பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம்--சுந்தர காண்டம் - 1


லக்ஷ்மி ராமாயணம் (கம்ப ராமாயணத்தை யொட்டி இயற்றியது)          
 சுந்தர காண்டம்
                        கடல் தாவு படலம்
சுந்தரரின் சாகசங்கள் நிறைந்திருக்கும்
‘சுந்தர காண்டம்’ துவங்கும் முன் கம்ப நாடர்,
தென்தீவாம் இலங்கையிலே வில்லேந்தி,
வென்றானைப் பரம் பொருளாய்ப் பாடுகின்றார்.
                  
                     அநுமன் துறக்க நாடு காண்டல்
             அநுமன் இலங்கையைக் கண்டு ஆரவாரித்தல்

பேருருகொண்டு பறக்கையில், வான்வெளி யிருந்தே
கோட்டைச் சுவரையும், கொற்றம் வாயிலையும்,
கொண்டிருந்த இலங்கா புரி கண்டு
அண்டமதிர  தோள்கொட்டி ஆர்ப்பரித்தான்.                                                                   2  

             அநுமன் தாளால் அழுந்திய மகேந்திர மலையில் நிகழ்ந்தவை

நின்றான் அந்தமிலான் மகேந்திரக் குன்றின்மேல்.
நொருங்கி, நெரிந்து அமுங்கிய தக்குன்று!
கடலிலிட்ட உறுமத்து போலதுவும் சுழன்றிட,
தேவரும், முனிவரும் ஒருங்கே கூடினர்!                          3

‘வித்தக! வாழ்க! வென்றிட செல்க’வென
கொத்து மலர்களை, சுண்ணம் சந்தனத்தை,
முத்து மணிகளையும் தூவி வாழ்த்திட,
விரைந்தனன் அநுமன் இலங்கையை நோக்கி.                      4 

அவனெடுத்த பேருருவின் உயர்ச்சியும்,
அவனழுத்திய மேருவின் தாழ்ச்சியும்,
இலங்கை யடையினும், ஒடுங்காது என்றெண்ணி,
வியந்து நோக்கினர் விண்ணவர் யாவரும்.                         5

அவனோ..
வாலினை வீசினான்; காலினை நீட்டினான்;
மார்பினை ஒடுக்கினான்; தோளினைப் பரத்தினான்.
கழுத்தினை உள்ளிழுத்துக் காற்றாய் வேகம் கூட்டி
குன்றினின் றெழும்பி, விண்ணில் பறந்தான்.                       6
    
                   அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை
குன்றுகளும், மரங்களும், அவற்றோடு,
களிறுகளும், பல்லுயிர்கள் பலவுமாய்
நாயகனாம் இராமனின் பணி இஃதென
பாய்ந்தனவாம் கடல்சூழ்ந்த நகர் நோக்கி.                          7

கடல்நீர் பிளந்ததினால், நாகருலகு தெரிந்ததுவாம்.
துள்ளுகின்ற மகர மீன்கள் துள்ளிக்குதித்ததாம்.
தள்ளுகின்ற அலைகளெல்லாம் இலங்கை மீது
பேரிரைச்சல் போட்டபடி மோதிப் பாய்ந்ததாம்.                     8

                      மைந்நாக மலையின் தோற்றம்

விரைந்து, பறந்த அநுமனுக் கெதிரினில்,
விண்ணும், மண்ணுமே ஒன்றாகும் வண்ணம்
குன்றொன்று மேலெழும்பி வந்து நின்றதும்,
உதைத்துத் தள்ளினன்! உருண்டதது தலைகீழாய்!                  9

நிலைகுலைந்த அம் மைந்நாகமலை
வலிபட்டு, மனத்தில் துயிருற்று – பின்
மானுட உருக்கொண்டு சொன்னதாம்.
‘அநுமனே! இச்சொல்லைக் கேட்டுச் செல்!                        10
                           
முன்பொரு நாள்,
சிறகுகள் பெற்றிருந்த மலைகளெல்லாம்
ஊறு விளைத்தன இடம் பெயர்ந்தபடி
சினந்த இந்திரன் சிறகுகளை அரிகையில் – எனை
கடலினுள் தள்ளி காத்தனன் வாயுதேவன்.                        11

அன்னாரின் அருமைந்தன் நீயதனால்
உன்மீது அன்பு வைத்தேன் இந்நடுக்கடலில்.
என்னாலே செயத்தக்க செயலாக - எந்தன்
பொன்னான சிகரத்தில் இளைப்பாறிச் செல்’ என்ன                12

பதிலுரைத்தான் அநுமன்.
‘நுகர்ந்திட்டேன் உன் அன்புடைமையை
உணர்ந்திட்டேன் இதற்குமேல் ஈவது யாது?– ஆனால்
அமர்ந்திடேன் இராமன்பால் கொண்ட காதலினால்.
சோர்வடையேன் அவனாணை முடியும்முன். - அதனால்           13

விரைவாய் இலங்கா புரியடைந்து,
கருத்தாய் என் பணி முடித்து மீண்டால்,
விருப்பாய் நீதரும் விருந்து ஏற்பேன்.
பொறுப்பாய் அதுவரைநீ!’ புறப்பட்டான் அநுமன்.                   14

                       சுரசை தோன்றுதல்

‘உலகங்கள் மூன்றி னின்றும் முற்றிய துன்பங்களை,
விலக்கி யழித்திட வந்துள்ள அநுமனின்,
வலிமை இன்னதென்று விளக்கிடு நீ’யென
‘சுரசை’ யிடம் தேவர்கள் கோரினராம்! – அவளும்                 15

பகைமை உருகொண்டு அவனெதிர் வந்து
‘யமனும் அஞ்சிடும் என் பசிப்பிணிக்கு
உரிய உணவாக நீயாக வந்தனையோ..? - என்
வாயினுள் புகுதலன்றி வழியேயில்லை’ என்ன,                   16

அநுமன் பதிலுரைத்தான்:
‘பசிதீர எனைப் புசிக்கவந்த பெண்ணே! - இன்று
விசையாக உள்ளேன் ராமனின் ஏவலுக்கு!
சரியாக அதை முடித்து, நானே வந்து
இசைவேன் உன் பசியினுக் கிலக்காக.                           17

கூறிய அநுமன்பால் கோபத்தைக் காட்டி,
‘உன்னுடல் தின்றுதான் என்பசி தீர்வே’னென
அண்டம் நுழைகினும் நிரம்பா பெருவாய் திறந்தாள்.
நீண்டானவன்! நெடிதாகிப் பேருரு கொண்டான் - பின்             18

நொடிப்பொழுதில் நெட்டுரு சுருக்கி – அவள்
மூச்சு விடுமுன் நீள்வாய்ப் புகுந்து
மீண்டு வந்தவனைக் கண்டு ஆர்த்தனர்.
‘ஆண்டான் இவனெ’ன விண்ணோர் வாழ்த்தினர்.                  19

தன்னுரு கொண்டாள் சுரசையும்.
‘உன்னால் முடியா செயல் உண்டோ?! வென
அன்பாய் அன்னைபோல் வினவி நின்றாள் – அவளுக்கு
ஆசிகூறி புறப்பட்டான் அஞ்சனை மைந்தன்.                      20

கீதங்கள் இசைத்தனராம் கின்னரர்!
பேதங்கள் இயம்பினராம் பேதையர்!
வேதங்கள் பாடினராம் அந்தணர்!

விருந் தளித்ததாம் அந்த வீசிதென்றல்.                           21

to be continued.............

No comments: