாலையா, சாரங்கபாணி போன்றோரும் உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக நடித்து அந்தக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மிக பிரம்மாண்டமான படங்களை கலை நயத்தோடும், சிறப்பாகவும் எடுத்துப் பெருமை பெற்ற 'ஜெமினி' படத்தயாரிப்பு நிறுவனத்தில் அதன் ஸ்தாபகர் எஸ்.எஸ்.வாசனுக்கு அடுத்தபடியான நிலையில் இருந்து பணியாற்றி பெருமை சேர்த்தவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.

இத்தனைப் புகழுக்கும் காரணமான கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை மகாலிங்க ஐயர் தாயார் கங்கம்மாள். இவர் 1910 நவம்பர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இளம் வயதில் இவர் தாயாரை இழந்துவிட்டார். கிராமத்தில் இவர் எட்டாம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. இளம் வயதில் தனது உறவுக்காரப் பெண்ணை மணந்துகொண்டு கொத்தமங்கலத்தில் ஒரு மரக்கடையில் பணிபுரிந்தார். வியாபாரத்தில் இவரது மனம் ஈடுபடாமல் நாடகம், நடிப்பு, பாட்டு இயற்றுதல், பாடுதல் என்று இவருடைய கவனம் திசை திரும்பியது. காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில் நடந்து கொண்டிருந்த ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து இவர் நடித்தார்.

அந்தக் காலத்தில் "ஹனுமான்" என்ற பெயரில் ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் சுப்பு எழுதினார். அப்போதுதான் தமிழில் திரைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார்கள். முதன்முதலாக பம்பாயில் எடுக்கப்பட்ட "பட்டினத்தார்" எனும் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் இவருக்குச் சென்னையிலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "மைனர் ராஜாமணி", "அநாதைப் பெண்" போன்ற படங்களி, சிறு பாத்திரங்களில் நடித்தார். அதில் எல்லாம் இவருடைய பெயர் சுப்பிரமணியன் என்றுதான் இருந்தது. 1939இல் திருநீலகண்டர் எனும் படத்தில் நடிக்கும் போதுதான் இவருடைய பெயர் கொத்தமங்கலம் சுப்புவானது. கொத்தமங்கலம் சீனு என்று ஒருவர் திரைப்படத் துறையில் இருந்தவர். அவர்தான் இவரை டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தவர். அவருடைய படமான "பக்த சேதாவிலும்", "கச்சதேவயானி" எனும் படத்திலும் இவர் நடித்தார்.

1941இல் டைரக்டர் சுப்பிரமணியம் மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு விற்ற போது கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினிக்குள் நுழைந்தார். அப்போது இவருக்கு ஊதியம் மாதம் 300 ரூபாய். ஜெமினியில் இவரது முக்கியத்துவம் வளர்ந்துகொண்டே வந்தது. ஜெமினி கதை இலாகாவில் இவர் ஒரு முக்கியமான நபர். சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது. ஜெமினியில் இவர் ஒரு நடிகராக மட்டுமல்ல, இயக்குனராக, கதை வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக இப்படி பல அவதாரங்களை எடுத்தார். இவர் அங்கு நான்கு படங்களை இயக்கினார், ஏழு படங்களுக்கு திரைக்கதை எழுதினார், சுமார் பத்து படங்களுக்கு வசனம் எழுதினார், இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்களை எழுதினார்.

இவரது வாழ்க்கையில் திரைப்பட இயக்குனராக சாதனை புரிந்தது என்பது ஒளவையார் எனும் படத்தின் மூலம்தான். மொத்தத்தில் இவர் உதவி இயக்குனராக இருபது படங்களுக்கும், 18 படங்களில் நடித்தும் இருக்கிறார். ஒளவையார் படத்தில் புகழ்பெற்ற நாடக நடிகையாக இருந்த கே.பி.சுந்தராம்பாள் ஒளவையாராக நடித்தார். பிரபல ஹாலிவுட் கம்பெனியாரின் படங்களைப் போல பிரம்மாண்டமான செட்டுகள் போட்டு ஜெமினி தயாரித்தது இந்தப் படம். இதில் யானைக் கூட்டம் திரண்டு வந்து கோட்டையை முற்றுகையிட்டு உடைப்பதாக ஒரு காட்சி. இன்றுகூட அதுபோன்ற ஒரு காட்சியைப் படமாக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அப்படிப்பட்ட அருமையான காட்சி அந்தக் காலத்தில். நினத்தாலே பிரமிக்க வைக்கிறது.

இந்தப் படத்தில் கொத்தமங்கலம் சுப்புவே ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது வாழ்க்கையிலும் மனைவியாக அமைந்த சுந்தரிபாய் இவரது மனைவியாக அந்தப் படத்தில் நடிப்பார். அந்தக் காட்சி இலக்கியத் தரம் வாய்ந்தது. ஒளவையார் ஊர் ஊராக அலைந்து திரிந்து வந்த காலத்தில் ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவனைப் பார்க்கிறார். அந்த விவசாயிதான் கொத்தமங்கலம் சுப்பு. அவரிடம் ஒளவையார் தனக்குப் பசிக்கிறது சிறிது உணவு கொடு என்கிறாள். அந்த விவசாயிக்கு இந்தப் பாட்டிக்கு உணவு அளிப்பதில் சம்மதம் தான். ஆனால் அவருடைய மனைவி ஒரு அடங்காப்பிடாரி. அவளை எப்படிச் சமாதானப் படுத்தி இந்தப் பாட்டிக்கு உணவளிப்பது. இருந்தாலும் முயன்றுவிடலாம் என்று விவசாயி ஒளவைப் பாட்டியை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் செல்கிறான்.

ஒளவையை வாயில் திண்ணையில் உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று தன் மனைவிக்கு தலை வாரி, பேன் எடுத்து அவள் நல்ல மனநிலையில் இருக்கும் நேரம் பார்த்து நம் வீட்டுக்கு உணவருந்த ஒரு விருந்தாளியை அழைத்து வந்திருப்பதாகச் சொல்கிறார். அவ்வளவுதான். அந்தப் பெண் அடங்காப்பிடாரி ஆடினாள், குதித்தாள், பாத்திரங்களைப் போட்டு உருட்டினாள். அத்தனையையும் தாங்கிக் கொண்டு அவன் ஒளவைக்கு எப்படியாவது உணவு கொடுத்தால் போதும் என்று கெஞ்சுகிறான். இறுதியில் அவள் சற்று மனமிரங்கி வேண்டா வெறுப்பாக ஒரு இலையைக் கொண்டு வந்து வீசிவிட்டு அதில் சோற்றை ஆத்திரத்துடன் இட்டு ஒளவையைச் சாப்பிடச் சொல்கிறாள். ஒளவைப் பாட்டியின் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா? மெல்லச் சிரித்து உணவு உட்கொள்ளாமல் எழுந்து கொள்கிறாள். அந்த விவசாயியைப் பார்த்துப் பரிதாபப்பட்டு கணவனுக்கு அடங்கிய நல்ல மனைவியாக இருந்தால் சம்சாரம் செய்யலாம், சற்றே ஏறுமாறாக இருப்பாளேயானால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று ஒரு பாட்டைப் பாடிவிட்டுப் போய்விடுவாள். இந்தக் காட்சியில் சுப்புவும், சுந்தரிபாயும், ஒளவையாக கே.பி.சுந்தராம்பாள் அவர்களும் நடித்த காட்சி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாது.

இந்தப் படம் தவிர கொத்தமங்கலம் சுப்பு கண்ணம்மா என் காதலி எனும் படத்தையும் இயக்கினார். அதிலும் சுந்தரிபாய் நடித்தார். இவருடைய முதல் மனைவி சொந்தக்காரப் பெண் என்பதைப் பார்த்தோம் அல்லவா, திரைத்துறைக்கு வந்ததும் அங்கு நடித்துக் கொண்டிருந்த சுந்தரிபாயை இவர் இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தார். மிஸ் மாலினி என்றொரு படம். அதில் சுப்புதான் கதாநாயகன். இந்தப் படம்தான் இந்தியில் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இது ஒரு நகைச்சுவைப் படம். ஆர்.கே.நாராயண் எனும் புகழ்மிக்க எழுத்தாளரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம்.

தாசி அபரஞ்சி என்றொரு படம். இதிலும் சுப்புவும் சுந்தரிபாயும் நடித்திருக்கின்றனர். ஜெமினி படங்கள் தவிர இவர் திருநீலகண்டர் எனும் படத்திலும் பாவ மன்னிப்பு படத்திலும் கூட நடித்திருக்கிறார். ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் ஒரு முக்கிய எழுத்தாளர். இவர் பல கதைகள், நாவல்கள் எழுதியிருந்த போதிலும் இவருடைய "தில்லானா மோகனாம்பாள்" இவரை புகழின் உச்சிக்கே அழைத்துச் சென்று விட்டது. அது தவிர இவர் எழுதிய "மோட்டார் சுந்தரம்பிள்ளை", "ராவ்பகதூர் சிங்காரம்", "பந்தநல்லூர் பாமா", "பொன்னிவனத்துப் பூங்குயில்", "மிஸ் ராதா", "மஞ்சுவிரட்டு" (சிறு கதைத் தொகுப்பு) போன்ற கதைகளையும் எழுதினார். இவற்றில் சில திரைப்படமாகவும் வந்தன.

தில்லானா மோகனாம்பாள் கதைக்காத கொத்தமங்கலம் சுப்புவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இந்தக் கதைகளையெல்லாம் இவர் கலைமணி என்ற பெயரில் எழுதினார். இவருடைய நகைச்சுவை உணர்வும், எழுதும் திறமையும் இவருக்கு பெயரும் புகழும் கிடைக்கக் காரணமாயின. இவர் எழுதி வில்லுப்பாட்டாகப் பாடிய "காந்திமகான் கதை" பெரும் வரவேற்பைப் பெற்றது. மகாத்மா காந்திஜியின் வரலாற்றை கிராமப்புற பாணியில் பாடல்களாக அமைத்துப் பாடப்பெற்ற இந்த கதையைக் கேட்டு மகிழாதவர்கள் இல்லை. இந்தக் கதையை நடத்திக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு சுப்பு சில இடங்களில் கண்ணீர் விட்டு அழுததும் உண்டு. இவருடைய மனைவி சுந்தரி பாய் மிகவும் திறமை வாய்ந்த நடிகை. வில்லியாகவும், குடும்பத் தலைவியாகவும் இவர் பல படங்களில் தூள் கிளப்பியிருக்கிறார். பிரபல எழுத்தாளர் த.ஜெயகாந்தனின் "அக்னிப் பிரவேசத்தில்" கதாநாயகியின் தாயாராக மிக யதார்த்தமாகத் தன் நடிப்பின் மூலம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். பழைய ஜெமினி படங்களில் இவர் ஒரு நிரந்தர நடிகை.

இவர் வாழ்க்கையில் இவரே மிகவும் அனுபவித்துப் பாடி மக்கள் கவனத்தைக் கவர்ந்தது "காந்திமகான் கதை" எனும் வில்லுப்பாட்டு. பாட்டையும் இவரே எழுதி, வில்லுப்பாட்டாகவும் இவரே பாடிவந்தார். நாட்டுப்புற இசைவடிவத்தில் அமைந்த இந்த வில்லுப்பாட்டு காந்தி மகானின் வாழ்க்கையை விவரிக்கக்கூடியது. இவருக்கு நாட்டுப்புற இசை வடிவம் மிகவும் கைவந்த கலை. தென் தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கிய வில்லுப்பாட்டுக் கலை மூலம் இவர் பல அரிய வரலாறுகளை மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இவருடைய மனைவியும் திரைப்பட நடிகையுமான சுந்தரிபாய் மிக சாமர்த்தியமான நளினமான நடிப்புக்குப் பெயர் பெற்றவர். இவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்கள் மிக எதார்த்தமாக இருக்கும். கண்ணம்மா என் காதலி, சுமதி என் சுந்தரி, சந்திரலேகா, பாமா ருக்மிணி, ஒளவையார் ஆகிய படங்களில் இவரது நடிப்பு தூள் கிளப்பியதை அனைவரும் அறிவர்.

இந்த 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்த நூற்றாண்டு. சென்னையில் இவரது குடும்பத்தார் இவருக்கு மிகச் சிறப்பாக ஒரு விழா எடுத்து இவரது நினைவுகளைப் போற்றியிருக்கின்றனர். இவர் பாடல்கள் எழுதிய படங்களின் வரிசை: 1939 அதிர்ஷ்டம், 1940 பக்தசேதா, 1941 மதனகாமராஜன், 1942, நந்தனார் (பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன), 1943 மங்கம்மா சபதம், 1944 தாசி அபரஞ்சி, 1945 கண்ணம்மா என் காதலி, 1947 மிஸ் மாலினி, 1948 ஞானசெளந்தரி, சந்திரலேகா, சக்ரதாரி, 1949 அபூர்வ சகோதரர்கள், 1951, சம்சாரம், அண்ணி, 1952, மூன்று பிள்ளைகள், 1953 ஓளவையார், 1955 வள்ளியின் செல்வன்,1958 வஞ்சிக்கோட்டை வாலிபன், 1960 இரும்புத்திரை, கைராசி, கலத்தூர் கண்ணம்மா, தெய்வப்பிறவி, 1961, தாயில்லாப்பிள்ளை, எல்லாம் உனக்காக, 1964 நீங்காத நினைவு, பழனி, 1965 என்னதான் முடிவு?, 1966, மோட்டார் சுந்தரம் பிள்ளை. இவர் 15-2-1974இல் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். இவரது நகைச்சுவையையும், பாடல்களையும் கேட்க தேவலோகத்தார் மிகவும் ஆவலாக இருந்திருக்க வேண்டும்.


1960இல் ஜெமினி அதிபர் வாசன் படங்கள் எடுப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்த பிறகு ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டார். அந்த காலகட்டத்தில்தான் இவரது அமரத்துவம் வாய்ந்த கதைகள் அதில் வெளிவந்தன. 1967இல் இவருக்கு கலைசிகாமணி (இப்போது அதுதான் "கலைமாமணி" விருதாக வழங்கப்படுகிறது) விருது பெற்றார். 1971இல் பத்மஸ்ரீ விருது வாங்கினார். 1974ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி கொத்தமங்கலம் சுப்பு புகழுடம்பு எய்தினார்.

1 comment:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் ஐயா,

//"பட்டினத்தார்" எனும் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. //

ஆச்சரியமாக இருக்கிறதே ? அப்படத்தில் என்ன வேடத்தில் ஐயா இவர் வருகிறார் ?

பதிவும் செய்திகளும் அருமையோ அருமை...