பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 8


                       பொழிலிறுத்த படலம்
                      அநுமன் தன்னுள் ஆராய்தல்

விடைபெற்று வட திசை நோக்கிப்
புறப்பட்டவன், ஆராய்ந்தான் தன் செயல்களை!
பிராட்டி கண்டதை மட்டுமே செய்தது – தன்
பெருமைக்குக் குறைவென் றுணர்ந்தான்.                         147

வஞ்சனை அரக்கனை என் நெடுவாலால்
வதைத்துத் தலைகளைக் கொய்கிலேன்!
வெஞ்சிறையில் வைத்தேனும் அல்லேன்! – அதனால்
அழித்துப்போவேன் இப்பொழிலை மிதித்துத் தாக்கி!               148

மிதித்தான்!
பிளந்தன; முரிந்தன பல மரங்கள்!
அலைந்தன; கலைந்தன கடலலைகள்!
துள்ளின; துடித்தன பெரும் மீன்கள்!
இடிந்தன; தகர்ந்தன மாளிகைகள்!                               149

கதறின; கத்தின மிருகங்க ளெல்லாம்;
பதறின; பதைத்தன பூச்சிக ளெல்லாம்!
சிறகினை உதறிய பறவைக ளெல்லாம்
மரித்தன ஒடுங் கியே விழுந்தபடி!                               150

பிரளயத்தால் மூவுலகும் சிதிலமாக,
பிராட்டியிருக்கும் ‘சிம்சுபா மரம்’ மட்டும்,
பள்ளிகொண்ட திருமாலின் ‘ஆல்’ போலே
பிளவேதும் பட்டிடாமல் நிலைத்து நின்றதாம்.                    151

ஈரே ழுலகமும் அளந்த திருமாலையும்,
பாற்கடலினைக் கடைந்த மந்திர மலையையும்,
பிரளய கால உருத்திர மூர்த்தியையும்
ஒத்திருந்தான் இராம தூத ஆஞ்சனேயன்!                        152

பெயர்த்தெடுத்த அரக்கரது சயித்தியத்தை,
குறிப்பாய் நகர்மேல் எறிந்தான்! - அது
உதிர்ந்து தகர்ந்திட நடுங்கின அரக்கர்கள்
பகர்ந்தனர் ‘குரங்கின் காரியம் ஈதெ’ன.                           153

                       கிங்கரர் வதைப்படலம்
‘சிறு குரங்கா இப்படிச் செய்தது?-இதனை
மூடரும் கூட சொல்லிடா ரென்றே
முறுவல் செய்திட்ட இராவணனைப்
பரிவுடன் நோக்கினர் பருவத் தேவர்கள்.                         154

அச்சமயம்-
இடியினைப் போன்ற முழக்கத்தி னுடனே,
கடலலை எழுப்பும் பேரொலியும் - ஈசனின்
வில்லறும் ஓசையும் இராவ ணனின்
இருபது செவியிலும் நுழைந்து புகுந்தது.                         155

வலிமையுடை ஏவலாளர் எண்ணிறந்தோர் ஏவினான்.
வழியடைத்து, வானரத்தைக் கைப்பற்றக் கூவினான்.
கொன்றிடாமல், பிணைத்துக் கொணர்ந்திடு வீரெ’ன
கண்களிலே கனல்பறக்க ஆணையிட்டான்.                       156

சூலம், வேலும், வாளும் தாங்கியே
ஆலம் போன்ற வீரராம் ‘கிங்கரர்’
குறுங் குரங்கென எள்ளி நகைத்துக்
கரிய மலையென போரிட வந்தார்.                              157

கொம்புகளின் ஒலியும், சங்குகளின் சத்தமும்,
முரசங்களின் முழக்கமும், பிராணிகளின் நடுக்கமும்,
செவிகள் இரண்டிலும் அறைந்திட, அநுமனும்,
எதிர்வரும் போரின் ஒலியென் றுணர்ந்தான்.                     158

களிறினை ஒத்து அரக்கர்கள் விளங்கிட
அரியினை அநுமன் ஒத்திருந்தான். – ஒரு
மரத்தினை சுழற்றியே அரக்கரைத் தாக்கிட,
சரிந்து இறந்தனர் கிங்கரர் அனைவரும்.                         159

அநுமனோ..
வியர்த்துக் களைக்கவில்லை!
பயந்தும் பதுங்கவில்லை!
நிறைகடல் கடைந்த நெடும்தாள் மலையென
நிமிர்ந்து நின்றான் வனத்தின் நடுவினில்.                        160

       காவலர் கிங்கரர் அழிந்ததை இராவணனுக்கு அறிவுறுத்தல்

வந்த கிங்கரர் மடிந்து விழுந்திட,
நந்த வனத்திலே காவலிருப்போர்
விரைந்தே சேர்ந்தனர் இராவணன் முன்னம்.
விம்மி விளக்கினர் வானரத் திண்மம்                            161

                    சம்புமாலி வதைப்படலம்

உடம்பும், கண்களும் சிவந்த இராவணன்,
பாம்பினை ஒத்த ‘சம்புமாலி’ அழைத்தான்.
‘தாம்பினால் கட்டிக் கொணர் அக்குரங்கினை!
தணித்திடு எந்தன் சினத்தினை’யென்றான்.                       162

அன்னவன் படையுடன் புறப்பட்டான்.
பொன்னகர் புழுதி போர்த்த துவாம்.
நால்வகைப் படைகளும் நாற்புறம் தொடர,
தீயவன் தேரினில் ஏறிச் சென்றான்.                             163

போரிட அரக்கர்கள் வருவ ரென்றே – எதிர்
பார்ப்புடன் அநுமன் காத்திருந்தான்.
பெருங் கணையமரத்தினை வேருடன் பிடுங்கியே
நெருங்கிய அரக்கரை களம்புட புடைத்தான்.                      164

நெற்றியே முன்னணிச் சேனையாககி,
உரோமங்கள் சேனை வீரராகி,
வாலோ பின்னணிச் சேனையாகி,
வாளான கரங்களுடன் வகையாகப் போரிட்டான்.                 165 

நெரிந்து நொருங்கின தேர்கள்!
நெடுங்கரம் இழந்தன யானைகள்!
ஒடிந்து வீழ்ந்தன குதிரைகள்
மடிந்து மரிந்தனர் அரக்கர்கள்.                                   166

தனியனாய் விடப்பட்டான் சம்புமாலி!
கனிவுடன் ‘திரும்பி நீ செல்’லெனச் சொன்னதும்,
கனன்று நகைப்புடன் கர்ச்சித்தான் - பின்
சுழன்று செலுத்தினான் நூறாயிரம் அம்புகளை!                   167   

காற்றினில் சிதறும் மழைத்துளி போலே
நாற்புறம் அம்பினை சிதறச் செய்து - அவன்
தேரினுள் தாவியே வில்லைனைப் பிடுங்கி,
கழுத்தின் நடுவினில் செலுத்தியே கொன்றான்.                   168

to be continued....................

No comments: