எம்.எல்.வசந்தகுமாரி
தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த குரல் இனிமையாலும், கர்நாடக சங்கீத உலகிலும், திரையிசையிலும் தனி முத்திரை பதித்தத் தலை சிறந்த பாடகியருள் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் பாடி புகழின் உச்சிக்குச் சென்ற பாடல்கள் எண்ணற்றவை. இந்த இசை மேதை தனக்குப் பின் ஒரு திறமை மிக்க சீடர்களை உருவாக்கிவிட்டு அவர்கள் இன்று கர்னாடக இசையுலகில் தலை சிறந்து விளங்குவதற்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார். இந்த அரிய பாடகியைப் பற்றிய சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
எம்.எல்.வி. என்று அறியப்பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி 'மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி' என்பதன் சுருக்கம். 1928 ஜூலை 3ஆம் நாள் பிறந்தவர் இவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல் வேறு பல மொழித் திரைப் படங்களிலும் இவருடைய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவருடைய காலத்தில்தான் சங்கீத உலகில் தலை சிறந்த மேதைகளான எம்.எஸ்.சுப்புலட்சுமியும் டி.கே.பட்டம்மாளும் சிறந்து விளங்கி வந்தனர். அவ்வப்போது மூவர் சில துறைகளில் சிறந்து விளங்க்கும் மரபு நம் நாட்டில் இருந்து வருகிறது. கர்னாடக இசைக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, தமிழிசைக்கு முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் போன்றோரைச் சொல்லலாம். அதுபோல இவர் காலத்தில் எம்.எஸ்., டி.கே.பி., எம்.எல்.வி. ஆகியோரைச் சொல்லலாம். பிரபல சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சங்கீதம் பயின்றவர் இவர். மிகவும் இளம் வயதில் "சங்கீத கலாநிதி" விருதினைப் பெற்ற கலைஞர் இவர்.
அப்போதைய திரை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஜி.இராமனாதன் அவர்களுக்கு எம்.எல்.வி.யின் குரல் மிகவும் பிடிக்கும். ஆகவே அவர் இசை அமைத்த திரைப்படங்களில் எம்.எல்.வியின் பாடல் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. பல பாடல்களை இவர் ஜி.ராமனாதன் இசையில் பாடியிருக்கிறார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தவிர, முத்துசாமி தீட்சிதர் பாடல்களோடு புரந்தரதாசரின் பாடல்களையும் பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. புரந்தர தாசரின் பாடல்கள் தமிழகத்தில் அதிகமாகப் பரவ இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருடைய "பாரோ கிருஷ்ணையா" போன்ற பாடல்கள் அடங்கும். இவர் பல சிஷ்யைகளைத் தயார் செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கவர்கள் திருமதி சுதாரகுநாதனைச் சொல்லலாம். தன்னுடைய மகளான பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவும் இவரிடம் இசை பயின்றவர்தான். வயலின் இசை மேதையான கன்னியாகுமாரி இவருக்குப் பலகாலம் பக்க வாத்தியம் வாசித்தவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.
புகழ்பெற்ற இசைப் பாரம்பரியம் உள்ளவர் எம்.எல்.வி. இவருடைய தந்தையார் அய்யாசாமி ஐயர் மிகச் சிறந்த பாடகர். தாயார் லலிதாங்கியும் இசைக் கலையில் புகழ் பெற்றவர். சென்னையில் ஒரு கான்வெண்டில் கல்வி கற்று வந்த சமயத்தில் இவருடைய இனிய குரலையும், பாடும் திறமையையும் கண்டு குரு ஜி.என்.பாலசுப்பிரமணியன் இவரை ஒரு சிறந்த இசைக் கலைஞராக ஆக்க முடிவு செய்தார். குடும்பமும் இசைத் துறையில் ஈடுபட்டிருந்த காரணத்தால் எம்.எல்.வி. இசையைத் தன் வாழ்க்கைக்கு முக்கியமான துறையாக ஏற்றுக் கொண்டார்.
எம்.எல்.வி. தன் 12ஆவது வயதிலேயே தனியாக கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் தன் தாயாருடன் பாடிவந்த இவர் பின்னர் தனியாகப் பாடத் துவங்கினார். இசைத் துறையில் நுழைந்து சில ஆண்டுகளுக்குள் இவர் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து விட்டார். இவர் இசைக் கச்சேரிகளைக் கேட்க ரசிகர் மானிலம் முழுவதும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இவருடைய தாயார் புரந்தரதாசரின் சாகித்தியங்களை நன்கு அறிந்தவராதலால் அவரிடமிருந்து இவரும் அவற்றைக் கற்றுக் கொண்டு சிறப்பாகப் பாடத் தொடங்கினார்.
முன்பே குறிப்பிட்டபடி திரையிசைத் துறை இவரை விட்டுவைக்கவில்லை. 1946 முதல் திரையிசையில் பாடிவந்தாலும் முதன்முதலாக "மணமகள்" எனும் படத்தில் 1951இல் இவர் பாடிய "எல்லாம் இன்பமயம்" எனும் பாடலும், மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே" எனும் பாடலும் இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. பாரதியார் இந்தப் பாடலுக்கு வேறு ராகத்தில் அமைத்திருந்தாலும் இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் மற்றொரு ராகத்தில் பாடிய இந்தப் பாடல்தான் இன்றும் பாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 1952இல் தாய் உள்ளம் எனும் படத்தில் பாடிய "கொஞ்சும் புறாவே" எனும் பாடல், ஓர் இரவில் பாடிய "ஐயா சாமி" எனும் பாடல் போன்ற எண்ணற்ற பாடல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன.
ராஜாஜி அவர்கள் இவருக்கும் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்தார். சிறப்பாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு சங்கரராமன், ஸ்ரீவித்யா எனும் இரு குழந்தைகள். ஸ்ரீ வித்யா சங்கீதத்திலும் சிறந்து விளங்கினார். ஆனாலும் திரைத்துறையில் ஈடுபட விரும்பி இவர் ஒரு சிறந்த நடிகையாக ஆகி பரிணமித்தார் என்பது அனைவரும் அறிவர்.
புரந்தரதாசரின் சாகித்தியங்களை ஆய்வு செய்து இவர் மைசூர் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றார். மத்திய அரசின் "பத்ம பூஷன்' விருதையும், "சங்கீத கலாநிதி" விருதையும் பெற்றார். 1990இல் இவர் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார். வாழ்க எம்.எல்.வசந்தகுமாரி புகழ்!