பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 12, 2015

கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 - 1896)

                                         
கர்நாடக இசையுலகில் தமிழிசைக்கு முன்னவர்களாகக் கருதப்படுபவர்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரும் ஒருவர். இவர் பல தமிழ் சாகித்தியங்களை இயற்றியிருந்தாலும், கதாகாலக்ஷேபத் துக்காக இவர் இயற்றிய 'நந்தனார் சரித்திரம்' மிகவும் புகழ்பெற்று விட்டது. கர்நாடக சங்கீத உலகின் மிகப்புகழ்பெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமகால வாக்யேயக்காரர் இவர். ஸ்ரீதியாகராஜர் திருவையாற்றில் காவிரிக் கரையில் வாழ்ந்தா ரென்றால், கோபாலகிருஷ்ண பாரதியார் மயிலாடுதுறை என இப்போது பெயர் வழங்கும் மாயூரத்தில் அப்போது வாழ்ந்து வந்தார். 

இவர் ஒரு முறை ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளை தரிசனம் செய்ய திருவையாறு வந்தார். அவர் வந்த நேரத்தில் ஸ்ரீ சுவாமிகள் தன்னுடைய சீடர்களுக்கு ஆபோகி ராகம் பாடம் எடுத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டைவிட்டு காவிரியில் ஸ்நானம் செய்வதற்காக வெளியே புறப்பட்டு வந்தார். அப்போது அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு சுவாமிகள் ஆபோகி ராகம் பாடம் நடத்தியதைக் கேட்டு மெய்மறந்து உட்கார்ந்திருந்தார். அப்போது சுவாமிகள் இவரை எங்கிருந்து வந்திருக்கிறார் என்று விசாரித்தபோது தான் மாயூரத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னதும், சுவாமிகள் அங்கு கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் சாஹித்தியங்கள் இயற்றுகிறாரே அவரை உங்களுக்குத் தெரியுமோ என்று வினவ, இவர் அடியேன் தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி என்றதும் சுவாமிகள் மகிழ்ச்சியடைந்தார். உங்களை இங்கு பார்த்ததில் நிரம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு, நீங்கள் ஆபோகியில் ஏதாவது கீர்த்தனம் செய்திருக்கிறீர்களோ என்று வினவ, அவர் இதுவரை இல்லை என்று பதில் சொன்னார். சுவாமிகளும் காவிரிக்குச் சென்றுவிட்டார். 

கோபாலகிருஷ்ண பாரதியார் நேரே ஐயாறப்பர் ஆலயம் சென்று அங்கு ஆதி விநாயகர், நவகிரகம் இருக்கும் தியான மண்டபம் சென்று உட்கார்ந்து தியானத்தில் அமர்ந்தபின்னர் ஒரு பாடலை இயற்றி முடித்தார். அதுதான் கோபாலகிருஷ்ண பாரதியாரின் புகழ்மிக்க ஆபோகி ராக கீர்த்தனை "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பது. இப்படி இவர் திருவையாற்றில் வந்து உட்கார்ந்து கொண்டு தில்லை சபாபதிக்கு யார் சமானம் என்று பாடவேண்டும் என்பதைப் பற்றி விளையாட்டாக விமர்சனம் செய்த ஒருவர் சொன்னார், ஸ்ரீதியாகராஜர் ராமனுக்கு நிகர் யார் என்றுதானே பாடிக் கொண்டிருக்கிறார், தான் செய்யும் கீர்த்தனையில் தான் வழிபடும் தில்லை நடராஜனுக்கு சமானம் யார் என்று பாடினார் என்று சொன்னார். இது அப்படி போட்டிக்குப் பாடியதல்ல என்றாலும், அந்த விமர்சனமும் சுவையாகத்தான் இருக்கிறது.

