பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 7, 2011

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு நடந்த குடமுழுக்கு விழாக்களும், அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனையும், வள்ளி தெய்வானை சமேத அந்த சுப்பிரமணிய சுவாமியையும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழையும், இராமாயணம், கந்தபுராணம் ஆகிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிச்சயம் நினைவுக்கு வரும். இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாவிட்டாலும் இதற்கு முந்தைய தலைமுறையினர் அவரை மறந்துவிட முடியாத அளவுக்கு அனைவர் மங்களிலும் குடிகொண்டவர். யார் மாதிரியும் இல்லாமல் தனக்கென்று ஒரு பேச்சு வழக்கைக் கையாண்டு, பேச்சுக்கிடையே பாடலையும் ராகத்தோடு பாடி மக்கள் மனம் கவர்ந்தவர். அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள், தொடர் சொற்பொழிவுகள் நடக்கிறதென்றால் அந்த ஊர் திருவிழாக் கோலம் பூணுவதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவருடைய தொண்டு, அவருடைய சொற்பொழிவுகள், அவர் நடத்தியிருக்கிற ஆலய குடமுழுக்கு வைபவங்கள் ஆகியவை மறக்கக் கூடியவைகளா? இப்போது அந்த மகான் பற்றிய வரலாற்றைச் சிறிது பார்க்கலாமே.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்று இவர் அழைக்கப்பட்டாலும் சுருக்கமால 'வாரியார் சுவாமி' என்றால் சிறு பிள்ளைக்கும் தெரியுமளவுக்கு அவர் பிரபலமானவர். அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்பது இந்த மகான் அவதரித்த ஊர். காங்கேயன் என்பது முருகப்பெருமானின் திருநாமம். அவன் பெயர்கொண்ட ஊரில் அந்த முருகனுக்குச் சேவை செய்வதற்கென்று ஒரு அடியாரைப் பிறக்க வைத்தான் போலும். இவ்வூர் வேலூரிலிருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் உள்ள சின்னஞ்சிறு ஊர்.

காஞ்சி, வேலூர் ஆகிய பகுதிகளை அந்த நாளில் தொண்டை மண்டலம் என அழைப்பார்கள். தொண்டைமண்டலம் சான்றோர் உடைத்து என்ற பழமொழியும் பழக்கத்தில் இருந்தது. அது போலவே பல சான்றோர்களை நாட்டுக்கு அளித்த தொண்டை மண்டலத்தில் வாரியார் சுவாமிகள் அவதரித்தார். அவர் இந்த நாட்டில் ஆன்மீகம் தழைக்க அவதரித்த நாள் 1906 ஆகஸ்ட் 25. இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார் பரம்பரையில் வந்த மல்லையதாச பாகவதர் என்பவரின் மகவாகப் பிறந்தவர் வாரியார் சுவாமிகள்.

அந்தக் காலத்தில் இறைவனுடைய புகழ்பாடும் புராண இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தவர் மல்லையதாச பாகவதர். இவர் செய்த புண்ணியம், இவர் உச்சரித்த இறைவனின் நாமங்களினால் உண்டான புண்ணியம் ஒரு உத்தமச் செல்வனை மகனாகப் பெற்றார். முருகனின் பெருமை பாடும் அருணகிரியின் திருப்புகழின் பால் இவருக்கு இருந்த அசாத்திய புலமையும், ஆர்வமும் இவர் திருப்புகழைப் பரப்பும் நோக்கில் திருப்புகழ் சபாக்களை அமைத்து அங்கெல்லாம் திருப்புகழ் பஜனைகளையும், திருப்புகழ் விரிவுரைகளையும் நிகழ்த்த ஏற்பாடு செய்து வந்தார். சந்தக்கவியான திருப்புகழைப் பாடுவோர் நாவும், கேட்போர் மனமும் இனிமையிலும் ஆழ்ந்த பக்தியிலும் ஆழ்த்திவிடும். அந்த அரிய பணியை மிகச்சிறப்பாக இவர் செய்து வந்த காரணத்தாலோ என்னவோ, அவரது பணியைத் தொடருவதற்கென்று ஒரு மாணிக்கத்தைப் பிள்ளையாகப் பெற்றெடுத்தார்.





வாரியாரைப் பெற்றெடுத்த மணிவயிறு படைத்த அம்மையாரின் பெயர் கனகவல்லி அம்மையார். 'பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை'யாகப் பாரில் புகழ்பெற்று விளங்கியப் புனிதத் தாயாக விளங்கினார் இந்த அம்மையார். தொண்டைமண்டல சிவனடியார் வம்சத்தில் வந்த இந்த தம்பதியரின் பதினோரு குழந்தைகளில் வாரியார் சுவாமிகள் நான்காவது பிள்ளையாக அவதரித்தவர். பெரியோர்களுடைய அனுக்கிரகம் இந்தக் குடும்பத்துக்கு இருந்த காரணத்தால் இப்படியொரு தெய்வீக மகனை ஈன்றெடுக்கும் பாக்கியம் இந்தத் தம்பதியினருக்குக் கிடைத்தது.

இந்தக் காலம் போல அன்று பள்ளிக்கூடம் என்று ஒரு அமைப்புக்குள் மட்டும் கல்வியை அடைத்து வைக்கவில்லை. பெரும்பாலும் குடும்ப சூழ்நிலையிலேயே குழந்தைகள் நல்ல கல்வியறிவை பெற முடிந்திருக்கிறது. அந்த வகையில் வாரியார் சுவாமிகள் பள்ளிக்கூடம் எதிலும் சென்று படிக்கவில்லையாயினும், இயற்கையாய் அமைந்த அருள் நிறைந்த அறிவும், பெரியோர்களின் சகவாசமும், உபதேசங்களும் அவரை ஒரு மேதையாக உருவாக்க உதவின. இவருடைய தந்தையே இவருக்கு ஞானகுருவாக இருந்த இவருக்குத் தேவையான கல்வியை, இலக்கியம், இலக்கணம், இசை, வீணை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். தந்தையே இவருக்கு முழுமுதல் ஆசானாக விளங்கினார். இவரது மூன்று வயது முதல் எழுதவும் படிக்கவும், அரிய புராண, இலக்கிய கதைகள் முதலியவற்றைக் கற்கவும் தொடங்கினார்.

தமிழ் இலக்கிய இலக்கண புலமையை மிக இளம் வயதில் கற்றுப் புலமை பெற்றதனால் மற்றவர்களுக்கு கைவராத பாடல் இயற்றும் ஆற்றலை, அதிலும் மிகவும் சிரமமான வெண்பா பாடும் ஆற்றலை இவர் பெற்றிருந்தார். பனிரெண்டு வயது ஆவதற்குள் இவர் படித்த அரிய பெரிய சிறந்த நூல்களை மனப்பாடமாகச் சொல்லவும், பேசவும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். கர்நாடக மாநிலத்தில் வீரசைவர்கள் உண்டு. இவர்கள் 'லிங்கம்கட்டி' என்றும் பிறரால் அழைக்கப்படுவர். இவர்கள் சிவலிங்கத்தைக் கழுத்தில் அணியும் பழக்கமுடையவர்கள். ருத்ராட்சம், சிவலிங்கம் இவைகளை அணிந்த இவர்கள் போல கிருபானந்த வாரியார் சுவாமிகளும் கழுத்தில் ருத்ராட்சம், சிவலிங்கம் அணியத் தொடங்கினார். திருவண்ணாமலையில் அப்போதிருந்த பாணபத்திரர் மடத்தில் இவர் சடாக்ஷர மந்திர உபதேசத்தைப் பெற்று சிவலிங்கம் அணியத் தொடங்கினார்.

இவருக்கு அமைந்த குருமார்களின் பெயர்களையும் எண்ணிக்கையையும் கவனித்தால் இவருக்குக் கிடைத்திருக்கும் பேறு எத்தகையது என்பதை உணர முடியும். திருப்புகழ் சுவாமிகள், பழனி ஈசான சிவாச்சார்ய சுவாமிகள் போன்ற பெரியோர்களின் ஆசி இவருக்கு இருந்தது. வீணை இசையை இவர் பழுதற கற்றிருந்ததால், இவருடைய இசைச் சொற்பொழிவுகளில் இவரால் எல்லா பாடல்களையும் ராகத்தோடு பாடமுடிந்தது. கந்த சஷ்டி கவசம் எனும் அரிய பக்தி பனுவலைப் பாடிய பாம்பன் சுவாமிகளை இவர் தரிசித்தார். அவருடைய அனுக்கிரகமும் இவருக்குக் கிட்டியது. மதுரையில் திருப்புகழ் சுவாமிகள் என்று புகழ்பெற்றிருந்தவர்

மதுரையில் திருப்புகழைப் பரப்புவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். வாரியார் சுவாமிகள் அங்கு சிலகாலம் திருப்புகழ் பயிற்சி பெற்றார். அந்த அமைப்பை நடத்தி வந்த திருப்புகழ் சுவாமிகள் எனும் பிரம்மஸ்ரீ லோகநாத ஐயர் என்பவர் இவருக்கு ஆசி கூறி எல்லா கலைகளும் இவருக்குத் தானே வந்து சேரும் என ஆசீர்வதித்து அனுப்பினார். அந்த குருநாதரிடம் திருப்புகழ் கற்றதாலும், அவருடைய ஆசி கிடைத்ததாலும், அவருக்குத் தனது குரு தட்சிணையாக அவரது குடும்பத்தைப் பல ஆண்டுகள் ஆதரித்து வந்தார் சுவாமிகள்.

அமிர்தலட்சுமி எனும் அம்மையாரை இவர் தன்னுடைய 19ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய சொந்த மாமன் மகள்தான் இந்த அம்மையார். இந்த தம்பதியரின் ஆன்மீகப் பயணத்துக்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ இவர்களுக்குப் பிள்ளைப் பேறு எதுவும் இல்லை.

அறுபடை வீடுகொண்ட ஆறுமுகனுக்குத் தொண்டு செய்யும் விதத்தில் இவர் 1936இல் "திருப்புகழ் அமிர்தம்" எனும் மாத சஞ்சிகையொன்றைத் தொடங்கி சுமார் 37 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தினார். திருப்புகழைப் பரப்புவதும், அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், அவை சம்பந்தப்பட்ட கதைகள், நீதிகள் இவற்றை இலக்கிய நயத்தோடு பரப்பி வந்தது இந்தப் பத்திரிகை. மற்ற பல பெரியோர்களின் கதைகளும் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றிருந்தன.

இவருடைய வாழ்க்கைப் பயணம் முழுவதும் திருமுருகனின் பெருமையை உலக்குக்கு அறிவிக்கவும், அவனது திருப்புகழை மக்களின் மனங்களில் பதியும் படி சொற்பொழிவுகள் ஆற்றுவதுமாகவே கழிந்தது. திருப்புகழ் மட்டுமின்றி இதர தமிழ் இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஞானமும், நல்ல ஞாபக சக்தியும் இருந்த படியால் இவரால் பேசமுடியாத தலைப்புகளே இல்லை எனலாம். ஆன்மீகம், பக்தி, நல்வழி இவற்றுக்காகப் பாடுபட்டவர்கள் இவரைப் போல் வேறு யாரும் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை. நல்லொழுக்கம், நேரம் தவறாமை, கடமைகளை முறைப்படி செய்தல் என்பவை இவரிடம் இருந்த பண்புகள். தினமும் ஸ்நானம் செய்து இறைவனுக்கு முறையாகப் பூஜைகளைச் செய்தபின்தான் உணவு உண்பது என்பது இவருடைய வழக்கம். இவருடைய வாழ்நாளில் ஸ்நானம் பண்ணாத பூனை செய்யாத நாள் ஒன்றுகூட இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு அதில் மிகவும் கவனத்தோடு இருந்திருக்கிறார்.

இந்த ஆன்மீகத் தொண்டருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ இருந்திருக்கிறது போலும். திருமுருகனின் சித்தம் அப்படி இருந்திருக்கிறது. முரட்டு முருக பக்தனான திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவருக்கு வாரியார் சுவாமிகளை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஏதோவொரு வகையில் இவருடைய சம்பந்தம் இல்லாமல் அவர் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. அவருடைய அன்பினால் இவரும் அவருடைய சில படங்களில் தோன்றும்படியாயிற்று. இவருடைய கதா காலக்ஷேபமும் சில படங்களில் இடம்பெற்றன. அதற்கு முன்பேகூட திரைப்பட உறவு இவருக்கு இருந்திருக்கிறது. எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்துப் புகழ்பெற்ற "சிவகவி" படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் வாரியார் சுவாமிகள்.

என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் தாயுமானவர் வாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள். பூமியில் மனிதராய்ப் பிறந்த அனைவரும் மற்றவர்களைத் தங்களைப் போலவே எண்ணத் தொடங்கிவிட்டால், அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டால் போர் ஏது, பூசல் ஏது என்பது இவரது சித்தாந்தம். ஆதலாம் அன்பு செய்வீர் உலகத்தீரே என்பது இவரது அறைகூவல். நிறைவாழ்வு வாழ்ந்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்துத் திருமுருகன் திருவடியை அடைந்தார்.

தனது வாழ்நாளில் இவர் ஆற்றியுள்ள பணி எண்ணிலடங்காதது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் மார்க்கத்தில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்திருக்கிறார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்துவரும் இந்த அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

இவர் பிறந்த காங்கேயநல்லூரில் இவர் பல கல்வி ஸ்தாபனங்களைத் தொடங்கி இன்று இவருடைய பெயரால் மேல் நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிறுவியிருப்பதைக் காணலாம்.

சின்னஞ்சிறு சிறுமியாக இவரிடம் சிஷ்யையாக வந்து ஒட்டிக்கொண்ட மங்கையர்க்கரசி எனும் பெண் இன்று வாரியார் சுவாமிகளின் பெயரை நிலைநாட்டிக் கொண்டு மிகச்சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்து வருகிறார். திருப்புகழ், கம்பராமாயணம், வில்லி பாரதம், கந்த புராணம் போன்ற அனைத்து புராண இதிகாச இலக்கியங்களையும் வாரியார் எப்படி தங்கு தடையின்றி எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் பாடல்களைக் கொட்டி சொற்பொழிவாற்றுவாரோ அப்படியே அவரது மாணவியும் செய்து வருவது திகைக்க வைக்கிறது.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலய சுற்றுச் சுவர், சமயபுரம் ஆலயம், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல ஆலயங்கள் இவரால் பயன்பெற்றிருக்கின்றன. இவருடைய நினைவாக இவர் பிறந்த ஊரான காங்கேயநல்லூரில் இவர் பிறந்த வீடு நினைவு இல்லமாக விளங்குகிறது. இவரது தொண்டுக்காக ஏராளமான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றல் இவருக்குப் புகழ் இருக்கிறதோ இல்லையோ, இவரால் அந்த விருதுகளுக்குப் புகழ் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் உள்ளளவும், தமிழர் உள்ளளவும் ஆன்மீகமும், பக்தியும் இந்த மண்ணில் உள்ள வரையிலும் இவரது புகழும் நிலைத்திருக்கும். வாழ்க திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் புகழ்!

4 comments:

kmr.krishnan said...

எனக்கு சுமார் 9 வயது இருக்கும் சமயம், சேலம் புகை வண்டி நிலையத்தில்
யாரையோ வழி அனுப்பச் சென்று இருந்த போது வாரியார் சுவாமிகள் தங்கும் அறையில் இருந்து வெளியில் வந்தார். பூஜை துவங்கும் தோற்றத்தில் இருந்தார்.
கையில் ஒரு பெரிய கமண்டலம்.

என்னை அழைத்துத் தண்ணீர் பிடித்து வருமாறு பணித்தார்.நானும் ஓடிச்சென்று நீர் பிடித்து வந்து சமர்ப்பித்தேன். என்னைப் பற்றிய தகவல்களையெல்லாம் கேட்டு அறிந்தார்.உளமாற வாழ்த்தினார்.

இறுதியாகப் "பிராமணப் பிள்ளையோ?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நல்லதொரு கட்டுரைக்கு நன்றி!

Unknown said...

வாரியார் சுவாமிகள் என் உயிரினும் மேலாக மதிப்பவன் நான் வாழ்க அந்த மகான் புகழ்

Unknown said...

வாரியார் சுவாமிகள் என் உயிரினும் மேலாக மதிப்பவன் நான் வாழ்க அந்த மகான் புகழ்

மதன்மணி said...

வாரியார் என் உயிரினும் மேலான் உளமாற மதிப்பவன்.வாழ்க திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் புகழ்!