பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 17, 2018

நீலகண்ட பிரம்மச்சாரி.



                                                                                 
              
                      
           தமிழகத்தின் புரட்சிப் புயல் நீலகண்ட பிரம்மச்சாரி.
                       தஞ்சை வெ.கோபாலன்

      இந்திய சுதந்திரப் போர் நம் நாட்டில் ஏராளமான புரட்சியாளர்களை உருவாக்கியிருக்கிறது. 1919இல் தொடங்கிய மகாத்மா காந்தியடிகளின் காலம் அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற அமைதி வழி போராட்டமாக நடைபெற்ற காலம். அதற்கு முன்பு ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நமது நாடு சுதந்திரம் பெற என்ன வழி என்பது தெரியாமல் அவரவர்க்குத் தோன்றிய வழிகளிலெல்லாம் போராடி அன்னியர்களின் ஆயுத பலத்துக்கு எதிராக நிற்க முடியாமல் உயிர்த்தியாகம் செய்து மாண்டு போனார்கள்.

      1857இல் வட இந்தியாவில் இந்திய சிப்பாய்கள் ஆங்கிலக் கம்பெனியாரின் அடக்கு முறைகளுக்கும், பாரபட்சமான நடத்தைகளுக்கு எதிராகவும் கொதித்து எழுந்ததன் விளைவுதான் “சிப்பாய் கலகம்” என்று ஆங்கில வரலாற்றாசிரியர்கள் எழுதிய முதல் சுதந்திரப் போர். அப்போதே தொடங்கிவிட்டது இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திர தாகம். பாரம்பரிய முறையான நமது பாரத கல்வியும், நாகரிகமும் ஆங்கிலக் கம்பெனியார் இங்கு வந்தபின்னர் அவர்களது கல்வித் திட்டத்தை லார்ட் மெக்காலே அறிமுகம் செய்த பின்பு, நம் கலாச்சாரம், பண்பாடு, நமது சுதேசிக் கல்வி அனைத்தும் அழிந்து நம்மில் பலர் தற்குறிகளாக ஆகும் நிலைமை உருவானது. கல்வியில் உயர்ந்த நாடு, அன்னியரின் பாதம் பட்டு தற்குறிகள் வாழும் நாடாக ஆகிப் போனது. பதினெட்டு, பத்தொன்பதாம்  நூற்றாண்டு புகைப்படங்கள் கிடைத்தால் பாருங்கள், நம்மவர்கள் எப்படி அழுக்குப் படிந்து நாகரிகமற்றவர்களாக அடிமைகளாக வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகும். அந்த அளவுக்கு நம்மை மிகக் கேவலமான அடிமைகளாக வைத்திருந்தால்தான் அவர்கள் நம்மை அடக்கி ஆளமுடியும் என்பதால் நம்மை முதுகைக் குனிய வைத்து சவாரி செய்து வந்தார்கள்.

      அப்படிப்பட்ட அடிமைத் தனம் சிறிது சிறிதாக அங்கொன்றும் இங்கொன்றுமான புரட்சிகள் காரணமாக அக்னி அணையாமல் இருக்கும்படி நம்மில் பலர் பார்த்துக் கொண்டார்கள். அப்படிப்பட்டவர்கள் பெயர்கள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் 1857இல் நடந்த சிப்பாய் கலவரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிப்பாய் புரட்சிக்குப் பின் பிரிட்டிஷார் விழித்துக் கொண்டார்கள். இனியும் இந்திய மக்களை அடிமைத் தளையில் அடைத்துவைத்து, அடிமைகளாக நடத்த முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவும் இந்திய நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து பிரிட்டிஷ் அரசு நேரடியாக ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார். நாம் கிழக்கிந்திய கம்பெனிக்கு அடிமையாக இருந்த நிலைமை மாறி பிரிட்டிஷ் அரசுக்கு அடிமைகளாக வாழத் தலைப்பட்டோம். அந்த சூழ்நிலையில் நம் இந்தியாவில் கனிந்து கொண்டிருந்த தேசபக்தி என்பது சிறு தீயாக வளர்ந்து பின்னாளில் மூண்டு எழுந்த பெருந்தீக்கு காரணமாக அமைந்தது. இந்திய சமூகத்தில் சீர்திருத்தவாதிகள் உருவானார்கள். தேசபக்தி, தெய்வபக்தி இரண்டையும் வலியுறுத்தும் இயக்கங்கள் தோன்றி வளரத் தொடங்கின. பற்பல மகான்கள் தோன்றி நம் இழிநிலை மாறவேண்டுமென்ற ஆவலில் பொதுப் பணிகளில் ஈடுபட்டார்கள். விளைவு இந்தியாவில் பரவலாகச் சுதந்திரக் கனல் பற்றிக் கொண்டது.

      அப்படிப் பற்றிய தீயில் தென்னகமாம் தமிழகத்தில் பற்பல தியாக சீலர்கள் உருவானார்கள். அவர்கள் வேறு யாருக்கும் இளைத்தவர் இல்லை என்பதை அவர்களது தீவிரமான செயல்பாடுகளினால் வெளிப்படுத்தினார்கள். அப்படிப்பட்ட  ஒருவர் அப்போது திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த ஆஷ் என்பவரைத் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்தார். அவர்தான் வாஞ்சிநாதன். நாள் 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி, இடம் மணியாச்சி ரயில் நிலையம். கொலை நடந்த மணியாச்சி ரயில் நிலையத்திலேயே வாஞ்சிநாதனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்டு போனார். வழக்கை விசாரித்த காவல்துறை முதல் குற்றவாளியான வாஞ்சி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனதால், அவர் சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தின் தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பவரைக் குற்றவாளியாக்கி அவரைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் நீலகண்ட பிரம்மச்சாரி எப்படி எங்கே கைதானார் என்பதை அவர் வரலாற்றை முதலில் இருந்து பார்த்துவிட்டு பிறகு வருவோம்.

      1907ஆம் வருஷம், அப்போது வங்கம் பெற்ற சிங்கம் என வர்ணிக்கப்பட்ட பிபின் சந்த்ர பால் சென்னைக்கு வந்து கடற்கரையில் சொற்பொழிவாற்றினார். இந்த கூட்டத்துக்கு மகாகவி பாரதியார் ஏற்பாடு செய்திருந்தார். பாரதியாருக்கு சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் பிறந்த நீலகண்டன் என்ற பதினெட்டு வயது இளைஞர் பழக்கமானவர். நீலகண்டன் அப்போது சென்னை திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கமொன்றில் பணியாற்றி வந்தார். பிபின்சந்த்ர பால் அவர்களின் சொற்பொழிவு பல இளைஞர்களை தேசாவேசம் கொள்ளச் செய்தது. பல புரட்சிக்காரர்களை உருவாக்கியது. அவர்களில் ஒருவராக உருவானார் நமது நீலகண்டன். நாட்டைப் பற்றியும், நம் நாடு முன்பு பெற்றிருந்த பெருமைகளையும், இன்று அடைந்திருக்கும் இழிநிலைமையையும் எண்ணிப் பார்க்க வைத்தது பிபின் சந்த்ர பால் அவர்களின் பேச்சு. இந்த இழி நிலையைப் போக்க தான் ஏதேனும் செய்ய வேண்டுமென்கிற உணர்வு, வெறி அவர் மனதில் மூண்டெழுந்தது. என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பதுதான் புரியவில்லை. எப்படியும் நமது புகழ்மிக்க பாரத தேசம் அன்னியர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்று தனது பாரம்பரிய புகழையும் பெருமையையும் பெற்றே தீரவேண்டும், அதற்குத் தன்னால் முடிந்த தியாகங்களைச் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார் நீலகண்டன்.

      தன் இருப்பிடம் சென்றவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அன்றிரவே கிளம்பி பிபின் சந்த்ர பால் தங்கியிருக்கும் பீட்டர்ஸ் சாலையிலுள்ள பங்களாவுக்குப் போய் அவரைக் கண்டு பேசினார். அவருடன் இருந்த ஒருவர் இந்திய புரட்சியாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர். (Indian Revolutionary Movement). அவருடைய நட்பு நீலகண்டனையும் ஒரு புரட்சியாளராக மாற்றியது. அவர் மனதில் ஒரு தெளிவு, இதுமுதல் நான் ஒரு புரட்சியாளன் என்ற உணர்வு அவரை ஆக்கிரமித்தது.

      1907இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு சூரத் நகரில் நடைபெறப் போகும் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் செல்வதற்காக சென்னை வந்து சேர்ந்தார். அப்போது பாரதியார் நீலகண்டனை, பிள்ளை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படி தமிழ்நாட்டு சுதந்திரப் போர் வீரர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர்.

      சூரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டைப் பற்றி நம்மில் அனைவரும் அறிவோம் அல்லவா? அங்குதான் மிதவாத காங்கிரசாருக்கும் தீவிரவாத காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டது, அது அடிதடி வரை கொண்டு சென்றது. அப்படி சூரத்தில் பாரதியும், வ.உ.சியும் தங்கியிருந்த சமயம் வங்காளத்திலிருந்து வந்திருந்த சந்திரகாந்த் சக்ரவர்த்தி என்பவர் பாரதியாரிடம் தாங்கள் வைத்திருக்கும் புரட்சித் திட்டம் பற்றி கூறி, அந்தப் புரட்சித் தீ தென்னகத்தில் பற்றி எரிய அவர் உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மகாகவி பாரதியாரோ தான் ஒரு கவிஞன் இதுபோன்ற சமாச்சாரங்களில் தனக்கு நம்பிக்கை கிடையாது என்றார். அப்படியானால் அதற்கேற்ற ஒரு இளைஞனைத் தங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பாரதியாரும் அப்படியொரு இளைஞன் சென்னையில் இருக்கிறான். நீங்கள் அவனை நேரில் பார்த்துப் பேசுங்கள் என்று நீலகண்டனை முதன்முதலில் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

      1908ஆம் வருஷத்தில் ஒரு நாள். “இந்தியா” பத்திரிகை அலுவலகத்தில் பாரதி பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நீலகண்டன் அவரைப் பார்த்து பேசுவதற்காக இந்தியா காரியாலயத்துக்கு வந்திருந்தார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். அப்படி நீலகண்டன் அங்கு சென்றிருந்த சமயம் வங்கத்து சந்திரகாந்த் சக்ரவர்த்தியும் அங்கு வந்தார். அங்கு இவர்கள் இருவருக்கும் சந்திப்பு நிகழ்ந்தது. சூரத்தில் தான் ஒரு இளைஞன் பற்றி சொன்னேனல்லவா அவர் இவர்தான் என்று பாரதி, நீலகண்டனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சந்த்ரகாந்த் சக்கரவர்த்தியைப் பற்றியும், அவர் ஈடுபட்டிருக்கும் புரட்சி இயக்கம் பற்றியும் சொல்லி, என் முன்னால் பேசினால் எனக்கு ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் நீங்கள் தனித்துப் போய் பேசிக் கொள்ளுங்கள் என்று பாரதியார் சொல்லி இருவரையும் அனுப்பி விட்டார்.

      சந்த்ரகாந்த் சக்கரவர்த்தி பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். அவர் வங்கத்தைச் சேர்ந்தவர். 1905இல் லார்டு கர்சான் வங்கப் பிரிவினையைச் செய்தார் அல்லவா, அதனை எதிர்த்து அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்கள் ஆங்காங்கே தோன்றின. ஏராளமான இளைஞர்கள் வங்கப் பிரிவினையை எதிர்த்துக் கலவரங்களில் ஈடுபட்டுக் கைதாகி சிறை சென்றனர். புரட்சியாளர்கள் தலைமறைவாகி வன்முறை செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். புரட்சி வெடித்து வங்க தேசமெங்கும் போராட்டக் களமாயிற்று. அந்தப் புரட்சிக்கு நாடெங்கும் ஆட்கள் சேர்ப்பதற்கென்று பலர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆட்களைச் சேர்த்தனர். அப்படிச் சென்னைக்கு வந்தவர்தான் சந்த்ரகாந்த் சக்கரவர்த்தி.

      தனித்து நீலகண்டனும் சந்த்ரகாந்தும் என்ன பேசினார்களோ அது அவர்களுக்குத்தான் தெரியும். முடிவில் தென்னகத்தில் புரட்சி இயக்கத்தைத் தலைமை வகித்து வளர்க்கும் பொறுப்பை நீலகண்டன் ஏற்றார் என்பதுதான் செய்தி. இந்த பணியின் நிமித்தமாக நீலகண்டன் தென் தமிழ்நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திருவிதாங்கூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்குச் சென்று பல இளைஞர்களைத் திரட்டினார். போகும் இடங்களிலெல்லாம் பகிரங்கமாக சுதேசி இயக்கம் பற்றிய பிரச்சாரம், ரகசியமாக புரட்சி இயக்கத்துக்கு விதையிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவர் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. ஏராளமான இளைஞர்கள் சேர்ந்தார்கள். அந்தந்த பகுதிக்குக் குழுக்கள் அமைத்து அவர்களை பொறுப்பாளர்களாகவும் நியமித்தார். இவர்களுடைய பணி என்னவென்றால், ரகசியக் கூட்டங்கள் நடத்தி புரட்சிக்கு ஆட்கள் சேர்ப்பது. காளிமாதா உருவம் வைத்து, அந்த சிலையின் முன் விபூதி குங்குமம் வைத்து சத்தியம் செய்து, ரத்தத்தில் கையெழுத்திட்டு ரகசியம் காப்பதாக உறுதி மேற்கொள்வது உட்பட பல செயல்பாடுகள் நடந்து வந்தன.

      அப்போது முதல் உலகப் போர் தொடங்கியது. 1914இல் ஜெர்மனி உலக யுத்தத்தைத் துவக்கிய சமயம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை பிரிட்டிஷ் பிடியிலிருந்து மீட்க ஆயுதங்களை அனுப்புவதாக புரட்சியாளர்களுக்குத் தெரிவித்திருந்தது. ஜெர்மனி ஆயுதங்கள் தருவதாவது, அது எப்படி முடியும்? இந்த ஐயம் ஏற்படுவது சரிதான். ஆனால் இந்த பணிகளை முடிப்பதற்காக இந்தியாவிலிருந்து எம்.வி.திருமலாச்சாரியார், மேடம் காமா அம்மையார் போன்றவர்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதம் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முயற்சிகளுக்கெல்லாம் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் உதவிகரமாக இருந்தார். அப்படி ஜெர்மனியிலிருந்து வரும் ஆயுதங்களை இந்தியா முழுவதும் இளைஞர்கள் கைகளுக்கு அனுப்பிய பின் குறிப்பிட்ட ஒரு நாளில் நாடு முழுதும் ஓர் ஆயுத புரட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது இந்த ரகசிய இயக்கம். அதன் பெயர் பாரதமாதா சங்கம். இந்த சங்கம் பம்பாய், பரோடா, கல்கத்தா, காசி, டெல்லி, புதுவை, லாகூர் ஆகிய இடங்களில் வலுவாக இயங்கி வந்தது.

      நீலகண்டன் பாரதமாதா சங்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழகத்தில் புகழ்பெற்ற தேசபக்தர்களுடன் தொடர்பு கொண்டார். அப்படித்தான் தூத்துக்குடியில் இருந்த தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி நீலகண்டன் அங்கு சென்று வ.உ.சியைச் சந்திப்பது வழக்கம். அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் அவருடன் கூட சுப்பிரமணிய சிவாவும் இருந்ததால் இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது. சிவா நல்ல பேச்சாளர், இனிமையாகப் பாடக் கூடியவர், இவருடைய அனல் கக்கும் பேச்சைக் கேட்டு தேசபக்தர்களாக ஆனவர் ஏராளமானோர். வ.உ.சிக்கு திருநெல்வேலி மாவட்டமெங்கும் நல்ல மரியாதை, ஆதரவு இருந்து வந்தது.

      பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலின்படி நீலகண்டன் பாஞ்சாலங்குறிஞ்சி பாளையக் காரர்களுடன் தொடர்பு கொண்டார். வெள்ளையனை எதிர்த்து தூக்கில் மாண்ட வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் வம்சத்தவர்கள் அவர்கள். பாரதமாதா சங்கம் திட்டமிட்டிருந்த புரட்சி நடைபெறும்போது வீரமும், தைரியமும் உள்ள மாவீரர்களைத் திரட்டித் தர அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் ஆயுதங்கள் கிடைக்க வழிசெய்வதாக நீலகண்டன் உறுதியளித்திருந்தார். தென் தமிழ்நாட்டுக் கிராமப் பகுதிகளெங்கும் ரகசியமாகச் சுற்றுப் பயணம் செய்து இவர் இளைஞர்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். கட்டபொம்மு, ஊமைத்துறை ஆகியோரின் வாரிசுகள் செக்காக்குடி, ஆதனூர் ஆகிய ஊர்களில் வசித்து வந்தார்கள். ஆதனூர் வாசிகள் மூலம் புரட்சிக்கு இருபதாயிரம் பேரைத் தயார் செய்துவிடுவதாக அவர்கள் உறுதியளித்திருந்தார்கள். இவர்களை கம்பளத்து நாயக்கர்கள் என்பார்கள். மரவன்குறிச்சி எனுமிடத்தில் பிச்சாண்டித் தேவர் என்பார் மூவாயிரம் வீரர்களைத் தருவதாக ஒப்புக் கொண்டார். நடுவப்பட்டியில் வெள்ளையத் தேவர் ஆறாயிரம் வீரர்களையும், பெரியசாமித் தேவர் என்பார் பல்லாயிரம் வீரர்களையும் தயாரித்துத் தருவதாகச் சொன்னார்கள்.

      வீரர்கள் தயார், தளபதிகளுக்கு எங்கே போவது? இவர்களை வழிநடத்திச் செல்ல தகுந்த தலைவர்கள் வேண்டாமா? நீலகண்டனுக்கு சங்கரகிருஷ்ணன் என்றொரு நண்பர் கிடைத்தார். பாரதியாரின் “இந்தியா” பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் உண்டு அவருக்கு. அவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு நீலகண்டன் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட புனலூருக்குச் சென்றார். அங்கு சங்கரகிருஷ்ணனுடைய மருமான் வனத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் என்பவருடன் சந்திப்பு ஏற்பட்டது.

      நீலகண்டன் தேர்ந்தெடுத்த இளைஞர்கள் அனைவருமே நெஞ்சுரம் கொண்ட தேசபக்தர்கள். எதையும் செய்து முடிக்கும் ஆற்றலுள்ளவர்கள். இவர்களைத் தவிர மாடசாமி என்பவர். வ.உ.சி. அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். மாவீரர், மன உறுதியும், எதையும் சமாளிக்கும் மனதிடமும் உள்ளவர். இவருடைய சொந்த ஊர் ஒட்டப்பிடாரம். இவர்கள் அனைவருமே தங்கள் சுயமான பெயரை அதிகம் வெளியில் சொல்லாமல் மாற்றுப் பெயரிலேயே பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் வேறு ஒரு பெயரிலேயே வெளியில் பழகிக் கொண்டிருந்தார்கள். நீலகண்டனும் தன் பெயருடன் பிரம்மச்சாரி என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.

      இப்படி தேசபக்தர்கள் ரகசியமாக தங்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்த சூழ்நிலையில் பிரிட்டிஷ் அரசு, பலத்த அடக்குமுறைகளைக் கையாண்டு வந்தது. பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தன. தி இந்து பத்திரிகையைத் தொடங்கிய ஜி.சுப்ரமணிய ஐயர் மீது வழக்கு தொடரப்பட்டது. அடக்குமுறைக்கு பயந்து சென்னையில் நடந்து வந்த திருமலாச்சாரியாரின் “இந்தியா” பத்திரிகையும் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்தது. பாரதியாரும் புதுச்சேரியில் குடியேறினார்.  பின்னர் அரவிந்தரும் புதுவைக்கு வந்தார். லண்டனில் பிரிட்டிஷ் போலீசார் கைது செய்ய முயன்ற சமயம் வ.வெ.சு. ஐயரும் ரகசியமாகக் கப்பலேறி புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். நீலகண்ட பிரம்மச்சாரியும் தன் நண்பர்கள் சிலருடன் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்தார். இப்படி புதுச்சேரி புரட்சிக்காரர்களின் உறைவிடமாக ஆகிப்போனது.

      இவர்கள் அத்தனை பேரும் இந்திய சுதந்திரத்தில் ஆர்வமும், பிரிட்டிஷ் எதிர்ப்பில் முன்னிலையிலும் இருந்த போதும் இவர்களுக்குள் அடிப்படையில் சில வேற்றுமைகள் இருந்தன. மகாகவி பாரதியாருக்கு இந்த விவகாரங்களில் அக்கறை இல்லை. அவர் உண்டு தேசபக்திக் கவிதைகள் உண்டு என்றிருந்தார். அவருக்கு வன்முறை, புரட்சி இதெல்லாம் ஏற்புடைய கொள்கை அல்ல. அரவிந்தரோ ஒரு புரட்சிக்காரராக இருந்து மீரட் சதிவழக்கில் கைதாகி சிறையில் இருந்து பிறகு வழக்கில் வெற்றி பெற்ற பிறகு ஆன்மிக நாட்டம் பெற்று கல்கத்தா செல்லாமல் கடல் மார்க்கமாக புதுச்சேரி வந்தடைந்து அங்கு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வ.வெ.சு. ஐயர் விஷயம் வேறு. பாரிஸ்டர் ஆவதற்காக லண்டன் சென்றவர், அங்கு வீரர் சவார்க்கர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோருடன் சேர்ந்து தீவிர தெசபக்தராகி மதன்லால் திங்க்ரா போன்றவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து கர்சான் வில்லியை திங்க்ரா சுட்டுக் கொல்ல தூண்டுதலாக இருந்து, பிரிட்டிஷ் போலீசின் வலைவீச்சுக்குத் தப்பி புதுச்சேரி வந்து இங்கும் புரட்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்தவர். இப்படி பலவேறு சக்திகள் ஒருங்கிணைந்து புதுச்சேரியை ஒரு அரசியல் மையப் புள்ளியாக ஆக்கிக் கொண்டிருந்தனர்.  

                                   
வ.வெ.சு.ஐயர்


      காந்தியடிகளுக்கு முந்தைய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசபக்தர்களுக்கு ஆங்கிலேயர்கள் மீது தனிப்பட்ட விரோதமோ, அவர்களுக்கு எதிரான வன்முறையிலோ நம்பிக்கை இல்லை யென்றாலும், பிரிட்டிஷாரின் ஆட்சி எனும் நுகத்தடி தங்கள் கழுத்துகளை அழுத்துவதை வெறுத்து அதிலிருந்து மீண்டு சுதந்திரமாக இருப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருந்த வர்கள்.

      ஒரு பக்கம் முதலாம் உலக யுத்தம் தொடங்கும் நேரம். எந்த நேரமும் யுத்தம் தொடங்கலாம். அப்போது ஜெர்மனி சொன்ன ஆயுதங்கள் தங்கள் கைகளுக்கு வந்து சேரும், அப்போது பிரிட்டிஷ் யுத்தத்தில் ஈடுபாடு காட்டுமா, உள்நாட்டில் ஏற்படப்போகும் ஆயுத எழுச்சியை எதிர்கொள்ளுமா? இதுதான் தேசபக்தர்களின் எதிர்பார்ப்பு. சுதேசிகளுக்கு எதிரான பிரிட்டிஷாரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெல்லை சதிவழக்கு என்று தேச பக்தர்களான வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப் பட்டு விட்டனர். வ.உ.சிக்கு நாற்பதாண்டும், சிவாவுக்கு பத்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வ.உ.சி. முதலில் கோவை சிறையிலும், பின்னர் கள்ளிக்கோட்டை சிறையிலும் அடைந்து கிடக்கவும், சுப்பிரமணிய சிவா சேலம் சிறையில் இருந்து அங்கு தொழுநோய் தொற்றிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் தொழுநோயால் சிரமப்பட்டு இறந்து போனார். வ.உ.சியோ சிறையில் செக்கிழுக்க வைத்து, பாரதி சொன்னது போல் நூலோர்கள் செக்கடியில் வீழ்ந்து கிடக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற தேசபக்தர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருந்த இந்த ஆஷ் என்பார் முதலில் தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த போது வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்தொழிக்க மும்முரமாக வேலை செய்ததையும், திருநெல்வேலி கலவர வழக்கில் வ.உ.சி., சிவா ஆகியோர் சிறை செல்ல காரணமாக இருந்ததாலும் இவர் மீது தேசபக்தர்களுக்கு தீராத வன்மம் ஏற்பட்டிருந்தது. வ.உ.சி. அவர்களுக்கு மிக நெருங்கியவராக இருந்த மாடசாமிப் பிள்ளை என்பார் இந்த விஷயத்தில் ஆஷை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தார்.      

        இப்படி வ.உ.சி., சிவா ஆகியோரின் துன்பங்களுக்குக் காரணமாக இருந்த ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் மீது தேசபக்தர்களுக்கு தீராத கோபம். முன்பு புரட்சிக்குத் தயாராக இருந்த பாஞ்சாலங்குறிச்சி தேசபக்தர்கள் இந்த ஆஷை பழிவாங்கத் துடித்தனர். ஆனால் கொலைபாதகச் செயல்கள் செய்யத் தேவையில்லை. பாரதமாதா சங்கம் ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு எழுச்சிப் போரைத் தொடுக்க இருக்கிறது. இடையில் தனிப்பட்ட கொலைகள் தேவையில்லை என்று தேசபக்தர்கள் தடுத்துவிட்டனர்.

      இந்த சூழ்நிலையில் பாரதமாதா சங்கத்தின் தலைவர்களுக்குத் தெரியாமல் வாஞ்சிநாதன் புதுச்சேரி சென்று அங்கு வ.வெ.சு.ஐயரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அங்கு வாஞ்சியும் மாடசாமிப் பிள்ளையும் வ.வெ.சு. ஐயரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றிருக்கின்றனர். அப்போது ஐயர் வாஞ்சியிடம் ஒரு துப்பாக்கியையும் கொடுத்து அனுப்பியதாகவும் ஒரு செய்தி உண்டு.

                                      


      1911ஆம் ஆண்டு, ஜூன் 17ஆம் தேதி. முன்பு தூத்துக்குடியில் சப் கலெக்டராகவும் பிறகு திருநெல்வேலியில் கலெக்டராகவும் இருந்த ஆஷ் என்று இப்போது குறிப்பிடப்படும் ராபர்ட் வில்லியம் டி’எஸ்கோர்ட் ஆஷ், ஐ.சி.எஸ். என்பவர் தன் மனைவியுடன் கொடைக்கானலில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மகனைச் சந்திக்க ரயிலில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். நெல்லையிலிருந்து வந்த ரயில் மணியாச்சி சந்திப்பில் நின்றுகொண்டிருந்தது. இன்னொரு ரயிலும் வந்த பிறகு இது புறப்பட வேண்டும். அந்த சமயம் நின்றுகொண்டிருந்த ரயிலில் ஆஷ் பயணம் செய்த பெட்டியில் திடீரென்று நுழைந்த வாஞ்சிநாதன் ஆஷைப் பார்த்து மூன்று முறை தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். ஆஷின் மனைவி கத்திக் கொண்டு எழுந்து அலறினாள். ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த ஆஷின் உயிர் பிரிந்தது. பயந்து அலறிய அவன் மனைவியை ஒன்றும் செய்யாமல் வாஞ்சி பெட்டியில் இருந்து இறங்கி எதிரில் இருந்த அந்தக் கால கழிப்பறையினுள் நுழைய முயல அது பெண்களுக்கான கழிப்பறை என்று தெரிந்து அதிலிருந்து வெளியே வந்து ஆண்கள் கழிப்பறையினுள் நுழைந்து கலெக்டர் ஆஷைச் சுட்ட அதே கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டு போனான். வாயினுள் சுட்டுக் கொண்டதால் அவன் தலை, முகம் உட்பட சிதைந்து போய் முண்டமாக வீழ்ந்து கிடந்தான். பாரதமாதா சங்கம் நினைத்த போராட்டம் வேறு, அதற்குள் அவசரப்பட்டு வாஞ்சி இந்த செயலைச் செய்துவிட்டதற்காக வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக தென் இந்தியாவில் கேட்ட முதல் வேட்டுச் சத்தம் இதுதான்.

                                        
வாஞ்சிநாதன்


      மணியாச்சி சந்திப்பில் இந்த கோர சம்பவம் நடக்கும் சமயத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி காசி நகரத்தில் இருந்தார். அப்போது அங்கு செய்தித் தாள்களில் கலெக்டர் ஆஷ் கொல்லப்பட்ட செய்தி பெரிதாக வெளியாகி இருந்தது. இந்த மணியாச்சி கொலை, வெள்ளை அதிகாரிகள் மத்தியில் இந்தியா முழுவதும் ஒரு பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கிய ஆங்கில போலீஸ் அதிகாரிகள் முதல் எதிரியான, ஆஷைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தன்னையே சுட்டுக் கொண்டு இறந்து விட்டதால் அவனோடு தொடர்புடையவர்கள் விவரங்களைச் சேகரித்தபோது அடுத்ததாக நீலகண்ட பிரம்மச்சாரியின் பெயர்தான் அவர்கள் கவனத்துக்கு வந்தது. நீலகண்டனைத் போலீஸ் தேடுவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. மேலும் ஆஷைக் கொலை செய்த வாஞ்சிநாதனின் உடலைப் பரிசோதித்த போது அவரிடம் இருந்த ஒரு கடிதம் கண்டெடுக்கப் பட்டது. அந்தக் கடிதத்தில் இருந்த தகவல் இதுதான். “ஒவ்வொரு இந்தியனும் நமக்கு எதிரிகளான பிரிட்டிஷாரை இந்த இந்திய மண்னிலிருந்து விரட்டிவிட்டு ஒரு சுதந்திர தர்ம ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறோம். சென்னை மாகாணத்தில் 3000 பேர் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களில் கடையேனான நான் இந்தச் செயலைச் செய்தேன்” என்று கண்டிருந்தது.  நீலகண்டன் வாஞ்சிநாதனுக்கு எழுதிய இன்னொரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் வாஞ்சி வனத்துறையில் பணியாற்றுவதால் தன்னுடைய ஜபங்கள் செய்திட ஒரு புலித்தோல் கிடைத்தால் நல்லது என்று எழுதியிருந்தார். இதனைக் கண்டெடுத்த போலீஸ் ஆஷ் கொலையில் சதி இருக்கலாமென்று கருதினர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் வாஞ்சிநாதனுக்கு மிக நெருங்கியவர்களாக விளங்கிய பலர் இவர்கள் வலையில் சிக்கினர். அவர்களில் சிலர் விவசாயம் செய்பவர்கள், சமையல்காரர், வியாபாரிகள், காய்கறி வியாபார், ஒரு வக்கீல் குமாஸ்தா, ஒரு ஆசிரியர் இவர்களோடு ஒரு பானை செய்யும் குயவரும் அடங்குவர். வாஞ்சி இளம் வயது பிராமணன் இவரை நீலகண்ட பிரம்மச்சாரி எனும் இளம் தேசபக்தன் தூண்டியிருக்க வேண்டுமென்கிற கோணத்தில் வழக்கைக் கொண்டு போனார்கள்.

                                 
வாஞ்சியின் பெயர் சூட்டப்பட்ட மணியாச்சி ஜங்ஷன்


      போலீஸ் விசாரணையும் கெடுபிடிகளும் அதிகரித்தன. வாஞ்சிநாதனின் வீடு சோதனையிடப்பட்டது. அதில் ஆறுமுகம் பிள்ளை என்பவர் வாஞ்சியுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைதானார். அவரை போலீஸ் முறையில் விசாரித்தபோது பல உண்மைகளை அவர் கக்கவேண்டியதாயிற்று. இந்த வழக்கில் அவரையே அப்ரூவராக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர் மூலம் சோமசுந்தரம் என்பவரும் கைதாகி அவரும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அப்ரூவராக ஆனார். இதனைத் தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது. அதன் மறுபக்கம் பிரான்சின் பிடியில் இருந்த பாண்டிச்சேரி எனும் புதுச்சேரிக்கு இட்டுச் சென்றது. சென்னையில் நடந்த இந்த வழக்கின் பப்ளிக் பிராசிக்யூட்டர் சி.எஃப்.நேப்பியர் என்பார் இந்த வழக்கில் பாண்டிச்சேரி முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார். அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணங்கள் உண்டு. புதுச்சேரி பிரிட்டிஷ் ஆட்சிக்குள் இல்லை, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பகுதி. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தேடப்பட்ட பற்பல தேசபக்தர்களும் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்துவிட்டனர். அரவிந்தர், வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதியார் இவர்கள் தவிர ஏராளமான இந்திய தேசபக்தர்களுக்கு பாண்டிச்சேரி புகலிடமாக விளங்கியது என்பது உண்மை. எனவே பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிரான புரட்சிகள் பாண்டிச்சேரியில் தேசபக்தர்களால் உருவாக்கப்படுவது என்பது நடக்கக் கூடியதுதானே.

      நீலகண்டனுக்கு இக்கட்டான சூழ்நிலை. தன்னைப் போலீஸ் தேடுகிறது இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யவேண்டுமென்கிற எண்ணம் அவருக்கு. உடன் இருந்தவர்களோடு இது குறித்து ஆலோசித்தார் நீலகண்டன். அவர்கள் ஆலோசனைக்குப் பிறகு நீலகண்டனுக்கு மூன்று வழிகள்தான் புலப்பட்டன. அவை (1) வெளிநாடு எங்கேனும் தப்பிச் சென்று தலைமறைவாகி விடுவது (2) உள் நாட்டிலேயே எங்காவது தலைமறைவாக இருந்து கொண்டு புரட்சி வேலைகளில் ஈடுபடுவது (3) உண்மையிலேயே ஆஷ் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் நேராக போலீசில் சரணடைந்து நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்வது, ஆக இந்த மூன்று வழிகளில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென முடிவு செய்தார்.

      வெளிநாட்டுக்கு ஓடிவிட்டால் தனது சுதந்திரப் போராட்டம் முடிந்து போய்விடும். 
இரண்டாவது வழியைப் பின்பற்றினால் என்றாவது ஒரு நாள் போலீசில் சிக்க கடுமையான தண்டனைக்கு உள்ளாகலாம். எனவே மூன்றாவது வழியே சரியானது என்று நீலகண்டன் முடிவு செய்தார். தான் ஆஷ் கொலையில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை யென்பதாலும், கொலை நடந்த சமயம் தான் காசியில் இருந்ததாலும், நீதிமன்றம் தன் நிலைமையை உணர்ந்து தன்னை விடுவித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

      ஆஷ் கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள் வாஞ்சிநாதனிடம் கைப்பற்றிய ஒரு கடிதம் அவனுக்குத் தான் எழுதிய கடிதம், அதில் அவன் வனத்துறையில் இருப்பதால் தனக்கொரு புலித்தோல் வேண்டுமென்று எழுதியிருந்ததையும் நினைவுகூர்ந்தார். அதில் குற்றம் எதுவும் இருக்க நியாயம் இல்லை என்பதால் தனக்கு தண்டனை இருக்காது என்று நம்பினார் நீலகண்டன்.

      இந்த விஷயத்தில் தீர்க்கமாக முடிவெடுத்த நீலகண்டன் கல்கத்தா போலீஸ் கமிஷனருக்குத் தகவல் கொடுத்துத் தன்னை யார் என்று அறிமுகம் செய்துகொண்டு, சென்னை மாகாணத்தில் திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ் தன்னைத் தேடுகிறது என்றும், தனக்கும் அந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, கொலை நடந்தபோது தான் காசியில் இருந்ததையும் சொல்லி, தான் கல்கத்தா கமிஷணர் முன்பு சரண்டர் ஆக தனது விருப்பத்தைத் தெரிவித்தார். பின் விளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வந்தது வரட்டுமென்று கல்கத்தா கமிஷணருக்குச் செய்தி அனுப்பினார். உடனே கல்கத்தா போலீஸார் வந்து அவரைக் கைது செய்து தமிழ்நாட்டுக்கு வந்து திருநெல்வேலி ஜில்லாவில் இருந்த மணியாச்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

      மணியாச்சியில் கலெக்டருடன் 60 போலீஸ்காரர்கள் வந்து நீலகண்டனைப் பார்த்து அதிகார தோரணையில் “நட ஜெயிலுக்கு!” (Walk up to the Jail) என்றனர். நீலகண்டனின் சுயமரியாதை இந்த அதிகாரத்தை ஏற்கவில்லை. உடனே “இல்லை, நடந்து வர முடியாது” (No, I would not walk) என்று பதிலுக்கு உரக்கக் கத்தினார். அவர்கள் விடுவதாயில்லை, மூன்று முறை அதிகாரம் செய்தனர். அப்போது நீலகண்டன் சொன்னார், நிகழ்ச்சி நடந்தபோது நான் இருந்ததோ காசிமா நகரம். கொலை நடந்தது மணியாச்சி. உள்ளூர் போலீஸ் என்னைத் தேடுகிறது என்ற செய்தி அறிந்து நானாக முன்வந்து கல்கத்தா கமிஷனரிடம் தகவல் சொல்லி கைதாகியிருக்கிறேன். அப்படியிருக்கையில் இங்கே இத்தனை போலீஸ் எதற்கு? அவர்கள் கையில் துப்பாக்கி எதற்கு? நான் என்ன தப்பித்து ஓடியா போவேன். நானாக வந்துதானே வலிய கைதாகியிருக்கிறேன். அப்புறம் எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்? என்றார்.

      போலீசாருடன் வந்திருந்த கலெக்டர் தம்பிதுரை ஐ.சி.எஸ். எனும் இலங்கைத் தமிழர் (He is referred as Mr.Alfred Tampoe, I.C.S., who is a Ceylon Tamil) நீலகண்டனிடம் ஆங்கிலத்தில் “Calm yourself Mr.Neelakantan”. கோபப் படாதீர்கள் கல்கத்தாவிலிருந்து சிரமங்களை அனுபவித்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். முதலில் உங்கள் முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு வாருங்கள், ஒரு காஃபி சாப்பிடலாம்” என்றார். கலெக்டரின் பேச்சில் அன்பும் பண்பும் காணப்பட்டன. பிறகு ஒரு குதிரை வண்டியை அமர்த்தி அதில் நீலகண்டனை ஏற்றி, உடன் மூன்று போலீஸ்காரர்களைப் போகச் சொன்னார். நல்ல மனமுடைய இந்த கலெக்டர் தம்பிதுரை பின்னாளில் தனக்கு மிக நெருங்கிய சீடராகி அடிக்கடி இவர் இருக்குமிடம் வந்து தங்கிப் போனதாக நீலகண்ட பிரம்மச்சாரி குறிப்பிடுகிறார். இவரால் தனக்குப் பல நன்மைகளும் கிடைத்தன என்கிறார். தம்பிதுரை தனது 87ஆம் வயதில் சென்னையில் காலமானபோது நீலகண்ட பிரம்மச்சாரி பெரிதும் வருந்தியதாகத் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

      கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் 14 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள். இந்தியன் பீனல் கோடின் கீழ் இவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவானது. கொலை, பிரிட்டிஷ் மன்னருக்கு எதிரான யுத்தம், குற்றம்புரிய சதி புரிந்தது இப்படிப் பல பிரிவுகள். முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி. (2) சங்கர கிருஷ்ணன், இவர் ஒரு இளம் விவசாயி, (3) மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, காய்கறி வியாபாரி (4) முத்துக்குமாரசாமி பிள்ளை, சட்டிப் பானை செய்பவர் (5) சுப்பையா பிள்ளை, இவர் ஒரு வக்கீல் குமாஸ்தா (6) ஜகந்நாத ஐயங்கார், இளம் சமையல்காரர் (7) ஹரிஹர ஐயர், வியாபாரி (8) பாபு பிள்ளை, விவசாயி (9) வி.தேசிகாச்சாரி, வியாபாரி (10) வேம்பு ஐயர், சமையல்காரர் (11) சாவடி அருணாசலம் பிள்ளை, விவசாயி (12) அழகப்ப பிள்ளை, இளம் விவசாயி (13) வந்தேமாதரம் சுப்ரமணிய ஐயர், பள்ளிக்கூட ஆசிரியர் (14) பிச்சுமணி ஐயர், இவரும் ஒரு சமையல்காரர், ஆக மொத்தம் இந்த பதினான்கு பேரும் இருபது வயதை அடைந்தவர்கள்.

      பொதுவாக இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில்தான் நடந்திருக்க வேண்டும். இதன் அரசியல் முக்கியத்துவம் கருதியும், கொலையுண்டவர் ஒரு பிரிட்டிஷ் ஐ.சி.எஸ். வர்க்க மாவட்ட கலெக்டர் என்பதாலும் இது சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது.

      93 நாட்கள் நடந்த ஆஷ் கொலை வழக்கில் கைதான பலரும் மணியாச்சி மேஜிஸ்டிரேட்டால் மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப் பட்டனர். இந்த வழக்கு சென்னை மாகாணம் முழுதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது. தனி நீதிமன்றமொன்றில் தலைமை நீதிபதி சர் அர்னால்ட் வைட், நீதிபதி ஐலிங், நீதிபதி சி.சங்கரன் நாயர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கு சென்னையில் நடைபெற்றது. இது ஒரு சாதாரண கொலை வழக்காக இல்லாமல் நாடு முழுவதும் கவனிக்கும் ஒரு முக்கிய வழக்காக மாறியது. இவர்கள் மீது 121 ஏ படி அரசாங்கத்துக்கு எதிராகச் சதி செய்ததாகவும், மன்னருக்கு எதிராக போர் தொடுத்ததாகவும் குற்றச்சாட்டு. அரசு தரப்பில் பப்ளிக் பிராசிக்யூட்டர் நேப்பியர், அவருக்கு உதவியாக டி.ரிச்மோண்ட், ஏ.சுந்தர சாஸ்திரிகள் ஆகியோர் ஆஜராயினர். நீலகண்டன் தரப்பினர்களுக்கு ஆந்திர கேசரி டி.பிரகாசம், எம்.டி.தேவதாஸ் பிள்ளை, ஜே.எல்.ரொசாரியோ, பி.நரசிம்ம ராவ், டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர், எல்.ஏ.கோவிந்தராகவ ஐயர், என்.கே.ராமசாமி ஐயர்,
எஸ்.டி.சீனிவாச கோபாலாச்சாரியார்,  எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்காரிடம் ஜூனியராக இருந்த ஜே.சி.ஆதம் எனும் ஆங்கிலேயர் ஆகியோர் ஆஜராகினர்.

      வழக்கில் நீலகண்ட பிரம்மச்சாரி என்பவர் யார் என்பதைப் பற்றி முதலில் விளக்கமான ஒரு முகவுரையை நம்பியார் என்பவர் எடுத்துரைத்தார். வழக்கு மாதக் கணக்கில் நீண்டுகொண்டே போயிற்று. 1911 செப்டம்பர் முதல் 1912 வரை வழக்கு நடந்தது. வழக்கின் விசாரணை தொண்ணூற்று மூன்று நாட்கள் நடைபெற்றது. அரசு தரப்பில் 280 பேர் சாட்சி சொன்னார்கள். குற்றவாளிகள் தரப்பில் 200 பேர் சாட்சி சொன்னார்கள்.

      அப்ரூவர் ஆறுமுகம் பிள்ளை என்பார் ஆஷ் கொலைக்கான ரகசிய சதியாலோசனைக் கூட்டம் பற்றி நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைத்தார். காளி சிலையின் முன்பாக தேசபக்தர்கள் எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை பற்றிய விவரங்களைச் சொன்னார்.

 1912 பிப்ரவரி மாதம் 400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வெளியாகியது. அதன்படி முதல் இரு நீதிபதிகளும் இவர்களைக் குற்றவாளிகள் என்று முடிவு செய்து தண்டனை வழங்கினர். ஆனால் நீதிபதி சி.சங்கரன் நாயர் கொலையில் நீலகண்டனுக்குப் பங்கு உண்டு என்பது நிரூபணம் ஆகவில்லை, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக இவர் போர் தொடுத்தார்கள் என்பது மட்டுமே நிரூபணம் ஆகியிருக்கிறது என்று தீர்ப்பு கூறினார். ஜஸ்டிஸ் சங்கரன் நாயரின் தீர்ப்பு மிக அருமையான ஆங்கிலத்தில் வெகு விரிவாக எழுதப்பட்டது. அதில் அவர் மகாகவி பாரதியாரின் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்” எனும் பாடலை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தார். பின்னாளில் இவர் தேச சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் விடுதலையாகினர். முதல் எதிரியான நீலகண்டனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதிக்கப்பட்டது. சங்கரகிருஷ்ணனுக்கும், மடத்துக்கடை சிதம்பரத்துக்கும் முறையே நான்கு ஆண்டுகள் கடுங்காவலும், ஆறுமுகம், ஹரிஹரய்யர், சோமசுந்தரம் பிள்ளை மற்றும் இருவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடும் செய்யப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த பெஞ்சில் சர் ரால்ஃப் பென்சன், ஜான் வாலஸ், மில்லர், அப்துல் ரஹிம், பி.ஆர்.சுந்தரம் ஐயர் ஆகியோர் இருந்தனர். அட்வகேட் ஜெனரல் நேப்பியர் என்பார் அரசு தரப்பில் வாதிட்டார். வழக்கம் போல் எதிரிகள் சார்பில் டி.பிரகாசம் வாதிட்டார். மேல் முறையீட்டில் சட்ட விதிமுறைகள் மட்டுமே விவாதிக்கப் பட வேண்டுமென்பதால் அவை மட்டுமே விவாதிக்கப்பட்டது. இந்த ஐந்து நீதிபதிகளில் மூவர் அப்பீல் நிராகரிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர். நீதிபதி ரஹிம் அதில் மாறுபட்டு எல்லோரும் விடுவிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்தார். நீதிபதி சுந்தரம் ஐயர் எந்த முடிவும் சொல்லாமல் விட்டார். மெஜாரிடி தீர்ப்புப்படி அப்பீல் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட மாடசாமிப் பிள்ளை கடைசி வரை போலீஸ் பிடியில் சிக்கவேயில்லை. அவர் கைது செய்யப்படாமலேயே அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்தது. அவர் இல்லாமலே தீர்ப்பும் வழங்கப் பட்டுவிட்டது. மாடசாமி எங்கே சென்றார், என்ன ஆனார், யாருக்கும் தெரியவில்லை, அவ்வளவு ஏன், இன்றுவரை கூட அந்த மாவீரன் மாடசாமி என்ன ஆனார், எங்கு சென்றார் என்பது தெரியாமலே போய்விட்டது. ஒரு சிலர் அவரைப் புதுச்சேரியில் பார்த்ததாகச் சொன்னார்கள். வேறு சிலர் அவரை கொழும்புவில் பார்த்ததாகச் சொன்னார்கள். எல்லாம் கேள்விதானே யொழிய அவர் எங்கே எப்படித் தப்பிச் சென்றார் என்பது தெரியாமலே ஒரு மாபெரும் தியாகியின் வரலாறு முடிந்து போய்விட்டது.

      1914ஆம் ஆண்டு. உலக யுத்தம் தொடங்கி விட்டது. பாரதமாதா சங்கத்தார் எதிர்பார்த்திருந்த அந்த குறிப்பிட்ட தினம் வருகின்ற காலமும் நெருங்கிவிட்டது. ஜெர்மனி ஆயுதங்களைக் கொடுத்து விட்டால் இங்கு புரட்சி வெடித்து விடும். ஆனால் அந்தோ, அதனைச் செயல்படுத்த வேண்டிய நீலகண்டனும் அவரது சீடர்களும் சிறையில் அல்லவா அடைக்கபப்ட்டு விட்டார்கள். வாஞ்சிநாதன் செய்தது பெரும் தியாகமாக இருக்கலாம். ஆனால் ஒரு கூட்டு முயற்சியைக் கெடுக்கும் வண்ணம், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்தது போல இந்த படுபாதகக் கொலையைச் செய்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்டு புரட்சிக்கான நல்லதொரு சந்தர்ப்பத்தையும் வாஞ்சியால் இழக்க நேர்ந்தது வேதனை அளித்தது.

      மிக பயங்கரமான புரட்சிக்காரராக நீலகண்டன் கருதப்பட்டதனால் தென் தமிழ்நாட்டுப் பக்கமோ அல்லது சென்னை சிறையிலோ, வேலூர் சிறையிலோ  அவரை அடைக்காமல் பெல்லாரி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்தார்கள். கர்நாடகப் பிரதேசமான பெல்லாரியில் இரண்டு வருஷ காலம் கைதியாக இருந்த ஓரளவு பிரச்சினைகள் இல்லாமல் இருந்ததால், சில சலுகைகளையும் பெற்றிருந்தார். அந்த நேரம் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் இவர் சிறைக் கம்பிகளைத் தாண்டி தப்பித்து ஓடிவிட்டார். அப்பாடா, இனி தொல்லையில்லை, எங்காவது சென்று தலைமறைவாக வாழ்ந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் அவர் ஓடிக் கொண்டிருந்தார். அவரது ஓட்டம் தர்மாவரம் ரயில் நிலையத்தில் நின்றுபோகும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. அங்கு ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் நேரம், எங்கிருந்தோ ஒரு குரல். “அதோ நீலகண்டன், அதோ நீலகண்டன்” என்ற கூச்சல் கேட்டது. “ஜெயிலில் இருந்து தப்பி ஓடும் நீலகண்டன் அதோ!” இப்படிக் குரல் கேட்டது. அப்போது அங்கு இருந்த ஒரு போலீஸ்காரர் நீலகண்டனை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார்.

      தன்னை யார் அப்படி அடையாளம் கண்டு கூச்சலிட்டது என்று பார்க்கத் திரும்பினார். அங்கே பெல்லாரி சிறையில் கைதியாக இருந்த ஒருவன் விடுதலை ஆகி வந்திருப்பவன், இவரை அடையாளம் கண்டு கொண்டு அங்கிருந்த போலீஸ் காரர்களிடம் காட்டிக் கொடுத்துக் கொடுத்துவிட்டான். யாரை நோவது? விதியின் செயல் என்று நீலகண்டர் மீண்டும் சிறைவாசல் புகுந்தார்.

      சிறையிலிருந்து தப்பிச் சென்ற குற்றத்துக்காக மேலும் ஒரு ஆறுமாத கடுங்காவல் தண்டனையும் சேர்ந்து கொண்டது. சிறையில் இரண்டு வருஷ காலம் நன்னடத்தைக்காகக் கொடுக்கப்பட்டிருந்த சலுகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன. ஆக மொத்தம் இவருக்கு ஏழரை ஆண்டு கால கடுங்காவல் தண்டனை, ஏழரை நாட்டுச் சனி போல. இந்த ஏழரை ஆண்டு கால சிறை வாசத்தையும் இவர் ஒரே சிறையில் கழித்துவிடவில்லை. பெல்லாரி தவிர, இவரை சென்னை, பாளையங்கோட்டை, கண்ணனூர், கோயம்புத்தூர், ராஜமகேந்திரபுரம், விசாகப்பட்டினம் ஆகிய சிறைகளில் அடைத்து வைத்திருந்தனர். இவர் விடுதலை யாகி சொந்த ஊரான சீர்காழியை அடுத்த எருங்கஞ்சேரிக்குச் செல்ல எண்ணி ரயிலில் பயணம் செய்து சென்னையை அடைந்த போது, சென்ட்ரல் நிலையத்தில் இவரது தந்தையே எதிர் கொண்டு அழைக்க வந்திருந்தார். அங்கிருந்து புறப்பட்டு மாயவரம் சென்றார். தந்தையுடன் சுமார் நான்கு மாத காலம் தங்கியிருந்துவிட்டு திரும்பவும் நீலகண்டன் சென்னைக்கு வந்தார்.

      இனி இந்த நீலகண்ட பிரம்மச்சாரி யார் என்பது பற்றி சிறிது பார்க்கலாம். நீலகண்டன் முன்பே சொன்னது போல சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் 1889ஆம் வருஷம் பிறந்தார். வீட்டுக்கு மூத்த பிள்ளை. வைதீகக் குடும்பம். இவர் தன் பெயரோடு தன் ஜாதிப் பெயரை ஐயர் என்றோ போட்டுக் கொள்ளாமல், அந்த நாளில் வங்கத்து தேசபக்தர்கள் வைத்துக் கொண்ட பிரம்மச்சாரி என்றே வைத்துக் கொண்டார். இவர் மீது தந்தைக்கு அதிகமான பாசம் உண்டு. நீலகண்டன் மீதான ஆஷ் கொலை வழக்கில் அவருடைய தந்தை பதிமூன்றாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அப்போது நீதிபதி நீலகண்டனின் தந்தையாரைப் பார்த்துக் கேட்டார், “உங்கள் மூத்த மகன் நீலகண்டன், உழைத்து சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்காமல் இப்படி அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுவதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?”.

      அதற்கு தந்தையார் சொன்னார், “சமையல் தொழிலில் கூட ஒருவன் மாதம் ஐம்பது சம்பாதிக்கிறான். சம்பாத்தியம் பெரிதல்ல. என் மகன் சம்பாதித்துத்தான் நான் சாப்பிடவேண்டுமென்பதில்லை. அவனுடைய தேசபக்தி, இந்த தேசத்துக்காக அவன் உழைப்பு, தியாகம் இவற்றை நான் பெரிதாக மதிக்கிறேன், அவனை  நினைத்து நான் பெருமைப் படுகிறேன்” என்றார். இப்பேற்பட்ட வீரமகணைப் பெற்ற தந்தையார் மட்டும் என்ன தேசபக்தி இல்லாமலா இருப்பார்.

      சென்னை திரும்பிய நீலகண்ட பிரம்மச்சாரி பைக்கிராஃப்ட்ஸ் சாலையில் 566ஆம் எண் கொண்ட இடத்தில் தங்கிக் கொண்டு வாயப் பிள்ளைத் தெரு எனும் இடத்தில் இருந்த காசி ஐயர் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அந்த காலகட்டம் நீலகண்டன் வறுமையில் பசியும் பட்டினியுமாகக் கடந்த நாட்கள். பல நேரங்களில் பாரதியாரிடம் கைநீட்டி காசு வாங்கிச் சாப்பிடுவார். பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா தன் கைச்செலவுக்காக வைத்திருக்கும் ஓரணா இரண்டணாவைக் கூட பசி என்று வாங்கிச் செல்வார் என்று சகுந்தலா பாரதி “என் தந்தை” எனும் நூலில் குறிப்பிடுகிறார். அப்படி காசு கிடைக்காத தினங்களில் இரவு நேரத்தில் கையேந்தி பிச்சை எடுத்துக் கூட சாப்பிட்டதாக அவர் தன் சுயசரிதையில் சொல்கிறார். பகலில் சுதேசிப் பிரச்சாரம், இரவில் பிச்சையெடுத்து சாப்பாடு. ஒரு தேசபக்தனுக்கு இந்த நாடு கொடுத்த மரியாதை அவ்வளவுதான்.

      ஒரு நாள்...... நீலகண்டனுக்குக் கையில் காசு இல்லை, அதனால் உண்ண சாப்பாடும் இல்லை. கொலைப் பட்டினி. அந்த நிகழ்ச்சியை அவர் வாக்கால் பார்க்கலாம். “ஒரு நாள் கையில் காசும் இல்லை, அதனால் சாப்பிடவும் இல்லை. பிறரிடம் கையேந்தவும் மனம் வரவில்லை. பசியின் கொடுமை தாள முடியாமல் சோர்வுற்றிருந்த சமயம் மகாகவி பாரதியின் ஞாபகம் வந்தது. மெதுவாக அவர் இருப்பிடம் சென்றேன். அவர் என்னைக் குதூகலமாக வரவேற்று அளவளாவினார். அவருடைய அன்புப் பிடியில் சிக்கிய நான் எனது பரிதாப நிலையைச் சொல்லி கையேந்த விரும்பவில்லை. மனமும் துணியவில்லை. பசியோ வயிற்றைக் கிள்ளுகிறது. எப்படியோ மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவரிடம் “ஒரு நாலணா இருக்குமோ?” என்று கேட்டுவிட்டேன்.  அவர் திடுக்கிட்டுப் போய், “ஏன், ஏன்?” என்று பதறினார். நான் அன்று முழுவதும் ஒரு கவளம் சோறு கூட இல்லாமல் பட்டினியாக இருப்பது பற்றி சொன்னதும், பதறிப் போய் உள்ளேயிருந்து நாலணா காசு கொண்டு வந்து கொடுத்து “பாண்டியா! உடனே போய் சாப்பிட்டு வாரும்” என்றார். அப்போது அவர் பாடிய பாட்டுதான் “தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் இந்த ஜெகத்தை அழித்திடுவோம்” என்ற பாட்டு. எனக்காக அந்தக் கவியரசர் கவி உள்ளத்தில் ஊற்றெடுத்த ஆவேசம் நிறைந்த பாட்டு என்னை வியக்க வைத்தது. ஆகா! என்னே அன்பு! என்னே பாசம்! இந்த ஏழையால் அவருக்கு என்ன கைமாறு செய்ய முடியும்? அந்த மாக்கவிஞன் மரணமெய்தியபோது உடனிருந்து அவரது மயான யாத்திரைக்குத் தோள் கொடுத்த நால்வரில் நானும் ஒருவன். அவருடைய உயிரற்ற உடலை சுமக்கும் பாக்கியமாவது என் தோளுக்குக் கிடைத்ததே என்று நான் பெருமைப் படுவது உண்டு.”

      பசி, பட்டினி, துன்பம் இத்தனைக்கும் இடையே அவர் மனம் மட்டும் “புரட்சி புரட்சி” என்று மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தது. பசித் துன்பம் வரும்போது புரட்சி எண்ணமும், கம்யூனிசமும் மனதில் மேலெழுகிறது அல்லவா? ஆம்! நாட்டின் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து நன்மைகள் விளைய வேண்டுமானால் கம்யூனிசம் ஒன்றே வழி என்ற எண்ணம் நீலகண்டன் மனதில் தோன்றலாயிற்று. அப்போது இடதுசாரி கருத்துடைய தேசபக்தராக விளங்கிய சிங்காரவேலர் நினைவு வந்தது நீலகண்டனுக்கு. அங்கே சென்று அவருடன் சேர்ந்து கொண்டார். அவரோடு சேர்ந்து அவரது கொள்கை விளக்கமாக “கம்யூனிசம்” பற்றிய ஒரு சிறு நூலை எழுதி வெளியிட்டார் நீலகண்டன். வழக்கமான கம்யூனிச பாணியில் அன்றைய சமுதாய அமைப்பு முதலாளித்துவ அமைப்பு என்றும், அதைக் கண்டித்தும், அன்று நிலவிய சட்ட திட்டங்கள் அனைத்தும், நீதிமன்றங்களும், நீதிபதிகளும், முதலாளித்துவ அமைப்புகளுக்குச் சாதகமாகவே நடந்து கொள்கிறார்கள் என்றும் எழுதி, அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து கம்யூனிசம் பரவ வேண்டுமென்று எழுதினார். இப்படி அந்த காலகட்டத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரிட்டிஷாரின் அடிமைகளாக இந்த நாடு இருந்த காலத்தில் முடியுமா? ஆனால் அவர் உள்ளத்தின் வேகம் அப்படி.

      1922ஆம் வருஷத்தில் இவர் தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக எழுதியதாகக் குற்றச் சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. இவரது எழுத்துக்களும் செயல்பாடுமே இவருக்கு மீண்டும் ஒரு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தது. அந்த காலகட்டத்தில் கம்யூனிசக் கொள்கைகளை எழுதி தேசத்துரோக வழக்கில் கைதாகி சிறை சென்ற வகையில் இவர்தான் முதல் கம்யூனிஸ்டோ? இந்த முறை இவரை தென் இந்தியாவில் எந்த சிறையிலும் வைக்கக் கூடாது என்று அரசாங்கம் முடிவு செய்துவிட்டது. ஏற்கனவே இவர் பெல்லாரி சிறையிலிருந்து தப்பிச் சென்றவர் என்பதால் இவர் ஒரு ஆபத்தான கைதி என்று கருதி வடநாட்டுச் சிறைகளுக்குக் கொண்டு செல்லப் பட்டார். ஏற்கனவே சிறை சென்றவன் மீண்டும் தண்டனை பெற்றால் அவனுக்குக் கருப்பு குல்லாய் தருவார்களாம். இவரும் ஒரு கருப்புக் குல்லாயாக ஆனார்.

      வடமேற்கு இந்தியாவில் எல்லையோரத்தில் இருந்த மாண்ட்கோமரி சிறையிலும், பிறகு பெஷாவரில் உள்ள மூல்டான் சிறையிலும் ஐந்தாறு ஆண்டுகள் இவரை அடைத்து வைத்திருந்தார்கள். அங்கிருந்து இவரை ரங்கூன் சிறைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்து 1930ஆம் வருஷம் விடுதலையாகி வெளியே வந்தார். இந்த முறை இவருடைய சிறைவாசத்தின் போது இவரிடம் யாரும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்கிறார் அவர். எந்தவிதமான துன்புறுத்தலோ, பயமுறுத்தலோ இவரைப் பணியவைக்க முடியாது என்பதை அறிந்தே இவரை அவர்கள் துன்புறுத்தவில்லை என்கிறார். ஒரு மாதம், இரண்டு மாதம் எல்லா வசதிகளோடும் இன்றைய நவீன சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளிவருபவர்கள் கூட “தேளும், பாம்பும் நெளிந்த சிறையில் இருந்தேன்” என்று அனுதாபம் தேடும் வேளையில் இவர் சொல்கிறார், “என்னுடைய சிறை வாழ்வில் நான் துன்புறுத்தப்பட்டதாகவோ, சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் வண்ணமோ நடத்தியதாகச் சொல்ல மாட்டேன். சிறை அதிகாரிகள் எல்லா இடங்களிலும் என்னை மிக கெளரவமாக நடத்தினார்கள்” என்கிறார். அப்படிச் சும்மா சொல்லி விட்டால் போதுமா, அப்படி இவரை அன்போடு நடத்தியதற்குச் சான்றுகள் வேண்டாமா? அவரே சொல்கிறார். “நான் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தெரிந்து கொண்டு, என் சமையலுக்காக தென்னாட்டிலிருந்து புளி வரவழைத்துக் கொடுத்தார்கள்” என்று. ஆக மொத்தம் முதலில் ஏழரை ஆண்டு சிறை வாசம். இரண்டாம் தவணையாக பத்து ஆண்டுகள் சிறைவாசம் என்று கிட்டத்தட்ட அவருடைய இளமைப் பருவத்தை சிறைகளில் கழித்துவிட்டு வெளிவரும் போது அவர் மனம் எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

      இவருடைய தாய்மாமா வெங்கட்ராம சாஸ்திரி, பி.ஏ.,எல்.டி. இவர் மாயவரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவர் நன்கு கற்ற மேதை என்பதால் அவரோடு நீலகண்ட பிரம்மச்சாரி அடிக்கடி வேதாந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார். சிறையில் தனிமையில், அதிலும் மொழி தெரியாத சக கைதிகள், மொழி தெரியாத அதிகாரிகள் இவர்கள் மத்தியில் பல ஆண்டுகள் இருப்பதென்பதை விட கொடுமை வேறென்ன இருக்க முடியும். அப்படி இருந்த தனிமை இவரை அடிக்கடி தன்னைத் தானே ஆராய்ந்து மனதின் உட்சென்று ஆய்வு செய்துகொள்ளும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டார். அப்படி அவருடைய தனிமையும், ஆராய்ந்தறிந்த வேதாந்தக் கருத்துக்களும் மெல்ல மெல்ல இவரை மென்மைப் படுத்தி, புரட்சி வேகத்தை மாற்றி அமைதியான உலகத்துக்குக் கொண்டுவந்து விட்டது.

      இரண்டாவது ரவுண்ட் சிறைவாசத்தை முடித்துவிட்டு வெளிவரும்போது நீலகண்டன் மறுபிறவி எடுத்ததைப் போல உணர்ந்தார். இளமைக் காலம் முழுதும் சிறையில் கழிந்து போயிற்று. இருபத்தி மூன்று வயதில் பாரதமாதா சங்கம், பிறகு சில வருஷங்கள் கழிந்தபின் ஏழரையாண்டு சிறைவாசம், மறுபடி சிலகாலம் வெளிவாசம், அதன் பின் மீண்டும் பத்து ஆண்டுகள் சிறை வாசம், இப்படி இருந்த ஒருவருடைய மனம் எப்படி மாறிப் போயிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அஞ்சுகிறது.

