பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 7


நெருப்பிடை யிட்ட மெழுகாய் அவளுருக,
‘அடையாள மொழிகளும் உள’தென்றான்
‘வரவேண்டாம் நீ வனத்திற்கு’ என்றபோது,
உடுத்திய உடையொடு என்னயல் நின்றதையும்,                  122

கோட்டை வாயிலைக் கடக்கும் முன்னமே
‘காடு எங்குள்ளதெ’ன குழந்தையாய் கேட்டதையும்,
‘கிளியொடு, புட்களையும் வளர்த்தலைச் சொல்’லென
கிள்ளைபோல் சுமந்திரனிடம் கூறியதையும்,                     123

உரைத்தான் ஸ்ரீராமன் அடையாள மொழியென்று
கொடுத்தான் இம்மோதிரத்தை அடையாளப் பொருளென்று!
பிறப்பின் பயனை எய்தினார் போன்றும்,
மறந்து பின் உணர்வு பெற்றார்போன்றும்,                        124

வாங்கினாள் அதனைத், தன்னிரு கையால்,
ஒற்றினாள் அதனை, மலரனைய விழியால்
தாங்கினாள் அதனை, சிரம் மேல் வைத்து,
ஏங்கினாள்; அடைய முடியா நிலையினால்.                      125               

‘உத்தம! உயி ரளித்தாய் நீயெனக்கு!
வாழீ! இன்றேபோல் என்னாளும் நீ’ என்ன
விழுமிய குணத்தோன், ஆரியனாம் இராகவனின்
வாழ்க்கை யினை விவரித்தான்.                                 126

வருந்தினாள்; தன் பிரிவால் அவன் வருந்தியதற்கு,
பெருமைகொண்டாள்; அவன் கொண்ட அன்பு கண்டு,
இரங்கியேங்கினாள்; பின் வினவினாள்,
‘பெருங்கடல் கடந்து வந்தது எங்கனம்?’                          127

எட்டுதற் கரியதாம் அண்ட கோளங்களை
முட்டும்படி பேருரு கொண்டு நின்றான்.
‘ஈதொரு எளிய குரங்கென’ எண்ணலாகாவென
எட்டுத் திசையிருந்தும் எண்ணினர் எண்ணற்றோர்.               128

‘அச்சமுறுகிறேன்! அடக்கிடு இவ்வுரு’ வென
வஞ்சிக்கொடியாள் வேண்டிக்கொண்டதும்
‘அருள்படியே ஆகட்டும்’ யென்றபடி,
சிறிதான உருகொண்டு ஒடுங்கி நின்றான்.                       129

பேருவகை பெற்றவளாம் பிராட்டியும்,
‘மாண்டேன் இன்று’ யென்றாலும் பழுதில்லை!
மீண்டேன் இவ்வரக்கர் கூட்டத்தினின்று;
தீண்டேன் இனி புகழன்றி இழிபாவமெ’ன்றாள்.                   130

எண்ணவொண்ணா மணலைப் போன்ற
வானரக் கூட்டம் தொடர்ந்திருக்க,
வருவோம் உடனே இம்மாநகருக்குள்.
விரைந்தே மீட்போம் உனை’என்றான்.                           131


                           சூடாமணிப் படலம்


‘அண்டம் ஆண்டிடும் ராமனிடம் உமை
கொண்டு சேர்த்தலே எம்கடன் அதனால்,
அடியேன் தோள்மேல் விரைவினில் ஏறெ’ன
அடிகளைத் தொழுது வணங்கி நின்றான்.                         132

‘அரிதன்று! நின் ஆற்றலுக் கேற்றதே! – ஆனாலும்,
தனியனாய் நீ போரிட நேரிடும்! – அன்றியும்,
இராமனின் வில்லுக் கது வில்லங்கமாகும்! – தவிரவும்
நாய்களின் நயவஞ்சகம் நமக் கெதற்கு?                          133

கொண்ட போரினில் நாயகன் வில்லினை,
அண்டர் அனைவரும் வியந்து பார்க்கணும். – எனைக்
கொண்டு வந்த அரக்கன் விழிகளைக்
காக்கைகள் கொத்தித் தின்றிடணும்!                             134

இலக்குவன் அமைத்த பன்னசாலையுடனே,
பெயர்த்தெம்மை யடைத்தான் அசோகவனமதில்.
இராமன் ஆற்றலைப் போற்றிடவும், நானுடை
தூய்மையைக் காட்டிடவும்தான் பொறுத்திருந்தேன்.             135

ஐயனே!
குரங்கெனினும் நீயும் ஆண்மகனே! – அதனால் நீ
விரைந்து சென்றிடு இராமனிடம்!
வருந்திடும் உந்தன் நாதனிடம் - யான்
பகன்றிடும் வாசகம் பகிர்ந்திடு!’வென்றாள்.                      136

‘நீதி நெறியுள்ளவனே!
மன்னன் மேல் ஆணையிட்டேன்!
இன்னும் ஒரு திங்கள்தான் இங்கிருப்பேன்!
பின்னர் இவ்வுயிர் கொள்ளேன்!
நின்னிடம் சொல்வது நிஜ’மென்றாள்.                           137

இளைய பெருமாள் இலக்குவர்க்கு, - அண்ணன்
அருளிய ஆணையை முடித்திடும் கடமை
உளதென்று ஒரு வார்த்தை சொல்லுதி!
வந்தனங்கள் யாவர்க்கும் விளம்புதி’யென்றாள்.                   138

                 அநுமன் பிராட்டியைத் தேற்றுதல்

மூன்று உலகையுமே உடனடியாய்
கொன்றிடத் துடித்தான் வில்லான்.
நின்னிலை ஈதென் றறிந்தால்
உண்மையில் ஏதாவான்? அறிகிலேன்.                          139

‘அரக்கரை யழித்தான்; தீவினை தடுத்தான்;
நல்வினை கொடுத்த நல்லான் இவனென
உலகம் சொல்கையில் புகழடைய மாட்டாயோ?’ என்ற
களங்கமற்ற மொழியினால் களிப்புடனே தொடர்ந்தாள்.           140

‘சித்திரக் கூடமலை யிருக்கையிலே - என்
மார்பினில் குத்திய தொரு காகம்.
சினந்த இராமனும் தருப்பையை ஏவி
விடுத்தான் ப்ரும்மாத் திரம் அதனை                            141

மெதுவாய் நீயும் கூறிடுவாய்! – மேலும்
அன்பாய், வளர்த்த ஒரு கிளிக்கு,
‘என்ன பெய ரிடலாம்? எனும்போது
‘கைகேயி’யென்றவன் கூறியதைச் சொல்’                        145

நாடிவந்தென் நல்லுயிர் நல்கினை நல்லோய்!
‘சூடாமணி’யெனும் கண்மணியொத்த ஆபரணத்தைக்
‘கோடி’யெனக் கொடுத்தாள் அநுமனிடம்.
விடைபெற்றவன் வணங்கித் தொழுதான்.                        146

to be continued..............

No comments: