மகாத்மா காந்தி நினைவுகள்
(மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டிய கட்டுரை)
143 ஆண்டுகளுக்கு முன்பு போர்பந்தரில் பிறந்த ஒரு அவதார புருஷன் மகாத்மா காந்தி. சாதாரண மனிதர்களைப் போல அவரும் இருந்திருந்தால் ராஜ்கோட் நீதிமன்றத்தில் ஒரு வக்கீலாகக் காலம் தள்ளியிருப்பார். பாரத மக்கள் செய்த புண்ணியத்தினால் இங்கு வந்து அவதரித்து, சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பது தெரியாமல் திசை தெரியாமல் திணறிக் கொண்டிருந்த மக்களுக்கு ஓர் புதிய வழியைக் காட்டி சுதந்திரம் பெற்றுத் தந்தவர். அந்த மகான் அவதரித்த புண்ணிய தினமான அக்டோபர் 2 அன்றாவது அவரது நினைவைச் சற்று மனத்துள் கொண்டு வருவோம்.
அரசியல் என்றால் குதிரைக்குச் சேணம் கட்டியது போல நடந்து கொள்வோர் பலர். ஏதோ குதிரைக் கொம்பு போல ஒரு சிலர் அரசியலில் இருந்து கொண்டே, இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம் என்று வேறு திசைகளிலும் ஆர்வம் காட்டி வருவர். ஆன்மிக வாதிகள் தங்களுக்கும் அன்றாட நாட்டு நடப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை போல பேசியும், வாழ்ந்தும் வருவர். சில அரசியல் வாதிகளுக்கு ஆன்மிகம் என்றாலோ, அல்லது கடவுள் நம்பிக்கை என்றாலோ வேம்பாகக் கசக்கும். ஆன்மிக வாதிகளை அவர்கள் பார்க்கும் பார்வையில் ஏளனமும், அவநம்பிக்கையும்தான் இருக்கும்.
ஆனால் ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒருசேர முன்னிறுத்தி அரசியல் வானில் மின்னியவர்; கொண்ட குறிக்கோளை அடைந்தவர் மகாத்மா காந்தி என்றால் அது மிகை அல்ல. அவரைப் பின்பற்றி பலர் ஆன்மிகத்தை உயர்வாகக் கருதி அரசியலிலும் தொண்டு செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர் போன்ற சிலர் அப்படிப்பட்ட ஆன்மிக, அரசியல் தலைவர்களாகத் திகழ்ந்தனர்.
மகாத்மா ஆன்மிகவாதி என்று சொல்லும்போது அவர் கோயில் கோயிலாக அலைந்தவர் இல்லை. கோயில்களை வெறுப்பவர் இல்லையென்றாலும் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று அங்கெல்லாம் போகும் வழக்கம் அவருக்கு இல்லை. தினமும் தான் இருக்குமிடத்தில் கூடியிருக்கும் மக்களுக்கு மத்தியில் பிரார்த்தனை செய்வதே அவரது வழக்கம்.
1919இல் மகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்தபோது தமிழ் நாட்டுக் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியை அறிந்தார். அப்படி நம் சகோதரர்களை உள்ளே விடாத ஆலயங்களுக்குள் நானும் செல்ல மாட்டேன் என்று விரதமிருந்தார். ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது ராஜாஜியின் விருப்பப்படி கோயில்கள் அனைவருக்கும் நுழைய அனுமதி அளித்தது. ஒரு சிலரின் எதிர்ப்புக்கிடையே அந்த ஆலயப் பிரவேசம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் 1946இல் காந்திஜி தமிழகம் வந்தபோது இப்போது ஆலயங்களில் அனைவரும் சென்று தரிசிக்கலாம் என்ற நிலை இருந்ததால், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், பழனி தண்டாயுதபாணி ஆலயம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.
ஆன்மிகம் என்பது என்ன வெறுக்கத்தக்க விஷயமா? ஏன் சில அரசியல் தலைவர்கள் ஆன்மிகத்தையும் ஆன்மிக வாதிகளையும் கண்டால் விஷத்தைக் கக்குகின்றனர். இப்படியொரு போலித்தனமான நடவடிக்கையினால் தங்கள் அரசியல் வாழ்வு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. இந்த விஷயம் குறித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் 1976இல் "செங்கோல்" இதழில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரையை மீண்டும் இப்போது படித்தாலும் ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுபட்டால்தான் மக்கள் வாழ்வு சிறக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இனி அந்தக் கட்டுரையின் சில பகுதிகளைப் பார்ப்போம்.
1. "அரசியல் தலைவர்களுக்கு ஆன்மிக இலக்கியங்களில் பயிற்சி இருக்க வேண்டும். இதனை இன்றியமையாத ஒரு தகுதியாகவும் கருத வேண்டும். ஒரு தலைவர் அரசியலை விட்டுவிட்டால், அதைவிடவும் சிறந்ததான ஆன்மிகத் துறையில் ஈடுபட்டு அவர் தொண்டாற்ற முடியும் என்ற நிலை இருக்க வேண்டும். "வறட்டு அரசியல்" ஒன்றை மட்டுமே பற்றிக் கொண்டு தலைவராவதால், அதை விட்டுவிட்டால் சூனியத்திற்கு வந்து விடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டு விடுகிறது. இத்தகையவர்கள் நாட்டுக்குச் சுமையாகி விடுகின்றனர்."
2. "இராமன் தன் தந்தை தயரதனுடைய வற்புறுத்தலால், அரச பதவியை ஏற்க இணங்கியபோது "காதலுற்றிலன், இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்தான்" என்கிறார் கம்பர். தனக்குக் கிடைத்த அரச பதவி இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் தன் சிற்றன்னையால் பறிக்கப்பட்டபோது, இராமனுடைய முகம் "அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா!" என்றும் கம்பர் கூறுகின்றார். அரச பதவி கிடைத்த போதும், அது திரும்பவும் பறிக்கப்பட்ட போதும் இராமனது முகம் ஒரே விதமாகத்தான் இருந்தது என்று கூறுகிறார்."
3. "சிலப்பதிகாரம் இயற்றியருளிய இளங்கோவடிகளும், அண்ணன் செங்குட்டுவனுக்கேயுரிய அரச பதவியானது, ஒரு நிமித்திகன் கூற்றால் தமக்கு வரவிருந்தபோது, அதனை ஏற்க மறுத்தார். அரசை அண்ணனுக்கே ஆக்கி, அரண்மனை வாழ்வைத் துறந்தார். இராமனுக்கும் இளங்கோவடிகளுக்கும் ஆன்மிக இலக்கியங்களிலே பயிற்சி இருந்ததனால்தான் அவர்கள் அரச பதவியைப் பெரிதாக எண்ணவில்லை. அதனை எளிதில் துறந்துவிட அவர்களால் முடிந்தது. அரசியலைத் துறந்த பின் சிறந்ததான ஆன்மிகத் துறையில் ஈடுபட்டுச் சிலப்பதிகாரக் காப்பியத்தைப் படைத்து அழியாப் புகழ்பெற முடிந்தது."
4. "அன்னியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட பின்பு அரசியலோடு ஆன்மிகத்திற்கு இருந்த தொடர்பு குறைந்துவிட்டது. ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு என்றாகிவிட்டது. இந்த விபத்திலிருந்து பாரதப் பெருநாட்டை மீட்க 19ஆம் நூற்றாண்டிலே வடக்கே இராமமோகனர், தயானத சரஸ்வதி, பகவான் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோரும், தெற்கே இராமலிங்க வள்ளலாரும் தோன்றினர்."
5. "இந்தியாவில் ஆன்மிக வழியிலான கலாசார ஒருமைப்பாடு உறுதியாக இருந்து வருகிறது. அதுதான் அரசியல் ஒருமைப்பாட்டின் ஆணிவேராகவும் இருந்து வருகிறது. அதனைக் காப்பாற்றுவது உணர்ச்சி பூர்வமான தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவி புரிவதாக இருக்கும். அவரவரும் தத்தம் மதங்களில் நம்பிக்கை வைத்து, வள்ளலார் வழியில் மதங்களிடையே ஒற்றுமை காண முயல வேண்டும்."
6. "துரதிர்ஷ்டவசமாக, தமிழ் நாட்டிலே அரசியல் வாதிகள் என்போர் ஆன்மிகத்தை விரும்பாதவர்களாகவோ, வெறுப்பவர்களாகவோ இருக்கின்றனர். இந்த நிலை காரணமாக, அகில இந்தியத் தலைமையைப் பெறுவது தமிழர்களுக்குச் சாத்தியமில்லாமற் போய்விட்டது; பெற்றாலும் அது நிலைபெறுவதோ, நீடிப்பதோ முடியாமல் இருக்கிறது."
7. "ஒரு காலத்தில் சங்கரர், இராமானுஜர், குமரகுருபரர் போன்ற தமிழ் நாட்டி ஞானியர்கள் அகில இந்தியாவிலும் செல்வாக்குப் பெற்றனர். அவர்கள் புகழ் வடபுலத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அத்தகைய ஞானியர்கள் பிற்காலத்தில் -- ஏன், தற்காலத்திலும் தோன்ற முடியாத ஒரு சூன்ய நிலை தமிழர் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது."
8. "வள்ளலார் ஒருமைப்பாடு காண முயன்றார். மனித சமுதாயம் முழுவதையும் நேசித்தார்; தெய்வ பக்தியை உறுதியாகப் பிடித்துக் கொண்டு புரட்சிகரமான சீர்திருத்தக் கொள்கைகளைப் போதித்தார். இந்நாளைய சீர்திருத்த வாதிகளுக்கு அவர் மிகச் சிறந்த வழிகாட்டியாவார். உண்மையான சமூக சீர்திருத்தவாதி மனித சமுதாயத்திலே எந்த ஒரு பகுதியினரையும் அன்னியராகக் கருதுவதோ துவேஷிப்பதோ கூடாது என்பது இராமலிங்க சுவாமிகளின் போதனை."
தமிழகம் ஆன்மிகப் பயிற்சியுடைய அரசியல் வாதிகளின் எண்ணிக்கையைப் பெருக்குமானால், அப்படிப்பட்டவர்களுக்கு மதிப்பளிக்குமானால், அதன் எதிர்காலம் ஒளியுடையதாக இருக்கும்."
("செங்கோல்" 25-4-1976)