பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 10, 2013

வெற்றிவேற்கை (7)

வெற்றிவேற்கை (7)

இதுவரை 60 வரிகளுக்குப் பொருள் கண்டோம். இந்தப் பகுதியில் அடுத்த பத்து வரிகளுக்கு விளக்கம் பார்ப்போம். இதுபோன்ற நீதிகள் எந்தக் காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதை கவனிக்க வேண்டும். நமது பண்டைய நீதிநூல்களை தொடர்ந்து விடாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்தவொரு வாய்ப்பு இந்தப் பகுதிமூலம் நிறைவேறினால் மகிழ்ச்சியடைவேன்.

61. குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
புல்தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சும்மே.

புல்வாய் எனும் சொல்லுக்குக் கலைமான் அதாவது Antelope என்பர். அந்து குன்றுகள் நிறைந்த அடர்ந்த காட்டில் பிறந்து அந்த சூழ்நிலையிலேயே வளர்கிறது கூட்டம் கூட்டமாய். அப்படி கொடிய மிருகங்கள் வாழும் காட்டைத் தன் பிறந்த இடமாகக் கொண்டிருந்த போதிலும் அந்த எளிய மான்கள் புலியைக் கண்டால் அஞ்சுகிறது. காரணம் மான்களுக்கு புலிதான் எதிரி. மான் எத்தனை வேகமாக ஓடித் தப்ப முயன்றாலும், புலி அதனினும் வேகமாக ஓடி குறிவைத்து ஒரு மானைப் பிடித்துக் கழுத்தைக் கடித்து உணவாகக் கொள்ளும் காட்சிகளை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். மான் எளிய ஜீவன். புலி கொடிய மிருகம். அதற்காக மானைக் கோழை என்று சொல்ல முடியுமா? அதன் இயல்பு அது. புல்லைத் தின்று அமைதியாக வாழும் பிராணி. அதுபோல எளிய இயல்புடையோர் மிகவும் பாதுகாப்பாக இருந்த போதிலும், கொடிய மனிதர்களைக் கண்டு அஞ்சுவர். தீயவர்களைக் கண்டால், சாதுவான மக்கள் அஞ்சுவது இயற்கை.

62. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிக அஞ்சும்மே.

முந்தைய பாடலின் அதே கருத்தை வெறொரு எடுத்துக்காட்டு மூலம் விளக்க முயல்கிறார் இதில். தவளை வகையில் ஒன்று தேரை என்பது. மனிதரில் நோஞ்சானாக இருப்பவனைப் பார்த்து தேரை அடித்துவிட்டது என்பர். அவன் அப்படி உடல் ஒட்டி தேரை போல காட்சியளிப்பான். அந்தத் தேரை ஆழம் மிகுந்த கோட்டையைச் சுற்றிய அகழிகளில் வாழ்கின்றது. அங்கு யாரும் அத்தனை எளிதாக வந்துவிட முடியாது, அத்தனை பாதுகாப்பு உள்ள இடம், அப்படிப்பட்ட இடத்தில் தேரை வாசம் செய்கிறது. அப்படி பாதுகாப்பு இருந்தாலும் அந்தத் தேரை பாம்பைக் கண்டால் அஞ்சுகிறது. தீயவர் எங்கிருந்தாலும் மற்றவர்கள் அவர்களைக் கண்டு அஞ்சுவார்கள்.

63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும்புலி வாழும் காடு நன்றே.

பழைய திரைப்படங்களில் இந்த வசனத்தைப் பலமுறை கேட்டிருக்கிறோம். சில சந்தர்ப்பங்களை விளக்க இதுபோன்ற வரிகள் பயன்பட்டிருக்கின்றன. ஒரு நாட்டில் நீதியும் நேர்மையும் இருந்தால்தான் மக்கள் அமைதியாக அங்கு வாழ முடியும். தவறு நடந்தால் தண்டனை கிடைக்கும் என்கிற பயமும் இருக்கும். அப்படியில்லாமல் நீதிதவறிய மன்னன் கொடுங்கோலாட்சி செய்வானானால் அவன் நாட்டில் மக்கள் அமைதியில்லாமல் நித்திய கண்டம் பூர்ணாயுசு என்று வாழ்வார்கள். மக்கள் தாங்கொணா துன்பத்தை அனுபவிப்பார்கள். அப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சியில் வாழ்வதைவிட கொடிய புலிகள் வாழும் காடு வாழ்வதற்கு நல்லது என்ற முடிவுக்கும் வருவார்கள். கொடிய மிருகங்களைக் காட்டிலும், கொடுங்கோல் அரசர்கள் கொடியவர்கள்.

64. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே.

எந்த ஊராக இருந்தாலும் அங்கு கல்வி, அறிவு, ஒழுக்கம் இவற்றில் சிறந்த, மக்களால் மதிக்கப்படுகின்ற சான்றோர் இருத்தல் வேண்டும். எந்தவொரு காரியமாயிருந்தாலும் அவர்களுடைய வழிகாட்டுதல், ஆலோசனை இவற்றோடு மக்கள் செயல்படுவார்களானால் அந்த ஊர் சிறப்புற்று விளங்கும். அப்படிப்பட்ட நாடே நல்ல நாடு; அறிவுசால் நாடு என போற்றப்படும். அத்தகைய பெரியோர்களோடு சார்ந்து இருப்பதால் அங்கு இருக்கும் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் கைகூடும். அப்படிப்பட்ட சான்றோர்கள், வாழிகாட்டி நடத்திச் செல்லும் பெரியோர்கள் இல்லாத நாட்டில் மக்களுக்குத் தீமைகளே விளையும். ஆகவே நற்சான்றோர் இல்லாத நாட்டில் வாழ்வதைக் காட்டிலும் தேன் எடுக்க அலைந்து கொண்டிருக்கும் காட்டுவாசிகள் வாழும் காடே சிறப்பாக இருக்கும்.

65. காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.

அந்தணர் என்போர் அறவோர், மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என்றெல்லாம் பெரியோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அப்படி ஒருவன் அந்தணனாக வாழவேண்டுமானால் அவன் வேதங்களை முறையாக ஓதியும், அந்த வேதங்கள் காட்டும் நெறிமுறைகளையொட்டி வாழ்ந்து கொண்டும் இருத்தல் வேண்டும். வேதம் நான்கு. அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம். இந்த வேதங்கள் பல கிளைகளைக் கொண்டவை. அவற்றைப் படித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும். இந்த வேதங்களை முறையாக குருவால் கற்பிக்கப்பட்டு அதனை மனனம் செய்து, அதாவது காதால் கேட்டு மனதில் பதித்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும். வேதங்கள் எழுத்தில் வடிக்கப்படாதவை. ஆகையால் இதனை கற்கும் காலத்தில் காலையில் எழுந்ததும் ஒரு முறை, மாலையில் ஒரு முறை அதனை மனனம் செய்து வாய்விட்டு ஒப்பித்தல் வேண்டும். அப்படி வேதங்களைப் படிக்காதவன் இருவேளைகளிலும் வேதங்களை ஓதாதவன் அந்தணனே அல்ல, அவர்கள் நெல்லுக்கிடையே புகுந்து கிடக்கும் பதர் போன்றவர்கள்.

66. குடிஅலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே.

ஒரு நாட்டின் அரசன் என்பவன் அந்த நாட்டுக் குடிமக்கள் உயிர்கள் என்றால், மன்னன் உடலாக இருத்தல் வேண்டும் என்று கம்பர் தன் இராமகாவியத்தில் தசரதனைப் பற்றி குறிப்பிடுவார். உயிரெல்லாம் உறையும் உடம்பும் ஆயினான் என்கிறார். அப்படிப்பட்ட அரசனே செங்கோல் பிடித்த அரசன். மாறாக மக்களை துன்புறுத்தி, அவர்கள் இன்ப துன்பங்களைக் கணக்கில் கொள்ளாமல் அநியாய வரிவிதித்து அவர்களைத் தவிக்க விட்டு, கட்டாயமாகப் பொருட்களை அபகரித்துக் கொள்ளும் அரசன் முடியரசன் அல்ல, அவன் ஒரு மூர்க்கன். அத்தகைய மன்னனும் நெல்லுக்கிடையே இருக்கும் பதர் போன்றவனே. அரசன் மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவன்; மக்களின் மகிழ்ச்சியே மன்னனின் மகிழ்ச்சி என இருப்பவன் நல்ல அரசன், மூர்க்கர்கள் அரசாண்டால் அவர்கள் பதர் போன்றவர்கள்.

67. முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.

மக்களுக்குத் தேவையான பண்டங்களை கொள்முதல் செய்து, முதலீடு செய்து, அவற்றை மக்கள் உபயோகத்துக்காக விற்பனை செய்வது வணிகரின் தொழில். அப்படி வாணிபம் செய்ய முதலீடு தேவை. முதல் இல்லாமல் வியாபாரம் செய்ய முடியுமா? அப்படி தொழிலில் ஏராளமாக முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து தானும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து, மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருத்தல் ஒரு வணிகனின் கடமை. நேர்மையான வாணிபத்தில் வரும் லாபத்தில் மகிழ்வோடு வாழும் வணிகன் நல்ல வணிகன். அப்படி இல்லாமல் நேர் மாறான முறையில் நடந்து கொள்பவர்கள் வணிகரில் பதர் போன்றவர்கள்.

68. வித்தும் ஏரும் உளவாய் இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே.

ஒரு விவசாயிக்கு என்னென்ன வேண்டும். உழுது பயிரிட சிறிது நிலம் வேண்டும். உழவுத் தொழிலுக்கு ஏர் வேண்டும். நிலத்தை உழுதபின் விதைக்க விதைகள் வேண்டும். அங்கு பயிர் முளைத்தபின் அவனுடைய உழைப்பு வேண்டும். இத்தனையும் செய்தபின் அவனுக்குக் கிடைக்கும் பலன் அவன் சுகமாக வாழ வகுத்துக் கொடுக்கும். ஆனால் நிலமிருந்தும், ஏரும் விதை நெல்லும் இருந்தும் உழைக்க பயந்து, சோம்பேரியாய் தூங்கி தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்கும் உழவன் நெல்லினுள் பதர் போன்றவன்.

69. தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப்
பின்பு அவள் பேணாப் பேதையும் பதரே.

ஆண் ஒரு வீட்டிலும், பெண் ஒரு வீட்டிலும் பிறந்து, பின்னர் அவர்கள் வளர்ந்து மணப்பருவம் எய்தியபோது இரு வீட்டாரும் திருமணம் பேசி இவ்விருவருக்கும் திருமணம் செய்துவைத்தபின் அவர்கள் கணவன் மனைவியாக ஒரே வீட்டில், நல்லது கெட்டது அனைத்தையும் பங்கிட்டுக் கொண்டு வாழ்தலே மண வாழ்க்கை. மாறாக ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நரகமாக ஆக்கிக் கொண்டு பொழுது விடிந்தால் போதும் யுத்தம் என்று இவ்விருவர்க்குள்ளும் எப்போதும் அண்டை அயலார் பார்த்து நகைக்கும்படியாக சண்டை செய்துகொண்டு, பின்னர் மனைவியை அவள் பிறந்த வீட்டுக்குத் துரத்திவிட்டு, அவளை ஏறெடுத்தும் பாராமல் இருக்கும் பேதை சமூகத்தில் ஒரு பதரே.

70. தன் மனையாளைத் தனிமனை இருத்திப்
பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே.

கணவன் மனைவி இருவரும் ஒத்த கருத்துடன் கூடி இன்பமாக வாழ்தலே குடும்ப வாழ்க்கை. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பமாகும். அப்படிப்பட்ட இன்பமான இல்லற வாழ்க்கையை நரகமாகத் தாங்களே ஆக்கிக் கொள்ளும் சில மனிதர்களும் இருக்கிறார்கள். கண்ணுக்கு அழகான மனைவி இல்லத்திருக்க, பார்க்கச் சகிக்காத பெண்ணானாலும் அயலொருவன் இல்லாள் மீது மோகம் கொண்டு அவள் வீடே கதியென்று கிடக்கும் வீணனும் சமூகத்தில் ஒரு பதரே.

1 comment:

  1. உண்மை...உண்மை... இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பதர்களுடன் தான் - கதிர்களும் வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.

    ReplyDelete

You can give your comments here