இவர் மாயூரத்தில் வாழ்ந்த காலத்தில் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்த்தாத்தா என்று புகழ்பெற்ற உ.வே.சாமிநாத ஐயர் தமிழ் பயின்று கொண்டிருந்தார். உ.வே.சா.வின் தந்தையார் ஒரு சங்கீத உபன்யாசகர். அந்த வகையில் அவரிடமிருந்த சங்கீதத்தையும் உபன்யாசக் கலையையும் உ.வே.சா. கற்று வைத்திருந்தார். மாயூரத்தில் தமிழ் படிக்க வந்த இடத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் இருப்பதறிந்து இவருடைய தந்தையார் உ.வே.சா.வை அவரிடம் இசையும் கற்றுக் கொள்ளப் பணித்தார். ஆனால் குருநாதர் பிள்ளை அவர்கள் உ.வே.சா.விடம் ஒன்று தமிழ் படி அல்லது இசையைக் கற்றுக்கொள், இரண்டில் எது என்பதை நீயே முடிவு செய்து கொள் என்றதும் ஐயர் தமிழே என்று முடிவு செய்து கொண்டார்.

கோபாலகிருஷ்ண பாரதியார் இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில், இப்போது எண்ணெய் கிடைக்கும் கிராமமான நரிமணம் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் ராமசுவாமி சாஸ்திரிகள். அவரும் ஒரு சிறந்த கர்நாடக சங்கீத வித்வான். மாயூரத்தில் அப்போது ஏராளமான வேத பண்டிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியொரு பெரும் பண்டிதரிடம் இவர் அத்வைத சித்தாந்தத்தையும், யோக சாஸ்திரத்தையும் பயின்றார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், துறவறமும் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு பிரம்மச்சாரியாக சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்தார். இவருடைய குடும்பத்தில் அனைவருமே சங்கீதம் கற்றவர்கள். ஆகையால் இளம் வயதிலேயே இவருக்கு கர்நாடக சங்கீதம் கைவரப் பெற்றுவிட்டது. நாளடைவில் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சியும் பெற்று விளங்கினார். குடும்பத்தில் சங்கீதம் கற்றுக் கொண்டதோடு, இவர் பல பெரிய வித்வான்களின் கச்சேரிகளுக்கெல்லாம் சென்று கேட்டு, கேள்வி ஞானத்தால் தன் இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார். அப்படி இவர் இசையொன்றிலேயே, வேறு சிந்தனைகள் இல்லாமல் ஆழ்ந்து இருந்த காரணத்தால், நல்ல சங்கீதம் பாடவும், அதற்கேற்ற வகையில் புதிய சாகித்யங்களை இயற்றவும் திறமை பெற்றார். 

மாயூரத்தில் இவர் பெரும் அறிஞர்களிடம் அத்வைத சித்தாந்தம் பயின்ற காரணத்தால் இவருடைய கீர்த்தனங்களில் மிக எளிதாக அத்வைத கருத்துக்களை உள்ளடக்கி இயற்றிப் பாட முடிந்தது. மகாகவி பாரதியார் தன்னுடைய "சங்கீத விஷயம்" எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறபடி, பண்டைய காலத்து மகான்களின் பாடல்களைப் பாடுவதோடு, புதிதாகவும் பாடல்களை இயற்றிப் பாட முயற்சி செய்ய வேண்டும் எனும் கருத்துக்கேற்ப இவர் புதிய புதிய சாஹித்யங்களை இயற்றிப் பாடினார். பாரதி சொன்ன வாக்குப்படி "பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்காதீர்கள்" என்பதற்கேற்ப இவர் புதிய இசைக் கிணறு வெட்டி அதில் ஊறிய சுவையான இசை நீரைப் பருகத் தொடங்கினார். அதற்கு சுவைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் இருந்தது.
கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே பல சங்கீத வித்வான்கள் இவருடைய பாடல்களைத் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிவிட்டார்கள். அப்போதெல்லாம் ஜமீன்தார்கள் சங்கீத வித்வான்களை அழைத்து கச்சேரிகள் செய்யச் சொல்வது வழக்கம். அப்படி பல ஊர்களிலும் நன்கு தேர்ந்த இசை ரசிகர்கள் மத்தியில் இவருடைய பாடல்கள் பல வித்வான்களாலும் பாடப்பட்டன. சில இசைக் கலைஞர்கள் இவரிடம் வந்து தங்களுக்குப் புதிதாக இன்னமாதிரியிலான கருத்து கொண்ட சாகித்தியங்கள் தேவையென்று கேட்பார்கள்; இவரும் அவர்களுக்கேற்ற பாடல்களை இயற்றித் தந்திருக்கிறார். இவருடைய பாடல்களில் தன்னுடைய பெயரை 'முத்திரை'யாகப் பயன்படுத்தியிருப்பதை நாம் காணமுடியும். 

அந்த நாட்களில் பற்பல கதைகளை இசை மூலமாகவும், பாட்டிடையிட்ட கதைகளாகவும் கதாகாலக்ஷேப பாணியில் சொல்வது வழக்கம். அந்த வகைக்கு ஏற்றார்போல இவர் பாடல்களையும் கதைகளை உள்ளடக்கி எழுதி வந்தார். அந்த முறையில்தான் இவர் பெரிய புராணத்தில் உள்ள "திருநாளைப்போவார்" சரித்திரத்தை சிறிது ஆங்காங்கே மாற்றி வேதியர் போன்ற சில புதிய பாத்திரங்களைப் படைத்து "நந்தனார் சரித்திரம்" எனும் இசை நாடக நூலை இயற்றினார்.

"திருநாளைப்போவார்" வரலாற்றில் நந்தன் என்பார் ஒரு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த விவசாயி. தில்லை நடராசப் பெருமான் மீது அளப்பரிய பக்தி கொண்டவர். தினந்தோறும் வயல்வேலைகள் முடிந்தபின் தில்லை நடராசப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்று நினைப்பார். ஆனால் வேலை இருந்து கொண்டே இருப்பதால் அப்படிச் சென்று தரிசிக்க இயலவில்லை. இறுதியில் இவர் தில்லை சென்று தரிசிக்க முயலும்போது குறுக்கே நந்தி அமர்ந்து மறைக்க, இவர் பாடியதும் அது நகர்ந்து வழிவிட, இவர் ஜோதியில் கலந்தார் என்கிறது புராணம். கதைக்குச் சுவை சேர்க்கவேண்டி இவர் அதில் மறையவர் எனும் பாத்திரமொன்றை படைத்து, அவர் நந்தனை தில்லை செல்லாதபடி வேலை வாங்கியதாக கோபாலகிருஷ்ண பாரதியார் கற்பனையை ஓடவிட்டுவிட்டார். அந்த சுவை சேர்த்த பகுதி நாளடைவில் தமிழகத்தில் ஜாதிப் பிரச்சனையாக உருவெடுத்த கொடுமையும் நடந்தது. கற்பனை பாத்திரம் கொடுத்த கேடு இது.

இவருடைய பாடல்களும் சரி, அதன் கருத்துக்களும் சரி மிக மேலானவைகள். ஆனால் பாடல்களில் தமிழிலக்கணம் கடைபிடிக்கப்படவில்லை என்பது சிலர் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையே கூறியிருக்கிறார். இவர் ஏராளமான பாடல்களை இயற்றியிருந்தும் இவருடைய 'நந்தன் சரித்திரம்' பிரபலமடைய அன்று தஞ்சை மண்ணை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர்களும் ஒரு காரணம். அது என்ன? இப்போது ஹரிகதா எனும் கதாகாலக்ஷேப முறையை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் மராட்டிய மன்னர்கள். அதனால் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம் ஹரிகதை முறையில் எங்கும் பிரபலமானது. இவர் தனது 85ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் 390க்கும் மேற்பட்ட ஏராளமான பாடல்கள் புகழடைந்திருந்தாலும் இங்கு ஒருசில பாடல்களைப் பார்க்கலாம்.

வ.எண்பாடல் தலைப்புஇராகம்தாளம்
01உத்தாரந் தாரும்தோடிஆதி
02எல்லோரும் வாருங்கள்கேதாரம்ரூபகம்
03ஐயே மெத்தகடினம்புன்னாகவராளிஆதி
04கண்டாமணியாடுதுகரகரப்ரியாரூபகம்
05காணாத கண்ணென்னநாதநாமக்ரியைசாபு
06கோபுர தரிசனமேதன்யாசிஆதி
07சற்றே விலகியிரும்பூரிகல்யாணிரூபகம்
08தில்லை வெளியிலேயமுனா கல்யாணிஆதி
09தில்லையம்பலத் தலஉசேனிரூபகம்
10நந்தா நீசிவநாதநாமக்ரியைசாபு
11பித்தந்தெளிய மருந்செஞ்சுருட்டிரூபகம்
12மார்கழிமாதத் திருவாதிரைநவரோசுஆதி
13அரகர சங்கரதண்டகம்*
14ஆடிய பாதத்தைத்அசாவேரிதிச்ரம்
15ஆடுஞ்சி தம்பரமோபேஹாக்ரூபகம்
16ஆடியபாதா இருவர்சங்கராபரணம்ரூபகம்
17ஆனந்தக் கூத்தாடினார்கல்யாணிரூபகம்
18இன்னமும் சந்தேகப்கீரவாணிமிச்ர ஏலம்
19உனது திருவடிசரசாங்கி / வதாங்கிஆதி
20எந்நேரமும் உந்தன்தேவகாந்தாரிஆதி
21எப்போ வருவாரோசெஞ்சுருட்டிஆதி
22கனகசபாபதி தரிசனம்தன்யாசிஆதி
23சங்கரனைத் துதித்தாடுதோடிஆதி
24தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத்நாதநாமக்ரியைஆதி
25தாண்டவ தரிசனந்தாரும்ரீதிகௌனசம்பை
26திருவாதிரை தரிசனதிற்குதன்யாசிதிரிபுட
27தில்லையைக் கண்டபோதேவிருத்தம்*
28பக்தி பண்ணிக்தண்டகம்*
29பாடுவாய் மனமேசெஞ்சுருட்டிஆதி
30பார்க்கப் பார்க்கத்அபிகாம்போதிரூபகம்
31பிறவாத வரந்தாருஆரபிஆதி
32வேதம் படித்ததும்தண்டகம்*
33தில்லையக்கண்ட போதேவிருத்தங்கள்*
34ஆடிய பாத தரிசனம்யதுகுல காம்போஜிஆதி - 2 களை
35ஆடிய பாதமேஅசாவேரிமிச்ர சாபு
36கண்டேன் கலிகல்யாணிரூபகம்
37கண நாதா சரணம்மோகனம்ஆதி
38கைவிட லாகாதுமலஹரிரூபகம்
39குஞ்சித பாதத்தைபந்துவராளிரூபகம்
40தில்லை தில்லைகாபிஆதி
41தேவா ஜெகன்கல்யாணவசந்தம்ஆதி
42நடனம் ஆடினார்மாயமாளவ கௌளைமிச்ர சாபு
43நந்தா உனக்கிந்தமோகனம்ஆதி
44பாதமே துணைபூர்ணசந்த்ரிகஆதி
45மாதவமே ஓசாமாரூபகம்
46இந்தப் பிரதாபமும்சுத்தசாவேரிஆதி
47இது நல்லதன்யாசிஆதி
48சிதம்பரம் போகாமல்செஞ்சுருட்டிஆதி
59தொண்டரைக் காண்கிலமேசஹானாஆதி
50பேயாண்டி தனைக்சாரங்காகண்டசாபு
51போதும் போதுகமலாமனோஹரிஆதி
52மனது அடங்குவதால்கௌளி பந்துஆதி
53மோசம் வந்ததேஆபோகிஆதி
54திருநாளைப் போவான்கமாசுஆதி
55பழனம ருங்கணையும்செஞ்சுருட்டிஆதி
56சிவனே தெய்வம்சுத்தசாவேரி*
57செந்தாமரை மலர்யதுகுல காம்போதிதிச்ரலகு
58சிங்கார மானபூரிகல்யாணிதிச்ரலகு
59தலம்வந்துகேதாரம்கண்டலகு
60சிவலோக நாதன்கேதாரம்கண்டலகு
61ஒரு நாளும்சங்கராபரணம்கண்டலகு
62குதித்தார் எக்கலித்தார்மாயமாளவகௌளைஆதி
63தடாகம் ஒன்றுமோகனம்ஆதி
64நாளைப் போகாமல்**
65காணாமல் இருக்கசக்ரவாகம்மிச்ரம்
66தில்லையம்பலசங்கராபரணம்மிச்ரம்
67வாருங்கள் வாருங்கள்நீலாம்பரிஜம்பை
68சிதம்பர தரிசனம்யமுனாகல்யாணிஆதி
69மீசை நரைத்துப்நாதநாமகிரியைஏகம்
70எல்லைப் பிடாரியேநீலாம்பரி*
71திருநாளைப் போவாரிந்தநாதநாமக்ரியைஆதி
72தத்திப் புலிபோலேமோகனம்திச்ரலகு
73அரகர சிவசிவநாதநாமக்ரியை / மோகனம்ஏகம் / திச்ரலகு
74சேதிசொல்ல வந்தோம்சங்கராபரணம்ஏகம்
75நந்த னாரும் வந்தார்சங்கராபரணம்ஆதி
76ஆடிய பாதத்தைக்சுருட்டிஆதி
77தில்லைச் சிதம்பரத்தைஆரபிஆதி
78ஆசை நேசராகும்மாஞ்சிசாபு
79மாங்குயில் கூவியசங்கராபரணம்ஏகம்
80நந்தனாரே உன்றன்பேகடாசாபு
81ஏழைப் பார்ப்பான்யதுகுலகாம்போதிஆதி
82சிதம்பரம் போய்நீசாமாஆதி
83சிதம்பர தரிசனம்மோகனம்*
84முக்தி அளிக்கும்நவரோசுசாபு
85கனக சபேசன்கமாசுரூபகம்
86வாராமல் இருப்பாரோசுருட்டிஆதி
87இன்னும் வரக்காணேனேபரசுஆதி
88விருதா சன்மமாச்சேதர்பார்ஆதி
89சந்நிதி வரலாமோசங்கராபரணம்ஏகம்
90கனவோ நினைவோகமாசுசாபு
91அம்பல வாணனைஆகிரிமிச்ரசாபு
92களை யெடாமல்நடபைரவிரூபகம்
93திருநாளைப் போவாருக்குஅசாவேரிஆதி
94அறிவுடையோர் பணிந்தேத்தும்சக்ரவாகம்ஜம்பை
95ஆண்டிக் கடிமைகாரன்செஞ்ருட்டிரூபகம்
96ஆருக்குப் பொன்னம்பலவன்பைரவிஆதி
97இரக்கம் வராமல்போனதென்னபெஹாக்ரூபகம்
98எப்போ தொலையுமிந்தத்கௌரிமனோகரிசாபு
99எந்நேரமும் உந்தன்தேவகாந்தாரிஆதி
100ஏதோ தெரியாமல்அமீர்கல்யாணிரூபகம்
101கட்டை கடைத்தேறகரகரப்ரியாசாபு
102கனகசபாபதிக்கு நமஸ்காரம்அடாணாஆதி
103காரணம் கேட்டுவாடிபூர்விகல்யாணி*
104சபாபதிக்கு வேறு தெய்வம்ஆபோகிஆதி
105சம்போ கங்காதராஅபுரூபம்ஆதி
106சிதம்பரம் அரஹராபியாகடைஆதி
107சிதம்பரம் போவேன் நாளைபெஹாக்ஆதி
108சிந்தனை செய்துசெஞ்சுருட்டிஆதி
109சிவலோகநாதனைக் கண்டுசெஞ்சுருட்டி / மாயமாளவகௌளைரூபகம்
110தரிசனம் செய்தாரேகல்யாணிஅட
111திருவடி சரணம்காம்போஜிஆதி
112தில்லை சிதம்பரம்யமுனாகல்யாணி ஓர் சாரங்காசாபு
113தில்லைத் தலமென்றுபூரிகல்யாணி / சாமாஆதி
114நடனம் ஆடினார்வசந்தாஅட
115நந்தன் சரித்திரம்சங்கராபரணம்ஆதி
116நமக்கினி பயமேதுகௌளிபந்துஆதி
117நீசனாய் பிறந்தாலும்யதுகுலகாம்போதிசாபு
118பத்தி செய்குவீரேதோடிஆதி
119பத்திகள் செய்தாரேயதுகுலகாம்போதிஆதி
120பார்த்துப் பிழையுங்கள்யதுகுலகாம்போதிரூபகம்
121பெரிய கிழவன் வருகிறான்சங்கராபரணம்ரூபகம்
122மற்றதெல்லம் பொறுப்பேன்சாவேரிரூபகம்
123வருகலாமோவையா உந்தன்மாஞ்சிரூபகம் / சாபு
124வருவாரோ வரம் தருவாரோஷ்யாமாஆதிNo comments:

Post a Comment

You can give your comments here