பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 18, 2011

வெற்றியும் தோல்வியும் ஒரே இடத்தில் தங்கி விடுவதில்லை.

வெற்றியும் தோல்வியும் ஒரே இடத்தில் தங்கி விடுவதில்லை. 

எம்.ஏ.வேணு தயாரித்து ஏ.பி.நாகராஜன் வசனம் எழுதி தயாரித்த "சம்பூர்ண ராமாயணம்" அனைவருக்கும் நினைவிருக்கும். அதில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடலொன்று மறக்க முடியாது. அது, "இன்று போய் நாளை வாராய் என்று எனை ஒரு மனிதன் புகலுவதோ" எனத் தொடங்கும் பாடல். அந்தப் பாடலுக்கு மூலம் கம்ப இராமாயணத்தில் காணப்படும் ஒரு பாடல். அது இதோ.

"ஆளய்யா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா என நல்கினன், நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்"

இதுதான் அந்தப் பாடல். முதல் நாள் யுத்தத்தில் போர்க்களத்தில் இராவணன் நிராயுதபாணியாக நிற்கும் நிலை கண்டு இராமபிரான் அவனை 
இன்று போய் ஓய்வு எடுத்துக் கொள், போர்க்கு நாளை வா, என்று பெருந்தன்மையோடு அனுப்பி வைக்கும் காட்சி இது. 

இந்த பாடலில் கண்ட "ஆள் ஐயா" எனும் சொல்லுக்குப் பல பொருள் சொல்லலாம். முதலாவது மூவுலகங்களையும் ஆளும் வல்லமை படைத்த ஐயா. இரண்டாவது வேதங்களை எல்லாம் கற்று சிவபெருமானைத் தன் சாமகானத்தால் வயப்படுத்திய ஐயா என்பது. மூன்றாவது சர்வ வல்லமை படைத்த நீ இன்று வெறுங்கையனாய் நிற்கும் பரிதாபத்திற்குரிய ஐயா என்பது. எல்லா குண நலங்களும் இருந்தும் பிறன் மனை நோக்கி பீடிழந்த ஐயா என்பது. இப்படிப் பல பொருள் சொல்லலாம். என்ன ஆளய்யா நீ! என்பது குறிப்பு. 

தன் எதிரிக்கு உயிர் பிச்சை அளித்துப் போருக்கு இன்று போய் நாளை வா என்று சொன்ன வள்ளன்மையை என்னென்பது? அதனால்தான் கம்பன் இங்கு இராமனை "கோசல நாடுடை வள்ளல்" என்றும் அந்த கோசல நாட்டை வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாடு என்றும் கூறுகிறான். அப்போது இராவணனின் நிலை என்ன? தோல்வி என்பதையே தன் வாழ் நாளில் அறிந்திராத இராவணன் ஒரு மானுடன் தன்னை 'இன்று போய் நாளை வா' என்றானே என்று வருந்துகிறான். அவன் ஊர் திரும்பிய காட்சி பரிதாபமானது. தலை குனிந்து, மகுடங்களை இழந்து வெறும் தலையனாய், கையில் ஆயுதங்கள் எதுவுமின்றி, உடலெங்கும் காயத்துடன், மனம் முழுதும் வருத்தம் மேலிட, மண்மகள் முகம் நோக்கி மெல்ல நடக்கும் காட்சி நம் கண்முன் வந்து நிற்கிறது. அப்போது அவனைக் காண்பித்து நமக்கு அவன் பெருமைகளை பட்டியலிடுகிறார் கம்பர். என்ன சொல்லுகிறார்?

"வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்"

இந்த இடத்தில் இராவணனுக்கு உரிய பெருமைகளை எல்லாம் பட்டியலிடுகிறார் கம்பர். அவைகள் எவை? 

முதலில் "வாரணம் பொருத மார்பன்". எட்டு திசைகளையும் காக்கும் யானைகளோடு மோதி போரிட்டு, அதனால் அவற்றின் தந்தங்கள் தனது மார்பில் புக, அவற்றை அப்படியே ஒடித்து விட்டு, மார்பில் தந்தங்கள் பதியப் பெற்ற பெருமையை உடையவன். 

அடுத்து, "வரையினை எடுத்த தோள்". இராவணன் சிறந்த சிவ பக்தன். தினமும் சிவபெருமானை வழிபட கைலாயம் சென்று வணங்கிய பின்னர்தான் உணவு உண்பான். அப்படி தினமும் கைலை மலைக்குச் சென்று வர சிரமமாக இருந்ததால் கைலை மலையைப் பெயர்த்து இலங்கைக்குக் கொண்டு வர்ந்துவிடலாம் என்று நினைத்து அதைப் பெயர்க்கப் போய், நந்தி தன் காலால் அழுத்த மலை இடுக்கில் மாட்டிக் கொண்டு இராவணன் கதறி அழுது, சாம கானம் பாடி சிவபெருமானின் மனம் குளிரச் செய்து தன்னை மீட்டுக் கொண்டான். அப்படிப்பட்ட தோள்வலி உள்ளவன் இராவணன்.

பிறகு "நாரத முனிவருக்கேற்ப நயம்பட உரைத்த நாவுடையவன்". சாம கானத்தால் தன் நா வலிமையை நிலை நாட்டியவன். மாலைகளை அணிந்த மணிமுடிகளைத் தன் தலைகளில் தாங்கியவன். இவனுடைய தவத்தை மெச்சி சிவபெருமான் இவனுக்கு "சந்திரஹாசம்" எனும் எவராலும் வெல்ல முடியாத ஒரு வாளைப் பெற்றவன். நிறைவாக இயல்பாக இவனுக்கு அமைந்த வீரம். இத்தனைப் பெருமைகளையுடைய இராவணன், அவை அத்தனையையும் களத்தில் போட்டுவிட்டு வெறும் கையனாகத் திரும்பிப் போகிறான் என்று கம்பர் வர்ணிக்கிறார். 

இத்தனைப் பெருமைகளை உடையவன் அவற்றை எங்ஙனம் இழந்தான். பார்க்கலாமா? முதல் நாள் யுத்தத்தில் அனுமனோடு நேருக்கு நேர் நின்று போரிட்ட போது அனுமன் விட்ட குத்து ஒன்றினால் அவன் மார்பில் பதிந்திருந்த அஷ்ட திக் கஜங்களின் தந்தங்கள் எல்லாம் பொல பொலவென்று கீழே கொட்டிவிட்டன. அதனால் அந்தப் பெருமை ஒழிந்தது. 

கைலை மலையை பெயர்த்தெடுத்த பெருமை அவன் தோள் வலிமைக்குச் சான்று கூறின. முதல் நாள் போரில் தோல்வியுற்று, மயங்கி கீழே சாய்ந்த இலக்குவனைத் தூக்க முடியாமல் தவித்திருந்த போது அனுமன் ஒரு குரங்கு தன் குட்டியைக் கவ்வி எடுத்துச் செல்வது போல மிக சுலபமாக எடுத்துச் சென்றபோது தன் தோள் வலி போய்விட்டது என்பதை உணர்ந்தான். 

"நாரத முனிவர்க்கேற்ப நயம் பட உரைத்த நாவு" எனும் பெருமையை, இராமன் இவனைப் பார்த்து "போர்க்கு இன்று போய் நாளை வா" என்றதும் நா உலர்ந்து அந்தப் பெருமையும் போயிற்று. "தாரணி மவுலி பத்து" என்பது மாலைகள் அணிந்த அவன் பத்துத் தலைகளிலும் அழகு செய்த கிரீடம். அவை அனைத்தையும் இராமன் ஒரே கணையினால் அடித்து வீழ்த்தி அந்தப் பெருமையை அழித்துவிட்டான். 

"சங்கரன் கொடுத்த வாள்" சந்திரஹாசம் அறத்தின்பாற்பட்ட எந்த போரிலும் வெற்றி தர வல்லது. ஆனால் இராவணன் அறத்திலிருந்து மாறுபட்டு தர்மவான் ஜடாயுவை அதனால் கொன்றதனால் அதன் வீரியம் போய்விட்டது. சந்திரஹாசத்தின் பெருமை அழிந்தது. இறுதியாக அவனிடம் இருந்தது வீரம் ஒன்றுதான். அதுவும் போரில் தோற்று குனிந்த தலையுடன், பூமித்தாயின் முகம் பார்த்து மெல்ல நடந்த போது போயிற்று. 

எல்லா பெருமைகளுக்கும் சொந்தக்காரனாக இருந்த இராவணன் முதல் நாள் போர் முடிந்ததும், ஒரே நாளில் அத்தனைப் பெருமைகளையும் இழந்து மிகச்சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டான். பெருமையோடு தலை நிமிர்ந்து ஆணவத்தோடு ஆட்சி புரிந்த இராவணன் ஒரே நாளில் அத்தனை பெருமைகளையும் இழந்து தலை குனிந்து இன்று சாதாரண மனிதனாக நடந்து செல்லுகிறான். வெற்றியும் தோல்வியும் ஒரே இடத்தில் தங்கி விடுவதில்லை. அது மாறிமாறித்தான் வரும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் உலகத்தில் போட்டி, பொறாமை, பூசல் இவைகளெல்லாம் ஏது? இந்த முடிவைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் மனிதர்கள். அதனால்தான் கம்பராமாயணம் காப்பியமாகப் போற்றப் படுகிறது. 

2 comments:

 1. வணக்கம் ஐயா,

  //"வரையினை எடுத்த தோள்". இராவணன் சிறந்த சிவ பக்தன். தினமும் சிவபெருமானை வழிபட கைலாயம் சென்று வணங்கிய பின்னர்தான் உணவு உண்பான். அப்படி தினமும் கைலை மலைக்குச் சென்று வர சிரமமாக இருந்ததால் கைலை மலையைப் பெயர்த்து இலங்கைக்குக் கொண்டு வர்ந்துவிடலாம் என்று நினைத்து அதைப் பெயர்க்கப் போய், நந்தி தன் காலால் அழுத்த மலை இடுக்கில் மாட்டிக் கொண்டு இராவணன் கதறி அழுது, சாம கானம் பாடி சிவபெருமானின் மனம் குளிரச் செய்து தன்னை மீட்டுக் கொண்டான். அப்படிப்பட்ட தோள்வலி உள்ளவன் இராவணன்.//

  தாங்கள் கூறும் இந்த செய்திக்கு அடிப்படை என்ன ?  "வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
  நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
  தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
  வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்"

  என்ற பாடலிலும் இதுபோன்ற செய்தி வருவதாகத் தெரியவில்லையே ?

  சைவநூல்களில் இந்த இராவணன் கயிலையை பெயர்த்த வரலாறு வேறு மாதிரியல்லவா சுட்டப் படுகிறது ?

  விளக்க வேண்டுகிறேன் ஐயா.

  நன்றி..

  ReplyDelete
 2. எல்லாம்வல்ல சிவனாரிடம் அதீத வரங்களைப் பெற்ற இராவணன் அனைத்து உலகங்களையும் ஆட்சி செய்யும் வரம் பெற்றான்..

  அதன் படி உலகை வலம் வந்து சுற்றிப் பார்க்க விரும்பிய இராவணன் ஒருமுறை திருக்கயிலாய மலை பக்கமாக வந்தபோது அந்த திருக்கயிலாய மலையை சுற்றிச் செல்வது நமது வீரத்திற்கு இழுக்கு என்று கருதி அம்மலையை அகற்றி வேறு பக்கமாக வைத்துவிட்டு செல்வதென முடிவெடுத்தான்..

  அதன்படி, மலையை பெயர்க்க முற்பட்டபோது,
  மலையின் ஆட்டத்தைக்கண்டு உமையம்மை அஞ்ச,
  அதைக்கண்ட இறைவர்,

  தனது கால் விரலால் சற்றே திருக்கயிலாய மலையை அழுந்தினாராம்..

  அதில் இராவணனுடைய இருபது தோள்களும் மாட்டிக் கொண்டு அவன் பரிதவித்தான்...

  அப்போது அந்த வழியாக வந்த வாகீசர் என்ற மாமுனிவர் ( இவரே பின்னர் திருநாவுக்கரசராக அவதரித்தவர் )இராவணனது நிலை கண்டு இரங்கி,

  இராவணா ! இறைவர் சாம கானப் பிரியர்,
  நீ சாம காணம் பாடு என்று சொல்ல,

  இராவணன் தனது தலையில் ஒன்றை பிய்த்து,
  கைகளில் ஒன்றை பிய்த்து,
  நரம்புகளை பிய்த்து - அதன் வழி ஒரு வீணை செய்து சாம காணம் வாசித்தான் என்பதும்,

  அதைக் கேட்டு மகிழ்ந்த இறைவர் இராவணனை மன்னித்து வரம் பல தந்து மகிழ்ந்தார் என்பதும் வரலறு.. அச்சமயத்தில் தான் இறைவன் இராவணனுக்கு - "சந்திரஹாசம்" எனும் எவராலும் வெல்ல முடியாத ஒரு வாளையும் தந்தான் என்பதும் வரலாறு.

  இவ் வரலாற்றை நினைப்பிக்கும் வகையிலேயே திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தின் ஒவ்வொரு பதிகத்தின் 8 ஆவது பாடலிலும் இராவணன் குறித்துப் பாடியிருப்பார்..

  திருநாவுக்கரசரும் இவ்வரலாற்றை தமது தேவாரத்திலும் பதிவு செய்திருக்கிறார்..

  எடுத்துக்காட்டாக,

  முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை தன்னைப்பிடித்து எடுத்தான் முடி தடந்தோளிரவூன்றிப்
  பின்னைப் பணிந்து ஏத்தப் பெருவாள் பேரொடும் கொடுத்த
  மின்னில் பொலி சடையான் இடம் வீழிமிழலையே

  என்பது சம்பந்தர் தேவாரம்.


  மேலும்..


  நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
  உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற வரங்கள் கொடுத்து அருள் செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து நிரம்பு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
  அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை..

  என்பது அப்பர் சுவாமிகள் திருவாக்கு..


  இவ்விருப் பாடலில் அடியேன் மேற்சொன்ன கருத்துகள் யாவும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்..


  இப்படி நிறைய சான்றுகள் உள்ளன..
  எனவே சிந்திப்போம் ஐயா..

  நன்றி

  ReplyDelete

You can give your comments here