பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 11, 2013

தனிப்பாடல்கள்

தமிழில் பல தனிப்பாடல்கள் இருக்கின்றன. அதில் மூன்றை மட்டும் இங்கு தருகிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

ஆற்றங்கரை பிள்ளையாரின் திருமணத்துக்கு யார் பெண் தருவார்?

ஆற்றங்கரை படித்துறைகளில் எல்லாம் அனேகமாக ஒரு அரசமரமும், அருகில் ஒரு பிள்ளையாரும் நிச்சயம் காணலாம். பிள்ளையார் பாவம் இப்படி தனிமையில் உட்கார்ந்திருக்கிறாரே, அவருக்கு யாராவது பெண் கொடுத்துத் திருமணம் செய்வித்து அவரைக் குடியும் குடித்தனமுமாகப் பார்த்தால் என்ன. ஒரு புலவருக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டுவிட்டது. ஆவர் பாடுகிறார் இப்படி:

"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."

வீரம் ததும்பும் முகமுடைய விநாயகப் பெருமானே! இப்படி ஆற்றங்கரையில் வந்து உட்கார்ந்திருக்கிறீரே? உனக்குப் பெண் கொடுக்க எவரும் தயாராயில்லையே, யாரும் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே. காரணம் என்ன தெரியுமா விநாயகா? உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார். உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி. உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு. உன்னுடைய முகமோ யானை முகம். உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன். உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி. உனக்கோ பானை வயிறு? பின்பு யார் பெண் கொடுப்பார். இதைக் கேட்டு விநாயகர் எழுந்தார், எதிரில் நிற்கும் புலவருக்கோ கண் தெரியாது. அந்தகக் கவி. என்ன செய்வது, ஒழிந்துபோ என்று விட்டுவிட்டார்.



பொய் சொல்லலாமா? யாரிடம் சொல்லலாம்? எங்கு சொல்லக்கூடாது?

"பொய்யருக்குப் பொய் உரைத்தால் வெற்றியாம்;
அவருக்குப் பொய்யாகாத
மெய்யருக்குப் பொய்யுரைத்தல் தேய்பிறைபோல்
தவம் குறையும், மிடியுண்டாகும்
துய்ய தாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால்
வறுமை பிணி தொலையா; என்றும்
உய்யவருள் தேசிகற்குப் பொய் உரைத்தால்
நரகமது உண்மைதானே."

அந்தகக் கவி வீரராகவர் பாடியுள்ள கவிதை இது. பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவனிடம் பொய் சொன்னால் வெற்றி உண்டாகும்; பொய் சொல்வதை விரும்பாத ஒருவனிடம் போய் பொய் சொன்னால் நாம் செய்த புண்ணியங்கள் தேய்பிறை போல் மெல்ல தேய்ந்து போகும்; அதோடு விட்டுவிடுமா வறுமைப் பிணி பீடிக்கும்; தூய்மையான பெற்றோர்களிடம் போய் பொன் சொன்னால், நம்மைப் பீடித்திருக்கிற வறுமையும் பிணியும் நீங்கவே நீங்காது; வாழ வழிகாட்டும் ஆசிரியரிடம் பொய் சொன்னால் நரகத்துக்குச் செல்வது நிச்சயமாம்.


கல்வி மட்டும்தான் சதமென எண்ணினேனே!

"அட கெடுவாய்! பல தொழிலும் இருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திட முளமோ கனம் ஆடக் கழைக் கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லை;
தட முலை வேசையராகப் பிறந்தோமில்லை
சனியான தமிழை விட்டுத் தையலார்தம்
இட மிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை;
என்ன சென்மம் எடுத்துலகில் இரக்கின்றோமே!"

தமிழ் படித்து புலமை மிகுந்தோம் எனும் பெருமையோடு செல்வம் மிகுந்தாரிடம் சென்று ஈயென்று இளித்துப் பல்லெல்லாம் தெரியக் காட்டி இரந்து நிற்கும் கேடுகெட்ட ஜென்மமே! (தன்னையே சொல்லிக் கொள்வது) என்ன ஜென்மம் எடுத்தாய் நீ! உலகத்தில் பிழைப்புக்காக செய்யக்கூடிய தொழில்களா இல்லை. அத்தனை வழிகள் இருக்கும்போது அதையெல்லாம் விடுத்து கல்விதான் உயர்ந்தது, அறிவுக் கண்ணைத் திறக்க வல்லது என்று அறிவில்லாமல் கல்வி கற்றாயே! மாறாக நடுத் தெருவில் மக்கட் கூட்டத்தின் மத்தியில் உயர்ந்த கம்பங்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணைத்து அந்தக் கயிற்றின் மீது ஏறிநின்று ஆடுகின்ற கழைக்கூத்தை ஆடத் தெரிந்து கொள்ளவில்லை; தெருவில் ஒரு கூடையைக் கவிழ்த்து அதில் மாங்கன்றை முளைக்க வைத்துக் காட்டும் செப்பிடுவித்தையைக் கற்று தேரவில்லை; அதெல்லாம் போகட்டும் உடல் அழகை உள்ளபடி காட்டி ஆண் மனங்களைச் சலனப்படுத்தி அவர்களிடமிருந்து காசைப் பறிக்கும் வேசியாகவும் பிறக்கவில்லை; இந்தச் சனியன் பிடித்த தமிழை உயிர் என்றும், உணர்வென்றும், மூச்சு என்றும், செல்வம் என்றும் எண்ணி தமிழைப் படித்ததற்குப் பதிலாக கணிகைப் பெண்களுக்குத் தூது போயாவது பிழைக்கவும் முடியவில்லை, என்னடா ஜென்மம் எடுத்து இப்படி கால் காசுக்கும் அரைக் காசுக்கும் லோலோ வென்று அலைந்து பிச்சை எடுக்கிறேனே! என்ன பிறவி என் பிறவி என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஏழைப் புலவனின் ஓலக் குரல் இது.



1 comment:

துரை செல்வராஜூ said...

கல்வி மட்டும்தான் சதமென எண்ணினேனே!...// என்ன அருமையான உயர்வு நவிற்சி!... சதமென்றால் நூறு - அதற்கு நிறை என்று கூட பொருள் கொள்ளலாம்!... அவர் குறித்த அத்தனை பேருக்கும் இந்த ஏழைக் கவிராயரின் தமிழ் இன்றி வாழ்வு ஏது!...அவர்கள் யாரோ!..எவரோ!.. இன்னும் இந்தத் தமிழுக்குள் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்!...இருந்தமிழே! உன்னால் இருந்தேன்!...