பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 9, 2013

வெற்றிவேற்கை (5)

வெற்றிவேற்கை (5)

இது ஐந்தாவது பகுதி. நாற்பத்தியொன்று முதல் ஐம்பது வரையிலான வரிகளுக்கு விளக்கங்களைப் பார்ப்போம். இந்த விளக்கங்கள் எவரொருவர் எழுதியதின் மறுபதிப்பும் இல்லை. ஆகவே படிக்கும் அன்பர்களுக்கு வேறு நல்ல விளக்கம் தோன்றினாலும் எழுதி அனுப்புங்களேன்!

41. யானைக்கு இல்லை தானமும் தருமமும்.
ஒருவனைப் பார்த்து, இவனுக்குக் கை நீளம் என்று சொன்னால் என்ன பொருள்? அவன் திருடுவான் என்பது பொருள் அல்லவா? ஆக கை நீளமாக இருந்தால் திருடுவான் என்பதோ, அல்லது தான தருமங்கள் செய்வான் என்பதோ அல்ல. கை நீளம், கை குட்டை இவற்றுக்கும் அவனுடைய செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. யானைக்குத் துதிக்கை நீளம். அதனால் அது தானங்களையும் தருமங்களையும் வாரி வாரி மற்றவர்க்குச் செய்கிறதா? இல்லையே! அது போல ஒருவன் கொடுக்கும் தன்மை உடையவனைப் போல வெளியில் தோன்றினாலும், அல்லது அப்படியொரு தோற்றத்தை உண்டாக்கி வைத்திருந்தாலும், அவன் உண்மையில் தான தருமம் ஆகிய அறச் செயல்களில் ஈடுபடாதவனாக இருக்கலாம். வாயால் பேசுகையில் அவன் வானளாவ பேசினாலும், அவனது ஈகை ஒருவழிப் பாதையாகத்தான் இருக்கும், அதாவது வருமானத்தை மட்டும் குறிவைத்திருப்பான், அவன் கையிலிருந்து எதையும் பிறருக்குத் தர மாட்டான். அப்படியும் பலர். ஒருவனது புறத் தோற்றம் செயல்கள் இவற்றைக் கொண்டு அவனது ஈகைக் குணத்தைக் கண்டுபிடிக்க முடியாது.

42. பூனைக்கு இல்லை தவமும் தயையும்.
இப்படியொரு சொல்லடை வரக் காரணம் என்ன? ஞானியர்கள், தவசியர்கள் ஆகியோர் கண்களை மூடி தனியிடத்தில் தியானத்தில் ஈடுபட்டிருப்பர். அப்படிப்பட்டவர்களின் மனம் இறைவன் மீது படிந்திருக்கும். புறவுலக நடவடிக்கைகளிலோ, அல்லது சுற்றிலும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளிலோ கவனம் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் அறவழியினைப் பின்பற்றுபவர்களாவும், எவ்வுயிரும் தன்னுயிர் போல் போற்றுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் பூனையைப் பாருங்கள். அது உட்கார்ந்திருக்கும்போது கண்களை மூடி தியானத்தில் இருப்பது போலக் காட்சியளித்தாலும் அது தியானத்திலா இருக்கிறது? ஞானியர், தவசியர் மனங்களைப் போல அந்தப் பூனையின் மனதில் தயை, இரக்கம், கருணை இவைகளா குடிகொண்டிருக்கின்றன? எதைத் திருடலாம், எந்தப் பொருளை பிறர் ஏமாந்த சமயம் கவர்ந்து கொள்வது என்பது பற்றியும், சின்னக் குருவி, கிளி போன்ற பறவைகள் ஏமாந்த சமயம் தயை இன்றி அவற்றைப் பிடித்து உண்ணவும் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் அந்த பூனை. மனிதருள்ளும் இப்படிப்பட்டவர் இருக்கலாம், அதனால் அத்தகையோரிடம் எச்சரிக்கை உணர்வோடு இருப்பது நலம்.

43. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.
உலகில் பிறப்பு இறப்பு, ஆன்மா, உயிர், பரம்பொருள் என்று வாழ்வின் உண்மைகளை உணர்ந்தவன் ஞானி. அப்படிப்பட்ட ஞானிகள் இவ்வுலகில் ஏராளமாகக் கிடைக்கும் புற இன்பங்களில் நாட்டம் இருக்காது. அது போலவே எதிர்கொள்ளும் துன்பங்களாலும் மனம் வாடுவதில்லை. இதெல்லாம் இருளும், பகலும் போல இன்பமும் துன்பமும் அடுத்தடுத்து வரும் செயல்கள் என்பதை உணர்ந்து இரண்டுக்கும் தன்னை அலட்டிக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஞானியர்க்கு இன்பம் என்றும் ஒன்றும் கிடையாது, துன்பங்களும் அவன் உணர்வதில்லை.

44. சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்:
சிதல், சிதலை ஆகிய சொற்களுக்குக் கரையான் என்று பொருள். இந்தக் கரையான் கூட்டம் கூட்டமாக ஒரு பொருளின் மீது மண்ணால் கூடு அமைத்து அதனுள் இருக்கும் பொருளைச் சிறுகச் சிறுக அரித்துத் தின்றுவிடும். அது தான் அரித்துத் தின்று கொண்டிருக்கும் பொருள் செல்வந்தர் வீட்டுப் பொருள் என்றோ, வறியவன் ஒருவனது உடைமை என்றோ புரிந்து கொண்டா அதன் செயலைச் செய்கிறது. கரையான்களுக்கு அது அரித்துத் தின்னும் பொருள்தான் முக்கியமே தவிர, அது யாருடையது என்பதல்ல, அல்லவா? கீழ்மக்கள் இருக்கிறார்களே அவர்களும் அந்தக் கரையானைப் போன்றவர்கள்தான். ஒரு பெரும் பணக்காரன் காரில் வைத்துவிட்டுப் போன வைர, தங்க நகைகளை மெள்ளக் கிளப்பிக் கொண்டும் போகிறான். வறியவன் ஒருவன் தன் மகள் திருமணத்துக்காக கடன் வாங்கி வந்த பணத்தையும் திருடிக் கொண்டு போகிறான். செல்வந்தன் போட்டுக் கழற்றிய பட்டு வேட்டியையும் அது தின்றுவிடும், ஏழையின் எளிய கிழிந்த ஆடையையும் அது அரித்துத் தின்றுவிடும். அதற்கு அந்த வேற்றுமைகள் கிடையாது. அது போல இழிந்தவனுக்கும் செல்வந்தரா, வறியவனா, பெருமை உடையவனா, இளைத்தவனா என்பது பொருட்டல்ல. மனிதருள் கரையான்கள் அவர்கள்.

45. முதலைக்கு இல்லை நீத்தமும் நிலையும்.
நீர்நிலைகளில் அமிழ்ந்து தன்னை மறைத்துக் கொண்டும், கரையில் காணமுடியாத இடத்தில் மறைந்தும் வாழும் பிராணி முதலை. கொடுமையான விலங்கு. தான் வந்து தங்கியிருக்கும் இந்த நீர்நிலை ஆழமானதா, அல்லது ஆழமில்லாத இடமா என்பதெல்லாம் அதற்குப் பொருட்டல்ல. அதற்கு வேண்டியது நீர் நிலைகள் அவ்வளவே. தீயவர்களும் அப்படித்தான். அவர்களுக்கு இந்தச் செயல் செய்யத் தக்கது, இவை செய்யத் தகாதவை என்ற பாகுபாடே கிடையாது. எந்தக் கொடுமையான செயலையும் ஈவு இரக்கமின்றி செய்து முடிப்பவர்கள் அவர்கள்.

46. அச்சமும் நாணமும் அறிவிலார்க்கு இல்லை.
பகுத்துணர்ந்து பார்த்து இவை நல்லவை இவை தீயவை என்பதை உணராதவர்கள் மூடர்கள். பகுத்தறியும் அறிவு அவர்களுக்குக் கிடையாது. ஒரு செயலைச் செய்வதால் தங்களுக்கு பழிபாவம் வந்து சேரும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்ப்பது கிடையாது. பிறர் செய்ய நாணும் காரியங்களையும் அறிவில்லாதவர்கள் கண்மூடித் தனமாகச் செய்துவிடுவார்கள். அவர்களுக்கு ஏது அச்சமும் நாணமும்.

47. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.
பண்டிகை தினங்கள் ஊரே கோலாகலமாகக் கொண்டாடுகின்ற நேரம். விதவிதமான உணவு வகைகள். புத்தாடைகள். உறவும் நட்பும் கலந்து பேசி மகிழும் காட்சிகள். இவைகள் பொதுவாக மக்கள் மத்தியில் விசேஷ தினங்களில் கடைப்பிடிக்கும் வழிகளாகும். ஆனால் உடல் நலம் குன்றி நலிந்தவர்களோ அல்லது ஏழ்மையின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் நலிந்த மக்களோ இதுபோன்ற திருவிழா, பண்டிகை நாட்களில் அப்படியெல்லாம் கொண்டாடவும், மனம் மகிழவும் வழியில்லாதவர்களாக இருப்பதால், அவர்களுக்கு எந்த நாளும் ஒரே மாதிரியான நாளே. விழாவும், பண்டிகையும் அவர்களுக்கு எந்த வகையிலும் மகிழ்ச்சி தருவதில்லை.

48. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
கேள் என்பது உறவையும் நட்பையும் குறிக்கும் சொல். கிளை என்பது சுற்றத்தாரைக் குறிக்கும். பொதுவாக மனிதர்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் இருப்பார்கள். நன்மை தீமைகளில் பங்கு கொள்பவர்கள் இவர்கள். அவசரம் என்றால் கைகொடுத்து உதவுபவர்கள் இவர்கள். கிளை என்றால் சுற்றம். சுற்றத்தார் எண்ணிறந்த பேர் இருப்பர். ஒரு விசேஷ காரியம் என்றால் சுற்றத்தார் வந்து சூழ்ந்து கொள்வார்கள். ஒருவன் நன்றாக, வசதியோடு வாழ்ந்து வரும் வரை இதுபோன்ற உறவும், சுற்றமும், நட்பும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டிருப்பார்கள். மாறாக நன்றாக வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டாலோ, நல்ல நிலைமை மாறி வறியவனாக மாறிவிட்டாலோ, ஒருத்தன் கிட்டே நெருங்க மாட்டான். திரும்பிக்கூட பார்க்க மாட்டான். அதனால்தான் சொல்கிறார், வாழ்ந்து கெட்டவனுக்கு கேளிரும் இல்லை, கிளைகளும் இல்லை என்று.

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
வாழ்க்கையை சக்கரத்துக்கு ஒப்பிடுவர். நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்தவனுமில்லை, நாற்பதாண்டுகள் தாழ்ந்தவனுமில்லை என்றொரு பழமொழி நம் ஊர்களில் சொல்வதுண்டு. உடைமை என்பது செல்வம், ஒருவனுக்கு உடைமையானவை. வறுமை என்பது அப்படிப்பட்ட செல்வம் எதுவும் இல்லாத நிலை. வறுமையோ, செல்வமோ ஒரேயிடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லை. சக்கரம் எப்படி கீழ் மேலாகவும், மேல் கீழாகவும் மாறி மாறி சுழன்று கொண்டிருக்குமோ அது போலவே இவ்விரு நிலைமையும் மாறிமாறித்தான் வரும். அதனால் செல்வந்தன் செறுக்கடைவதோ, வறியவன் துன்புறுவதோ தேவையில்லை.

50. குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்.
முந்தைய பாடலின் கருத்தை வேறு விதமாக வலியுறுத்தும் வரிகள் இவை. ஆள், படை, கொடி, யானை, அம்பாரி, அதன்மேல் வெண்கொற்ற குடை இவைகளோடு ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த நிலைமை மாறி, தன்னுடைய நாடு, குடி, படை அனைத்தையும் இழந்து பராரியாய் நடை தளர்ந்து வேற்றூர் சென்றாலும் செல்லலாம். அப்படிப்பட்ட நிலைமைக்கு       ஒருவன்  ஆளாவது ஒன்றும் புதிது அல்ல. செல்வந்தன் ஏழ்மை நிலைமையை அடைவதும், ஏழை செல்வந்தனாவதும் மாறி மாறி நடக்கக்கூடியவைகளே. ஆக, வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பது கருத்து.2 comments:

  1. தற்காலத்தின் நடைமுறைக்கு ஒத்து வரும் விளக்கங்கள்!.. கருத்துப் பேழையில் வைத்துப் பேண வேண்டிய வைரமணிகள்!...

    ReplyDelete
  2. செயற்கரிய காரியம் இது. காலத்தால் நிலைத்து நின்று எதிர் காலத்தில் உலகில் உங்களின் பெயர் சொல்லும் எழுத்துப் பணி இது. எதார்த்தமான உதாரனங்களுடன் வரும் விளக்க உரை அருமை. மிக்க நன்றிகள் ஐயா.

    ReplyDelete

You can give your comments here