பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 12, 2015

ஊடகங்களின் சுதந்திரம்


சமீப காலமாக தனியார் தொலைக்காட்சி சேனல்களில் பிரபலமாக இருக்கும் பல்துறை தலைவர்களைப் பேட்டி காண்கிறார்கள். அப்படி பேட்டி காண்பவர்கள் கண்டிப்பான வாத்தியாராக நினைத்துக் கொண்டு, எதிரில் பதிலளிக்கும் தலைவரின் தகுதி, அந்தத் தகுதியை அவர் பெறுவதற்கு எத்தனை காலம் பிடித்தது, எத்தனை போராட்டங்கள், அனுபவங்கள், வெற்றி தோல்விகள் இவைகளைக் கண்டவர்கள் என்ற எண்ணமே இல்லாமல் ஏதோ, தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆசிரியர் விரட்டுவதைப் போல உரத்த குரலில் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்பதும், பதில் வராவிட்டால் அடித்து விடுபவர்களைப் போல குறுக்கே புகுந்து இடைமறித்து அவர்களை பதில் சொல்ல முடியாமல், கேள்வி மேல் கேட்டு திணற அடிப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். 

பத்திரிகை சுதந்திரம், ஊடகங்களின் உரிமைகள் இவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட இத்தகைய அநாகரிகமான நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது. தலைவர்கள் என்போர் அவர்களுக்கு கட்சி பலம் எப்படி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் தலைவர்களாக ஆவதற்கே எத்தனையோ தியாகங்கள் புரிந்திருப்பார்கள்.  பல துறைகளில் அனுபவம் பெற்றிருப்பார்கள். அவர்கள் செயல்பாடுகளில் ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு பேட்டி எடுப்பவர்கள் எந்த வகையிலும் பெரியவர்களாக ஆக முடியாது. 

ஒரு ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தலைவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்க முடியுமா? அதிலும் ஊடகக் காரர்கள் தராதரம் வைத்திருக்கிறார்கள். சிலரிடம் அடக்கி வாசிப்பார்கள்; பணிவும் மரியாதையும் முகத்திலும் குரலிலும் தவழ்ந்து விளையாடும். கொஞ்சம் அப்பை சப்பையான தலைவர் கிடைத்து விட்டால் போதும் தம்பிகள் சண்டப்பிரசண்டம் செய்து விடுகிறார்கள். 

ஒர் ஆங்கில சேனலில் ஒருத்தர் இருக்கிறார். பேட்டி எடுப்பதில் பெயர் போனவராம். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வது போல அவருக்குக் கேட்கத்தான் தெரியும் போலிருக்கிறது. கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக மூச்சு விடாமல் கேட்டுக் கொண்டே இருப்பார். எதிரில் இருப்பவர் முதல் கேள்விக்கு பதில் சொல்லி முடிக்கு முன்பாக அடுத்த கேள்வியை வீசுவார். முகத்தில் ஒரு கேலிச் சிரிப்பு. ஆஹா, எப்படி கொக்கி போட்டு இழுத்து அவரை திணர அடிக்கிறேன் பார் என்பது போல இருக்கும் அந்த சிரிப்பு. இந்தப் போக்கை இவர் எல்லோரிடத்தும் பின்பற்றுவார். எல்லோருமா இவருக்கு அனுசரித்துப் போவார்கள். ஒரு சிலர் போய்யா! நீயும் உன் பேட்டியும் என்று கோபப்பட்டுக் கொண்டு எழுந்து போயிருக்கிறார்கள். அதில் அவருக்கு ஒரு குரூர திருப்தி. 

இன்னொருவர், அதே போல இன்னொரு ஆங்கில சேனலில் இருக்கிறார். தனக்கு நிகர் தானே என்பது போன்ற நினைப்பு. ஒரு முறை இவர் பிரதமர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவரை எப்போதும் போல நினைத்துக் கொண்டு அலட்சியமாகக் கேள்வி கேட்கப் போக அமைச்சரவை செயலரோ அல்லது பொதுஜன தொடர்பு அதிகாரியோ, யாரிடம் இப்படி பேசுகிறாய் அவர் பிரதமர் என்பதை நினைவில் கொள் என்று ஒரு போடு போட்டதும்தான் தம்பிக்கு சப்த நாடியும் அடங்கியது. பின்னர் அதே குணம் திரும்ப வந்து பிடித்துக் கொண்டு விட்டது. அதிலும் தேர்தல் சமயத்தில் ஒரே சண்டப் பிரசண்டம்தான். ஆங்கில சேனல்களில் நான் முதலா நீ முதலா என்பதில் ஒரு சர்ச்சை, அதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள்தான் காரணிகளாக இருக்கும் போல் தெரிகிறது. தலைவர்களை அதிகமாக அதட்டி கேள்வி கேட்டது நீயா நானா என்பது.

இவற்றையெல்லாம் தமிழ் சேனல்காரர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இவர்களுக்கும் அவர்களைப் போலவே அதிகார தோரணையில், அதட்டும் குரலில், பள்ளி மாணவரை மடக்கும் ஆசிரியரைப் போல கேள்வி கேட்டு திணற அடிப்பதில் ஒரு திருப்தி. 

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? எந்த பேட்டியிலும் பேட்டி அளித்தவரின் கருத்து மேலோங்கி இருக்காது. இவர்கள் நிலையத்தில் ஹோம் ஒர்க் பண்ணி வைத்து அவர்களை பதில் சொல்ல முடியாமல் அடித்துவிட்டு, அவர்களை வென்றுவிட்டதைப் போல ஒரு மிதப்பு உண்டாகி விடுகிறது. இவர்கள் எல்லாம் ஒரு டி.வியில் கூலிக்கு வேலை செய்பவர்கள். தலைவர்கள் பொது மக்களுக்காக, நல்லதோ இல்லையோ ஏதேனும் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்க நினைப்பவர்கள். அப்படி அவர்கள் பாடுபட்டு கட்டிய மனக்கோட்டைகளை தடிகொண்டு தாக்கி இடித்துத் தரை மட்டமாக்கிவிட்டதாக இவர்கள் கொக்கரிப்பது சரியான பத்திரிகை, ஊடக சுதந்திரமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் எத்துணை உயர் கல்வி கற்றிருந்தாலும், இவன் பணியாற்றும் நிறுவனத்தில் இவனுக்கு மேல் உயர் அதிகாரியாக இருப்பவன் குறைந்த கல்வித் தகுதி படைத்திருந்தாலும், அவனுக்கு உரிய மரியாதையைத் தந்துதான் பேச வேண்டும். தாந்தோன்றித் தனமாக உயர் அதிகாரியிடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டால், சீட்டு கிழிந்துவிடும். ஆனால் இப்போது ஒரு உணர்வு. உலகத்தில் யாரையும், எதையும் கேட்கவோ, அவர்களைத் திணற அடிக்கவோ உரிமை படைத்தவர்கள் நாங்கள் எனும் எண்ணம் உருவாகிவிட்டது. அதில் ஏதேனும் எதிர்ப்பு வந்து விட்டால் போச்சு மைக்கின் முன்னால் மணிக்கணக்கில் தனி மனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழிய பேசத் தலைப்பட்டு விடுகிறார்கள். 

இந்த ஊடகங்கள் அடிக்கும் கூத்துகளில் இன்னொன்று மிக முக்கியமானது. அன்று நாட்டில் நடைபெற்ற ஏதாவதொரு நிகழ்ச்சி பற்றி பலதரப்பட்ட கட்சிகளிலிருந்து, அந்தந்த தொலைக்காட்சி சேனல்கள் குத்தகைக்கு எடுத்த அதே நபர்கள் எல்லா விவாதங்களிலும் கலந்து கொள்வார். பேட்டி தொடங்கும். அவ்வளவுதான், யாருடைய கட்சி பலவீனமானதோ, அந்தப் பிரதிநிதி பேசுவார் பாருங்கள், அடுத்தவர்களைப் பேசவிடாமல் தானே ஏதோ சொற்பொழிவு நிகழ்த்துவது போல நினைத்துக் கொண்டு, அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தை தானே எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை ஒருவழி பண்ணிவிடுவார்கள். 

இதில் பங்கேற்பவர்களில் அப்பை சப்பையான ஆட்கள் இருந்தால், கடைசிவரை அவர் வாயைத் திறக்க முடியாது, அப்படி மீறி திறந்தாலும் நமது அடாவடி பேச்சாளர் தானே பேசி ஒருவழி பண்ணிவிடுவார். இல்லையென்றால், ஒரே நேரத்தில் இருவர் அல்லது மூவர் தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப உரத்த குரலில் சொல்லிக்கொண்டு, எதிராளி புதிதாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பார்கள். 

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் தான் நமக்கு அமைதி கிடைக்கும். நாம் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடப்பதை முணுமுணுப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் மனைவிமார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் விடும் பெருமூச்சு நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். அவர்கள் பார்வை நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இனிமே விவாதம் அது இது என்று டி.வி.முன்னால் உட்கார்ந்தால் அவ்வள்வுதான், வீட்டில் சோறு கிடையாது என்று சொல்வது போல இருக்கும். இருந்தாலும் மறுநாளும் நாம் அந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்காமல் இருப்பதுமில்லை;  மனைவி முறைத்துக் கொண்டு சோறு போடாமல் இருப்பதுமில்லை. 

காலணிகள் எல்லாம் காலில் போட்டுக் கொள்ளத்தான் இருக்கிறது. அந்தந்த அளவுக்கு கால் அளவு உள்ளவர்கள் தகுந்த காலணிகளை அணியலாம். 10 எண்ணுள்ள காலணியை 7 எண்ணுக்குரிய காலில் அணிந்தால்? அதுதான் இப்போது நடக்கிறது.


No comments: