பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 8, 2013

வெற்றிவேற்கை (4)

வெற்றிவேற்கை (4)

முப்பது வரை சென்ற பகுதிகளில் பார்த்தோம். இனி முப்பத்தியொன்று முதல் நாற்பது வரையிலான வரிகளைப் பார்க்கலாம்.

31. சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்
பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.

பொதுவாக வயதிலும் அனுபவத்திலும் குறைவாக இருப்பவர்கள் சிறியோராகத் தான் இருப்பார்கள். இவர்கள் அனுபவமின்மையாலும், அறியாமையாலும் சின்னஞ்சிறு தவறுகளைச் செய்து விடுவார்கள். அவைகள் குற்றம் எனக் கொள்ள முடியாது, அறியாமையால் செய்ததால் தவறு என்று கருதி அனுபவத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கும் பெரியோர்கள் அவற்றை மன்னித்துவிடுதல் முறையானதாக இருக்கும். அதை விடுத்து சிறியோர்களுக்குச் சமமாக பூசலிட்டுக் கொண்டிருக்கலாமா? சிறியவர்கள் தவறிழைத்தால் பெரியோர்கள் அதனை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுதலே சிறப்பு.

32. சிறியோர் பெரும்பிழை செய்தனர் ஆயின்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே.

சிறியவர்கள் செய்யும் சிறுபிழைகளைப் பெரியோர்கள் மன்னித்து மறந்து விடுகிறார்கள் என்பதால், சிறியவர்கள் துணிச்சல் கொண்டு பெரும் தவறுகளைத் தெரிந்தே செய்வார்களானால், பெரியோர்கள் அதனை எப்படி மன்னிப்பார்கள். தவறு செய்தவன் மன்னிக்கப்படலாம், தெரிந்தே தப்பைச் செய்தவன் தண்டனை அடைந்தே தீரவேண்டும், பெரியோர்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் எனும் பயம் இருந்தாக வேண்டும். பெரியோர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் தானே என்று உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் இப்படித் தெரிந்தே செய்யும் குற்றங்களுக்குத் தண்டனை அளித்தே தீருவார்கள்.

33. நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே.

பல காலம் தேங்கிக் கிடக்கும் நீர் நிலைகளில் மேல் மட்டத்தில் பாசி படர்ந்து பச்சை பசேலென்று பரவிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். அப்படி நீர் நிலைகளின் மேல்மட்டம் முழுவதும் பாசி படர்ந்திருந்தாலும் அதன் வேர் நீரினுள் பாய்ந்து அடிவரை செல்வது கிடையாது. நாம் பலரோடு பழகுகிறோம், நட்பு கொள்கிறோம். பழகும் நட்பு அனைவரும் ஒரே மாதிரியான குணங்கள் அமைந்தவர்கள் இல்லை. நல்லவர்கள் நட்பும் கிடைக்கும், நல்லவர் அல்லாத மூர்க்க மனிதர்கள் நட்பும் கிடைக்கும். நல்லவர்கள் நட்பு நிலைத்திருப்பதைப் போல மூர்க்கர்களுடைய நட்பு நிலைப்பதில்லை, நீரின் மேல் மிதக்கும் பாசியின் வேர் நீரினுள் படிவது இல்லையல்லவா, அதைப் போல.

34. ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே.

பெரிய மரங்கள் தரையில் வேர்விட்டு ஆழமாகப் பதிந்து எத்தனை காற்று, மழை, புயலுக்கும் சாயாமல் உறுதியாக நிற்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா. அதைப் போல மேன்மை குணங்கள் கொண்ட பெரியோரிடம் பழகினால், அவர்கள் ஒரே ஒரு நாள் மட்டும் நம்மிடம் பழகினால்கூட, அவர்களது நட்பு ஆழ வேர்விட்டு வளர்ந்த பெரிய மரத்தினைப் போல் உறுதியாக நம்மிடம் நட்பு கொண்டிருப்பர்.

35. கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.

இறைவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளில் மனித இனம் மட்டுமே ஆறாம் அறிவு கொண்டவை. அப்படி பகுத்தறியவும், நல்லவை கெட்டவை இவற்றை அறிந்து கொள்ளவும் ஆற்றல் படைத்த மனிதன் தன் அறிவை வளர்த்துக் கொள்ள, நல்வழியில் நடக்க கல்வி கற்பது அவசியம். அப்படி கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு இவ்வுலகில் எந்த மரியாதையும், முன்னேற்றமும், கெளரவமும் கிடைக்காது. ஆகையால் ஒவ்வொருவரும் இளமையில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கல்விக்கு கரை கிடையாது என்பர். எத்தனை கற்றாலும் அதற்கு எல்லையும் இல்லை. போதுமென்று திகட்டவும் செய்யாது. ஆகையால் கற்றல் என்பது வாழ்க்கைக்கு நன்று. ஒருவன் ஏழ்மையின் காரணமாகப் பிறரிடம் கையேந்தி உணவு உண்ணும் நிலைமை இருந்தாலும், கற்றலை மட்டும் விட்டுவிடக் கூடாது. அந்த ஏழ்மையைக்கூட மாற்றி அவனை உயர்த்தும் சக்தி கல்விக்கு உண்டு. ஆகவே வாழ்நாள் முழுவதும் ஒருவன் கல்வி கற்றலை கைவிடக் கூடாது.

36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லின் உள் பிறந்த பதர் ஆகும்மே.

தான் பெற்ற கல்விச் செல்வத்தினால்தான் ஒருவனுக்குப் பெருமை. கல்வி கற்றவன் எந்த சபையிலும் தலை நிமிர்ந்து நிற்கலாம். கல்வி கற்கவேண்டிய பருவத்தில் ஊர் சுற்றிவிட்டு, படிக்காமல் காலத்தை ஓட்டிவிட்டு பின்னால் மற்றவர்களையெல்லாம் பார்த்து தான் அப்படி கல்வி கற்றவனாக ஆகமுடியவில்லையே எனும் ஆற்றாமையை மறைக்க தன் தாத்தா எப்படி செல்வாக்கோடு வாழ்ந்தார், தன் தந்தை எப்படி புலவர்களுக் கெல்லாம் பெரும் புலவராக இருந்தார் என்றெல்லாம் தன் முன்னோர்களுடைய பெருமைகளைப் பேசித் திரிவதால் இவன் நிலைமை மாறவா போகிறது. அப்படிப்பட்டவன் நல்ல நெல்லுக்கிடையே, உள்ளே அரிசி இல்லாத வெற்றுப் பதர் போன்றவனாகவே கருதப் படுவான். ஒருவனுக்குப் பெருமை தான் கற்ற கல்வியினால்தானே தவிர முன்னோர் பெருமைகளினால் அல்ல.

37. நாற்பால் குலத்தில் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே.

அந்தக் காலத்தில் மனிதர் செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு குலத்தவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு பிரிவினர். தொழிலால் ஏற்றத் தாழ்வு இல்லை என்று அனைவருமே உறுதியாக இருந்த காலம் அது. பின்னர் சந்தர்ப்ப, சூழ்நிலை, அன்னியர் படையெடுப்பு, நம் அடிமை வாழ்வு, ஆள்வோருக்கு ஆலவட்டம் போட அடிமைகள் தேவைப்பட்ட நிலையில் அவர்களுக்குச் சேவகம் செய்யச் சென்ற காலத்துக்குப் பிறகு சீராகப் போய்க்கொண்டிருந்த பிரிவுகளில் குழப்பம். தங்களை உயர்ந்தோர், தாழ்ந்தோர் என பாகுபாடு செய்து பேசி வரத் தொடங்கினர். தொழில் அடிப்படையில் வாழ்ந்தவர்கள் அவரவர்க்கு ஏற்ற தொழிலை விட்டுவிட்டு, வேறுபட்ட தொழிலுக்கு மாற்றிக் கொண்ட நிலைமை ஏற்பட்டது. அப்படி உரிய பாதையில் செல்லாமல் பாதையை மாற்றிக்கொண்ட ஒருவன் தன்னை உயர்ந்தோன் என்று கூறிக்கொள்ளும் பிரிவினரில் ஒருவன் கல்வி கற்று, தகுதியோடு வாழவில்லையென்றால் அவன் அப்போதும் உயர்ந்தவனா என்ன? இல்லை தாழ்ந்தவனே! கல்வியாலும், திறமையாலும்தான் உயர முடியுமே தவிர பிறப்பினால் அல்ல. ஆகவே கல்வி கற்றலே ஒருவனை உயர்ந்தவனாக ஆக்கும் தன்மை உடையது.

38. எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.

நான்கு வர்ணத்தில் எதில் பிறந்திருந்தாலும், வயதில் இளையவரோ, மூத்தவரோ எப்படியிருந்தாலும், நல்ல கல்வி கற்று சிறப்புடையவனாக இருந்தால் போதும், மற்றவர்கள் அவனுக்குரிய கெளரவத்தைக் கொடுத்து மேல் நிலைக்குக் கொண்டு வருவர். கல்வி அறிவு இல்லாதவன் எந்தக் குலத்தவனாயினும் அவனைப் பெரியோர்கள் கண்டு கொள்வதில்லை.

39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
தன் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானவன் அரசன். அவனுக்கு இன்னார் இனியர், இன்னார் வேண்டாதவர் எனும் பாகுபாடு கிடையாது; அப்படி வைத்துக் கொள்ளவும் முடியாது. ஒரு குடும்பத்தில் தாயோ, தந்தையோ தன் மகன் அசடனாக இருந்தாலும் அவனைத் தன் மகன் என்பதால் விரும்பி ஏற்றுக் கொள்வர், தள்ளிவிடவா முடியும்? அது பாசத்தின் காரணமாக உண்டானது. ஆனால் ஒரு அரசன் அத்தகைய பாசத்தை குடிமக்கள் யார்மீதும் வைத்துக் கொள்ள முடியாதே, அவன் அன்பு செலுத்தவோ, மரியாதை செலுத்தவோ, விரும்பவோ செய்ய வேண்டுமானால் பாசத்தினால் அது இயலாது. ஆனால் அவர்கள் அறிவுடையவனாக, கல்வி கற்றவனாக, நாட்டுக்கு அவனால் பயன் உண்டு என்று தெரிந்தால் மன்னன் கூட அந்த அறிஞனை விரும்புவான்.

40. அச்சம் உள்ளடக்கி அறிவு அகத்து இல்லா
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்றே.

மனிதரில்தான் எத்தனை விதம்? அறிவுடையோன், அசடன், சுயநலம் பேணுபவன், பிறருக்கு இன்னா புரிபவன், குடிகேடன் இப்படி எத்தனை விதம். குணத்திலும் மாறுபட்டவர்கள் இருக்கிறார்கள். இன்னல் வந்துற்றபோதும் மனம் கலங்காதவர் உண்டு. சின்னஞ்சிறு இடையூறுகளையும் கண்டு மனம் அயர்ந்து போவோர் உண்டு. எதிலும் தன் சொந்த நலனை மட்டும் கருத்தில் கொள்வோர் உண்டு. கொள் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றதும் வாயை மூடிக் கொள்வதுமான குணமுடையோரும் உண்டு. அச்சம் எனும் மடமையைக் கைக்கொண்டவர்களும், அறிவின் ஒளி சிறிதும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை என்னவென்று அழைப்பது. நல்ல குணம் உடையோர், இழி குணம் உடையோர் என பகுத்துப் பார்ப்பது அறிவுடைமை. ஒரு குடும்பத்தில் இழி குணமுடையோர் மட்டுமே இருப்பாராயின் அத்தகைய குடும்பத்துக்குச் சந்ததியே இல்லாமல் போய், அவர்களை ஏங்க வைப்பதே நன்மை பயக்கும். வீரமும், விவேகமும், அறிவும் அற்ற மக்கட்பேறைப் பெறுவதைவிட, மக்கட்பேறே இல்லாமல் இருப்பது நன்று என்கிறது இந்தப் பாடல்.1 comment:

  1. கற்கை நன்றே கற்கை நன்றே!..பிச்சை புகினும் கற்கை நன்றே!.. மனிதனாகப் பிறந்தோருக்கு மகுடம் இந்த வரிகள் தான்... இப்படிக் கற்று அறிவில் தேர்ந்து விட்டால் அடுத்தது - அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

    ReplyDelete

You can give your comments here