பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 10


இருப்பினும் –
‘வீரத்திலே சிறந்திருக்கும் அக்குரங்கை
பற்றித் தருகுவேன் நொடிப் பொழுதிலெ’ன,
அமரர் கோவை சிறபிடித்த பெரும்வீரன்
இந்திரசித் போர் தொடுக்கப் புறப்பட்டான்.                        192

கண்ணொத்த கைப்படை வீரர்களும்,
எண்ணத்தில் ஊக்கமிகு இராக்கத வீரர்களும்,
மண்மீதில் கிடந்ததைக் கண்டு இரங்குகையில்,
ஆண்தகை அநுமனும் அவனை நோக்கினான்.                    193

மூவுலகங்களையும் மும்முறை வென்றவன்,
நால்வகைப் படையுடன் போரிட முனையவும்,
ஆச்சா மரத்தினை அநுமன் சுழற்றிட,
அச்சுக்கள் முறிந்து உருண்டன தேர்கள்.                         194

உதையுண்டு மிதியுண்டன யானைகள்!
சிதையுண்டு, சிரம் நொருங்கின குதிரைகள்!
பிடியுண்டு பிணமானர் வீரர்கள்! - அநுமன் மேல்
பட்ட அம்பெல்லாம் எரிந்து கரிந்தன.                            195

                       இந்திரசித்து அநுமனுடன் போரிடுதல்

தேர்களும், யானைகளும், புரவிகளும்
பாரினில் வீழ்ந்ததால், தனித்த இந்திரசித்,
‘வாரும்! வாரும்!’ என்று உரத்தழைத்த
வீரனாம் அநுமனின் மேல் வந்தான்.                             196

ஆயிரம் அம்புகள் வில்லினிற் பூட்டி,
அநுமன் மேலதை சரமாய் செலுத்தினான்.
கனன்ற அநுமனோ தேரொடு அவனையும்,
சுழற்றி வீசியே தரையினில் ஆர்த்தான்.                         197

விழுந்தவன், தரை தொடும்முன் எழுந்தான்.
வேறேதும் தேரிலான் ஆகி சினந்தான்!
நிகரற்ற ஆயுதமாம் பிரமதேவனின்,
பிரம்மாத்திரம் தொடுக்கத் துணிந்தான்.                          198

நீண்ட நாணோடு அம்பினை சேர்த்தவன்,
தூண்டினான் அநுமனின் தோள் நோக்கி,
மண்ணும், எண்திசைகளும், மதி தாங்கும்,
விண்ணும், பெரும் மலைகளும் மிரண்டனவாம்.                 199

நான்முகன் ஆயுதம் அநுமனை வருத்திட,
அண்ணலும் மண்மேல் மயங்கிச் சாய்ந்தான்.
‘ஓய்ந்தது குரங்கின் வலிமை’யென்றே
வாய்விட்டு மகிழ்ந்தன அரக்கர் குழாம்.                          200

                           பிணிவிடு படலம்

எய்திடுங்கள் இதனுடம்பில் அம்பினை!
கொய்திடுங்கள் உருவிய இதன் குடலினை! – இது
உய்த்திருந்தால் நம் உயிர் இராது. அதனால்
செய்திடுங்கள் இரு துண்டாய் அறுத்தெடுத்து!                    201

முழங்கிய அரக்கர்கள் மூர்க்கத்தி னுடனே
சுழற்றிய கயிற்றினால் அழுத்தியே பிணைத்தனர்.
இழுத்தனர் குரங்கினை அரண்மனை நோக்கியே
மொழிந்தனர் அனைவரும் ‘வீரனே இவனெ’ன!                   202

தேவரீ ரீந்த வரந் தன்னால் - கயிற்றை
சிதறிடச் செய்தல் அநுமனுக் கெளிதாம் - எனினும்
இலங்கை வேந்தனைக் காண்டல் தானே
நலமென அவனும் பின் தொடர்ந்தான்.                           203

பிடிபட்ட செய்தியை தூதுவர்கள்
பகன்றிட இராவணன் அக மகிழ்ந்தான்.
‘கொன்றிடாமல் கொணர்ந்திடக் கூறி - முத்து                     
மாலையைக் கழற்றி பரிசளித்தான்.                              204

                 அநுமன் நிலையைப் பிராட்டி கேட்டு வருந்துதல்

ஒடித் தழித்தான் அசோக வனத்தினை!
கொன்று குவித்தான் அரக்கர் குழாத்தினை!
என்றெல்லாம் செவிமடுத் துவந்த பிராட்டி
துன்புற்றாள் அநுமனின் நிலையை யெண்ணி.                    204

              அநுமன் இராவணன் கோயிலடைதல்

அருந்தவப் பயன்களால் அகிலங்கள் மூவினையும்,
அரசாளும் இராவணன்தன் அரண்மனையின் ஆசனத்தில்
ஆர்ப்பரிக்கும் கருங்கடலை மேரு ஒன்று
கவிந்ததைப் போல் கம்பீரமாய் வீற்றிருந்தான்.                   205

            இராவணனைக் கண்ட அநுமனின் சீற்றம்.

கரும்திண் நாகமாய் வருத்திடும் அரசனை
கருடனாய் வெறித்தவன் எதிர்கொண்டான்.
‘உறக்கத்தில் இருக்கையில் உயிர் உண்டல்
அறமாகாதென அன்றொழிந்தேன். – இன்று                       206

சிரங்கள் பத்தையும் சிதறிடச் செய்து
சிறையிடை சீதையை மீட்டகல்வேனென
குன்றின் மேலெழும் சிங்கம் ஆனவன்
முனைந்தான் ப்ரும்மாத் திரம் முறிக்க! – பின்                    207

எந்தன் காரியம் இதுவன்று.
என்னால் கொல்லல் தரமன்று!
என்னை வெல்வதும் எளிதன்று!
அன்னவன் ஒருவனே ஏற்றவனென்றும்,                       208

அவன்-
ஏழுயிர் உலகங்கள் இன்புற் றிருக்க
இருபது தோள்களும், பத்துத் தலைகளும்
புழுதியில் புரட்டிட சபதம் ஏற்று
விளம்பிய உரையெண்ணி அமைதியானான்.                     209

      இந்திரசித் அநுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்துதல்

அரசனை வணங்கிய இந்திர சித்தும்,
‘ஆடவரிற் சிறந்தோனே! வானரமாம் இவன்தான்
மால் போன்றும், சிவன் போன்றும்
போரிட வல்ல பெரும் வீரன்’ என்ன                             210

to be continued....................

No comments: