பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 4, 2015

திருவருட்பாவில் ரசித்த சில பாடல்கள்.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித் தொழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     1.

ஈஎன்று நான்ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என் னிடம் ஒருவர்ஈ
திடு என்றபோதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும் உள நினை விடாநெறியும் அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில்
சீஎன்று பேய் என்று நாய்என்று பிறர் தமைத் தீங்குசொல் லாத தெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள் வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     2.

வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியை ஓர் எலிசீறுமோ பெரிய மலையை ஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் தூண் ஒரு துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர் அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறுமோ மனத்தற்பமும் விகற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                                    3.

மனமான ஒருசிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்
சிவமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம் சிறுகுகையி னுட் புகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும் செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ
என்சொல் கேளான் எனது கைப்படான் மற்றிதற் கேழையேன் என் செய்குவேன்
தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     4.

நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற நிலன்உண்டு பலனும்உண்டு
நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு உடைஉண்டு கொடையும்உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும் உளம்உண்டு வளமும்உண்டு
தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள செல்வங்கள் யாவும்உண்டு
தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத் தியானமுண் டாயில்அரசே
தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள் வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     5.

நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை நாடாமை ஆகும்இந்த
நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட நாய்வந்து கவ்விஅந்தோ
தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன் தளராமை என்னும்ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன் தன்முகம் பார்த்தருளுவாய்
வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை மழையே மழைக்கொண்டலே
வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே மயில்ஏறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     6.



1 comment:

Thanga Jothi said...

வள்ளலார் அருளிய தவத்தை பற்றி அறிந்து கொள்ள

http://tamil.vallalyaar.com/?p=2902