பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 30, 2013

"பரோபகாரம் ஹிதம் சரீரம்"

                                                   "பரோபகாரம் ஹிதம் சரீரம்"

இந்த உடலை எடுத்ததன் நோக்கம் பிறருக்கு உதவி செய்தல் என்கிறது நமது பண்டைய நூல்கள். நான், எனது எனும் சுயநலம் கோலோச்சும் இந்த நாளில் பிறரைப் பற்றி சிந்திக்க நேரமில்லா மனித வாழ்க்கை ஒரு இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்டது.

கூட்ட நெரிசலில் அல்லாடும் ஒரு கிழத்தை எக்கித் தள்ளிவிட்டு தான் பேருந்தில் ஏறி இடம்பிடிக்கும் இளசுகளைப் பார்த்திருப்பீர்கள். புனித யாத்திரை செல்லும் இடங்களில் இரவு படுத்துறங்க சரியான இடம் கிடைக்காத நேரத்தில் கூட முதியவர்கள், உடல் நலம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை தந்து தான் பின்னர் இடம் தேடவோ, அல்லது இடமில்லாவிட்டாலும் அனுசரித்து நடந்து கொள்ளவோ கூடிய மனம் படைத்தவர்கள் எத்தனை பேர்?

அடுத்த வீட்டாருக்கு ஒரு துன்பமென்றால், தன் வீட்டுக் கதவு தாழ்ப்பாளை உட்புறம் போட்டுக் கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து மகிழும் மனப்பான்மை கொண்டவர் எத்தனை பேர்?

இத்தனைக்கும் இடையே பாலைவனச் சோலை போல ஆங்காங்கே நல்ல மனம் படைத்த மேலோர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை. அவர்களை இனம் கண்டு பிடிப்பதுதான் சிரமம். அப்படிப்பட்டவர்கள் தனக்கு உணவு இல்லாவிட்டாலும் பிறர் பசி நீக்க பாடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். பிறரால் சுமக்க முடியாத சுமைகளை, மனச்சுமை உட்பட, அனைத்தையும் தான் சுமக்க முன்வரும் அற்புதப் பிறவிகளைச் சந்தித்திருக்கிறோம். ஏமாற்று, பொய், பித்தலாட்டம், திருட்டு, கொள்ளை, சந்தர்ப்பவாதம் என்று இவை அனைத்திலும் ஊறித் திளைத்த மக்கட்கூட்டத்தின் இடையே பிறந்த மாணிக்கங்கள்தான் இதோ இந்தப் படத்தில் காணப்படும் மனிதப் பாலத்தின் அங்கங்களாக விளங்கும் நமது இந்திய ராணுவ வீரர்கள். வாயால் ஆறுதல் சொல்பவர்கள், பொருளால் பணத்தால் உதவி செய்பவர்கள் இவர்கள் அனைவரைக் காட்டிலும் இன்னலில் சிக்கிக்கொண்ட மனிதர்களைத் தங்கள் முதுகில் தாங்கிக் கரைசேர்க்கும் இந்த உண்மை தேசபக்தர்களைப் பாருங்கள். இந்தப் படம் பற்றி விளக்கவா வேண்டும். இந்த வீரர்களும், அவர்தம் குடும்பத்தாரும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ அந்த கேதாரநாதனை வழிபடுவோம். ஜெய் ஹிந்த்!

2 comments:

  1. மிகச் சிறந்த மனித நேயம்!... இந்திய வீரர்கள் மாவீரத்துடன் மக்களைக் காத்ததை எக்காலத்திலும் மறக்க இயலாது!...எல்லாருக்கும் கேதார் நாதன் நல்லருள் புரியட்டும்!...

    ReplyDelete
  2. வீரர்களும், அவர்தம் குடும்பத்தாரும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ அந்த கேதாரநாதனை வழிபடுவோம். ஜெய் ஹிந்த்!

    சரீரத்தால் பாலம் அமைத்து ப்ரோபகாரம் செய்யும் அவர்கள் நலமாக வாழ பிரார்த்திப்போம் ..!

    ReplyDelete

You can give your comments here