பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 17, 2013

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டைப் படமெடுத்த ராணுவ அதிகாரி


தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு செய்தி. அந்த செய்தியின்படி கேரளத்திலுள்ள கண்ணூர் எனுமிடத்தில் வானில் பறந்த ஒரு பறக்கும் தட்டை ராணுவ அதிகாரியொருவர் தன்னுடைய கைபேசியின் மூலம் படமெடுத்ததாக அவருடைய மனைவி தெரிவித்திருக்கிறார்.

மேஜர் செபாஸ்டியன் சசாரியா என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர். இவர் ஒரு புதிய கைபேசியை வாங்கினார். அதில் புகைப்படமெடுக்கும் வசதி இருந்ததால் கண்ணூரில் இவர் பல படங்களை எடுத்திருக்கிறார். அப்படி எடுத்த ஒரு படத்தில் பறக்கும் தட்டு ஒன்று காணப்படுவதைக் கண்டு இவர் அதிசயித்துக் குரல் எழுப்பியிருக்கிறார். முதலில் இவர் பறக்கும் தட்டை படமெடுத்ததாகச் சொன்னதை மற்றவர்கள் நம்பவில்லை. ஏதோ தமாஷ் செய்கிறார் என்று நினைத்தார்கள்.

மேஜர் செபாஸ்டியன் அந்தப் பறக்கும் தட்டைத் தன்னுடைய கண்களால் பார்க்கவில்லை. ஆனால் அவர் எடுத்த புகைப்படமொன்றில் அந்த பறக்கும் தட்டு காணப்படுவதைக் கண்டு மற்றவர்கள் ஆச்சர்யமடைந்தனர். ஊர் சுற்றி புகைப்படமெடுத்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய், இது குறித்த இணைய தளங்களையும், அமெரிக்க விண்வெளி நிலையம் நாசா குறித்த இணையதளங்களுக்கெல்லாம் தோண்டித் துறுவி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள்.

எதிலும் சந்தேகம் தீராத இவர்கள் அந்த கைபேசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்குத் தொலைபேசியில் பேசி, அந்த கைபேசியில் ஏற்கனவே இதுபோன்ற ஏதாவது உருவம் பதிவு செய்யப்பட்டிருந்ததா, அல்லது புதிதாக எடுத்தப் படத்தில்தான் அது வந்திருக்கிறதா என்றெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் அப்படியெல்லாம் எந்த படத்தையும் கைபேசியில் பதிவு செய்து வைத்திருப்பதெல்லாம் கிடையாது, புதிதாக நீங்கள் படமெடுத்த போதுதான் அது பதிவாகியிருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

பிறகுதான் அவர்களுக்குப் புரிந்தது, தாங்கள் அதிசயத்தக்க ஒரு பறக்கும் பொருளை படமெடுத்திருப்பது. திரைப்படங்களில்தான் பறக்கும் தட்டு போன்றவைகளையெல்லாம் பார்த்திருந்த இவர்களுக்கு, இது ஒரு அதிசயமாகப் பட்டது. இதை இப்போது என்ன செய்வது, பார்த்தார்கள், அந்தப் படத்தை எடுத்து பத்திரிகையாளர்களிடம் கொடுத்து விட்டார்கள். இந்தப் படத்தைத் தாங்கள் வைத்துக் கொண்டு, அதில் பறக்கும் தட்டு பதிவாகியிருக்கிறது என்று சொல்லப்போக, அதைக் கேட்பவர்கள் இது பொய் என்றும், அப்படியொரு பொருள் கிடையாது என்றும் விவாதித்துத் தங்களை சங்கடத்தில் ஆழ்த்திவிடுவார்களோ என்று பயந்து அது தங்கள் கையைவிட்டுப் போனால் சரி என்று பத்திரிகாளர்கள்தான் இதற்குச் சரி என்று அவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். படத்தை எடுத்தவர் ராணுவ அதிகாரி என்பதால் அவர் இதுகுறித்து எந்த சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை.

இந்த விஷயத்தை பெங்களூரிலிருக்கும் வான்வெளி ஆராய்ச்சி மையத்துக்குத் தெரிவித்த போது, அங்கிருந்த பேராசிரியர் ஜெயந்த் மூர்த்தி என்பவர் இதெல்லாம் சும்மா, பறக்கும் தட்டுகள் என்பதெல்லாம் கிடையாது என்று அறிவித்து விட்டார். ஏதோவொரு பொருளின் பிரதிபிம்பம் இதுபோல ஒரு உருவத்தை உருவாக்கிக் காட்டி படத்தில் பதிந்திருக்கலாம், உண்மையாக அப்படி எதுவும் பறந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். எது உண்மை? பறக்கும் தட்டு இருந்தது உண்மையா? அதை படம் எடுத்தபோது அது பதிவானது உண்மையா? அல்லது அது ஒரு பொருளின் பிரதிபிம்பமாக இருந்து அதிர்ஷ்ட வசமாக படத்தில் பதிவானதா, எது உண்மை? தெரியவில்லை.

செய்தி: நன்றி: தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் 18 ஜூன் 2013, திருச்சி பதிப்பு.


No comments: