பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 4


மானுட உருவினின்று மாறுபட்ட இவளிடம்
காணேன் இராமன்பால் கொண்ட காதலை!
‘சானகி’யென நான் நினைத்தது மிகையே! – இவள்
துன்புறும் நாள் மிக அண்மையே! – எண்ணினான்.                 63

              அநுமன் இராவணன் மனையிற் புகுதல்

‘எக்குலங்களில் யாவரே ஆயினும், அவரை
நல்வினை, தீவினை ஒக்கும்’ எனும்படி,
இந்நகரின் திருவும், உருவும், செறிவும்
இவன் பொருட்டு அழியும்’! என்பதாக,!                            64

மேருமலை போலுயர்ந்த மாளிகையாம்
இராவணனின் அரண்மனையுள் நுழைந்தான் - அவ்வமையம்
நிலந்துடித்தது; நெடுவரைகள் துடித்தன;
வலப்புருவம் துடித்தது; மதிவானும் துடித்தது.                     65

                 அநுமன் இராவணனைக் காண்டல்

கருங்கடல் போலுடல் நிறத்துடனும்,
பெரும் கிரிபோல் விரிந்த மார்புடனும்,
ஆரத்து மணிகள் கதிர்போல் மின்னிட,
உறங்கும் இராவண அரக்கனைப் பார்த்தான்.                      66

                          கொல்ல நினைத்தல்

திண்தலை பத்தும், தோள்கள் இருபதும்,
கண்டதும் உணர்ந்தான் இராவணன் இவனென,
வாமன உருவினும் சிறுவுரு கொண்டவனின்,
கண்ணிமைகள் துடிதுடித்து, செந்தீ வடிந்ததுவாம்.                 67

‘வாள்விழி பிராட்டியை, வஞ்சித் தவனை,
தாளால் இடித்து, தலைபத்தும் தகர்த்து,
ஆளாற்றல் காட்டேனெனில் எந்தன்
தோளாற்றலால் யாது பயன்?’ – சினந்தான்                        68

ஒன்று செய்ய ஒன்று இழைத்தல்
அறிவுடைமைக் குரியதன்று; - இஃது
இராமனின் அருளு மன்று
எனத்தெளிந்து, சினம்குறைந்து; கடந்தான்.                        69

                அநுமன் பிராட்டியைக் காணமைக்கு வருந்துதல்

‘அந்தோ! ஈ நெடு நகரில்,
எங்கிருக்கிறாள் எம் பிராட்டி
என்றறியா தலைகிறேனே!
என்னவென்று நானுரைப்பேன்?                                   70

பொன்போன்ற அக்குலமகளைக்
கொன்றானோ இப் பேரரக்கன்? – அன்றி
தின்றானோ? எங்காகிலும் சிறை வைத்தானோ
என்றறிய இயலவில்லை’ எனப் பொருமினான்.                    71

                அநுமன் அசோக வனத்தைக் காண்டல்

எள்முனையும் விட்டிடாமல்,
எங்கங்கோ தேடியவன்,
புள் தங்கும் சத்திரம் போன்றதொரு
சோலைக்குள் புகுந்து சென்றான்.                                 72

                      
                               காட்சிப் படலம்
                     அநுமன் அசோகவனத்தில் புகுதல்

இச்சோலைவனத்தில் பிராட்டி கண்டால் – என்
சோகங்களனைத்தும் சோர்ந்து போய்விடும்!
‘கண்டிலேன் இங்கும்’ யென்றாயின்
என்செய்வேன் நானெக் கலங்கினான்                             73

அவ்வாறாயின்-
இம்மாநகர் முழுவதையும் அழித்திடுவேன்! – பின்
இம்மானிட உயிரையும் துறந்திடுவேன்’னென
அசோகவனந்தனில் அநுமன் நுழைந்ததும்,
அகமகிழ்ந்தனர் தேவர்கள் வான்வெளியில்.                    74
   
                அநுமன் கண்ட பிராட்டி துயர் நிலை
மயிலனைய சாயல் பெற்றவளும்,
குயிலனைய இன்குரல் கொண்டவளும்,
இடை துவண்டு மெல்லியளாய் அங்கே  
இமை விரிய வீற்றிருந்தாள்.                                     75

இடைவிடாது வருத்தும் அரக்கரிடையே,
இடைவெளியின்றி இருந்தவ ளின்று
புலிக் கூட்டத்தால் பிடிக்கப்பட்ட
பெண்மானைப் போன்றிருந்தாள்.                                 76

அமிர்த மெடுத்து மன்மதன் வடித்த
அழகுச் சிலையாய் அவதரித் தவளிங்கு,
பொங்கும் கண்ணீர் அருவியினிடையே
புகை படிந்த ஓவியம் போலானாள்.                              77

விதிவலி கடத்தல் அரிதென உணர்ந்தவள்,
குலப்பழி களைந்திடக் கருதியே யாகினும்,
சடுதியில் இராகவன் வருவா னெனவே,
திசைகள் எட்டையும் சுற்றியே பார்த்தாள்.                        78

‘மான் பின்னம் சென்ற இராமபிரானை,
இலக்குவன் இன்னும் கண்டிலன் போலும்!
ஒலிக்கும் கடலின் இடையினில் இலங்கை
இருப்பதை இருவரும் அறிந்திலர் போலும்!                       79

உலகை வருத்தும் இராவணன் என்னைக்
கவர்ந்து வந்ததை அறியாரோ? - அன்றி
விவரமுரைத்திடும் ‘சடாயு’ இன்று இறந்தானோ?வென
புண்ணில் புகுந்த கனலாய்ப் புகைந்தாள்.                          80

                 பிராட்டி திரிசடையிடம் கூறுதல்

திருந்திய சொற்களில் சிறந்தவளான
‘திரிசடை’ யென்பாள் தவிர்த்து ஏனைய,
அரும் திறல் அரக்கிய ரனைவருமே நல்
உறக்கத்தில் இருக்கையில், உரைத்தனள் பிராட்டி.                 81

‘தூய நீ கேட்டி!
மிதிலையில் முனியுடன் ராமன் நுழைகையில்,
புருவமும், நாட்டமும் இடப்புறம் துடித்தது.
ஆட்சியை இராகவன் பரதன் வசம்தந்து
காட்டிடை செல்கையில் வலப்புறம் துடித்தது.                     82

to be continued....................

No comments: