அங்காரதாரை
கடல்தாவுங்கால் எதிர்ப்பட்ட
மூன்றாம் தடையாக
ஆலகால விடமாய், தணலின்
கொழுந்தாய்’
கடலினிடையெழுந்த கடலான
‘அங்காரதாரை’ – ‘எனைக்
கடந்து செல்வார் யாரெ’னக்
கடிந்தாள். 22
‘நிழல்பற்றி எனை ஈர்த்த
அரக்கியே!
உரைத்தீ நீ யாரெ’ன அநுமன்
வினவ,
‘அரிதே உனையான் உண்பது
ஒழித்தல்’ என
வழியடைத்தாள் அவள்தன் நீள்வாய்
பிளந்தே! 23
திறந்த வாய்வழி விரைந்தவன்
புகுந்திட,
தருமதேவதையே ஸ்தம்பித்துப்
போனதுவாம்.
இறந்தனனோ வென தேவர்கள்
மிரண்டிட - அவனோ
பிறந்தானென வயிறு கிழித்து
வெளிப்பெயர்ந்தான். 24
சாகா வரம்பெற்ற சிரஞ் சீவிகளுள்
தலையாய் திகழ்ந்த அன்னான்
– அரக்கிதன்
குடலுருவி, மேலெழும்பி,
காட்டிடையே
பறக்கலானான். 25
தேவர்கள் ஆர்ப்பரிக்க;
அசுரர்கள் வியர்த்திருக்க;
பிரம்மன் வியந்திருக்க;
மடிந்தனள் அங்காரதாரை!
மேருமலை தாழ பேருரு கொண்டவன்
விரைந்திட்டான் இராமநாமம்
ஜெபித்தபடி! 26
பவழ மலையில் பாய்தல்
தேவருலகின் பக்கத்தில்
பறக்கையிலே,
பொற்குடங்களுடை கோட்டையையும்,
காவல் மதிலையும் கீழே கண்டதும்,
பவழமால் மலைசூழ் சோலையிலே
பாய்ந்தனன். 27
புயலொடு பொதிந்த பெருங்காற்றால்
சாய்ந்திடும் கலனாய் அம்மலை
தகர்ந்திட,
வானொத்த அழகுடைய இலங்கா
புரியின்
வதனத்தை அங்கிருந்து நேரே
பார்த்தான். 28
இந்நகரை,
பொன்னகராம் அமராவதிக்கு
நிகரென்பார் – அல்ல அல்ல
அண்டம் ஆண்டிடும் இராவணனோ
இங்கிருந்தபடி ஆட்சி செய்வதால்
இந்நகர்
பொன்னகரினும் சிறந்த நன்னகர்
போலுமென்றான். 29
ஊர்தேடு படலம்
மாடங்களின் உயர்ச்சியையும்,
மாட்சியையும்,
வீதிகளின் நீட்சியையும்,
காட்சியையும்,
மாளிகையின் ஆட்சியையும்,
நேர்த்தியையும்,
மலைப்புடனே அவன் பார்த்தான்.
30
செந்நிறக் கூந்தலும், கரிய
உருவமும்,
கொண்டிருந்த அரக்கியர்க்குப்,
பணிப்பெண்கள் தேவமாந்தர்!
குற்றேவல் புரிபவரோ தேவர்கள்! 31
இராவணன் செய்திட்ட மாதவத்தால்
அங்கே
திருமால், சிவபிரான் தவிர்த்து
ஏனைய
தேவர்கள் அனைவரும் ஏவலராயினர்
– அம்
மாதவ முயற்சியை பிரமிப்புடன்
நோக்கினான். 32
இந்நகரை .வடிவமைத்த தெய்வத்
தச்சன்,
விசுவகருமன் திறமையைத்
தான் வியப்பத்தா? – அன்றி
உடல் வருத்தி தவம் புரிந்த
அரக்கன்
இராவணனின் பெருமையைத் தான்
புகழ்வதா? 33
அங்கே.
பாடுவார் பலர்; ஆடுவார்
பலர்; - ஸ்ருதி
கூட்டுவார் பலர்; மத்தளம்
கொட்டுவார் பலர்;
போட்டி போடுவார் பலர்;
வீணை மீட்டுவார் பலர் - ஆனால்
வாட்டமாய் வருந்துவோர்
ஒருவரையும் காணவில்லை. 34
அரக்கர்கள் –
உருவ அளவிலே மிகப் பெரியர்;
வீரமோ கணக்கு இலர்;
வரத் தன்மை அளவற்றோர்;
அறிய வொண்ணா சூழ்ச்சி கற்றோர். 35
வீரக்கழலுடைக் கால்களும்,
வேலுடைக் கைகளும்,
கனல் கக்கும் கண்களும்
கொண்டிருந்த அரக்கர்கள்
நடமாட இவ்வண்டம் இடம் கொடுத்ததும்,
மிகுதியினால் கிழிபடா திருப்பதும்
வியப்பென்றான். 36
விற்படை பெரிதென்றால்;
வேற்படையோ மிகுந்து,
மல்படையும், வாள்படையும்
மலிந்ததைக் கண்டு,
நாயகனாம் இராமன் உரைத்தவை
யெல்லாம்
உண்மையே யென்றுணர்ந்தான்
அந்தமிலான். 37
கதிரவன் மறைதலும், இருள் பரவலும்
பவழமலை யிருந்தபடி இலங்கையினைப்
பார்க்கையிலே
காவலரக்கர் வந்திடலாம்
யென்றெண்ணித் தன்னுடைய
உருசுருக்கி குன்றிடையே
அநுமன் சார்கையில்
கதிரவனும் கடல்கலந்து மறையலானான். 38
அநுமன் இலங்கையுள்ளே புக எண்ணுதல்
கருங்கடல் கடந்திட்டாலும்,
இந்நகர்க்காவல்
பெருங்கடல் கடப்பது அரிதே!
- ஆயினும்,
அருங்கடனை எம்பிரான் இராமனுக்கு
ஆற்றுதல்தான் சிறப்பென்
றுணர்ந்தவன், 39
வாயில் வழி உட்புகுதல்
வலியவர்க்கு அழகன்று!
- அதனால்
மதில்தாவி கடந்து சென்று,
மாநகர் புக முடிவு செய்தான். 40
அப்போது,
“இலை, தழை தின்னும் வானரமே!
எதிர்ப்பட்ட காவலுக்கு
அஞ்சினா யில்லை! – பொன்
மதில் தாவிச்சென்று, என்னோடு
பகையாதே!”
வழிமறித்து வினவினாள் .இலங்கா
தேவி 41
பொங்கி யெழுந்த கோபக் கனலை
பொய்யாக மறைத்தபடி அவன்
கேட்டான்,
‘இவ்வூர் காணும் ஆசையினால்
வந்தேன்
அவ்வாறு வந்ததில் நட்டம்
முண்டோ?” 42
No comments:
Post a Comment