பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 7, 2018

திரிபுரத்து அவதாரம்: 2


“சக்திமைந்தன்” சிறுகதை.
        திரிபுரத்து அவதாரம்: 2
      திரிபுரத்துக்கு ஒரு புது வரவு ராமச்சந்திர ஐயர். அவருக்கு ஒரே மகன். HMT யில் பெரிய உத்தியோகம். இரண்டு பேத்திகள், ஒரு பேரன். பேரப் பிள்ளைகள் தாத்தா பாட்டியோடு கிராமத்தில் வாழ்ந்தார்கள். தாத்தா ராமச்சந்திர ஐயர் பேரப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.  திறந்த மேனி, மார்புக்குக் குறுக்காக முப்புரிநூல். நெற்றியில் பால் நிற வெண்ணீறு, மடித்துக் கட்டிய வேட்டி. பாட்டியோ கசங்கிய வெண்பட்டு முகம். நெற்றி நிறைய குங்குமம், மடிசார் கட்டு இத்யாதிகளுடன் வணக்கத்துக்குரிய தோற்றம்.

      ராமச்சந்திர ஐயருக்கு விரிந்து பரந்த விவசாய ஞானம். பசுக்களைப் பேணுவதில் அலாதி ஈடுபாடு. வீட்டில் எப்போதும் பால், தயிர், வெண்ணெய், நெய் என்று பேரப் பிள்ளைகளைப் போஷித்தார். பேரப் பிள்ளைகளுக்கு மனிதாபிமானத்தை விடவும் மிருகாபிமானம் கூடுதல். அதாவது தாத்தா பாட்டியை விடவும் நாய், பூனைகளிடம் அன்பு அதிகம்.

      ஐயருக்கு நல்ல ஆங்கிலப் புலமையோடு, ஷார்ட் ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்திலும் வல்லமை இருந்தது. அதனால் பள்ளியிறுதி முடித்த இரு பாலரையும் தன் வீட்டிற்குத் தருவித்து சுருக்கெழுத்துப் பயிற்சி தந்தார். அதற்குப் பணம் பெற்றுக் கொள்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. இவரின் மாணவர்கள் பலர் நல்ல உத்யோகம் பெற்றதென்னவோ உண்மை. இதனால் இவர் ஷார்ட் ஹேண்ட் தாத்தா எனவும் அழைக்கப்பெற்றார். என்றாலும் மிகுதியிலும் அவர் அழைக்கப்பட்டது ‘மாட்டு மாமா’ அல்லது ‘மாட்டுத் தாத்தா’ என்றுதான். சமூகம் யாரையும் கொச்சைப் படுத்துவதில் ஆர்வம் உள்ளது அல்லவா?

      பேரக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மேற்படிப்பு, உத்தியோகம் என்று கிராமத்தை விட்டு நீங்கி விட்டனர். தாத்தா பாட்டி தனியர் ஆனார்கள்.

      கொஞ்சம் கொஞ்சமாகப் பாட்டியின் உடல் நிலை பாதித்தது. அவர் தன் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தார். “இப்ப முடிஞ்சுட்டாக்கூட எடுத்தெறிஞ்சுடுவேன்” என்று உரக்கப் பேசுவார். இதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மரணம் என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய யதார்த்தம் என்பதா? அல்லது மனைவியின் மரணம் தன்னை பாதிக்காது என்பதா? எப்படியோ புண்ணியவது ஒருவழியாகப் போய்ச்சேர்ந்தாள். மாட்டு மாமா தனியர் ஆனார்.

      மாமாவுக்கு ஒரு கரண்டி குழம்பில் அத்தனை முழுமை. வக்கணையாகச் சமைப்பார். ஒரு சின்ன ஈஸி சேரில் வாசலில் சாய்ந்து கிடப்பார். பாதி உடம்பு பூமியில் இருக்கும். நல்ல சாத்திரப் பயிற்சியும் உண்டு போல. “த பார்! யமன் வந்தால் இந்தா! எடுத்துக்கோன்னு உயிரை ஒப்படைப்பேன்” என்பார். எமவாதனை என்பது மரணத்தை ஏற்காதவர்களுக்குத்தான். மரணத்தை ஏற்பவர்களுக்கு எமவாதனை எனப்படுகிற ஜீவ மரண போராட்டமில்லை. இதைத்தான் அனாயச மரணம் என்று இந்து மதம் குறிப்பிடுகிறது. பெருமக்களின் மரணத்தை “அவர் உடலை உகுத்தார்” என்பது ஆன்மீக உலகில் சகஜம்.

      நல்ல சுறுசுறுப்பாக இருந்தாலும் உடல் தளர்ந்து வந்தது. அமர்ந்தால் யாராவது கையைப் பிடித்து இழுத்து எழுப்ப வேண்டும். சமயத்தில் ஊர்ப் பெண்கள் புடைசூழ இல்லம் மீள்வார். திரிபுரத்து பார்ப்பனச் சேரியில் யார் இறந்தாலும் உடனடியாக (எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு) அபர காரியம் முடிக்க வேண்டும். இந்தச் சமூகக் கட்டின் விளைவாக கோவில் கதவுகள் மூடப்பட்டு இறை ஆராதனை நின்றுவிடும். அறங்களில் மேம்பட்ட அறமாகக் கருதப் படுகிற சம்ஸ்கார காரியத்தில் எல்லோரும் ஈடுபட வேண்டும். அதன் பின்னரே அவரவர் நித்ய கர்மானுஷ்டங்கள், குளியல், இறை வழிபாடு, உணவு உண்ணல் என்பவை. சம்ஸ்காரம் முடியாமல் உண்ண மாட்டார்கள்.

      காலப் போக்கில் இந்நிலை மாறியது. மகன் வரவேண்டும், மகள் வர வேண்டும் என்று சம்ஸ்காரத்தைத் தாமதப் படுத்தத் தொடங்கினர்.  அப்படியொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் ராமச்சந்திர ஐயர் சொன்னார், “த பார்! உடம்பு மூணே முக்கால் நாழிக்குத்தான் கெடாது. ப்ரேத சம்ஸ்காரங்கிறது ஒரு யக்ஞம். ஹோம குண்டத்திலே போடற புஷ்பம் முதலான த்ரவ்யங்கள், அழுகி வாடி இப்பிடியா போடறது? ஹோமத்துல போடப்படற த்ர்வியங்கள் ஈஸ்வரார்ப்பணம் ஆறது. அது போலத்தான் மனுஷாளோடு ப்ரேதம் ஈஸ்வரார்ப்பணம் ஆறது. இதான் தாத்பர்யம். அந்த யக்ஞம் ப்ரதானப் படுத்தப் படறதால நித்யப்படி ஆராதனை, கர்மானுஷ்டானம் பின்னுக்குத் தள்ளப்படறது. ஆனால் அதுவே பெருமாள் சாப்டல, சீக்ரம் பாடிய (BODY) எடுங்கோன்னு துரிதப்படுத்தறது மனுஷனை மதிக்காத கார்யமாப் போயிடறது. சாஸ்த்ரம் மனுஷனை, மனுஷ வாழ்க்கைய ஒயர்த்தவே தவிர வேற இல்ல.”

      பக்கத்து நகரத்திலிருந்து ஓமப்பொடி வாங்கி சாப்பிடுவது உண்டு. யாரேனும் கடைத் தெருவிற்குப் போவோரைக் கூப்பிட்டு ஓமப்பொடி வாங்கி வரச் சொல்வார். ஓமப்பொடி பசிக்கும் ஆகும்; உடம்புக்கும் உபாதை செய்யாது என்பதால் ஓமப்பொடி அவரது தேர்வாக இருந்தது.

      ஒரு முறை விச்சு எனப்படுகிற விஸ்வநாதனைப் பார்த்துக் கூப்பிட்டு “ஒனக்கு ஏதேனும் ஸ்வீட் வாங்கிக்கோ; எனக்கு அரைக் கிலோ ஓமப்பொடி வாங்கிண்டு வா!” என்று பணித்தார். “பேஷா மாமா!” என்று போனவன் வெறுங் கையோடு திரும்பி வந்தான். வந்தவன் சொன்னான், “மாமா உங்களுது இல்ல, வாங்கிண்டு வர்ல. என்னோடது இருந்துது வாங்கி சாப்டுட்டேன், இந்தாங்கோ மீதி” என்று மிச்சப் பணத்தை அவரிடம் தந்துவிட்டான். ஓமப்பொழி கிடைக்காதது விச்சுவின் தவறு இல்லையே.

      ஐயருக்கு மாடு வாங்குவதும், போஷணையாய் வளர்ப்பதும், பால், தயிர் உண்டு மகிழ்வதும் மட்டுமல்லாமல் சுழி சுத்தம் பார்த்து வேண்டுவோர்க்கு மாடு வாங்கித் தருவதும் உண்டு.

      ஒரு முறை கன்றை வைத்துக் கொண்டு பசுவை விற்றுவிட்டார். கன்று ஊட்டு மறந்தாலும் பார்ப்பதற்கு இளங்கன்றாக இருந்தது. தெருவில் ஒரு துக்கம் நேரவே துக்க வீட்டுக்காரர் வேதியர்க்கு கோதானம் செய்தால் ஆன்மா வைதரணி ஆற்றைக் கடக்க ஏதுவாய் இருக்கும் என்று மாட்டு மாமாவை அணுகினார்.

      “மாமா! அம்மா காரியம் நடந்துண்டிருக்கு. கோதானம் செய்யலாம்னு நெனைக்கிறேன். மாமாதான் பார்த்து வாங்கித் தரணும். இன்னும் பத்துக்கு (பத்தாம் நாளுக்கு) நாலு நாள்தான் இருக்கு” என்று விண்ணப்பித்தார்.

      “ஓ! பேஷா! வாங்கித்தரேன்” என்று விடை தந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தார். தகையவில்லை. வேறு வழியில்லாமல் கன்றை இழந்த பசுவொன்றை சொல்ப விலைக்கு ஒருவரிடம் வாங்கினார், தன்னிடம் இருந்த ஊட்டு மறந்த கன்றை அதனுடன் ஜோடி சேர்த்தார். கன்றும் மாடும் தயார். துக்க வீட்டுக்காரர் மகிழ்ந்து போய் வேதியர்க்குப் பசுவைத் தானமாகக் கொடுத்தார். அந்த வேதியரும் மாட்டையும் கன்றையும் மகிழ்வோடு ஓட்டிச் சென்றார்.

      வழியில் மறித்தார் மாட்டு மாமா. “ஓய்! தானமாங்காணும்?” என்று வினவினார்.

      “ஆமாம், ஒரு கிரஹஸ்தர் அம்மா காரியத்தின் போது கொடுத்தார்” என்று மறுமொழி சொன்னார் சாஸ்திரியார்.

      “ஓட்டிண்டு போய் என்ன செய்யப் போறீர்?” இது மாட்டு மாமா.

      “இதென்ன கேள்வி? கொண்டு போய், கொட்டில்ல கட்டுவேன்; போஷிப்பேன், பூஜிப்பேன்”

      “அப்புறம்?”

      “பால், தயிர், வெண்ணெய், நெய்னு பயன் படுத்துவேன். கோமியத்தை விராட்டியாத் தட்டி ஹோமம் பண்ணுவேன்”

      “அதுதான் முடியாதுங்காணும்”

      “ஏன்? இளங்கன்னு மாடுதானே”

      “ஆமாம் ஆமாம் ஆனா பசு பால் கறக்காது. ஏன்னா, அதோட கன்னுகுட்டி இது இல்ல”

      “என்னது? அது ஒமக்கு எப்பிடித் தெரியும்?”

      “வாங்கி, ஜோடி சேர்த்துத் தந்ததே நாந்தானே”

      “ஏன் ஸ்வாமி, அப்பிடி செஞ்சீர்?”

      “என்ன பண்றது, ஒங்க க்ரஹஸ்தர் அவசரப்பட்டார், அதான்”

      “இப்ப என்ன பண்றது?”

      “என்னண்ட ஒரு வெலய வச்சுக் குடுத்துடும் நான் பாத்துக்கறேன்.”


      “நீர் மட்டும் எப்பிடி?”
      “அது என்னோட பிரச்சனை. உமக்கு ஏன் அது?”

வேதியர் விலை பேசி விற்றுவிட்டுப் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு நடையைக் கட்டினார்.

No comments: