பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 10, 2013

வெற்றிவேற்கை (6)


வெற்றிவேற்கை (6)

ஐம்பதைத் தாண்டிவிட்டோம். அறுபதின் வரிகள் நாம் அதிகம் கேள்விப் படாதவை. இவ்விலக்கியத்தின் ஒருசில வரிகள் நன்கு பரிச்சயமானவைகள், பல நாம் கேள்வியே பட்டிராதவை. அவைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செய்திகளை மாற்றி மாற்றி சொல்வதாக இருந்தாலும், ஒரு கருத்தை வலியுறுத்த வேண்டுமானால் அதனை ஒருமுறைக்குப் பலமுறை சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, ஒரு சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் இங்கு வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இனி ஐம்பத்தியொன்று முதலான பத்து வரிகளைப் பார்ப்போம்.

51. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.
நேற்று செல்வச் செழிப்பில் மாட மாளிகையில், தங்கத் தாம்பாளத்தில் பாலன்னம் சாப்பிட்டு வளர்ந்த செல்வர் இன்று வெறுந்தரையில் படுத்து வெட்ட வெளியில் நீலவானத்தில் நீந்துகின்ற வெண்ணிலவைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவதை பார்த்துத்தானே இருக்கிறோம். காலம் ஒரு சக்கரம் என்பதைப் பார்த்தோம். அது மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் சுற்றும்போது இப்படிப்பட்ட குழப்பங்கள் நேரத்தான் செய்யும். பாலும், தேனும் அருந்தி பஞ்சபரமான்னம் எனச் சொல்லப்படும் விருந்தினைச் சுவைத்தவர்கள் அன்னசத்திரத்தின் வாயிலில் நிற்கும் ஆண்டிகள் வரிசையில் நிற்கும் காலமும் வந்திருக்கிறது, இனியும் வரும். இந்த உண்மையை, படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொண்டால் மனம் இடியைக்கூடத் தாங்கும், இல்லையேல் உடைந்து சுக்கு நூறாகிவிடும். வாழ்க்கை என்பது ஒரு சில ஆண்டுகள் இந்த பூமியில் வந்து பிறந்து மறைந்து போவது. அதில் ஏற்றமோ, இறக்கமோ எதுவும் வரலாம்; அத்தனைக்கும் மனத்தினைத் திடப்படுத்திக் கொண்டவன் வாழ்வு எதனாலும் பாதிக்கப்படாது. இருக்கும்வரை அறவழியில் நல்லவைகளையே நினைந்து, நல்லவைகளையே செய்து முடிவதே மேல். மகாகவி பாரதி சொன்னது போல் "எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும், பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போல நசித்திடல் வேண்டும்" என மனத் தெளிவு பெறுவோம்.

52. அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர்.
பிச்சை எடுப்பது என்பது அனைவரும் செய்யும் ஒரு செயலே. இது ஏதோ தெருவில் இரந்துண்போர் வயிற்றுப் பசிக்கு அன்னமிட வேண்டி குரல் கொடுக்கும் பிச்சை மட்டுமல்ல. மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் பிறரிடம் ஏதோவொன்றுக்குக் கையேந்தி பிச்சை எடுப்பது என்பது நமக்கெல்லாம் நடைமுறை வாழ்க்கையாகிவிட்டது. இவை எதுவுமே இல்லையென்றால் கடவுளிடம் போய் கையேந்தி பிச்சை கேட்பது என்பது நிலைபெற்றுவிட்டது. இறைவன் என்பவன் பரம்பொருள். அவனிடம் கையேந்தி எனக்கு இதைக் கொடு, அதைக்கொடு, நான் தேர்வில் வெற்றி பெற அருள் கொடு, உடல் நலம் தேற வரம் கொடு, அடுத்தவன் கெட சாபம் கொடு என்றெல்லாம் பிச்சை எடுப்பதும் நடந்து கொண்டிருக்கத்தான் செய்கிறது. ஒரு அரசன் காட்டிற்கு சென்றவிடத்தில் ஒரு மகான் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரைத் தன் நாட்டிற்கு அழைத்து வந்தான். அவருக்குத் தேவையானதைத் தான் தருவதாகச் சொல்லி அவரை தன் அரன்மனையில் உட்காரவைத்துவிட்டு, சற்று இருங்கள் இறைவனை வணங்கிவிட்டு வருகிறேன் என்று மண்டியிட்டு வேண்டத் தொடங்கினான். இறைவா! நான் இவர் போன்ற மகான்களுக்கு உதவிட எனக்கு நல்ல மனத்தைக் கொடு, என் நாடும் மக்களும் நல்வாழ்வு வாழ வரம் கொடு, என் செல்வம் மேலும் பொங்கிப் பெருக ஆசி கொடு என்றெல்லாம் இறைஞ்சினான். மகான் எழுந்து நடக்கத் தொடங்கினார். அரசன் ஓடிப்போய் ஏன் ஐயா என்னிடம் எதையும் பெற்றுக் கொள்ளாமல் போகிறீர்களே என்றான். தவசி சொன்னார், ஐயா பிச்சைக்காரனிடம் நான் எதையும் பெற்றுக் கொள்வதில்லை என்றார். மன்னனுக்குச் சுரீரென்று வலித்தது. தான் இதுவரை இறைவனிடம் பிச்சை கேட்டதை இவர் இப்படிச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். இறைவனுக்குத் தெரியாதா, நாம் பிச்சை கேட்டா நமக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும். நாம் நல்வழியில் நடந்தால் அவனுக்கு எப்போது எதைத் தருவது என்பது தெரியும் அல்லவா? பிச்சை யெடுத்துத் தெரித்தெருவாக அலையும் நபர்கூட ஒரு நாள் அரண்மனையில் கோலோச்சும் காலம் வந்தாலும் வரும், அதுவும் இந்த ஜனநாயக நாட்டில் அந்த அதிசயம் நிச்சயம் நடக்கும், இதைத்தான் இந்த வரிகள் சொல்கின்றன.

53. குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்.
மலைபோன்ற மாபெரும் செல்வத்துக்கு அதிபதி. இருந்த இடத்திலேயே ஒரு தொலைபேசி மூலம் வியாபாரம் பேசி ஒரே நாளில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆற்றல் படைத்தவன். ஒரே நாள், ஒரே ஒரு நாளில் அவனுடைய அத்தனை செல்வங்களையும் இழந்து ஓட்டாண்டியாக ஆனான் என்றால் நம்பித்தான் தீரவேண்டும். அதுதான் உலக நியதி. ஒரு பெரிய செல்வந்தர். மிகப் பெரிய நிறுவனங்களின் அதிபதி. கோடி கோடியாய் சொத்து. இத்தனை சுகங்கள் இருந்தும் உள்ளத்தில் ஒரு அரிப்பு. சூதாட்டம்! எதை வைத்து சூதாடலாம். தருமபுத்திரனாக இருந்தால் சகுனியோடு சூதாடலாம். இவரோ தொழிலதிபர். தான் உருவாக்கிய உருப்படியான தொழிலில் கவனம் செலுத்தாமல் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்தி, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்று நடத்தினார். அவருக்கு ஒரு நெருங்கிய உறவினன். அவனும் செல்வந்தன். இருக்கிற செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது. சூதாடினால் என்ன? ஆடினான், வீழ்ந்தான், பின்னர் சொன்னான் கோடி கோடியாய் சூதில் இழந்தேன் என்று. இல்லையா பின்னே! சூதில் கோடி கோடியாய் சம்பாதித்ததாய் யாராவது சொல்லி இருக்கிறார்களா? அப்படியே சூதில் வந்த செல்வம் நிலைத்து நிற்குமா, வீழ்ச்சி அடையாதா? ஒரே பகல் போதும், இமயம் போன்ற செல்வத்தை இழந்து அன்றே அவர் கதையும் முடியும் நிலைமை ஏற்படலாம். சொல்லவும் மனம் கூசுகிறது, நெஞ்சம் சுடுகிறது, என்ன செய்வது உண்மை சுடத்தான் செய்யும்.

54. எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்.
உலகம் மெச்ச வானை முட்டும் மாட மாளிகையில் சப்பரமஞ்சக் கட்டிலில் படுத்துறங்க, சேடியர்கள் சாமரம் வீச, உல்லாசமாக வாழ்ந்த இடம் அது. இன்று கழுதைகள் மேயும் கட்டாந்தரையாக போய்விட்டதே என்று ஊரார் கண்ணீர் சிந்த இடிந்து கிடக்கிறது. ஒன்றா இரண்டா, இதுபோன்ற பாழ் மனைகள். ஏன், இந்த நிலைமைக்கு என்ன காரணம். சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரியும். இருக்கும் காலத்தில் பிறரை நினைக்கத் தவறிவிட்டோம். இல்லாத காலத்தில் எல்லோருமே கண்ணுக்குத் தெரிகிறார்கள். என்ன பயன்? பூமியில் வாழ்வாங்கு வாழ நினைத்திருந்தால், அறவழியில் தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை இல்லாதவனுக்குக் கொடுப்போம், உழைப்பவன் வியர்வை உலருமுன்னே அவனுக்கு உரிய கூலியை உடனே கொடுப்போம், கட்ட துணியில்லாதவனுக்கு நம்முடைய பழைய கிழிந்த உடைகளையாவது கொடுப்போம் என்று செல்வத்தை பகிர்ந்து கொண்டிருந்தால் இன்று வறியவனின் வறுமையைப் பகிர்ந்து கொள்ளும் நிலைமை வந்திருக்காதே. இடிந்த மாளிகைகள் சொல்லும் கதைகளைக் கேட்கும் சக்தி நமக்கிருந்தால் சுவையான கதைகள் பல நமக்குத் தெரிய வந்திருக்கும். கோபுரங்களும் ஒரு நாள் மண் மேடாகும், மண் மேடும் ஒருநாள் மாளிகையாக மாறும் என்பது உலக நியதி.

55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்.
தூரத்தில் இடிந்து செங்கல் மேடாகத் தெரியும் அந்த இடம் ஒரு காலத்தில் ஜமீன்தார் ஒருவரின் மாட மாளிகை. அதனருகில் இப்போது பளிச்சென்று தெரியும் பலமாடி மாளிகை முன்பு மண்மேடாக இருந்த இடம். இங்கு முன்பு கழுதைகளும், மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. இப்போது இந்த இடம் வளர்ந்து வரும் வேகத்தையும், செல்வச் செழிப்பையும் பார்த்தால் இங்கு வைர வளையல்கள் அணிந்த பெண்களும், வீரம் செறிந்த வாலிபர்களும், நெல்குவியல்களுக்கிடையே செழிப்போடு வாழும் இடமாக மாறிக் கொண்டிருப்பது தெரிகிறது. இதுதான் உலக இயற்கை.

56. மணஅணி அணிந்த மகளிர் ஆங்கே
பிணஅணி அணிந்து தம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடி ஆக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
தீ என்று சொன்னால் நாவைச் சுடவா போகிறது. மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது எது நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. மங்களங்களைச் சொன்னால் மனம் இனிக்கிறது. அமங்கலத்தைச் சொன்னால் மனம் அதிர்கிறது. சோழன் அனபாயன் காலத்தில் சோழநாடு வளம் மிக்கதாய் இருந்தது. தானியங்கள் ஏராளமாக விளைந்து செல்வம் நெற்குவியல்களைப் போல குவிந்து கிடந்தது. மக்கள் ஜீவக சிந்தாமணி இலக்கியத்தைப் படித்து, மணநூல் என மகிழ்ந்து ஜீவகன் எத்தனை திருமணம் செய்து கொண்டான் என்று கேட்டு மகிழ்ந்திருந்தார்கள். மன்னன் பார்த்தான், மனம் வருந்தித் தன் அமைச்சர் சேக்கிழார் பெருமானிடம் சொன்னான், மக்கள் இப்படி வீண் பொழுது போக்காமலிருக்க நல்ல இலக்கியங்களைப் படிக்கக் கூடாதா என்று. அவர் சொன்னார் திருக்குறள் ஒன்று போதும் நீதிகளை போதிக்க, ஆனால் மக்கள் இன்ப சாகரத்தில் மூழ்கி, செல்வச் செழிப்பில் கதை கேட்கும் மனநிலையில் இருக்கின்றனரே என்றார். மன்னன் அப்படியானால் நல்வழிப்படுத்தும் கதைகளை நீங்களே எழுதுங்கள் என்றான். பெரியபுராணம் எனும் திருத்தொண்டர் புராணம் உருவானது. அதுபோல மகிழ்ச்சி, மங்களம், செல்வம், சுபம் என்றே கேட்டு பார்த்து வாழ்ந்த மக்கள் சற்று மறுபக்கத்தையும் பார்க்கத்தான் வேண்டும். தன்னுடைய திருமண உடைகளும், அணிகளும் அணிந்த பெண்ணின் மணவறையேகூட சில நேரங்களில் மணமகன் இறந்துவிட அது பிணவறையாக மாறும் செய்திகளைக் கேட்டிருக்கிறோம். திருமண ஆடையே கைம்பெண் உடுத்தும் கோடியாகவும் ஆக வாய்ப்பு ஊண்டு. திருமணத்துக்காக அலங்கரிக்கப்பட்ட அவளுடைய கூந்தலை விரித்துப் புலம்பவும் செய்வர். ஆக எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதை உணர்வது வாழ்வின் தத்துவத்தைப் புரிந்து கொள்வதாகும்.

57. இல்லோர் இரப்பது இயல்பே இயல்பே.
ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று பல நேரங்களில் பிச்சைக்காரர்களை நாம் கேட்கிறோம். தன்னிடம் இல்லை பிச்சை கேட்கிறேன் என்பான் அவன். இல்லாதவன் பிச்சைக் கேட்பதில் என்ன அதிசயம். இருப்பவன் கேட்டால் அதுதான் உன்னிடம் இருக்கிறதே எதற்காகக் கேட்கிறாய் என்போம். இல்லாதவன் கேட்டால் உன்னிடம்தான் இல்லையே இதை வாங்கி என்ன செய்யப் போகிறாய் என்போம்.

58. இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே.
தன்னிடம் இல்லை என்பதால் ஒருவன் வந்து நம்மிடம் பிச்சை கேட்கிறான். அது நம்மிடம் இருந்தால் நமக்குப் போக மிகுதியை அவனுக்குக் கொடுப்பதுதானே முறை. உனக்குத்தான் உடலில் தெம்பு இருக்கிறதே உழைத்தால் என்ன என்று பலரும் கேட்பர். இருந்தால் கொடுப்போம், இல்லையென்றால் இல்லை என்று பதில் சொல்லிவிடுவோம். எதற்காக அவனிடம் விவாதம். இல்லாதவன் கேட்டால் மனமும் இருந்து பொருளும் இருந்தால் கொடுப்போம், அப்படிக் கொடுப்பது நம் கடமை.

59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே.
ஒருவனுக்கு மனம் கோணாமல் நடந்து கொள்ளும் நல்ல குணவதி மனைவியாக அமைந்திருக்கிறாள். வீட்டில் எந்த குறையும் இல்லாமல் இல்லறம் நடத்துகிறாள். கணவனின் குணம் அறிந்து நடந்து கொள்கிறாள். விருந்தினரை முகம் கோணாமல் உபசரித்து அனுப்புகிறாள். இல்லம் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் கணவனைப் பார்த்துக் கொள்கிறாள் என்றால் அவன் எல்லா நன்மைகளையும் பெற்றவனாக இருப்பான். அத்தகைய சிறப்புக்கள் எதுவும் இல்லாதவள் ஏறுக்கு மாறாக நடந்து கொண்டு, சதாசர்வ காலமும் கணவனிடமும் குடும்பத்தாரிடமும் பூசலிட்டுக் கொண்டிருப்பவள் மனைவியாக அமைந்து விட்டாலோ கேட்கவே வேண்டாம், அவன் எல்லாம் பெற்றிருந்தும் ஒன்றும் இல்லாதவனே. ஆகவே 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'.

60. தறுகண் யானை தான்பெரிது ஆயினும்
சிறுகண் மூங்கில் கோற்கு அஞ்சுமே.
யானை மிகப் பெரிய மிருகம். அருகில் செல்லக்கூட அஞ்சுவர். கோயில்களில் அந்த யானையை நிறுத்திக் கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் அதை பிச்சை எடுக்க வைத்துக் கொண்டிருப்பர். அத்தனை பெரிய யானை முடியாது என்று மறுத்துவிடலாமே. அப்படிச் செய்வதில்லை, அந்தப் பாகன் கையில் வைத்திருக்கும் அந்தச் சிறு மூங்கில் குச்சியைக் காட்டி அவன் சொல்வதை யெல்லாம் அந்தப் பெரிய யானை அடிபணிந்து செய்துகொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் காசை வாங்கிக் கொண்டு காசு கொடுத்தவன் தலையில் தன் துதிக்கையை வைத்து ஆசிர்வதிக்கிறது. மூங்கில் கோலை வைத்துக் கொண்டு அதை ஏவிக் கொண்டிருப்பவனை அது ஒன்றும் செய்வதில்லை.

இந்த 6ஆம் பகுதியை எழுதும்போது மனம் வலிக்கிறது. அமங்கலமான செய்திகளைச் சொல்லி நியாயங்களை இப்படிக் குரூரமாகச் சொல்லியிருக்க வேண்டாம். என்ன செய்வது, தமிழிலக்கியம் ஆயிற்றே! உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுவோம் என்று சொல்லியிருக்கிறேன், மனக் கிலேசத்துடன்.1 comment:

  1. 57,58,60 - இவை மூன்றும் தான் அறிந்தவை. அமங்கலமான சொற்களைக் கூட மங்கலம் பூசித் தருவதும் ஒரு பண்பாடுதானே ஐயா!... தங்களுடைய மனக்கிலேசம் தங்களை இன்னும் உயர்த்துகின்றது!...

    ReplyDelete

You can give your comments here