பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 3


‘அடே! நீ யார்? யாரனுப்ப இங்கு வந்தாய்? – உன்
உயிர் சிந்தும்வரை ஓயமாட்டாய் போலும்” என்ன
“இவ்வூர் புகுதல் அன்றி போகமாட்டேன்!”
சூளுரைத்தான் அநுமன் இலங்கிணியிடம்                         43

              இலங்கா தேவி அநுமனோடு போர்புரிதல்

‘இவனைக் கொல்லாமல் விட்டோ மெனில்
இந்நகரை இல்லாமல் ஆக்கிடுவான்’ யென்றெண்ணி, - “நீ
வெல்வாயெனில் வென்று கொள்” ளென்று தன்
முத்தலைச் சூலத்தை முகம் நோக்கியெறிந்தாள்.                  44

மின்னலாய் எதிர்ப்பட்ட தழல் வேலை,
துல்லியமாய்க் கைப்பற்றி, பற்களால் கடித்தான்;
கருடன் நாகத்தைக் கவர்ந்து வந்து
கடிப்பது போலதை ஒடித்தான்.                                   45

ஏனைய ஆயுதம் அனைத்தையும் பிடுங்கி,
எறிந்தான் வீசி விண் மீது! – அவளோ
குரலெழுப்பினாள் மழை மேகம் போல்.
கரம் உயர்த்தினாள் அவனை அறைவதற்கு!                       46

                இலங்காதேவி தோல்வியுற்று விழுதல்

அடியாமுன் அவள் கைகள் எட்டினையும்
எட்டிப் பிடித்தான் தன்னிரு கையால் – பின்
விட்டான் ஓர்குத்து அவள் நெஞ்சில்
விழுந்தாள் மண்மேல் நிலைகுலைந்து.                           47

                 இலங்கா தேவி தன் வரலாறு கூறுதல்

விழுந்தவள் மனம் வருந்திக் கலங்கினாள்.
அழுந்தினாள் செங்குருதி வெள்ளத்தில் – பின்
எழுந்தாள் பிரமனின் ஆணையை யெண்ணி
மொழிந்தாள் இராமதூதன் அநுமனிடம்.                           48

‘ஐயனே!
நான்முகன் அருளினால் இம் மூதூரின்
நகர்க்காவல் புரிந்தேன்நான் பலகாலம்.
செய்ததொழிலில் தவறு நேர்ந்திட வினவினேன்
“எத்தனை நாள் இவ்வூர் காப்பேன் நானெ’ன                       49

கூறினான் பிரம்மன்:
‘வித்தகக் குரங்கொன்று ஓர்நாள்
கைத்தலம் தன்னால் தீண்டும் – இச்
சித்திர நகர் முழுதும் அன்று
சிதிலமாய் போவது திண்ணம்’                                   50

அவ்வாறே நிகழ்ந்த தின்று!
“அறம் வெல்லும்! பாவம் தோற்கும்!’
இவ்வுண்மை உலகெங்கும் இயம்ப வேண்டும்!
நுழைந்திடுவாய் இந்நகருள்’ இறைஞ்சினாள்                      51

                    அநுமன் கும்பகருணனைக் காண்டல்

சுய உருவத்தில் செல்வது சரியாகாதென
சிறிய உருகொண்டு நகர்புகுந்த அநுமன்,
இயக்கியர், அரக்கியர் பலரையும் ஆய்கையில்
துயிலும் கும்பகர்ண மலையினைக் கண்டான்                     52


அதிசேடன் போலவும், ஆழ்கடல் போலவும்,
நெருங்கிய இருள் திரண்டது போலவும்,
உருகொண்ட தீவினை போலவும், உறங்குவானின்
உயிர்காற்று தம்மீது படுமோவென பயந்தான்.                     53

‘அரக்கர் மூவரில் இவனெவன்?’
யாரிவன்? உரத்து யோசித்தவன்,
‘இரக்கமற்ற அரக்கர் மன்னனாம்
இராவணன் இவன் தானெ’னக் கருதினான்.                        54

ஆனால்-
பத்துத் தலைகள் இவனுக் கில்லை;
இருபது கரங்களும் கொண்டானில்லை; - அதனால்
இராவணன் என்பான் இவனில்லை;
இருக்கட்டும் உறக்கத்தில் இவனெனக் கடந்தான்.                  55

                அநுமன் மேலும் பல இடங்களில் தேடல்

மாடகூடங்கள், மாளிகை ஒளிகள்,
ஆடலரங்குகள், தேவ ராலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபமெனத்,
தேடியலைந்தவன்,வீடணனின் மாளிகையுட் புகுந்தான்.            56

                   அநுமன் வீடணனைக் காணல்

அரக்கர் கூட்டத்திடையே, வெண்ணிறம் கொள்ளாமல்,
கரிய நிறம்கொண்ட தருமனாம் விபீடணனை
‘குற்றமற்ற குணத்தினன் இவனெ’னத் தமது
ஆற்றலால் அறிந்தான் நொடிப் பொழுதில்.                        57

                 அநுமன் இந்திரசித்தை அணுகல்

இந்திர சித்தினால் பிடிக்கப்பட்டு, முன்னம்
இந்திரன் இருந்தான் சிறை தன்னில் - அச்
சிறையின் வாயிலை எதிர்கொண்ட அநுமன்,
உறுவலி காவல் அரக்கரைக் கடந்தான்.                           58

அறுமுகன் ஒத்த ஒருமகன் அங்கு,
உறக்கத்தில் இருப்பதை அவன் கண்டான்.
பற்கள் வளைந்த அரக்கரி லொருவனோ?
மழுவென்னும் படைகொண்ட சிவனின் மகனோ?                  59

அறிகிலான் அந்தமிலான் – ஆனால்
உணர்ந்தான் ஓர் உண்மையினை!
இளவலும், ஏந்தலும் இவனுடன் புரிந்திடும்
நெடும்போர் இருந்திடும் நெடுநாளெனப் புரிந்தான்.                 60

                    அநுமன் இடை நகருட் புகுந்து தேடல்

ஏழு கடல்கள் இணைந்தாற் போல்
இடைநகரில் இடப்பட்ட பெரும் அகழி
கடப்பதற்காய் மேலழும்பிப் பறந்தவன்,
அகநக ரடைந்து, அலைந்து தேடினான்.                           61

அங்கே,
எரிமணி விளக்கெல்லாம் தத்தம்
எழில் குறைந்தாற்போல் தோன்ற,
துயில் கொண்ட ‘மண்டோதரி’ கண்டு
‘சானகி’யோ வென கண் கலங்கினான்.  – பின்                     62

to be continued..................

No comments: