பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 6, 2011

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்

குழலூதும் இரட்டைக் குழந்தைகள் எனும் டிரேட் மார்க் அந்தக் கால மனிதர்களுக்கு நல்ல அறிமுகம். இன்று மக்கள் மறந்திருக்கலாம். ஆம்! சென்னை அண்ணாசாலையில் அன்றைய மவுண்ட் ரோடில் இப்போது ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் இடத்தில் நுங்கம்பாக்கம் திருப்பத்தில் அமைந்திருந்தது இந்த சினிமா ஸ்டுடியோ. அதன் அதிபர் எஸ்.எஸ்.வாசன். சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் என்பதன் சுருக்கம் இது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரமாண்டமான 'சந்திரலேகா', 'ஒளவையார்' போன்ற படங்களை எடுத்து இந்தியாவின் சிசில் பி டெமிலி என்று பெயர் வாங்கிய இந்த திரைப்படத் தயாரிப்பாளர் பன்முகத் திறமை மிக்கவர். இவர் எடுத்த எந்தவொரு படமும் சோடை போகவில்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் புகழ் பெற்றது. ஜெமினி ஸ்டுடியோ அவ்வப்போது படம் எடுக்கக் கூடுகின்ற கம்பெனி போல அல்ல. அது ஒரு நிரந்தர ஸ்தாபனம். இங்கு ஊழியர்கள், டெக்னீஷியன்கள் போன்றவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றினார்கள். கதைக்கு என்று ஒரு இலாகா. அதில் பணிபுரிந்தவர்களும் உலகப் புகழ் பெற்றனர். கொத்தமங்கலம் சுப்பு, வேப்பத்தூர் கிட்டு போன்றவர்களை உலகுக்குக் காட்டிய ஸ்தாபனம் ஜெமினி. இதன் முதலாளி எஸ்.எஸ்.வாசன் திரைப்பட தயாரிப்பாளர், சினிமா ஸ்டுடியோ அதிபர், பத்திரிகை முதலாளி, சினிமா இயக்குனர், எழுத்தாளர், தொழிலதிபர் போன்ற பல நிலைகளில் பிரபலமானவர். இவரைப் பற்றி தெரிந்து கொள்வோமே!

எஸ்.எஸ்.வாசன் 1903ஆம் வருஷம் மார்ச் 10இல் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தஞ்சை மாவட்டம் என்றதும் அதிலும் நெல்வயல்கள் சூழ்ந்த திருத்துறைப்பூண்டி என்றதும் இவர் ஏதோ ஒரு நிலப்பிரபுவின் குடும்பத்தில் பிறந்தவரோ என்று திகைக்க வேண்டாம். மிகச்சாதாரண நடுத்தர பிராமண குடும்பத்தில் பிறந்தவர்தான் இவர். மிக இளம் வயதில் தந்தை காலமான பிறகு இவர் தனது தாயுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு படிப்பையும் தொடர்ந்து கொண்டு குடும்ப வருமானத்துக்கும் பாடுபட்டுக் கொண்டிருந்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில் படிக்கவும் வாழ்க்கையில் முன்னேற வழிவகைகளைக் கண்டறியவும் இவர் முயன்று வந்தார். அப்படி முயன்ற நிலையில் விளம்பரம் செய்வது அந்த விளம்பரத்தை ஒரு முறையோடும், பிறர் மெச்சும்படியும் செய்து வந்தார். உழைப்பும், புதிய சிந்தனைகளும் இவருக்கு வாழ்க்கைக்கு பல வழிகளைக் காட்டிய போதும், இவர் மனதுக்குப் பிடித்த மாதிரியும் அதே நேரம் வருமானம் கிடைக்கும்படியாகவும் புதிய தொழில்களைச் செய்யத் தொடங்கினார். மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு யாரிடமாவது ஊழியம் பார்க்க இவர் சுதந்திர மனம் இடங்கொடுக்கவில்லை. எனவே இவர் கவனம் முழுவதும் ஆதாயம் தரும் புதிய துறை நாடி அலைந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்த முடியாமல் நொடித்துக் கொண்டிருந்தது. அது இவரது கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பத்திரிகையின் பெயர் 'ஆனந்த விகடன்'. அதை இவர் வாங்கி அதற்கு புது ரத்தம் பாய்ச்சி, புதிய வடிவம் கொடுத்து மக்கள் விரும்பும் வகையில் அதன் உள்ளடக்கங்களைத் தயார் செய்து வெளியிடத் தொடங்கினார். புதியனவற்றை விரும்பும் மக்கள் அதிகம் இருந்த சென்னை நகரமும், தமிழ் சமுதாயமும் இவரது முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இவரது தொழில் வளரத் தொடங்கியது. 'ஆனந்த விகடன்' எனும் பெயர் தமிழர் குடும்பங்களில் அனைவராலும் பேசப்படும் பெயராகவும், அனைவரும் படிக்க வேண்டிய தரமுள்ள பத்திரிகையாகவும் வாசன் அவர்களின் முயற்சியால் மாறியிருந்தது. இன்றும் அது வெளிவந்து கொண்டிருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறத்கு, அல்ல அல்ல தனது 87 வயதிலும் பறந்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்து இதற்கு எப்படிப்பட்ட அஸ்திவாரம் போடப்பட்டிருக்க வேண்டுமென்பதை யூகித்துக் கொள்ளலாம்.

'ஆனந்த விகடன்' பத்திரிகையின் சிறப்பு அதில் வெளியிடப்பட்டு வந்த குறுக்கெழுத்துப் போட்டி. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கென்றே வாராவாரம் இந்த பத்திரிகையின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் 'ஆனந்த விகடனில்' குடும்பப் பாங்கான, உணர்வு பூர்வமான கதைகள் வெளியாகி வந்தன. போதாக் குறைக்கு அதில் கல்கி ஆசிரியராக இருந்து வரலாற்று நவீனங்களை எழுதவும் தொடங்கினார். பார்த்திபன் கனவு, தியாகபூமி போன்ற தொடர்களும் அதில் வெளியாகி புகழ் பெற்றன. இன்னொரு புதுமை, இவர் பத்திரிகையில் கதை வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தக் கதை திரைப்படமாகவும் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தத் திரைப்பட புகைப்படங்கள் பத்திரிகையில் கதையோடு வெளியாகியும் வந்த புதுமை முதன் முறையாக வாசன் அறிமுகப் படுத்தினார். அந்தக் கதைதான் தியாகபூமி. இதில் பாபநாசம் சிவன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து வந்தார். அதில் நடித்த பெண்குழந்தை ஒன்று, பெயர் சரோஜா, மிகச் சுட்டியாக நடித்தது. அந்தக் காலத்தில் பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் இட்ட வரலாறும் அதன் பெருமையும் வாசன் அவர்களைச் சேரும்.

வாசன் அவர்களே ஒரு நல்ல எழுத்தாளர். இவர் எழுதிய கதைதான் சதிலீலாவதி. அது 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப் பட்டது. பல சிறுகதைகளையும் வாசன் எழுதினார். திரைப்படத் துறையில் ஈடுபட்டு இவர் பட விநியோகம் செய்யும் கம்பெனியையும் தொடங்கினார். அதன் பெயர் மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பொரேஷன் என்பது. என்ன? கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஆம், தமிழ் நாட்டில் புகழ் பெற்ற பட விநியோக நிறுவனம் அது. இந்த கால கட்டத்தில் சென்னையில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஏராளமான பொருட் சேதம். அந்தக் காலத்தில் காப்பீடு என்பதெல்லாம் தெரியாத நிலையில் அதன் நிர்வாகிகளுக்கு பெருத்த நஷ்டம். அப்படி எரிந்து கிடந்த இடத்தை, வாசன் விலை பேசி வாங்கிக்கொண்டு அங்கு தனது சினிமா கம்பெனியை படப்பிடிப்புக்காகத் தொடங்கினார். அதுதான் புகழ்பெற்ற ஜெமினி ஸ்டுடியோ.

இந்த ஸ்டுடியோ நிறுவப்பட்ட பிறகு தொடர்ந்த இவர் பல படங்களை அங்கு எடுத்தார். தமிழில் மங்கம்மா சபதம் என்று ஒரு படம். அதில் வைஜயந்திமாலாவின் தாயார் கதாநாயகி, ரஞ்சன் என்பவர் கதாநாயகன். 1943இல் வெளியான இந்தப் படம் மிக நன்றாக ஓடியது. அடுத்து 1945இல் கண்ணம்மா என் காதலி என்றொரு படம், 1947இல் மிஸ் மாலினி என்றொரு நகைச்சுவைப் படம், 1949இல் புகழ்மிக்க நடிகர் எம்.கே.ராதா இரட்டை வேடமிட்டு நடிக்க ஸ்டண்ட் சோமு என்பவர் உடன் நடிக்க இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தில் ஒரு எம்.கே.ராதா நல்லவராகவும் மற்றொரு ராதா வில்லனாகவும் நடிக்க வேண்டும். இரு வேறு பாத்திரங்களையும் மிகத் திறமையாக ராதா நடித்தாரா அல்லது வாசன் நடிக்க வைத்தாரா என்று வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது அந்தப் படம். இரும்புத்திரை என்றொரு படம். தொழிலாளர்களின் பிரச்சினையை வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவும் வெற்றிகரமாக ஓடிய படம். ஜெமினி படம் என்றால் தரமானது, ஹாலிவுட் படத்துக்கு நிகரானது என்ற எண்ணம் மக்கள் உள்ளங்களில் பதிந்தது.

வாசன் ஒரு தேசியவாதி. காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர். இன்றைய தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் வாசன் அவர்களால் கொடுக்கப்பட்ட இடம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948இல் இவர் இந்தியாவின் சிசில் பி டெமிலி என்று பெயர் பெற காரணமான "சந்திரலேகா"வை எடுத்தார். ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் இவர் படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழ் மட்டுமென்றால் பார்க்கும் மக்கள் தொகை குறைவாக இருக்கும். பிற மொழிகளிலும் என்றால், அதிலும் இந்தியிலும் எடுத்தால் பார்வையாளர் எண்ணிக்கை மிக அதிகமாகும் என்பது அவரது எண்ணம். அந்த சந்திரலேகாவும் அதன் பின்னர் எடுத்த ஒளவையாரும் இன்று பார்த்தால் கூட இப்படியும் ஒரு படம் எடுக்க முடியுமா என்று மக்கள் வியந்து போவர். சந்திரலேகாவில் ரஞ்சன் வில்லன். அவனுக்கு எதிரில் ஒரு டிரம் டான்ஸ். வரிசையாக பல டிரம்கள் வைக்கப்பட்டு அதில் நடனமாதர்கள் ஆடுவர். டி.ஆர்.ராஜகுமாரி ஒரு டிரம் மீது ஏறி ஆடுவார். ரஞ்சன் முகம் முதலில் மகிழ்ச்சியோடும், அந்த டிரம் உள்ளேயிருந்து எதிரி வீரர்கள் வெளிவரும் கட்டத்தில் அவர் முகத்தில் ஏற்படும் பயம், கோபம் இவற்றை அற்புதமாகக் காட்டுவார். அந்த டிரம் டான்ஸ் போல இன்று வரை யாரும் எடுத்ததில்லை என்கின்றனர். அந்த நாளில் அப்படியொரு செட்டிங்ஸ், நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா?

சந்திரலேகா தமிழ் இந்தி மட்டுமல்ல ஆங்கில சப் டைட்டிலுடன் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. தமிழனின் பெருமை உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தவர் எஸ்.எஸ்.வாசன். நகைச்சுவை எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் எழுதிய கதை 1952இல் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் வெளியானது. ஒரு சிப்பன்சி குரங்கை வைத்து எடுக்கப்பட்ட இன்சானியத் எனும் இந்திப் படம் 1955இல் வெளிவந்தது. 1958இல் ராஜ்திலக் என்ற படம் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் மீது இவருக்கிருந்த தொடர்பு காரணமாக ஜவஹர்லால் நேரு போன்றோருடைய நட்பும் இவருக்குக் கிடைத்தது. தமிழ் நாடு காங்கிரசிலும் இவருக்கு நெருக்கமானவர்கள் பலர் இருந்தனர். காமராஜ் அவர்களுடன் இவருக்கு நல்ல நட்பு இருந்தது. இவர் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியிருக்கிறார். மத்திய அரசின் கெளரவ விருதான பத்ம பூஷன் விருது இவருக்கு 1969இல் அளித்து கெளரவிக்கப்பட்டது.

ஆனந்த விகடன் பத்திரிகை எழுத்துத் துறையிலும் ஏராளமான சாதனைகளைப் படைத்தது. ஆனந்தவிகடனில் மோதிரக் கதைகளை எழுதியபின் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் மிகவும் பிரபலமானார். ஆனந்தவிகடனில் ஜெமினி கதை இலாகாவில் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு கலைமணி என்ற பெயரில் எழுதி வெளியான தொடர்கதைதான் 'தில்லானா மோகனாம்பாள்'. அது திரைப்படமாகவும் வந்து மிகவும் பெரும் வெற்றி பெற்றது. இது குறித்து வெளிவந்த செய்தியொன்று சுவாரசியமானது.

'தில்லானா மோகனாம்பாளை' திரைப்படமாக எடுக்க விரும்பி பிரபல டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் சென்று அனுமதி கேட்டார். அதற்கு வாசன் அவர்கள் தானே அதை எடுக்க விரும்பியதாகவும், பின்னர் சில காரணங்களால் எடுக்க முடியவில்லை என்றும், அதை ஏ.பி.நாகராஜன் எடுப்பதற்கு தனக்கு முழுச் சம்மதம் என்றும் தெரிவித்தார். உடனே ஏ.பி.நாகராஜன் ஒரு தொகையை வாசன் அவர்களிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்தார். மறுநாள் ஏ.பி.நாகராஜன், வாசன் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டோம், அப்போது ஜெமினி கதை இலாகா எல்லாம் மூடப்பட்டுவிட்டது. கலைமணி என்கிற கொத்தமங்கலம் சுப்பு வீட்டில்தான் இருப்பார். அவரிடமும் ஒரு வார்த்தை மரியாதைக்காகச் சொல்லி அனுமதி வாங்க வேண்டுமென்று அவர் வீட்டுக்குச் சென்றார். அவரும் மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கி ஆசியும் வழங்கினார். அப்போது அவரிடமும் ஒரு தொகையைக் கொடுக்க ஏ.பி.நாகராஜன் முயன்றார். உடனே சுப்பு அவர்கள் அவர்களைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு உறையைக் கொண்டு வந்தார். அது என்ன என்று நாகராஜன் கேட்க, நீங்கள் இங்கு வருவதற்கு முன்னமேயே முதலாளி வாசன் அவர்கள் இந்தத் தொகையை நீங்கள் கொடுத்ததாக என்னிடம் கொடுத்தனுப்பி விட்டார் என்றார். ஏ.பி.நாகராஜனுக்கு வாசனைப் போற்றுவதா, கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை.

கொத்தமங்கலம் சுப்பு ஆனந்தவிகடனில் எழுதிய நெடுங்கதைகளில் ராவ்பகதூர் சிங்காரம், மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற கதைகளும் பெரும் புகழ் பெற்றன. பின்னர் ஜெமினி ஸ்டுடியோ மூடப்பட்டது. ஆனந்தவிகடனை அவரது மகன் பாலன் நடத்தத் தொடங்கினார். பெரும் புகழ் பெற்ற எஸ்.எஸ்.வாசன் 1969இல் காலமானார்.


No comments: