பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 9


‘ஒன்றேதான் சிறு குரங்கது
கொன்று அழித்தது சம்பு மாலியை 
‘நமரெல்லாம் இறந்தனர்’ என்றபடி,
விக்கித் தவித்து ஓடினர் எஞ்சியர்.                               169

              பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

‘அந்தக் குரங்கினை யானே பிடிப்பேன்’
வியந்து சொன்ன இராவணன் நோக்கி,
சேனைத் தலைவர்கள் ஐவர்களும் – நற்
சேதி கொணர்வதாய்ப் போரிடக் கிளம்பினர்.                     170

வீரக்கழல்களைக் கால்களில் கட்டினர்!
அம்புப்புட்டிலை முதுகினில் சாற்றினர்!
இந்திரன், குபேரன், யமனையும் வென்ற,
பஞ்ச சேனாபதிகளும், சேனை வீரரும்!                          171.

தோரண வாயிலை சூழ்ந்து கொண்டு,
சேனைகள் நாற்புறம் அணிவகுக்க,
தனியனாய் மாருதி இருப்பதைக் கண்டு,
விண்ணவர் வருந்தியே நடுங்கினராம்.                           172

‘புல்தலை குரங்கா போரினில் வென்றது?
வல்லிய அரக்கரை முறுக்கித் தின்றது?’
ஐவரும் ஐயமாய் அவ்விடம் அடைந்ததும்,
வான் முட்டும் பேருரு கொண்டா னனுமன்.                    173

சீற்றமிகு வீரர்கள் செலுத்திய படைகளும்,
தாக்கிய குதிரைகளும், தடுத்த தேர்களும்,
மேகமலை போன்றிருந்த யானைகளும்,
மாளும்படி தள்ளிவிட்டு, வீரத்துடன் போரிட்டான்.                174

உதைத்து மிதித்தான்; தேய்த்து அரைத்தான்.
குதித்துக் கடித்தான்; பிசைந்து கொன்றான்.
களிறும், பரியும், குருதியாற்றிலே மிதந்திட,
போர்முனை வந்தனர் பஞ்ச சேனாபதிகளும்.                     175

‘எழு’வினைத் தாங்கி அநுமன் தாக்கிட,
வில்லினால் வாங்கித் தடுத்தான் ஒருவன் – அவன்
மலையினைப் பெயர்க்க முயலும் முன்னே
‘எழு’வினால் அடித்தவன் உயிர் உண்டான்.                       176

ஏனைய நால்வரும் சினத்தீ கக்கினர்.
நாணினைப் பூட்டியே வில்லினைச் சொரிந்தனர்.
பட்ட அம்பினால் அநுமனின் தோள்வழி,
ரத்தப் பெருக்குகள் விழுந்து தெரித்தன.                          177

வஞ்சனை மிக்க அரக்கர் களின்
வலிமையை உணர்ந்தான் அந்த மிலான்.
மலையினை யொத்த நால்வரில் ஒருவனை
குழம்பாய் மாற்றிட மிதித்தே கொன்றான்.                        178

ஐவரில் இருவர் மாண்டதன் பின்னர்,
மூவரின் தேர்களில் இரண்டினைத் தூக்கி,
ஆகா யத்திலே மற்போர் புரிந்தான்.
இராகுவும், கேதுவும் இறந்து வீழ்ந்தன.                          179

எஞ்சிய ஒருவனை,
குன்றிடைத் தாவும், சிங்கம் போலவன், 
வன்தலை மீதே குதித்துக் கொன்றான்.
‘சேனையும் அழிந்தது; தலைவரும் சமைந்தாரெ’ன
இராவணன் வசம்போய் கூறினர் பிழைத்தோர்.                   180

          அக்ககுமாரன் (அக்ஷயகுமாரன்) வதைப் படலம்.

கோபக் கொடுந்தீ கிளர்ந்து எழுந்திட,
போருக்குக் கிளம்பிய இராவணனை – அவன்
மைந்தனாம் அக்கக் குமாரன் தடுத்தான்.
‘எந்தாய்! ஈகடன் அடியேனுக்கு ஈதி’யென.                        181

மண்டோதரியின் செல்லப் பிள்ளையும்,
இந்திர சித்தின் இளவலுமான இக்குமரன்,
அரக்கர்கள் வாழ்த்தொலி களுக் கிடையே
முரசுகள் முழங்கிட, ஏறினான் தேரினில்.                        182 

இவனை…
இந்திரசித்தோ –இராவணனோ வென
சிந்தையில் எண்ணிய அநுமந்தன்
சுந்தரத் தோள்களைத் தட்டிக் கொடுத்து,
‘வந்தனன்! முடிந்ததென் மனக்குறை’ மகிழ்ந்தான்.                183

வந்த அரக்கனை உற்று நோக்கினான்.
‘குன்றென விளங்கும் குமரன் யாரொ? ஐயுறுகையில்,
‘இ குரங்குதானா அரக்கர் குழாத்தை கொன்றதென
பற்கள் தெரிய நகைத்தான் அரக்கன்.                             184

ஆர்த்தெழுந்த அரக்கர் சேனை,
போர்த்தது பொருபடை அநுமன் மீதில்,
முறிந்தன ஒடிந்தன படைக் கலமெல்லாம்.
உட்புக முயன்று சிதறி விழுந்தன.                               185

ஆற்றலைப் பெருக்கி, பொங்கி யெழுந்தவன்.
காற்றினைப் போலே கொடும்போர் புரிந்திட
வன்தோள் அரக்கரின் என்புகள் முறிந்தது.
பொன்னகர் குலைந்து பிணக்கா டானது.                         186

இறந்தார் பலர்; உடல் சிதைந்தார் பலர்.
குருதி வெள்ளம் குற்றாராய் ஓட,
தனியனாய் விடப்பட்ட அக்க குமாரன்,
நனிதிறன் அம்புகளை சரமாக விடுகின்றான்.                     187

நேர்த்தியாய் தடுத்தவன் தேரினுள் தாவினான்.
கோல்கொண்டு, சாரதியின் உயிர் கொண்டான்.- பின்
நேரெதிராய் நின்றே நெடும்போர் புரிந்தவன்- குமரனின்
பிடரியைப் பிடித்து, தரையில் தேய்த்து மாய்த்தான்.              188

செய்தியறிந்த மண்டோ தரியோ
பொங்கியெழுந்த கண்ணீ ருடனே,
வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கதற,
வையமே நடுங்கிட வெகுண்டான் இந்திரசித்.                     189

                           பாசப்படலம்

‘மரக்கொம்பினில் தாவிடும் குரங்கொன்றால் - வீர
அரக்கரின் வம்சமே அழிந்திடு மென்றால்,
குலைந்தது இராவணன் புகழன்றோ?’வென
புலம்பித் தீர்த்தான் இந்திர சித்.                                  190

அரண்மனையுள் ஆவேசமாய் புகுந்தவன்– சிறு
குரங்கொடு புரிந்த போரினில் தன் னிளவலொடு
இறந்த அரக்கரே பலரென இடித்துரைத்தான்.
துடித்த இராவணனும் கலங்கிச் சோர்ந்தான்.                     191

to be continued................

No comments: