பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 1, 2015

92. சமூகம் - வீரத்தாய்மார்கள்



               'தாயைப்போல பிள்ளை': ஓர் தேசத்தார் ஞானமும்,செல்வமும், வீரமும், புகழும் கொண்டு உன்னத நிலையிலேஇருக்கும்போது, அவர்களுக்குள் ஆண் மக்களிடம் மட்டுமேயல்லாது பெண் பாலரிடத்திலும் கூடத் தர்மாபிமானமும், வீரத்தன்மையும் சிறந்து விளங்கும். ராஜபுத்திரர்கள் உன்னதநிலையிலே இருந்த காலத்தில் ராஜபுத்திர ஸ்திரீகள் காட்டியவீர குணங்கள் இன்றுகூட உலகத்தாரெல்லாம் கேட்டு மெய் சிலிர்க்கும்படியாக இருக்கின்றன. யுத்த காலங்களில் ராஜபுத்திர ஸ்திரீகள் தமது உயிரைப் புல்லினும் சிறிதாக மதித்து, மானத்திற்காகவும், தர்மத்திற்காகவும், கற்பிற்காகவும் செய்திருக்கும் வீரச்செயல்கள் எண்ணி முடியாதன. 'டாட்' என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் ராஜஸ்தான சரித்திரத்தை வாசித்தவர்களுக்கு நமது பாரத நாட்டு க்ஷத்திரிய மாதர்களுக்கு நிகரான 'வீரத் தாய்மார்'உலகத்தில் வேறெங்குமிருந்ததில்லை என்பது நன்கு விளங்கும். நிற்க

             நமது தமிழ் நாட்டிலேயும் அத்தகைய பெருங்குடி (மூதில்) மாதர்கள் இருந்திருக்கிறார் களென்பதைச் "செந்தமிழ்"ப் பத்திரிகாசிரியர் இம்மாதம் எழுதியிருக்கும் ஓர் திவ்யமான உபந்நியாசத்திலே பல அரிய திருஷ்டாந்தங்களால் விளக்கியிருக்கிறார். அவரது உபந்நியாசத்தைச் சென்ற வாரத்திலே ஒரு பகுதியும் இவ்வாரத்தில் ஒரு பகுதியுமாக நமது பத்திரிகையிலே பிரசுரம் செய்திருக்கின்றோம். இன்னும் சிறிது மிஞ்சி யிருக்கின்றது. அதனை அடுத்த வாரத்தில் பிரசுரம் செய்வோம். தமிழ் நாட்டுத் தாய்மாரைப் பற்றிச் "செந்தமிழ்" ஆசிரியர் எழுதியிருக்கும் உபந்நியாசத்தைப் படித்தபோது, எமக்குண்டான பெரு மகிழ்ச்சிக்கும் பெருந் துயரத்திற்கும் அளவில்லை. 1,800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாய்க்கப் பெற்றிருந்த நாகரீக நாட்டிலே, இவ்வளவு உயர்வுகொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே, இவர்கள் நடையிலும்செய்கைகளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கிறோமென்பது அரிய மகிழ்ச்சி யுண்டாகிறது.

             ஆனால், பிரம்ம சந்ததியிலே இராவணன் பிறந்தது போல, இத்தனை பெரிய நாகரீகமும் சிறப்பும் அறவலிமையும் பொருந்திய மேலோரின் சந்ததியிலே குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பாகத் தோன்றி நாம் இக்காலத்திலே இருக்கும்நிலைமை யெல்லாம் பார்க்கும்போது மனம் புண்ணாய் உலைகின்றது.      
  
             அந் நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத்தன்மையையும், இந்நாளிலே ஆண்மக்கள் காட்டும் பேடித் தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, "ஆ! நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இத்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக் காட்டிலும் ஒரேயடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாயிருக்குமே"என்று மனம் குமுறுகின்றது.

             நமது பத்திரிகை படிக்கும் நேயர்களனைவரும் நாம்"செந்தமிழ்"ப் பத்திரிகை யிலிருந்து பெயர்த்துப் பதிப்பிட்டிருக்கும்உபந்யாசத்தைத் தாம் பல முறை படிப்பது மட்டுமே யன்றித் தமது சுற்றத்தாருக்கும் மித்திரருக்கும் தமது வீட்டு மாதர்களுக்கும் திரும்பத் திரும்பப் படித்துக் காட்டுதல் நலமென்று கருதுகிறோம்.

              "மகனைப் பெற்று விடுதல் எமது கடமை. அவனைத் தக்கோன் ஆக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குவேல் செய்து கொடுத்தல் இரும்புக் கொல்லனது கடமை. என் மகனது கடமை எனிலோ யுத்தத்திலே சென்று யானையைக் கொன்று மீளுதல் ஆகும்" என்று ஓர் தமிழ்த்தாய் பாடியிருக்கின்றாள்.

              இனி மற்றொரு தாய், "எனது மகன் யுத்தகளத்திலே போர் வீரர் வாளினிலே கழுத்தறுப்புண்டு மடிவானானால், அதுதான் எனக்கு மேலான தர்மம்; அதுவே ஸத்கர்மம்" என்றுபாடினாள். பின்னுமொரு பெண் புலவர், தமது சுற்றத்திலுள்ள ஓர் அம்மை தன் மகன் போரிலே யானையை வீழ்த்திக்கொன்று தானும் இறந்தான் என்று கேள்வியுற்று, தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி யடைந்த சிறப்பைக் கண்டு வியந்து பாடல் சொல்லியிருக்கின்றார்.

அப்பால், ஒரு தமிழ்த்தாய் தனது தந்தையும் கணவனும் போரில்லே சிறிது காலத்திற்கு முன்பு இறந்து போயிருக்கவும், யுத்தப் பறையின் ஒலி கேட்டவுடனே சந்தோஷம் மிகுந்து, தன்மகனுக்கு நல்ல ஆடை யுடுத்தி, அவன் குடுமிக்கு எண்ணெயிட்டுச் சீவி முடித்து அவன் கையிலே வேலெடுத்துக் கொடுத்துத் தனது ஒரே பிள்ளையைப் போர்க்களத்திற்குப் போ என்று அனுப்பிய பெருமையை ஓர் பெண் புலவர் வியந்திருக்கின்றார். பின்னுமொரு  தாய், தன் மகன் யுத்த களத்திலே வலியிழந்து புறங்கொடுத்து  ஓடியது உண்மையாயின், ''அவன்பால் உண்டு வளர்ந்ததற்குக் காரணமாயிருந்த என் முலைகளைஅறுத்திடுவேன்'' என்று வாளைக் கையிலே கொண்டு போர்க்களத்திற்குப் போய், அங்கே வீழ்ந்து கிடக்கும் பிணங்களை வாளினால் புரட்டித் தேடுகையில்லே, அப் பிணங்களினிடையில் தன் மகன் உடலும் இரண்டு துண்டமாகக் கிடந்ததைப்பார்த்து, அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி யடைந்தாள் என்று ஓர் பாடல் இருக்கிறது.

                இன்னும், அதுபோல எத்தனையோ ஆச்சரியமான திருஷ்டாந்தங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இடம் போதாமைபற்றி அவற்றை இங்கே எடுத்துக் கூற முடியவில்லை.

                இவ்வளவு மேலான வீரப்பயிற்சி இருந்த நாடுஇப்போது என்ன நிலைமைக்கு வந்துவிட்டது!

               ஆனால், நமக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது. அதுவும்வீணான ஆறுதலன்று. உண்மை பற்றிய ஆறுதல்.

              அந்த ஆறுதல் யாதெனில், நமது ஜாதியை இடையேபற்றிய சிறுமைநோய் விரைவிலே நீங்கி விடும் என்பதற்கு ஆயிரக்கணக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பரிசுத்தமான நெஞ்சமும் தெய்வ பக்தியும் தன்னல மறப்பும் உடைய பலமேலோர்களை இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாகமாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புன்னோய் சீக்கிரத்திலே மாறிப்போய் விடும். வானத்திலே துந்துபி யொலி அதிரக் கேட்கின்றோம். மகாபாரதம் (Great India) பிறந்துவிட்டது. வந்தே மாதரம்.

                                                    (முற்றும்)


No comments: