பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 8, 2013

வெற்றிவேற்கை (3)

வெற்றிவேற்கை (3)

21. உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்.
ஒவ்வொருவருக்கும் தாய் வழியில் தந்தை வழியில், உடன் பிறந்தோர் வழியில், அவர்கள் திருமணம் செய்து கொண்ட வழியில் என்று உறவு தொடர்கதையாக வளர்ந்து கொண்டே போகும். ஒரு சிலருக்கு வாய் வைத்த இடமெல்லாம் உறவு என்று கூட சொல்வார்கள். அப்படி அருகம்புல் வேரோடுதல் போல உறவுகள் வேரோடிக் கிடக்கும். அப்படிப்பட்ட உறவினர்கள் எல்லோருமே ஒருவனுக்குத் தேவை ஏற்படும் போது ஒடிவந்து உதவுபவர்களாக இருந்து விடுவார்களா? இல்லையே. அப்படியானால் உறவு என்பது யாருக்குப் பொருந்தும்? நட்புக்கு இலக்கணம் தந்திருக்கிறார் திருவள்ளுவர். 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்கிறார்'. 'முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்பது மற்றொரு குறள். இந்த குறள் சொல்லும் நட்பை உறவாக மாற்றிப் பாருங்கள். அப்போது தெரியும் உறவு என்பது எப்படி இருக்க வேண்டுமென்று. சில நேரங்களில் நட்பு உறவைக் காட்டிலும் அதிகமான உதவிகளை நமக்குச் செய்யும். ஆகவே உறவு என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் உறவு அல்ல.

22. கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நம் மானுட வர்க்கத்தில் திருமணம் என்றொரு சடங்கு உண்டு. அந்தத் திருமண பந்தத்தால் ஒவ்வொருவருக்கும் மனைவி என்பவள் ஒருத்தி வாய்க்கிறாள். ஒருவனுக்கு வாய்த்த மனைவியைப் போல மற்றொருவனுக்கு வாய்த்திருப்பதை எங்கேயாவது கண்டிருக்கிறோமா? அடுத்தவன் மனைவி கணவனுக்கு எப்படியெல்லாம் சேவை புரிகிறாள், எப்படி கணவனின் வேலைப் பளுவினைத் தானும் தாங்கிக் கொள்கிறாள். குடும்பத்தில் நல்லவை, கெட்டவை அனைத்திலும் அவள் பங்கு கொண்டு கணவனின் மனச்சுமையை குறைத்திட பாடுபடுகிறாள். தனக்கு வாய்த்தவள் அப்படி இல்லையே. தான் தன் பெற்றோர் என்று பிறந்த இடத்துப் பெருமை மட்டும் பேசிக்கொண்டு தன்னையோ, தன்னைச் சார்ந்தவர்களையோ அவள் கவனிக்கவே இல்லையென்று வருந்துவோர் பலர் உண்டு. அவரவர்க்கு வாய்த்த மனைவி எப்படி இருக்கிறாளோ அவ்வளவுதான், அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். பிறரோடு ஒப்பிடுவது துன்பத்தைத்தான் தரும்.

23. அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது:
சமையற்கலை உயர்ந்த கலை. ஆண்களில் பலருக்கு அந்தக் கலையின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மனைவியோ, தாயாரோ உணவு சமைத்து வேளாவேளைக்கு பரிமாறி விடுகிறார்கள். சாப்பிட்டு விட்டு நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டு போய்விடுகிறோம். ஆனால் ஒருவன் தானே முயன்று அக்கறையோடு உணவு சமைத்து உண்பானானால் அந்த உணவு உண்மையில் சுவை இல்லாமல் இருந்தாலும் அவனுக்குச் சுவையுள்ள உணவைப் போல தெரியும். அது மனம் செய்யும் வினை. போகட்டும், அதுவல்ல இந்த வரிகளின் கருத்து. சில பொருட்களை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தோ, சுடப்பண்ணியோ சமையல் செய்யும்போது பதமாக இறக்கி விடவேண்டும். இல்லையேல், அதன் சுவை மாறுபட்டுப் போகும். வீட்டில் செய்த மைசூர்பாகு ஒருநாள் முறுகலாகிவிட்டது. காரணம் சற்று அடுப்பில் அதிக நேரம் காய்ச்சியதுதான். அதையே பக்குவமாக நெய்விட்டு நுரை பொங்கும் நேரத்தில் இறக்கியிருந்தால் பக்குவமாக உண்ண சுவையோடு இருந்திருக்கும். ஆனால் ஒரே ஒரு பொருள் மட்டும் எத்தனைக்கெத்தனை காய்ச்சினாலும், அது சுண்டச் சுண்ட அதன் சுவை குறையாமல் இருக்கும், அதுதான் பசும்பால். பசும்பாலைச் சுண்டக் காய்ச்சிய திரட்டிப்பால்/பால்கோவா சாப்பிட்டவர்களுக்கு அதன் அருமை தெரியும். இதில் என்ன சொல்ல வருகிறார் ஆசிரியர். சிலரை மற்றவர்கள் காய்ச்சு காய்ச்சென்று வாழ்நாள் முழுவதும் காய்ச்சிக் கொண்டே இருப்பார்கள். அப்படி எத்தனை காய்ச்சினாலும் பெரியோர்கள் தங்கள் நல்ல இயல்பிலிருந்து சிறு துளியும் மாறுவது இல்லை. மேலும் மேலும் காய்ச்சக் காய்ச்ச சுடர்விட்டுப் பிரகாசமாகத் தங்கள் நல்லொழுக்கத்தில் உறுதியாக இருப்பார்கள்.

24. சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது.
சில பாத்திரங்களை, பித்தளை, செம்பு, ஈயம் இவைகளை தீயிலிட்டுக் காய்ச்சினால் ஒளி மாறிவிடும். அனால் தங்கம் மட்டும் காய்ச்சக் காய்ச்ச ஒளி மேலும் பிரகாசமடையுமே தவிர ஒளி குன்றாது. அது போலவேதான் அறிவிற் சிறந்த பெரியோர்கள் முன் வரியில் சொன்னது போல பிறர் எவ்வளவு துன்புறுத்தினாலும் தங்களுடைய நல்ல இயல்பிலிருந்து மாறுபட மாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் தம்முடைய நற்குண நல்லொழுக்கங்களில் பிரகாசித்துக் கொண்டிருப்பார்கள்.

25. அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.
மரக்கட்டைகளுக்குள் சந்தன மரக்கட்டை மணம் உடையது. இந்த சந்தன மரக் கட்டைகளை சிறு துண்டுகளாக வெட்டி, சந்தனக் கல்லில் வைத்து அரைத்தால் சந்தன விழுது உருவாகும். அதனை நெற்றியில் பூசவும், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தவும், இறைவனை பூசிக்கவும் பயன்படுத்துவர். அப்படி சந்தன மரக்கட்டையை கல்லில் வைத்துத் தேய்க்கத் தேய்க்க அதன் மணத்தில் எந்த குறைவும் ஏற்படாது. கட்டை தேய்ந்து கொண்டிருக்குமே தவிர, மணம் மட்டும் முதலில் இருந்ததைப் போலவே அந்தக் கட்டை தெய்ந்து கரைந்து போகும் வரை மணம் மாறவே மாறாது. அதுபோலவெ நல்ல குணம் படைத்த பெரியோர்கள் ஊருக்குழைத்து தேய்ந்து போனாலும் தன் இறுதி வரை தங்கள் நற்செய்கைகளால் மணம் வீசிக் கொண்டிருப்பார்களே தவிர குறையொன்றும் வராது.

26. புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.
அகில் என்பதும் சந்தன மரத்தைப் போல மணம் உள்ள மற்றொரு மரத்தின் வகை. சந்தனத்தைப் போல இது சற்று வெண்மை நிறமின்றி கருமை நிறம் படர்ந்ததாக இருக்கும். இந்த அகில் மரக் கட்டையைத் தீயிலிட்டு எரித்தால், அதிலிருந்து எழும் புகை நறுமணம் வீசும். மேலும் மேலும் அந்தக் கட்டைகளை எரிப்பதால் தீய்ந்த நாற்றம் எழுவதே இல்லை, முதலில் நாம் உணர்ந்த அதே நற்புகை மணம் வீசிக் கொண்டிருக்கும். அது போலவே அறிவிற் சிறந்த பெரியோர்கள் தாங்கள் எவ்வளவுதான் துன்புறுத்தப் பட்டாலும், தங்கள் நற்குணங்களிலிருந்து மாறவே மாட்டார்கள்.

27. கலக்கினும் தண் கடல் சேறு ஆகாதே.
ஊரிலுள்ள ஒரு சிறு குட்டை, குளம், ஏரி இவற்றைப் பார்த்திருக்கிறோம். இவை சில நேரங்களில் மாடு குளிப்பாட்டிவிட்டுப் போன பின்பு, அல்லது மீன் பிடிப்போர் வலைகளை வீசி மீன் பிடித்த பின்போ அவை குழம்பிச் சேறாகக் காட்சி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் அலைகள் வீசிக்கொண்டு பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறதே அதைப் போய் எத்தனை கலக்கினாலும், குழப்பினாலும் அது குழம்பி சேறாக மாறாது. அது போலவே அறிவிற்சிறந்த பெரியோர்களை எத்தனை குழப்பினாலும், கலக்கினாலும் அவர்கள் தங்கள் நல்ல பண்புகளிலிருந்து மாறவே மாட்டார்கள்.

28. அடினும் பால் பெய்துகைப்பு அறாது பேய்ச் சுரைக்காய்.
சுரைக்காய் நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். அடிபெருத்து, நுனி சிறுத்து கூரைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த சுரைக்காயைப் பறித்துக் கறி சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த சுரைக்காயில் பேய்ச்சுரைக்காய் என்றொரு வகை உண்டு. அது வாயில் வைத்தால் கசப்பு ஆளைக் கொண்டு போய்விடும், அத்தனை கசப்பு. சாதாரண சுரைக்காயைச் சமைப்பது போல இந்த பேய்ச்சுரைக்காயைப் பறித்துக் கொண்டு வந்து அறுத்து நிறைய பால் ஊற்றி கறி செய்தாலும், அதிலுள்ள கசப்பு போய்விடுமா என்ன? அதன் இயல்பு கசப்பு என்றால் அதில் என்ன ஊற்றினாலும் கசக்கத்தான் செய்யிம் அல்லவா? அது போலத்தான் நல்லொழுக்கம் இல்லாத தீயமனிதர்களுக்கு எத்தனைதான் நல்லவைகளைச் செய்தாலும், அவர்கள் தங்கள் பொல்லாங்கிலிருந்து மாறவே மாட்டார்கள். அது அவர்கள் இயல்பாக பிறவியிலேயே அமைந்துவிட்டதுதான் காரணம்.

29. ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது.
உள்ளி என்பது நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உள்ளிப்பூண்டு. வெங்காயம் போல வெண்மையாக இருக்கும் உள்ளிப்பூண்டுவின் காரம் அனைவரும் அறிந்தது. சுள்ளென்று தெரிக்கும் காரம் அதில் இருக்கும். உள்ளியின் சுவையை எல்லோருமே விரும்ப மாட்டார்கள், காரணம் அதன் மணம் ஒருவித மாற்று மணமாக இருக்கும். இந்த உள்ளிப்பூண்டை எடுத்து நறுக்கி அதில் பற்பல நறுமண செண்டுகளைப் போட்டு முகர்ந்து பார்த்தாலும், அவை அத்தனையையும் மீறி அதன் இயல்பான பூண்டு நாற்றம் வீசத்தான் செய்யும். அதுபோல தீயோருக்கு எத்தனை நல்ல செயல்களைச் செய்து வந்தாலும், அவர்கள் தங்கள் இயல்பான தீமையைத்தான் செய்வார்களே தவிர நல்லொழுக்கம் பூண்டு விளங்கமாட்டார்கள்.

30. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.
ஒரு சிலர் சமூகத்தில் ஒகோவென்று பாராட்டப் படுகிறார்கள். பொழுது விடிந்தால் பாராட்டு, பொழுது சாய்ந்தாலும் பாராட்டு. அந்த பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதே சொர்க்கம் என்று அவர்கள் நினைப்பார்கள். சிலருடைய அதிர்ஷ்டம், அல்லது பிறந்த நேரத்தின் கொடுமை. அவர்களுக்கு எங்கு போனாலும் சிறுமை, எதைச் செய்தாலும் சிறுமை. நூறு பேர் நீர் எடுத்து முடித்த குடத்தை இவன் போய் நூற்றியோராவது ஆளாக எடுப்பான், அது அப்போதுதான் அம்போவென்று உடைந்து போகும். இது அவன் செய்த வினை என்பதா என்ன சொல்வது. அப்படி சில பேர், இப்படிச் சில பேர். இதுபோல பாராட்டுக்கள் கிடைப்பதோ, அல்லது சிறுமைகள் நடப்பதோ நம்மை மீறி நடப்பதானால் சரி. ஆனால் சில நேரங்களில் பெருமையும் சிறுமையும் நாம் நடந்து கொள்ளும் முறைகளில்தான் இருக்கிறது. ஆகையால் பொது இடங்களில் மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் பொறுப்போடும், கவனத்தோடும் ஒருவன் செயல்படுவானால் அவனுக்குப் பெருமை கிடைக்கும், அலட்சியமும், அவமதிப்பும் கொண்டிருப்பானானால் அவனுக்குச் சிறுமைகள் வந்தே தீரும்.2 comments:

  1. அனைத்தும் அருமை..! பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பற்றுகள் அற்று இருந்த ஞானியரும் படை பல சூழ அரசு ஓச்சிய மன்னரும் சரிக்கு சரியாக மக்களுக்கு நீதியினை உரைத்தனர் - எனில் அவர் பெற்றிருந்த மாண்பு எத்தன்மையது.. ஆயினும் அவற்றைக் கற்று மேன்மையுற விடாமல் செய்த இன்றைய நவீன கல்வித்திட்டத்தை என்ன என்று சொல்வது!...

    ReplyDelete

You can give your comments here