பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 11, 2011

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

தமிழிசை உலகிலும், திரைப்படங்கள் மூலம் அழியாத புகழ் வாய்ந்த பல தமிழ்ப் பாடல்களைப் பாடியும் புகழ் பெற்று விளங்கியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர் என்பது இவருடைய முழுப் பெயர். இவருடைய பன்முகப் பெருமைகள் தமிழிசை, திரைப்படங்கள், பாடலாசிரியர் போன்ற பல வகைகளிலும் வெளிப்பட்டு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். இவருடைய பாடல்களைப் பாடாத தமிழ் இசை மேடைகளே இல்லையெனலாம். "தாமரைப் பூத்த தடாகமடி" என்கிற பாட்டைப் பாடிய இவரை ஒரு காலத்தில் தமிழிசை மேடைகளில் நினைவுகூராதவர்களே இல்லை.

தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருச்செங்காட்டாங்குடி என்பது இவர் பிறந்த ஊர். இந்த ஊரின் பெயரைச் சொன்னதும் பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டரின் நினைவு வரவேண்டுமே! கல்கியின் "சிவகாமியின் சபதம்" நெடுங்கதையில் பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவன் வாதாபி மீது படையெடுத்து முற்றுகையிட்ட போது, அவன் படையில் தளபதியாக இருந்த சிறுத்தொண்டர் அந்தக் கோட்டை வாயிலில் இருந்த ஒரு விநாயகரை வேண்டிக் கொண்டு அந்த சிலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து தன் சொந்த கிராமமான திருச்செங்காட்டாங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக எழுதுகிறார். இன்றும் அவ்வூர் சிவன் கோயில் பிரகாரத்தில் வாதாபி கணபதியின் சந்நிதி இருப்பதைப் பார்க்கலாம்.
1908 ஆகஸ்ட் 27இல் இவர் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் முத்தையா தேசிகர். ஆலயங்களில் தேவாரம் பாடுபவர்கள் இவர்கள். இவருடைய கணக்கிலடங்கா தமிழ்ப் பாடல்கள் குறித்தும், இவர் நடித்த திரைப்படங்கள் குறித்தும் "ராண்டார்கை" எனும் எழுத்தாளர் எழுதி வைத்திருக்கிறார்.

தேவார இசை பாடும் குடும்பமாதலால் இவர் முதன்முதலில் தேவாரப் பாடல்களில்தான் பயிற்சி பெற்றார். இவருடைய தந்தையார்தான் இவருக்கு முதல் குரு. இவருடைய இளமைப் பருவத்தில் சட்டையப்ப நாயனக்காரர் என்பவரிடமும் இவரது இசைப் பயிற்சி நடந்தது. மாணிக்க தேசிகர் என்பவரிடமும் பிறகு கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை எனும் புகழ்பெற்ற வயலின் வித்வானிடமும் இசை பயின்றார். தன்னுடைய இருபதாவது வயதில் கச்சேரி செய்யத் தொடங்கிய இவரை அந்த நாள் இசை மேதைகள் பலரும் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

தேசிகருடைய பாட்டு என்றால் இவரது அழுத்தமான சாரீரமும், சுருதி பிசகாமல் பாடும் திறமையும் தமிழிசையில் தனி ஆர்வம் கொண்டு இவர் பாடும் தமிழ்ப்பாடல்களுக்கு இவர் பால் ஈர்ப்பும், இவர் இசையில் ஆர்வமும் ஏற்படும். இவருடைய தோற்றம், இசை ஆகியவை இவரை திரையுலகில் கொண்டு போய்ச் சேர்த்தது. நந்தனார் எனும் திரைப்படத்தில் திருநாளைப்போவாராக (நந்தனார்) நடித்தார்.

திருமிழிசை ஆழ்வார், வல்லாள மகராஜன், பட்டினத்தார் ஆகிய படங்கள் இவரது பெருமைக்குச் சான்றாகும். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இசைக் கல்லூரியின் முதல்வராக இவர் பதினைந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார். அங்கு பணியாற்றிய காலத்தில் இவர் "தமிழ்ப் பாமாலை" எனும் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இவர் பாடிய ஏராளமான தமிழ்ப் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அவை அனைத்தையும் பட்டியலிடுவது என்பது சிரமமான காரியம் என்றாலும் ஓரிரெண்டை இங்கு குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். அவை "தாமரைப் பூத்த தடாகமடி", "ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி", "இன்பக் கனா ஒன்று கண்டேன்", "தூது நீ சொல்லிவாராய்", "பிறவா வரம் தாரும்", "வருகலாமோ", "சிவலோக நாதனைக் கண்டு", "என்னப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா", "ஐயே! மெத்தக் கடினம்" இவை போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

தமிழகத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், ராஜாஜி, கல்கி, ரசிகமணி போன்றோர் தமிழிசை இயக்கத்துக்காகப் பாடுபட்டவர்கள். அப்படிப்பட்ட ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய இவர் தமிழிசைக்காக அரும்பாடு பட்டிருக்கிறார். 1940களில் தமிழிசை இயக்கம் தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது எனலாம். அப்போது தமிழ்ப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பல பாடகர்களில் தேசிகரும் ஒருவர்.

அந்த காலகட்டத்தில் கர்நாடக இசை உலகில் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கும் சற்குரு ஸ்ரீதியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, புரந்தரதாசர் போன்றவர்களின் கீர்த்தனைகள்தான் அதிகம் பாடப்பட்டு வந்தன. முந்தைய இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் கச்சேரியின் நிறைவில் துக்கடாக்கள் என்ற பெயரில் மட்டுமே பாடப்பட்டன. தமிழிசை இயக்கத்தின் பலனாக இசை மேடைகளில் தமிழ்ப் பாடல்களும் முக்கியமாகப் பாடப்பட்டன. மகாகவி பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள், முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன் ஆகியோரின் பாடல்கள் தமிழிசைக்கு உதவியாக இருந்தன.

இவருடைய இசைப் பணிகளுக்கிடையே திரைப்படங்களிலும் நடித்தார் அல்லவா? 1935இல் இவர் "பட்டினத்தார்" எனும் படத்தில் நடித்தார். 1937இல் "வல்லாள மகாராஜா" எனும் படத்திலும் 1938இல் "தாயுமானவர்" படத்திலும் 1939இல் "மாணிக்கவாசகர்" படத்திலும், 1942இல் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் எடுத்த "நந்தனார்" படத்திலும் 1948இல் "திருமழிசை ஆழ்வார்" எனும் படத்திலும் நடித்தார். இவருடைய படங்கள் அனைத்திலும் இவருடைய பாடல்கள் சிறப்பம்சமாகத் திகழ்ந்து. தமிழிசையிலும் திரைப்படங்களிலும், இசை ரசிகர் உள்ளங்களிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற எம்.எம்.தண்டபாணி தேசிகர் 26-6-1972 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தண்டபாணி தேசிகர் புகழ்!

2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இசைக் கல்லூரியின் முதல்வராக இவர் பதினைந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார்//

பல அரிய செய்திகளை தருகிறீர்கள் ஐயா..
நன்றி..

ஆனால்..

நீங்கள் எழுதும் வேகத்திற்கு எங்களால் படிக்கக் கூட முடியவில்லை ஐயா..

வாழ்த்துக்கள். தொடரட்டும் + சிறக்கட்டும் தங்களது வலையுலகப் பணி...

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் தங்கள் பதிவுக்குள்
நுழையும் வாய்ப்பு அமைந்தது
அசந்து போனேன்
அரிய தகவல்கள் அடங்கிய
தகவல்களஞ்சியமாக உள்ளது
தங்கள் பதிவினைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்