(அந்தக் கால நாட்டிய நாடக மரபின்படி கட்டியக்காரன் மேடையில் தோன்றி பேசும் பாங்கினை விளக்கும் விதமாக 'மாதிரி உரையாடல்' இங்கே காணலாம். கீழ்கண்ட தொடக்கக் காட்சி உரையாடல் "விஷ்ணு சாஹராஜ கல்யாணம்" எனும் நாடகத்தில் வருவது. ஷாஜி மன்னரின் அவைக்களப் புலவர்கள் இயற்றியதாக இருக்கலாம். இதில் ஷாஜி மன்னன் பாட்டுடைத் தலைவனாகவைத்து இயற்றப்பட்டிருக்கிறது. புராண பின்னணியோடு அமைந்த இந்த நாடகம் ஷாஜி வழிபடும் திருவீழிமிழலைத் தலத்துக்கு வந்து ஈசரை மகாவிஷ்ணு வழிபட்ட வரலாறு சொல்லப்படுகிறது. ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு அர்ச்சிப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. அப்போது சிவபெருமான் காட்சி தருவதாக அமைந்தது இந்த கதை. இனி....)
நாடகம் துவக்கப்படுவதற்கு முன் அரங்கில் கட்டியக்காரனைச் சூத்திரதாரன் அறிமுகம் செய்து வைக்கிறான். கட்டியக்காரனுக்கும் சூத்திரதாரனுக்கும் நிகழும் உரையாடல் பின்வருமாறு அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கு எப்படி இருந்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 3ஆம் ஷாஜி ராஜா தஞ்சையை ஆண்ட காலத்தில் எல்லா நாடகங்களிலும் இதுபோன்ற உரையாடல்களைக் கேட்கலாம். இந்த உரையாடல் நடக்கும் சமயம் மேடையில் சூத்திரதாரனும் கட்டியக்காரனும் இருப்பர்; இசைக் குழுவினர், தலைமை நட்டுவன், தாளக்காரன் ஆகியோரும் இருப்பர்.
இந்த உரையாடல்கள் இசை நாட்டிய நாடகங்களுக்குப் பொதுவானவை எனினும், இங்கு தரப்படும் உரையாடல்கள் "விஷ்ணுசாகராஜ விலாசம்" எனும் நாடகத்தில் வருபவை, இது அந்த நாடகச் சுவடிகளில் காணப்படுபவை. அப்போது தமிழ் நாட்டில் நாட்டிய ஆசிரியர்கள் நாடகத்தை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு இந்த சுவடியே ஆதாரம். மக்கள் கேட்டு மகிழும் பாங்கில் அன்றைய பேச்சு நடைமுறையில் இவை அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் தஞ்சை நகரில் நடைபெற்ற நாடக முறை பாங்கு இது.
அன்றைய தஞ்சையை ஆண்டவர்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி மொழியாளர்கள். முதலில் சூத்திரதாரன் மேடையில் தோன்றுவான். அரங்கில் மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்து நாடகத்தைக் காணக் காத்திருக்கின்றனர். அப்போது கட்டியக்காரன் அங்கினுள் நுழைகிறான், இருவரும் உரையாடுகிறார்கள்.
சூத்திரதாரன்: (கட்டியக்காரனை நோக்கி) அடேய், நீ எங்கேயிருந்து வாராய் சொல்லடா?
கட்டியக்காரன்: மகாவிஷ்ணு சாமியண்டையிருந்து வந்தேனையா.
சூ: நீ வந்த காரியமென்ன தெரியச் சொல்லடா?
க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்க ஸ்வாமியைச் சேவிக்க வருகிறார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தோமையா.
(சூத்திரதாரனும் கட்டியக்காரனும் பேசிக்கொண்டிருக்கும்போது
நட்டுவனார் அரங்குக்கு வருகிறார்.)
சூ: நட்டுவனாரே, நாம் ஆடற பாடற சபையிலே இவன் ஆரோ தெரியாது, வந்திருக்கிறானே! இவனுடைய பட்டை நாமம் என்ன, பட்டு துப்பட்டி என்ன, தாடி என்ன, கட்டியக்கோல் என்ன, இவனுடைய பூர்வோத்தரம் கேட்க வேணுமே!
சூ: சரி. அரே பாய்! தும் கோன்றே (ஹிந்துஸ்தானியில் நீ யாருடா?)
க: (காதில் வாங்கிக் கொள்ளாமல்) அம்மம்மா! இந்தப் பந்தல் பார்க்க மெத்த நன்னாயிருக்கே!
சூ: ஓய் நட்டுவனாரே! இவனுக்கு உத்தராதி பாஷை தெரியாது. மராட்டி பாழையாலே கூப்பிடவேணும்! அஹாதூ கோடூன்? (எங்கேயிருந்து வருகிறாய்) ஆலாஸ கா! (கட்டியக்காரன் கவனிக்காமல்)
நட்: ஐயா! அப்படிக் கூப்பிட்டாலும் பேசவில்லையே. இனிமேல் கன்னட பாஷையில் கூப்பிடவேணும் போலயிருக்கே!
சூ: எலே தம்பி! (கன்னடத்தில்) எல்லித்து பந்தயோ? (இப்போதும் கவனிக்கவில்லை)
நட்: ஐயா, அப்படியும் பேசவில்லையே. வடுக பாஷையினாலே கூப்பிடுவோமே!
சூ: (வடுகில் என்று குறிப்பிடப்படுவது தெலுங்கு) ஓயி நாயடா? ஏடனுண்டி வொஸ்தி வோயி?
நட்: ஐயா, அப்படியும் பேசவில்லை. சோழ மண்டலம் தமிழிலே கூப்பிடவேணும் அப்போ பேசுவான்.
சூ: (தமிழில்) ஓய் நாயக்கரே, எங்கேயிருந்து வந்தீர் காண்? (நெற்றியில் பட்டை நாமம் போட்டிருந்ததால் நாயக்கரே என்றழைக்கிறான்)
கட்டியக்காரன் பேசவில்லை. ஒருகால் இவனுக்குக் காது கேட்கவில்லையோ என்று சூத்திரதாரன், ஒரு காதுப் பக்கம் போய் கூப்பிடுகிறான். பதில் இல்லை. மற்றொரு காதுப் பக்கம் போய்க் கூப்பிடுகிறான், அதற்கும் பதில் இல்லை. சூத்திரதாரன் கட்டியக்காரனைச் சுற்றி வருகிறான். அப்போது தன்னை அவன் அடிக்க வருகிறானோ என்று கட்டியக்காரன் கையில் கம்புடன் சூத்திரதாரனை அடிக்க ஓங்கி மிரட்டுகிறான்.
சூ: அடே பைத்தியக்காரா! உன்னோடு சண்டையில்லை. உன்னை இனிக் கூப்பிட மாட்டேன். நாங்கள் எல்லோரும் இங்கே கூடிக்கொண்டு வீழிநாத ஸ்வாமி ஸந்நிதியிலே நாட்டிய நாடகம் ஆடுகிறோம். நீ யார் என்று கேட்டோம்.
க: ஓஹோ! நீ யாரடா?
சூ: நான் வித்வானடா.
க: என்ன வித்வாங்கனை? நம்மிடம் சொல்லுடா?
சூ. நான் சொல்றதிருக்கட்டும் நீ எங்கேயிருந்து வந்தாய் முதலில் சொல்லடா?
க: வடக்கே போ (கையை வடபுறம் காட்டி)
சூ: பீஜாபுரத்திலேயிருந்து வந்தாயோ?
க: சே! அங்கே யார் மகனாகப் போனாய்? இங்கே திரும்படா (மேற்கே கை காட்டி)
சூ: ஆனை, மலையாளமா?
க: இப்படித் திரும்பு (கிழைக்கை நோக்கி)
சூ: ராமேஸ்வரத்திலேர்ந்து வந்தாயா?
க: இப்படித் திரும்பு (வேறு பக்கம் காட்டி)
சூ: வேதாரண்யமா?
க: சற்றே இந்தப் புறம் போ.
சூ: திருவாரூரா?
க: ரெண்டு முழம் இப்படித் திரும்பு.
சூ: கும்பகோணமா? கெளரி மாயூரமா? திருவிடைமருதூரா? சீர்காழியா? வைத்தியநாதன் கோயிலா?
க: அடடே நில்லு. அத்தனை தூரம் யார் மகனாய்ப் போகிறாயடா? சற்றே இப்புறம் (கோலால் தரையில் கோடு போட்டுக் காட்டுகிறான்)
சூ: சாலியமங்கலமா? மாரியம்மன் கோயிலா? தஞ்சாவூரா?
க: சபாஷ்டா! நம்ம பின்னே வா (ஒரு பக்கமாக அழைத்துப் போகிறான் அங்கு ஒரு கம்பத்தைக் காட்டுகிறான்) ஒசக்க ஏறு! கெட்டியாய்ப் பிடிச்சுக்கோடா (சுத்திரதாரன் ஏறுகிறான்)
க: ஒரு காலை விடு, இந்தக் காலையும் விடு. அந்தக் கையை விடு. இந்தக் கையையும் விடு. கீழே விழு.
சூ: ஓய் பலே. நன்னாச்சு. காலொடிஞ்சால் எப்படி?
க: ஒரு பந்தக்கால் கொடுக்கிறோம். (இருவரும் முன்னால் வருகின்றனர்)
சூ: இதெல்லாம் இருக்கட்டும்! நீ எங்கேயிருந்து வந்தாய்? நிலவரமாய்த் தெரியச் சொல்லுடா?
க: அந்த வீட்டிலேயிருந்து இங்கே வந்தேன்.
சூ: உன்னோட வாசம் எங்கே?
க: வாசுதேவனிடத்தில்.
சூ: வாசுதேவனென்றால் எனக்குத் தெரியாது.
க: சின்னப்போ மண்டி போட்டுக்கொண்டு அரி நரி என்று படிக்கவில்லையா? அதாவது மகாவிஷ்ணு வாசலிலே இருக்கிற கட்டியக்காரன் நானடா!
சூ: அட பைத்தியக்காரா! ஏண்டா இப்படி நாலு மூலையிலும் சுத்துகிறாய் நம்மை.
க: பைத்தியக்காரன் நானோ, நீயோ. நம்ம மகாவிஷ்ணு எங்கே பார்த்தாலும் அங்கெல்லாம் இருப்பாரடா.
சூ: அது சரி, நீ வந்த காரியம் என்ன சொல்லுடா.
க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்கத்தைச் சேவிக்க வரார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தேனடா.
சூ: அதற்கு என்னென்ன செய்ய வேணும்டா.
க: ஸதிரு, கிதிரு, மெத்தே, கித்தே, தலகணி, பூ, சந்தனம், கிந்தனம், தூபம், தளிகை, நட்டு முட்டு, தீவட்டி
சூ: அடே சகலமும் இங்கே இருக்கிறது. நீ போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா போ.
க: பாக்கி எல்லோரையும் நீ இழுத்துக் கொண்டு வா.
சூ: இதோ வந்துவிட்டார்கள் (மகாவிஷ்ணுவைத் தவிர யாவரும் வருகிறார்கள் அரங்குக்கு)
க: நீ யாரடா? மெட்டுக்காரனா? முட்டிக்கோ! ஐயா மத்தளக்காரா, இந்தப்பக்கம் தட்டு. அந்தப்பக்கம் தட்டு, நடுவே தட்டு (மத்தளக்காரன் ஓசை எழுப்புகிறான்)
க: பூனைக்காரப் பொட்டி மவனே. இந்தப் பக்கம் டும்! அந்தப் பக்கம் டும்! நடுவிலே ஒண்ணுமில்லைடா.
க: (ஒருவனைப் பார்த்து) நீ யாரடா?
நட்டு: நாந்தான் நட்டுவம்.
க: கையிலே என்னடா?
நட்டு: தாளம் ஐயா.
க: அடி!
நட்டு: தித்தித்தே (தாளத்தில்)
க: இது எந்தத் தாளம்?
நட்டு: இது திருபுடை.
க: எங்கே திருடிக் கொண்டு வந்தாய்? இந்தத் தாளம் பேரு சொன்னால் உச்சிதம் (உயர்வு) என்ன?
நட்டு: உன் மேலே பாட்டுப் பாடறோம்.
க: இந்தத் தாளம் பேரு?
நட்டு: ஒன்று இரும்பு ஒன்று வெண்கலம்.
க: (மற்றொருவனிடம்) நீ யாரடா?
பாடகன்: நாந்தான் பாடகன்.
க: ஆ! பாடு.
பாடகன்: ஆ....................
க: நிறுத்தடா ஆங்காதே. வாய்மூடி கண் மூடிக் கொண்டு ஆகாசம் பார்த்துக் கொண்டு பாடு.
சூ: சரி சரி. நீ வந்து அனேக நேரமாச்சு. மகா விஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வாடா போடா.
க: அந்தத் தாளம் பேரு சொன்னால் நம்ம மேலே பதம் பாடறோம் என்றாயே. இப்போ பாடு. நம்முடைய பட்ட நாமம், பட்டுத் துப்பட்டி, கட்டியக் கோல், இதெல்லாம் வச்சு ஒரு மேளம் நீளமாக ஏலபதம் திரி.
சூ: நல்ல காரியம்.
க: "பட்டை நாமம் இட்டுக் கொண்டு" (பாடுகிறான்)
சூ: வாடா கட்டியக்காரா! உன் மேலே பாடினோம். சீக்கிரமாகப் போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா. (கட்டியக்காரன் உள்ளே போகிறான். பின்னர் நாடகம் துவங்குகிறது.)
(இந்த உரையாடல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகச் சுவடி எண் 639இல் உள்ளபடி தரப்படுகிறது)
(நிறைவடைந்தது)
No comments:
Post a Comment