      வட இந்தியாவில் சிறையிலிருந்து விடுதலையான நீலகண்டன் இரண்டு ஆண்டுகள் காலம் நடந்தே பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தார். இந்துமித்ரன் போன்ற இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதி அதில் வந்த பணத்தில் காலம் கழித்து வந்தார். இவருடைய நாடோடி வாழ்க்கை இவரை ஒரு துறவியாக ஆக்கிவிட்டது. காவியுடை அணிந்து தலைமுடி, தாடி வளர்ந்து இவர் துறவிக் கோலத்தில் அலைந்து கொண்டிருந்த போது ரயில் பயணத்தில் விஜயநகரத்தின் ராணி ஒருவர் இவரை அழைத்துச் சென்று தங்கவைத்தார். ஆனால் இவரோ அவர்கள் ராஜதானிக்குட்பட்டிருந்த ஒரு குன்று ஆனைக்குன்று என்ற பெயர் அங்கு ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். அந்த விஜயநகரத்து ராணிக்கு 90 வயது. இந்த மகானை அவர் மிகவும் பய பக்தியோடு வணங்கி பாதுகாத்து வரலானார். இந்த அன்புப் பிடியில் சிக்காமல் நீலகண்டர் ஒரு நாள் ஒருவருக்கும் தெரியாமல் அங்கிருந்து ரகசியமாகப் புறப்பட்டு விட்டார். கால் நடையாகவே நடந்து சென்று ஹாஸ்பெட் எனும் ஊரை அடைந்தார். கையில் இரண்டு ரூபாய் மட்டுமே கையிருப்பு என்ன செய்வது? தன் மீது அன்பு கொண்ட கலெக்டர் தம்பிதுரைக்கு ஒரு தந்தி கொடுத்து சிறிது பணம் வரவழைத்து அதில் சில இடங்களுக்குச் சுற்றித் திரிந்துவிட்டு மைசூருக்கு அருகிலுள்ள நந்தி ஹில்ஸ் எனும் நந்தி மலைக்குச் சென்றார்.

      இந்த நந்தி ஹில்ஸ் என்பது கர்நாடகத்தின் ஒரு அழகான கோடை வாசஸ்தலம். அதற்கருகே பெங்களுரிலிருந்து ஐம்பது அல்லது அறுபதி கி.மீ. தூரத்தில் இருக்கும் சென்னகிரிமலை இருக்கிறது. பெல்லாரி ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இது இருக்கிறது. இந்த சென்னகிரிமலையில் கோயில் கொண்ட இறைவன் பெயர் ஓம்காரேஸ்வரர்.  சென்னகேஸ்வரர் என்றும் சொல்வார்கள். இந்த இடத்துக்கு மிக அருகில் இரு குன்றுகளுக்கிடையே ஓடிவருவதுதான் தென்பண்ணை ஆறு. இதனை தட்சிணபினாகினி என்பார்கள். தென்பண்ணை உற்பத்தியாகுமிடம் இது என்பதால் இங்கு எப்போதும் நீர் ஊற்று கிளம்பி வந்து கொண்டே இருக்கும்.

      ஒரு பக்கம் உயர்ந்த நந்தி ஹில்ஸ், மறுபுறம் சந்திரகிரி அதன் சுற்றுப்புற எழில் கொஞ்சும் சுல்தான்பேட்டை போன்ற மலைசார் கிராமப் பகுதிகள். அந்த இயற்கை அழகு சூழ்ந்த இடத்துக்கு நீலகண்டர் வந்து சேர்ந்தார். அவர் அங்கு வந்தபோது சென்னகிரி மலையில் இருந்த சிவலிங்கம் ஒரு புற்றினால் மறைக்கப்பட்டிருந்தது. அவர் கண்களுக்கு புற்று இருப்பது மட்டுமே தெரிந்தது. அந்தப் புற்றை அகற்றிப் பார்த்தபோது அதில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. அங்கேயே தங்கிக் கொண்டு அந்த சிவலிங்கத்துக்கு ஒரு சிறிய ஆலயத்தை எழுப்பினார் நீலகண்டன். ஜனநடமாட்டமில்லாத மலைப் பகுதி. இயற்கை அன்னை எழில் கொஞ்சுமிடம். அங்கு நீலகண்டன் மறைந்து அந்த இடத்தில் சுவாமி ஓம்கார் எனும் பெயரில் நீலகண்டன் உருவெடுத்தார். நீலகண்டன் என்றால் யாருக்கும் தெரியாது, அங்கு அவர் சுவாமி ஓம்கார்தான்.

                                   
ஓம்கார் சுவாமி


      சென்னகிரி மலையின் மீதான ஓம்கார் சுவாமிகளின் வாழ்வு, காய் கனிகளை உண்டு உருண்டோடிக் கொண்டிருந்தது. அப்படியொரு அமைதியான மலைப் பகுதியில், ஜனசந்தடியற்ற, பிரச்சினைகளற்ற இறையுணர்வு மேலோங்கி நிற்கும் அற்புத சூழலில் சில வருஷங்களை அவர் கழித்தார். அந்த காலகட்டத்தில் 1936ஆம் வருஷம் காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா ஓம்கார் சுவாமிகளைச் சந்திக்க நேர்ந்தது. மகாத்மா காந்தி ஓய்வெடுப்பதற்காக தன்னுடைய பரிவாரங்களுடன் வந்து நந்தி ஹில்ஸில் தங்கியிருக்கும் செய்தியை ஜே.சி.குமரப்பா சுவாமி ஓம்காருக்குச் சொன்னார். மறுநாள் குமரப்பா, சர்தார் வல்லபாய் படேல், மகாதேவ தேசாய் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சுவாமி ஓம்காரின் ஆசிரமத்துக்கு வந்தார். இவர்கள் எல்லோரும் சுவாமியோடு வேதாந்தக் கருத்துக்களைப் பேசிப் பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

      மகாதேவ தேசாய் சுவாமிகளுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் நந்தி ஹில்ஸில் தங்கியிருக்கும் மகாத்மா காந்தி சுவாமிகளைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தார். மகாத்மா விரும்பிய அந்த சந்திப்பு, காந்திஜியும் சுவாமி ஓம்காரும் 1936ஆம் வருஷம் மே மாதம் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு காந்திஜி தங்கியிருந்த நந்திஹில்ஸுக்கு சுவாமிகள் சென்று அவருடன் இரண்டு மணி நேரம் ஆன்ம விசாரம் நடத்திவிட்டுத் திரும்பினார். சுவாமிக்கு காந்தியடிகளைச் சந்தித்ததில், அவருடன் உரையாடியதில், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதில் முழு திருப்தியும், மன அமைதியும் ஏற்பட்டதாகச் சொல்கிறார். மகாத்மா காந்தி ஓம்கார் சுவாமிகளை, அவர் வடநாட்டு யாத்திரை வரும்போது சேவாகிராமத்துக்கு வரவேண்டுமென்ற வேண்டுகோளை வைத்தார்.

      நந்தி ஹில்ஸ் அருகில் சென்னகிரி மலையில் கிட்டத்தட்ட 42 ஆண்டுகளை பரிபூரண துறவியாக வாழ்ந்தார் ஓம்கார் சுவாமிகள். தொடக்கம் புரட்சிக்காரர், முதல் சிறைவாசத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட், அதன் பின் இரண்டாவது சிறைவாசம் முடிந்தபிறகு துறவி, பிறகு நாடு சுற்றல், நந்தி ஹில்சில் 42 ஆண்டுகள் என 85 வயதைக் கடந்தார் சுவாமி ஓம்கார்.

      சுவாமி வாழ்ந்த மலைப் பகுதிகளில் வாழ்ந்த மலைவாசியினர் இவரை மிகவும் உயர்ந்த துறவியாக வழிபடத் தொடங்கினர். இவர் தனது ஆசிரமத்தில் பூஜைகள் செய்கின்ற போது அவர்கள் கூட்டமாக வந்து பூஜையை தரிசித்து அவர் கொடுக்கும் தீர்த்த பிரசாதத்தை வாங்கிச் செல்வர். அப்படி அந்தத் தீர்த்தத்தை உடல் நலம் சரியில்லாதவர்களுக்குக் கொடுக்க அவர் உடல் நலம் சரியான செய்தி பரவி அவரைத் தேடி ஏராளமானோர் வரத் தொடங்கிவிட்டனர். இந்த தொல்லையிலிருந்து மீள இன்னும் மலையின் மேற்பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஒரு ஆசிரமம் அமைக்க அதே மலைவாசிகள் இவருக்கு உதவி புரிந்தனர்.

      இப்படி ஒரு புரட்சிக்காரர்காகத் தொடங்கி சிறைதண்டனை பெற்று நீண்ட காலம் சிறையில் அடைபட்டு வயது முதிர்ந்து தனது இறுதிக் காலத்தில் சீர்காழி எருக்கஞ்சேரியிலிருந்து அவருடைய தம்பி, ஒரு வைதீகர் வந்திருந்து அவருக்குத் துணையாக இருந்து பின்னர் சுவாமி ஓம்கார் எனப்படும் நீலகண்ட பிரம்மச்சாரி 1978 மார்ச் மாதம் 4ஆம் தேதி காலமான பின்பு, அவருக்கு ஆங்கோர் சமாதியை நிறுவிவிட்டுச் சென்றார். அது பற்றிய செய்திகள் அந்த காலகட்டத்தில் வெளிவந்தது.

      நந்தி ஹில்ஸில் உள்ள அவருடைய சமாதியில் பதிக்கப்பட்டுள்ள கன்னட வாசகங்களின் தமிழாக்கம் இதோ. “இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய புரட்சியாளர் ஸ்ரீ ஓம்கார் சுவாமி இங்கே சமாதியாகியுள்ளார். மார்ச் 4, 1978. சுல்தான்பேட்டை”
           
                       
கட்டுரை ஆக்கம்:  தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007.  #9486741885   e.mail:  privarsh@gmail.com
     

     
     
     
     
     



1 comment:

I am a ComplexNumber said...

இவ்வளவு தீர்க்கமாக தெளிவாக ஒரு வாழக்கையை சொல்லும் நல்ல கட்டுரை . நன்றி.