பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 12

கட்டிய கயிற்றொடு சட்டென உயர்ந்தான்.
பற்றிய அரக்கரின் ஆயிரம் புயங்களும்,
தூண்போல் தொங்கிட விண்மேல் எழுந்தான்.
மண்மேல் கூட்டமாய் அரக்கர்கள் விழுந்தனர்.                    232

துதித்துப் போற்றினான் இராம பிரானை! – பின்
சிவந்து எரியும் சிறந்த வாலினை,
புரத்தின் மீதினில் புரளச் செய்தவன்,
மாளிகை மேல்புறம் தாவிச் சென்றான்.                          233

                   இலங்கை எரியூட்டு படலம்

வாசலில் பட்ட பொறி யொன்று
வீட்டினைச் சூழ்ந்து தாக்கத் துவங்கிட,
ஊச லிட்டு அலைந்து திரிந்தனர்
பூசலிட்ட இலங்கை அரக்கர்கள்.                                 234

வானகத்தை நெடும் புகை மாய்த்திட,
போன திக்கழிந்து புலம்பின விலங்குகள்.
யானையின் கரும்தோல் கருகிக் கழன்றிட,
வெண்யானை போலுருவம் பூண்டது.                            235

பொடித் தெழுந்த பெரும் பொறிகள்
இடிக் குரலில் வெடித்துச் சிதறிட,
துடித்துத் துவண்டன மீனினங்கள்!
மடிந்து மரித்தன மானினங்கள்.                                  236

சூழ்ந்திருந்த கடல் நீரும்
உலை நீராய்க் கொப்பளிக்க,
மழை மேகக் கூட்டமெல்லாம்
கலைந்து திரிந்தன வெப்பத்தினால்.                              237

பூக்கள் கரிந்து பொறியாய் மாற
சோலைகள் கரிந்து சாம்பராய் போனது.
சந்திர மண்டலம் உருகிய தாலே
அமிர்தம் வழிந்து கீழே உருண்டது.                              238

வளைந்த குளம்புடை குதிரைகளெல்லாம்
உலர்ந்து, தவித்து, வெந்து அழிந்தன.
வெருளும் வெம்புகை படலம் சூழ்ந்திட
இருளும் கடலுள் பறவைகள் விழுந்தன.                         239

கடும்கனல் தோல்களை உரித்துக் கருத்திட,
கடல்நீ ரமிழ்ந்து குளிர்ந்தனர் அரக்கர்கள்.
ஆடவர், பெண்டிரின் செந்நிறக் கூந்தலால்
கடலும் எரிந்திடும் நெருப்பாய் வெந்தது.                         240

ஊர் முற்றும் எரித்தழித்த கொடுந்தீயும்,
உட்புகுந்தது இராவணனின் அரண்மனையுள்.
எழு நிலை மாடங்கள் எரிந்து விழுந்திட
பலமிக்க யானைகளும் பயந்து ஓடின.                           241 

பிரளயம்தான் வந்ததோ? பிரிதொன்றும் உள்ளதோ?
பற்றிய பெரும்தீ முற்றிலும் அழித்திட,
இரத்தினம் பதித்த புஷ்ப்பக விமானத்தில் போயினர்.             
அரக்கர் தலைவனும், அரிவையர் குழுவும்.                      242

‘இறையோய்! நெடிய வாலில் நாமிட்ட
நெருப்பால் குரங்கு சுட்டது ஈதென,
கரம் குவித்து அரக்கர்கள் பகன்றதும்,
கொதித்துக் கனன்றான் இராவணனும்.                           243

‘புன்தொழில் குரங்கின் வலிமையினால்
எரிந்தழிந்தது எந்தேசமென்றால்,
நன்றென நகைப்பர் தேவர்கள்’ என்றதும்,
சென்றனர் குரங்கினைப் பிடித்திட அரக்கர்கள்.                    244

கால் கொண்டும், வேல் கொண்டும் அக்குரங்கை
வளைத்திட முனைந்தனர் வீரர்கள் பலரும் – வெம்தீ
வால்கொண்டு வாயுபுத்திரன் வளைத்ததும்,
வதங்கியோர் பலரெனின், தப்பியோரும் பலராம்.                 245

நெருப்பணைக்கத் தம் நெடுவாலைக்
கடல் நீரில் தோய்த்தெடுத்தான் – பின்
பிராட்டியிருக்கும் பிரதேசம் மட்டும்
எரியா திருந்ததால் மகிழ் உற்றான்.                             246

                        திருவடி தொழுத படலம்.

பிராட்டி பார்த்தவன், இலங்கையை எரித்தபின்,
திருமால் போலொரு பேருரு யெடுத்தான்.
இராமானைத் தொழுது விவரங்கள் பகன்றது,
‘திருவடி தொழுத படலத்’தில் விரிந்தது.                         247

மைந்நாக மலையினை முறையாகக் கண்டவன்,
உற்றது உணர்த்தியே, விரைந்து பறந்தனன்.
தாய்வரப் பார்த்த குஞ்சினைப் போலவே
வானார வீரரகள் உவகை யடைந்தனர்.                          248

‘அண்ணலே!
முகக் குறிகண்டு நற்செய்தி யுணர்ந்தோம்.
முதலில் புசித்திடு தேனொடு, கிழங்கினை’ யென்றவர்,
வகிர்ந்த புண்கள் நிறைந்த உடலால்,
உயிர்த்து நொந்து. பெருமூச் செறிந்தனர்.                         249

                  அநுமன் பிராட்டியின் செய்தி கூறல்
வாலியின் மைந்தன் அங்கத னுக்கும்,
கரடித் தலைவன் சாம்ப வானுக்கும்,
புறத்தே அமர்ந்து இருந்தோர்க் கெல்லாம்
பிராட்டி பற்றிய விவர முரைத்தான்.                             250

               அனைவரும் இராமபிரானிடம் செல்ல எழுதல்

சோர்வுற்று ஓய்ந்திருந்த இராம பிரானை
சூரிய புத்ரன் சுக்ரீவன் தேற்றி வந்தான்.
தெற்குதிசை தேடிச்சென்ற வாயு புத்ரன்,
நற்செய்தி சொல்வானென உயிர் கொண்டான்.                   251

                        அநுமன் தோன்றுதல்

‘கண்டனன் கற்பினுக் கணியாளைக் கண்களால்’
என்றதைச் சொல்லியே அவ்விடம் வந்தவன்,
‘பண்டுள துயரும், ஐயமும் தவிர்த்தி’யென,
அண்டர் நாயகன் திருவடி பணிந்தான்.                           252

ஐயனே!
பொன்னொத்த பொறுமை தாங்கி,
தனக்கொப்பு தானே யென் றெண்ணி,
நின்னைத் தவிர்த்து நினைவுகள் இலையெனும்
நங்கையைக் கற்புடன் லங்கையில் கண்டேன்’                   253

தாம் சென்ற நாள் முதலாய்
செய்தவை ஈதென கோர்வையாய்க் கூறி – அவள்
தந்த சூடாமணித் தந்திட இராமனும்
கண்மணியைக்  கண்டதைப்போல் களித்தான்.                    254

‘எழுக வெம் படைகளென்றான்’
முழங்கத் தொடங்கின முழு முரசு!
அழகிய இராம இலக்குவர் வில்லேந்தி,
அடைந்தனர் கடலை பன்னிரு தினங்களில்.                      255               


                  சுந்தர காண்டம் முற்றிற்று.


   

1 comment:

Thanjavooraan said...

இந்த பதிவு திருமதி லக்ஷ்மி ரவி அவர்களால் கவிதை நடையில் மிக எளிமையாக ராமாயணம் சொல்லப்பட்டிருக்கிறது. பாலகாண்டம் முடிந்தபின் சுந்தர காண்டத்தை எழுதியிருக்கிறார்கள். தொடர்ந்து அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் இவற்றைத் தொடர்ந்து நீண்ட நெடிய யுத்த காண்டம் முடிந்து ராம பட்டாபிஷேகத்துடன் முடிவடையும். இதனைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை இதில் பதிவிட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.