பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 7, 2013

வெற்றிவேற்கை (1)

                                        வெற்றிவேற்கை (1)

பண்டைய தமிழிலக்கியங்களை பொதுவாக மக்கள் ஆர்வத்தோடு படிப்பதாகத் தெரியவில்லை. இன்றைய இலக்கியவாதிகள் அவரவர்க்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் படிப்பையே இலக்கியமாகக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்ற பெயரைச் சொன்னமாத்திரத்தில் இவைகள் எல்லாம் பள்ளிக்கூட பாடங்களில் காணப்படுபவை, அவற்றை வேறு வழியில்லாமல் மாணவர்கள் படித்து மனப்பாடம் செய்து, தேர்வெழுதி மதிப்பெண் வாங்கத்தான் பயன்படும். இதில் வேறென்ன புதுமை இருக்கிறது என்பது பொதுவான எண்ணம் உண்டு. 

இந்த வெற்றிவேற்கை மூன்றாம் வகுப்பிலேயே படித்ததால் முதிர்ந்த வயதில் அவற்றை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வருவது சிரமமான காரியம்தான். அப்படி இதில் என்னதான் இருக்கிறது. மூன்றாம் வகுப்பு குழந்தைகள் படிப்பதை நாமும் படித்தால்தான் என்ன? பார்ப்போமே என்கிற உணர்வில் இந்த இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினேன். இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றவைகள் எல்லாம் சிறப்பான கருத்துக்களைக் கூறுகின்றன. 

சரி இந்த வெற்றிவேற்கையில் என்ன இருக்கிறது. அதிவீரராமபாண்டியன் என்பவர் இயற்றியதாக புத்தகங்கள் கூறுகின்றன. அப்படியொன்றும் கடினமான சொற்களைப் போட்டு புரியாமல் எழுதப்பட்டதுமல்ல. மிக எளிமையான, அனைவருக்கும் புரியும்படியான, ஒவ்வொரு வரியிலும் ஒரு ஆழமான கருத்தை அள்ளித் தெளித்திருக்கும் அதிவீரராமபாண்டியர் இவற்றை சிறார்களுக்கென்று மட்டுமா எழுதியிருப்பார், வயது முதிர்ந்திருந்தாலும், சிறார்களுக்குரிய பண்போடு இருக்கும் பலதரப்பட்டவர்க்குமாக இது பயன்படத்தான் எழுதியிருப்பார். பரவாயில்லை, வயதானவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, மீண்டுமொரு முறை படித்துத்தான் பார்ப்போமே. இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை. இந்த உணர்வோடு மீண்டும் இதோ வெற்றிவேற்கை.

இந்த இலக்கியத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்து இருக்கிறது. அது மிக எளிமையான பாடல். மகா கணபதி மீதான பாடல், அதாவது விக்ன விநாயகன் மீது. அது இதோ

"பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணவற் பதமலர் தலைக்கணி வோமே"

அடடா! சிறார்களுக்காக உண்டான இலக்கியமன்றோ மிக எளிதான கடவுள் வாழ்த்து. பிரணவம் எனும் ஓம் எனும் மந்திரத்தின் உருவானவன் கணபதி. அந்த ஐங்கரன் பாதகமலங்களை அள்ளியெடுத்து நம் தலையில் அணிந்து கொள்வோம் என்கிறது இந்தப் பாடல்.

இந்த நூலைப் படிப்பதால் என்ன பயன்? இந்த நூலாசிரியர் அதிவீரராமபாண்டியன் பாண்டிய நாட்டவர். அங்கு கொற்கை எனும் துறைமுகப் பட்டினத்தை ஆளும் மன்னவன் நல்ல தமிழ் நூல்களிலிருந்து திரட்டி எடுத்த நீதிகளை இந்த நூலில் தந்திருப்பதை ஏற்று வாழ்வில் குற்றங்களைக் களைந்து நல்வழிப் படுவார்களானால் அப்படிப்பட்டவர் எந்தக் குறையும் இல்லாதவர்களாக இருப்பர். இனி ஒவ்வொரு வரியாகப் பார்க்கலாம், நூல் என்ன சொல்கிறது என்பதை.

ஒவ்வொரு நாளும் பத்து வரிகளைப் படித்து அதற்குப் பொருள் காண்போம். இன்று முதல் பத்து. படியுங்கள். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிருங்கள். பள்ளிக்கூட சிறார்கள் படிக்க வேண்டியதைக் கொடுத்து படியென்றால் யார் படிப்பது என்று அலட்சியம் செய்யாதீர்கள். இது சிறுவர்களுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

1. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்: 

நமக்குக் கல்வி கற்றுத் தருபவர் ஆசிரியர். அவர் போன்ற ஆசிரியர்களுக்கும், கற்றறிந்த மேலோர்களுக்கும் கல்வியைக் கற்பித்து, எழுத்துக்களை எழுதும் விதம் குறித்து முதன் முதலாக ஆசிரியராக இருந்து பணியாற்றியவர் யார்? அவர்தான் இறைவன். அந்த எழுத்துக்களைக் கொண்ட கல்வியை இன்று நமக்குக் கற்பிப்பவனும் இறைவன் போன்றவனே.

2. கல்விக்கு அழகு கசடற மொழிதல்:

ஒருவன் தன்னைக் கல்வி கற்றவன் என்று சொல்லிக் கொள்வானானால், அவன் பேசும்போதும், பிறருக்கு எடுத்துரைக்கும் போதும் பிழையின்றி தான் படித்தவற்றை உள்ளது உள்ளபடி, பொருள் மாறாமல் பேசுதலே நல்ல கல்வி கற்றதற்குச் சான்றாகும்.

3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்:
இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய 1939 முதல் அது முடிந்த 1945 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பலரும் தாங்கள் இருந்த பூர்வீக ஊர்களிலிருந்து குடிபெயர்ந்து பெரிய ஊர்களுக்கும், நகரங்களுக்கும் செல்லலாயினர். அப்போது அவர்கள் போன இடத்தில் தாங்கள் இருந்த கிராமம் போல அல்லாமல் நல்ல தொழில் புரியவும், பொருள் திரட்டவும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பொருள் சேர்ந்து நல்ல செல்வந்தர்களாக ஆகினர். மாடமாளிகைகளைக் கட்டிக்கொண்டு விரைந்து செல்ல வாகனங்களை வாங்கிக் கொண்டு தங்களைச் செல்வச் சீமான்களாகக் காட்டிக் கொண்டிருந்த அதே வேளையில் இவர்களைப் போல ஊரைவிட்டு வராமல் அங்கேயே தங்கியிருந்தவர்கள் ஏழ்மை நிலையை அடைந்து வருந்தி வரலாயினர். அவர்கள் நகரத்துக்கு வந்து செல்வந்தராக இருக்கும் உறவினர்களைப் பார்த்து அடைக்கலமென்று வந்தால் அவர்களையும் அரவணைத்து, அவர்கள் வாழ்விலும் முன்னேற வழிகாட்டுதலே சிறப்பு. அதுவன்றி ஐயய்யோ, இவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று வாயிற்கதவை அடித்துச் சாத்திவைத்திருப்பது முறையாகாது. அப்படிப்பட்ட செல்வந்தர்களுக்கு அழகு தருவது தங்கள் சுற்றங்களையும் காத்து வருவதாகும்.

4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்:
வேதம் ஓதுதலும், ஊர் வாழ யாகங்களைச் செய்வதும், தன்னலமற்ற இந்த சேவைக்காக பிறர் மனமுவந்து தாங்களாகவே முன்வந்து அளிப்பவற்றைப் பெற்று வாழ்வதும் அந்தணர் கடமை. இவர்களுக்கு வேதம் ஓதுதல் முதற்கடமை. வேதங்களின் ஒலி காற்றில் பரவப் பரவ நல்லன எல்லாம் தானே நடக்கும். அப்படி வேதங்களை ஓதுவோர் தங்களது சொந்த வாழ்க்கை முறையில் தலைசிறந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஒழுக்கம் தவறியோர், என்னதான் வேதங்களைப் படித்தாலும் பயன் இல்லை. ஆகவே வேதம் ஓதுகின்ற வேதியர்க்கு அழகு நித்தமும் வேதம் ஓதுதலும், ஒழுக்கமான வாழ்க்கையுமே ஆகும்.

5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை:
அன்றைய காலகட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்களாகட்டும், இன்றைய ஜனநாயக காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களை ஆளும் பொறுப்பில் உள்ளவர்களாகட்டும் தாங்கள் நேர்மை தவறாமல், தர்மப்படி நாட்டை ஆளுதலே தலையாய கடமையாகும். இதில் எங்காவது ஒரு சிறு தவறு நேர்ந்து ஆள்வோர் நேர்மை தவறுவாரானால் அது அவர்கள் வகிக்கும் பதவிக்கே இழிவாகும். ஆகவே நாட்டை ஆள்வோர் எப்போதும் நீதி நெறிமுறை தவறாமல் ஆட்சி புரிதலே.

6. வணிகர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல்:
பண்டைய நாளில் அந்நியர் வந்து புகாமுன்னம், நம் மக்கள் தமக்குள் செய்யும் பணிகளை பிரித்துக் கொண்டு அவற்றை முறை பிறழா வண்ணம் செய்து கொண்டு வந்தனர். அப்படிச் செய்பவர்கள் செய்யும் தொழிலால் பிரிந்திருந்தாலும் சமூக ஒற்றுமையோடு வாழ்ந்து ஒருவர்க்கொருவர் நேசக்கரம் நீட்டி வாழ்ந்து வந்தனர். அப்படி தொழிலால் பிரிந்தவருள் வணிகர் எனும் பிரிவும் ஒன்று. மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், விற்கவும் இவர்கள் பணியாற்றி வந்தனர். பொருட்களை வாங்குவதற்கு வணிகர்களுக்கு நிறைய பொருள் தேவை. வாங்கியவற்றை நியாயமான முறையில் விற்று, அதில் வரும் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டு தொழிலில் சிறந்து விளங்க வேண்டும். ஆகவே அவர்களது நோக்கம், மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்குதல்.

7. உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்:
உழுது பயிரிட்டு உணவுக்கு வேண்டிய தானியங்களை உற்பத்தி செய்வோர் உழவர்கள். நிலத்தை ஏர் கொண்டு உழுதலால் உழவர் எனப் பெயர் பெற்றனர். வேளாண்மைத் தொழில் செய்தலால் வேளாளர் எனவும் பெயர் உண்டு. இவர்கள் நிலத்தை உழுது பயிரிட்டு தானியங்களை உற்பத்தி செய்வது தங்களுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு தரும் உத்தமமான காரியத்தைச் செய்கிறார்கள். அப்படி தான் உற்பத்தி செய்யும் தானியங்களை மற்றவர்க்கும் கொடுத்துத் தானும் உண்பது அவர்கள் செய்யும் தொழிலுக்கும், அவர்களுக்கும் அழகு தரும்.

8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்:
பொதுவாக மன்னன் என்பவன் ஆளும் பொறுப்பில் இருந்தாலும், நாட்டு நடப்பை நன்கு உணர்ந்தவராக இருப்பவர்கள் அமைச்சர்களே. நம் ஊர் தெருக்கூத்துகளில் வரும் மன்னர்கள் நாட்டில் மழை பெய்கிறதா என்பதை "அமைச்சரே! நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?" என்று கேட்டுத் தெரிந்து கொள்வதாகத்தான் நடித்துக் காட்டுவார்கள். அமைச்சர் என்போர் மக்களுக்கும் ஆட்சி புரியும் மன்னனுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுபவர்கள். நாட்டில் எவ்வெப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டு இது நன்மை தரும், அல்லது இது தீமை தரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து சொல்லி அதற்கேற்றவாறு நடந்து கொள்வது அமைச்சரின் கடமை. அப்படி நடந்து கொள்வதே அமைச்சருக்கு அழகு.

9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை:
தந்திரம் என்பதற்கும் தந்திரி என்பதற்கும் பல பொருள் உண்டு. இங்கு தந்திரம் என்றால் சேனை அல்லது படை. தந்திரி என்பதற்கு இங்கு படைத் தலைவன் என்பது பொருள். ஒரு படைக்கு அல்லது சேனைக்குத் தலைவன் என்றால் ஏதோ தன்னை அலங்காரம் செய்து கொண்டு சிப்பாய்களிடம் சலாம் பெற்றுக் கொள்வது அல்ல. போர் என்றால் போர் முனையில் நின்று போரிடும் வீரமும், விவேகமும் இருத்தல் வேண்டும். அஞ்சா நெஞ்சம் என்பது உண்மையில் வேண்டும். ஆகவே ஒரு படைக்குத் தலைமை வகிப்பவன் அஞ்சா நெஞ்சமும், வீரமும், விவேகமும் உடையவனாக இருத்தல் வேண்டும். அப்படி இருப்பதுதான் அவன் வகிக்கும் படைத்தலைவன் எனும் பதவிக்கு அழகு.

10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்:

உண்டி என்றதும் திருப்பதிக்கு என்று காசு போட்டு வைக்கும் சுட்ட மண்ணால் ஆன குடுவை என்று எண்ண வேண்டாம். இங்கு உண்டி என்பது நாம் சாப்பிடுகின்ற உணவைக் குறிக்கும். வீட்டில் உணவு சமைத்ததும் அதனைத் தான் மட்டும் உண்டு தீர்த்துவிடுவது சிறந்தது அல்ல. ஒவ்வொரு நாளும் தனித்து உண்ணும் நிலைமை வந்தால், யாராவது விருந்தினர் வரமாட்டார்களா அவர்களுக்கும் உணவளித்து அவர்களோடு சேர்ந்து அமர்ந்து உணவருந்த மாட்டோமா என்று அந்த நாட்களில் நம் முன்னோர்கள் ஏங்கினார்கள். இப்போதும் கூட சில கிராமப் புறங்களில் அப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடிகிறது. விருந்தினரோடு உண்ணும் உணவே விருந்து.3 comments:

  1. பயனுள்ள அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நான் படித்தது மட்டுமல்லாமல் இயன்றவரை பின்பற்றுவது. ஆனால் நம் பிள்ளைகளைச் சென்றடையவில்லை. இனி வருங்கால சந்ததியினருக்கு - ? - தான்! ... ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனும், வெற்றி வேற்கையும் ஒருவனின் மனதில் பதிந்து விட்டால் அவன் எந்த சூழலிலும் தரம் தாழ்ந்து போவதில்லை... பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு ஒழிக்கப்பட்ட போதே மனிதப் பண்புகளும் அழிந்து போயின!.. மீண்டும் இந்த ஞானநூல்கள் மக்களால் பயிலப்படுவதோடு பின்பற்றப்படவும் வேண்டும்!..

    ReplyDelete
  3. நல்லதோர் ஆரம்பம். எளிய உரை இப்போது அவசியம்தான்.கொஞ்சம் 'தங்கிலிஷி'ல் எழுதினால் கூடப் பரவாயில்லை. இளைஞர்களுக்குக் கருத்துப் போய்ச் சேர்ந்தால் போதும்.

    ReplyDelete

You can give your comments here