பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 11


இராவணன் வினா

சிவனோ? மாலோ? நான்முகனோ? ஆதிசேடனோ?
யார் நீ? இவண் வந்தது எங்கனமென
நோக்கிய கண்களால் கனல்பொறி கக்கினான்
மூக்குகள் பத்திலும் வெம்புகை துப்பினான்.                      211

                           அநுமன் விடை

அல்லேன் யான் நீ சொல்லிய எவருமே!
அல்லி மலரனைய வில்வீரன் தூதன்தான் – அவனும்
தேவரும், பிறருமல்லன்! களிறும், கயிலாயமுமல்லன்!
பூவலயம் ஆளுகின்ற புரவலனின் புதல்வனவன்.                 212

முதல், இடை, கடையில்லா காரணன்
முன்பு, நடப்பு. எதிரில்லா வீரியன்.
சூலம், சங்கு, சக்கரம், கமண்டலம்
கயிலை, ஆலிலை, தாமரை துறந்தவன்.                         213

கையினில் ஏந்திய வில்லுடனே,
இராமனாய்ப் பிறந்தான் அயோத்தியிலே!
அன்னவற் கடிமை செய்கின்றேன்.
அநுமன் என்றே நாமம் கொண்டேன்.                            214

தேவியைத் தேடியே தென்புலம் வந்த
வானர சேனையின் தலைவன் நான்.
வாலியின் மைந்தன் அங்கதன் தூதனாய்
வந்தேன் நகரினுள் தனியனாய்!                                 215

                 மேலும் இராவணன் அனுமனை வினவுதல்                                          

நும்குலத் தலைவனாம் வலிமைமிகு வாலியை
அம்பெய்துக் கொன்றானின் அடிமை யென்றும்,
தமையனைக் கொல்வித்த சுக்ரீவனைத் தலைவனென்றும்,
சொல்லுகின்ற நீயிங்கே தூதனாய் ஏன் வந்தாய்?                 216

                      அநுமன் மறுமொழி

சூரியமைந்தனாம் சுக்ரீவன் தூதனாய்
கூறுகின்றேன் நல் வார்த்தைகளை!
அறம் சிறிதும் நோக்கிடாமல்
பிறன்மாதை துயர் செய்தாய்! – உன்மேல்                        217

வெறுப்புகொண்ட தூயவளை
விரும்புதல்தான் அழகாமோ? – உன்
மாதவப் பலன்களெல்லாம்
சேறாக மாறலாமோ?                                           218

        மேலும் இராவாணன் வினாவும், அநுமன் விடையும்

குன்றில் வாழ்ந்திடும் குரங்கின் கூற்றினை
‘நன்றென’ நக்கலாய் நகைத்த இராவணன்
நகர் வந்த தூதுவன் நீயிங்கு
நெறிகடந்து கொன்றதை உரை’யென்றான்.                       219

உனைக் காட்டுவார் இன்மையால் – மலர்க்
காட்டினை வாட்டினேன்! – எனைத்
தாக்கவந்த அரக்கர்களை வீட்டினேன். – பின்
உனைக் காணும் நோக்கிலே மாட்டினேன்!                       220
                 
என்றவன் சொன்னதும், சினந்த இராவணன்
‘கொல்மின் இக்குரங்கை’யென கொக்கரித்தான்.
‘’நின்மின்’ யென்றனன், நீதி நெறி நின்று,
நடு நிலை தவறா வீடணன்! - பின்                              221

நீண்ட கைகளால் தொழுது வணங்கியே
‘மூண்ட கோபம் முறையது அன்று!
மாதரைக் கொன்றார் உளரெனினும்,
தூதரைக் கொன்றவர் எவருமிலர்!                               222

தகாது நடந்த சூர்ப் பணகையை
வகையாய் வதைத்துக் கொன்றிடாமல்,
தமையனிடம் சொல்லெனச் சொல்லி,                          
மூக்கினை யுடைத்து உயிருடனே விட்டார்.                      223

இத் தூதனைக் கொன்றாயாயின், இவந்தன்
கண்ணினால் கண்ட காட்சிகளை யெல்லாம்
சொல்லாமல் செய்கிறவன் ஆகின்றாய்’ என
உள்ளத்தில் பொருந்திட வீடணன் கூறினான்.                     224

          அநுமன் வாலுக்கு நெருப்பிட இராவணன் கூறுதல்

‘கொல்வது பழுதென நல்லது உரைத்தா’யென
நவின்றான் இராவணன் வீடணிடம் – பின்
தொல்லை தந்திடும் வாலினைக் கொளுத்தி,
எல்லை கடந்திதை துரத்துங்கள்’ ஆணையிட்டான்.               225

பிரும்மாத்திரம் கட்டுண் டவன்மேல் தீயிடல்
எம்மாத்திரம்? எனக் கூறிய இந்திரசித்
மந்திர விதிப்படி மீட்டுக்கொண்டதும்
இறுக்கிக் கட்டினர் பாசக் கயிற்றினால்.                          226

வாலினைக் கொளுத்திட பிறந்த கட்டளை
‘ஊரினை நீ சுடு” எனச்சொன்ன தெளிவுரை!
எனவெண்ணி உவந்தவன் – அரக்கர்கள்
கயிற்றினால் பிணைக்கையில் சிரித்தான்.                        227

                       அநுமன் வாலுக்கு தீயிடல்

முட்டி யுதைத்து, கட்டி யிழுத்து,
வெட்ட வெளியினில் நிறுத்தினர் ஏவலர்.
கந்தைத் துணிகளை வாலினில் கட்டி
எண்ணையில் தோய்த்து கடும்தீ கொளுத்தினர்.                  228

            பிராட்டியின் வேண்டுகோளும், அதன் விளைவும்

‘கருணை கொண்ட அநுமனுக்குத்
துணை புரிவாய் அக்னியே!
எந்தூய்மை மெய்யெனில் அவனை நீ
சுட்டிடாதே’ வெனச் சொல்லி தொழுதெழுந்ததும்,                 229

ஒளிர்ந்த வெம்கனல் தண்மை யடைந்ததாம்.
கொற்றவன் நெற்றிக்கண் குளிர்ந்து போனதாம்.
அண்டம் கடந்த பிரம்மன் வளர்த்த
அக்னிக் குண்டமும் அணைந்து குளிர்ந்ததாம்.                    230

                       அநுமன் நிலையும், செயலும்

நெருப்பினால் எரியுண்ட வால் முழுதும்
வருத்தாது குளிர் தந்த நிலையுணர்ந்து,
சனகன் பாவையின் கற்பின் நெறியென
உணர்ந்த அநுமனும் உவகை கொண்டான்.                       231


to be continued....................

No comments: