தமிழகத்தின் வட எல்லை காத்த பெருமகனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியாரின் 113ஆவது பிறந்த நாளையொட்டி அவரது "அறவழிப் போராட்டங்கள்" எனும் நான் எழுதிய வரலாற்றை என் காணிக்கையாக வழங்குகிறேன். போராட்டம், அதுவும் அறவழிப் போராட்டம் எப்படி இருக்கும் என்பதை அவருடைய போராட்ட வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
சிலம்புச்
செல்வரின் அறவழிப் போராட்டங்கள்
1952
தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,
பலம் பொருந்தியதாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சி இதர உதிரிக் கட்சிகளுடன் சேர்ந்தால்
காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் நீடிக்க முடியாது என்பதால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்
இந்த சூழ்நிலையில் ராஜாஜி முதலமைச்சர் ஆனால் தாக்குபிடிக்க முடியும் என்று நம்பினார்கள்.
அதற்காக இரு தலைவர்களை பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சந்திக்க அனுப்பி அவருடைய அனுமதியையும்
பெற்று வந்தார்கள். அவர் இவர்களிடம் காமராஜ் என்ன சொல்கிறார் என்று கேட்டிருக்கிறார்,
அதற்கு அவர்கள் காமராஜர் சொல்லித்தான் நாங்கள் வந்தோம் என்று பதில் சொன்னதும், சரி
போய் ராஜாஜியின் சம்மதத்தைப் பெறுங்கள் என்று அனுப்பி வைத்தார்.
10. வடக்கெல்லை பொராட்டம்
ஆசிரியர்
தஞ்சை வெ.கோபாலன் இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.
தஞ்சை வெ.கோபாலன், தஞ்சாவூர் 613007
என்னுரை
தமிழகத்தில் சிலம்புச்
செல்வர் என்றால் தெரியாதவர் யாரும் இருக்கமுடியாது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும்
சரி, சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவழி மாநிலம் பிரிந்த காலத்திலும் சரி, சென்னை மாகாணத்தில்
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற உணர்வோடு போராடியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான
கிராமணியார். ம.பொ.சி. எனும் இந்த மூன்றெழுத்து தமிழர், குறிப்பாக தமிழ் இளைஞர்களின்
உள்ளங்களில் ஒரு எழுச்சியை உண்டு பண்ணிய காலம் அது. அவருடைய தூய வெண்ணிற கதராடை, தோளில்
மடிப்பு கலையாத கதர்த் துண்டு, முகத்தில் வீரம் ததும்பும் மீசை, அவருடைய கம்பீரத் தோற்றம்
இவற்றுடன் தோற்றமளித்த அவர் மேடைகளில் பேசத் தொடங்கினால், அந்த வெண்கலக் குரலின் இனிமைக்கு
மயங்காத தமிழன் இருக்க முடியாது.
தமிழகத்தில் எல்லைப்
போராடம் என்றால் உடனடியாக ம.பொ.சி. எனும் பெயர்தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு
மொழிவழி மாநிலம் பிரிந்த சமயத்தில் சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போன
நிலையில் அந்த மாவட்டத்தில் தமிழ்ப் பேசுவோர் வாழும் பகுதிகளைத் தமிழகத்துக்குக் கொண்டு
வர அவர் எடுத்த முயற்சிகள், நடத்திய போராட்டங்கள், அதற்காக அவர் சந்தித்த சங்கடங்கள்,
அவர் உழைப்பும், உறுதியும் கொண்டு போராடி வளர்த்தத் தாய்க் கட்சியான காங்கிரஸ் கட்சி
அவரை வெளியேற்றிய போது தமிழ் மொழிக்காகவும் தமிழ் நாட்டு மக்களுக்காகவும் பாடுபடுவதே
என் தலையாய கடமை என்றெண்ணி மகிழ்ச்சியோடு கட்சியைவிட்டு வெளியேறி தன்னந்தனியனாக எல்லைப்
போராட்டங்களை நடத்தியது ஆகியவைகள் மறக்க முடியாத சாதனைகள். அதில் சிறப்பு என்னவென்றால்
அவைகளில் அவர் வெற்றியும் பெற்றார் என்பதுதான்.
சித்தூர் மாவட்டத்தில்
திருத்தணி, திருவாலங்காடு, போன்ற பல தமிழர் வாழும் ஊர்கள் மறுபடி தமிழகத்தின் உட்பகுதியில்
சேர்க்க முடிந்தது இவருடைய போராட்டத்தினால் தான். சென்னை நகரை ஆந்திரர் “மதறாஸ் மனதே”
என்று உரிமை கொண்டாடியபோது “தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்ற கோஷம் எழுப்பி
உணர்ச்சியை ஊட்டியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. வடக்கில் வேங்கடமும் தெற்கில் குமரிமுனையும்
தமிழகத்தின் எல்லையென்று சொல்லி போராடிய அவர் குறைந்தது திருத்தணியையாவது தமிழகத்தில்
இணைக்க முடிந்தது இவரது அயராத உழைப்பினால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
சுதந்திரப் போராட்டக்
காலத்தில் அவருடைய தியாகம், சிறையில் அவர் கிட்டத்தட்ட இறந்து போகும் நிலையில் இருந்ததால்
பிரிட்டிஷ் அரசு இவரை அவசர அவசரமாக சிறையிலிருந்து விடுதலை செய்து இரவோடு இரவாக தஞ்சையிலிருந்து
இவரைச் சென்னைக்கு ரயிலேற்றி விட்ட வரலாறு ஒரு சோகக் கதை. இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் நான்கு
பேர் தூக்கிக் கொண்டு தஞ்சை சிறுவர் சீர்திருத்த சிறையிலிருந்து ரயில் நிலையத்துக்குத
இருட்டில் தூக்கிக் கொண்டு வந்த போது வழியில் போவோர் சிலர் “ஐயோ பாவம்! ஏதோ அனாதை பிணம்
போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டு போனதை கேட்கும் அவலமும் இவருக்கு ஏற்பட்டதை எப்படி
மறக்க முடியும்?
அவர் பாடுபட்டு
உழைத்து, சுதந்திரப் போரில் ஈடுபட்டு, பிறகு
சுதந்திரம் பெற்ற பின்பு 1952இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக இவர் அயராமல்
பிரச்சாரம் செய்து காங்கிரசின் வெற்றிக்கு பாடுபட்டதை மறந்து இவரை கட்சி வெளியேற்றியது.
அப்போதும் மனம் துவளாமல் கொண்ட கொள்கைக்காக அயராது உழைத்து தமிழ், தமிழன் என்றே வாழ்ந்தவர்
சிலம்புச் செல்வர். அவர் வளர்த்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பல பதவிகளைப் பெற்றிருக்க
வேண்டிய இவர் அப்படி எதுவும் பெறாமல், மேலவை துணைத் தலைவராகவும், மேலவை உறுப்பினராகவும்,
சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் எனும் பதவியிலும் மட்டுமே இருந்தாரே தவிர வேறு எந்த
சிறப்பையும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சி
காலத்தில் தமிழகத்தில் தியாக மண் எடுக்கும் நிகழ்ச்சி சுதந்திரப் போராட்டம் நடந்த சில
இடங்களுக்குச் சென்று அங்கு சென்று புனித மண் எடுத்து டெல்லியில் மகாத்மா காந்திஜியின்
சமாதியில் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிலம்புச் செல்வரை வேதாரண்யத்துக்கு
அனுப்பி, அங்கு 1930இல் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரக போரின் நினைவாக புனித மண்
எடுத்து வரப் பணித்தார் எம்.ஜி.ஆர். அவ்வாறே சிலம்புச் செல்வர் தனது தள்ளாத வயதிலும்
வேதாரண்யம் சென்று அங்கு புனிதமண் எடுத்து வந்து தஞ்சையில் ரயிலேறி சென்னை சென்று பின்
டெல்லியில் காந்தி சமாதியில் கொண்டு போய் சேர்த்த வரலாறும் மறக்க முடியாத நிகழ்ச்சி.
இந்த பயணத்தில் வேதாரண்யத்தில் ம.பொ.சியை அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு கம்யூனிஸ்ட்
கட்சி எம்.எல்.ஏ. மட்டும் உடன் இருந்து உதவிகள் புரிந்ததைத் தவிர வேறு யாரும் இல்லாததை
அவர் உணர்ந்து வருத்தப் பட்டார். தஞ்சையில் அவர் ராமேஸ்வரம் விரைவு ரயிலில் ஏறுவதற்காக
தஞ்சை ரயில் நிலையம் வந்த போது தஞ்சாவூர் தொகுதி எம்.பி. திரு சிங்காரவடிவேலு அவர்கள்
டெல்லி செல்வதற்காக ரயில் ஏற வந்த போது எதேச்சையாக இவரைச் சந்தித்து உரையாடினார்.
சமீப காலமாகத் தமிழகத்தில்
நடைபெறும் பல போராட்டங்கள் மேலோட்டமாக வெறுப்பு அரசியலின் அடிப்படையில் நடைபெறுவதையும்,
அதில் காந்திய சிந்தனைகள் அடிப்படையிலோ, அகிம்சை முறைப்படியோ நடப்பதில்லை என்கிற வருத்தமும்
பலருக்கு உண்டு. மேலும் காந்திஜி சொன்ன அகிம்சை, உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் போன்ற
சொற்கள் பயன்படுத்தப் படுகின்றனவே தவிர, அவை அந்தந்த சொற்களின் பொருளுக்கு ஏற்ப நடைபெறுவதில்லை.
காந்திஜி உண்ணா நோன்பு இருக்கிறார் என்றால் அதற்கு சில நாட்கள் முன்பிருந்தே தன்னைத்
தயார் செய்து கொள்வார். உண்ணாநோன்புக்கு முதல் நாள் எனிமா எனும் வயிற்றை சுத்தம் செய்யும்
முறையையும் கடைபிடிப்பார். போராட்ட காலம் முழுவதும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலேயே
இருப்பார். விரதத்தின் நோக்கத்துக்கு எந்த இடையூறும் நேரிடாத வண்ணம் ஒழுங்கு, கட்டுப்பாட்டை
கடைபிடிப்பார். அவர் இட்ட பெயர்களைச் சொல்லி இப்போதெல்லாம் நடைபெறும் போராட்டங்கள்
அவரை இழிவு செய்வதாகவே இருப்பது வருத்தமளிக்கிறது. அப்படிப்பட்ட மகாத்மாவின் உண்மை
சீடரான ம.பொ.சி. எனும் தியாகச் செம்மலின் தியாக வரலாறு வருங்கால இளைஞர்கள் மனங்களில்
தேசபக்தியையும், பலன் கருதாத உழைப்பையும் உருவாக்குமென்கிற எண்ணத்தில் அவர் வாழ்க்கையில்
நடந்த அறவழிப் போறாட்டங்களைப் பற்றி மட்டும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். அவர்
வாழ்க்கை ஒரு நீண்ட வரலாற்றை உள்ளடக்கியது. ஆனால் இந்த நூல் அவரது அறவழி, அகிம்சை வழி
இவற்றை மட்டுமே எடுத்துக் காட்ட எழுதப்பட்டது என்பதைச் சொல்லி, ஐயா சிலம்புச் செல்வரின்
புகழ் ஓங்குக என்று இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
தஞ்சை வெ.கோபாலன்.
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007
உ
சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் வாழ்க்கை முழுவதுமே
போராட்டங்கள் நிறைந்தது. மகாத்மா காந்தியடிகளின் பாதையிலிருந்து சிறிதும் விலகாத அறவழி
நின்று போராடி, தனி மனிதராகப் பல சாதனைகளை நிகழ்த்தியவர். சுய நலம் என்பது அறவே இல்லாமல்
பொதுநலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். தூய்மை அவர் உடையில் மட்டுமல்லாமல்
உள்ளத்திலும், செயலிலும் இருந்ததை அனைவரும் அறிவர். இன்றைய அரசியல் சூழலில் அவரை நினைத்துப்
பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர் காலத்திலேயே அவருக்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளை
யார் செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை மரியாதையோடு பேசியும் நடத்தியும் வந்த
இவரது பெருந்தன்மையை இன்று யாரிடமாவது பார்க்க முடியுமா? மாயவரத்தில் புதிய கல்வித்
திட்டம் பற்றி ராஜாஜி கேட்டுக் கொண்டதால் பிரச்சார பயணம் மேற்கொண்ட போது கல்லால் தாக்கப்பட்டு
மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய போதும் யாரையும் பொல்லாங்கு சொல்லாமல் அன்றிரவே சென்னை
வந்து சேர்ந்த பழிவாங்கும் உணர்வில்லாத மனிதனை எங்கேனும் காண முடியுமா? ஒன்று தமிழரசுக்
கழகத்தைக் கலைத்து விடு, இல்லையேல் காங்கிரசை விட்டு வெளியேறு என்று கைகாட்டிய போதும்,
தன் தாய்க்கட்சியை விட்டு நீங்காமல் எதிர்வரும் அவமதிப்புகளைத் தாங்கிக் கொண்டு, அவர்களாகப்
பார்த்து வெளியேற்றியபோது எந்த கடுஞ்சொற்களும் சொல்லாமல் வெளியேறிய அந்த இதயம் வேறு
யாருக்கேனும் வருமா? இங்கு நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்விலும் சிலம்புச் செல்வர்
இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை அவர் எப்படி எதிர் கொண்டிருப்பார் என்றுதான்
எண்ணத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட மாமனிதன் நம்மோடு ரத்தமும் சதையுமாக வாழ்ந்திருந்தார்
என்ற நினைப்பே ஒரு கனவு போல அல்லவா இருக்கிறது. இவற்றையெல்லாம் எண்ணுகின்ற போதுதான்
மனிதருள் மாணிக்கமாக அவர் வாழ்ந்திருந்தார் என்பதை உணர முடிகிறது.
இப்போதெல்லாம்
போராட்டங்களை இரு வேறு கோணங்களில் பார்க்க முடிகிறது. ஒன்று, தன்னை விளம்பரப்படுத்திக்
கொள்வதற்காக, மற்றொன்று போராட்டத்தின் விளைவு எதுவாக இருந்தாலும் அது குறித்து சிறிதும்
கவலைப் படாமல், பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தன்னுடைய போராட்டம் குறித்து செய்திகளும்
புகைப்படங்களும் வந்தால் சரி என்று நினைக்கும் விளம்பரப் பிரியர்கள். இதுபோன்ற கூட்டத்தாரின்
மனநிலையோடு ஐயா சிலம்புச் செல்வர் அவர்களின் போராட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான்
ஐயாவுடைய மேன்மை புலப்படுகிறது. பதவிகள், பெருமைகள், பிறரது பாராட்டுகள் என்று ஊருக்கு
வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் வகையில் அவருடைய போராட்டங்கள் அமைந்திருக்க வில்லை
என்பது இப்போது பளிச்சென்று நம் கவனத்தில் படுகிறது. இவரை ஏன் எவரும் ஒரு முன்மாதிரியாக
எடுத்துக் கொள்ளவில்லை? அவர் போன்ற தியாகம் புரிந்தவர்கள் எவரேனும் இன்றைய காலகட்டத்தில்
இருக்கிறார்களா என்று எண்ணிப் பார்த்தபோது, ஐயா அவர்கள் இமயம் போல் அரசியல் போராட்டக்
களத்தில் மிக உயர்ந்த நிலையில்தான் காணப்படுகிறார். அவருடைய போராட்டப் பாதையைச் சற்று
திரும்பிப் பார்த்து அவருடைய பாதையோடு இன்றைய தலைவர்களின் பாதைகளையும் ஒப்பிட்டுப்
பார்த்தால் தான் பெரியோர்கள் என்றும் பெரியோர்களே என்ற முடிவுக்கு வர முடியும்.
ஐயா
சிலம்புச் செல்வர் அவர்கள் தன்னுடைய “எனது போராட்டங்கள்” எனும் தன் நூலை யாருக்குக்
காணிக்கையாக்கி இருக்கிறார் தெரியுமா? “என்னை
ஆளாக்கிவிட்ட அண்ணல் காந்தியடிகளுக்கு இந்நூலைக் காணிக்கை ஆக்குகிறேன்” என்றுதான்
தன்னுடைய வரலாற்று நூலைத் தொடங்குகிறார். இதில் குருபக்தி மட்டுமல்ல, மகாத்மா காந்தியடிகள்
வகுத்துத் தந்த அகிம்சைப் பாதையில் தனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையையும்
வெளிப்படுத்துகிறார்.
ஐயா
சிலம்புச் செல்வர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்குக் குறிப்பாக இளைய
சமுதாயத்தினருக்குப் போய்ச் சேரும்படி எழுதி வெளியிட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்ட
வசமாக அப்படிப்பட்ட விசாலமான மனம் படைத்த தலைவர்கள் யாரும் அதை எழுத முன்வராத சூழ்நிலையில்
தன் வரலாற்றைத் தானே எழுத வேண்டிய அவல நிலையை அவர் எடுத்துரைக்கிறார். அதிலும் தன்
வரலாற்றை ஒரு விளம்பரமாக நினைக்காமல், பிற்காலத்தில் நம் வரலாற்றை உள்ளது உள்ளபடி மக்களுக்குப்
போய்ச் சேரவேண்டுமென்கிற அவாவின் காரணமாக எழுதியிருக்கிறார்.
தன்னுடைய
வாழ்க்கை வரலாற்றை எழுதத் தூண்டுகோலாக இருந்த இன்னொரு விஷயத்தையும் ஐயா தன் நூலில்
குறிப்பிடுகிறார். அவரது இந்த வரலாறு ஒரு தனி நபருடைய வரலாறாகக் கருதாமல், உருவாகிக்
கொண்டிருக்கும் புதிய தமிழகத்தின் வரலாறாக இருக்க வேண்டுமென்கிற கருத்தில் இதனை அவர்
எழுதியாகச் சொல்கிறார்.
இந்திய
சுதந்திரம் குறித்தும், அந்த சுதந்திரத்துக்காக ஐயா நடத்திய போராட்டங்கள் குறித்தும்
நாம் நினைத்துப் பெருமைப் படக் காரணம் அவர் அனுபவித்த இருபதாண்டு கால சிறை வாசமும்,
அவர் நடத்திய அறவழிப் போராட்டங்களும் தான். நேர்மையாக வாழ்ந்த ஒரு தேசபக்தன் வாழ்க்கையில்
அந்த அடிமை இந்தியாவில் இன்ப வாழ்க்கை என்பதே இல்லாததோடு, துன்பம் மட்டுமே துரத்திய
வாழ்க்கையாக அமைந்திருந்தது வியப்பல்ல. அவர் எவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினாரோ,
அவை அனைத்துமே இன்று மாறி அவர் விரும்பிய சுதந்திர இந்தியா உருவாகி விட்டதாகக் கருத
முடியாது. அவர் அரசியல் போராட்டங்கள் மட்டுமல்லாமல், சமூகப் பிரச்சினைகளுக்காகவும்
போராடியிருக்கிறார். காலத்தால் அவருடைய தியாகம் மறைந்து விடாமல் இருக்கவும், இளைய தலைமுறையினருக்கு
அவர் போன்ற மகான்களின் வரலாறு தெரிந்திருக்க வேண்டுமென்கிற அவாவினாலும், அவர் பின்பற்றி
வாழ்ந்த அறவழியையும், அதற்காக அவர் நடத்தியப் போராட்டங்கள் பற்றியும் எழுத வேண்டியது
அவசியமாகிறது. இவருடைய வாழ்க்கை ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்த வரலாறு தானே, அதை மறுபடி
தூசி தட்டி வெளிக் கொணர என்ன காரணம் எனும் வினா சிலர் மனங்களில் எழலாம். அதற்கு ஒரே
காரணம் சொல்ல முடியும். அது, இராமாயணமும், மகா பாரதமும் மக்கள் அனைவருமே அறிந்த இதிகாசங்கள்
தான். ஆனாலும் அவை பற்றிய சொற்பொழிவு எங்கேனும் நடக்கிறது என்றால், நாம் விரும்பிப்
போய் கேட்கிறோமே, ஏன்? இராமாயண, மகாபாரதக் கதைகள் நமக்குத் தெரியாது என்பதற்காகவா?
இல்லை இல்லை. நல்ல விஷயங்களை எத்துணை முறை கேட்டாலும், அதை மனங்களில் பதிய வைத்துக்
கொண்டாலும், அதைத் திரும்பத் திரும்பக் கேட்பதுதான் நம்மை நல்வழிப்படுத்திக் கொள்ள
வழியாக இருக்கும். அந்த முறையில், ஐயா ம.பொ.சி. அவர்களுடைய அறவழிப் போராட்டங்களை மீண்டுமொரு
முறை நினைவுப் படுத்திப் பார்க்கலாம்.
2. அரசியல் பிரவேசம்.
சிலம்புச்
செல்வரின் போராட்டத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்று சிந்தித்தபோது அவர் அரசியலில்
ஈடுபட்ட காலத்திலிருந்து தொடங்கு என்றது என் மனம். ஆம், அதுதான் இந்த நூலின் தலைப்புக்குப்
பொருத்தமாக இருக்கும். ஐயா அவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்தது 1923ஆம் வருஷத்தில்.
அப்போது அவருக்கு வயது பதினேழு. அவருடைய அரசியல் பிரவேசம் ஒளி பொருந்திய விளக்கொளியில்,
ஏராளமான பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஜோடனைகள் உள்ள மேடையில் அல்ல. தெருவில் இளைஞர்கள்
கூட்டத்தில், தேசபக்தர்கள் சார்பில் போட்டியிட்ட சுயராஜ்யக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
கோஷமிட்டுக் கொண்டு போகும் சிறுவர்கள் கூட்டத்தில் தொடங்கியது. அவர் உள்ளத்தில் தேசபக்திக்
கனல் கொழுந்து விட்டு எரிந்த காரணத்தினால், சொந்த வாழ்க்கையில் வறுமை வாட்டிய போதும்,
வசதிகள் அற்ற மிக மிக சாதாரணமான தொழிலாளி குடும்பத்து வாரிசு என்ற முறையில் அவர் பங்கேற்பும்
எளிமையாகத்தான் இருந்தது. அவர் ஊர்வலத்தில் கோஷமிட்டுக் கொண்டு தேசபக்தர்கள் குழுவில்
ஐக்கியமானதற்கு இன்னொரு காரணம், மகாத்மா உள்ளிட்ட பல தேசபக்தர்களை அருகில் இருந்து
பார்க்க முடியும் என்கிற ஆசையும் ஒரு காரணம்.
சைமனே திரும்பிப் போ!
சிலம்புச்
செல்வர் பங்கேற்ற முதல் போராட்டம் சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டம்தான். இந்தியாவுக்கு
எந்தெந்த விதங்களில் சலுகை வழங்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்து பிரிட்டிஷ் அரசுக்கு
அறிக்கை கொடுப்பதற்காக சைமன் என்பவர் இந்தியாவுக்கு வந்தார். 1928 பிப்ரவரி 3ஆம் நாள் சைமன் இங்கிலாந்திலுருந்து வந்து பம்பாய் துறைமுகத்தில்
இறங்கினார். சைமன் கமிஷனில் இந்தியர் எவரும் அங்கம் வகிக்கவில்லை. எனவே இந்திய தேசபக்தர்கள்
அந்த கமிஷனை எதிர்த்தார்கள். “சைமனே திரும்பிப் போ” என்கிற கோஷம் வானைப் பிளந்தது.
நாடெங்கும் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டத்தின் போதுதான் மாபெரும்
தலைவர் பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் ஒரு ஆங்கில அதிகாரியால் தடியால்
அடிக்கப்பட்டு பின் இறந்து போனார். சென்னை நகரத்திலும் சைமன் எதிர்ப்புப் போர் தீவிரமாகியது.
அப்போது ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த
ம.பொ.சி. அவர்கள் காந்திஜியின் அகிம்சையைப் பற்றி அதிகம் அறியாததாலும், இளம் ரத்தம்
வேகப்பட்டதாலும், சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ஒரு ஆங்கிலேயரின் ரொட்டிக் கடையில்
கல்லெறிந்து தன் முதல் தாக்குதலைத் தொடங்கினார்.
ஐயாவின்
அறவழிப் போராட்டம் என்று தலைப்பிட்டு விட்டு அவர் நடத்திய ஒரு வன்முறை நிகழ்ச்சி பற்றி
சொல்வது ஏன் தெரியுமா? அதுதான் அவர் நடத்திய ஒரே ஒரு வன்முறை, அதுவும் அகிம்சை, சத்தியாக்கிரகம்
போன்ற காந்திய கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் வயது இல்லாத காலத்தில் நடத்திய ஒரு உணர்ச்சி
வசப்பட்ட நிகழ்ச்சி. அதுவே முதலும் இறுதியாகவும் போனது. இன்று போல அன்றும் இந்த இளைஞர்களைப்
பிடித்துச் சென்ற காவல் துறையினர் அன்றே இவரை விடுதலையும் செய்து விட்டனர்.
சென்னையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகம்.
அதன்
பிறகு 1930இல் மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். காந்திஜி
தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திலிருந்து கடற்கரை பிரதேசமான தண்டி எனும் ஊர் வரை பாதயாத்திரையாகத்
தொண்டர்களுடன் நடந்து சென்று அங்கு தடையை மீறி உப்பை அள்ளி கைதானார் அல்லவா, அந்தப்
போரையொட்டி தென்னகத்தில் ராஜாஜி அவர்கள் திருச்சி தொடங்கி வேதாரண்யம் வரையில் பதினைந்து
நாட்கள் தொண்டர்களுடன் நடந்தே சென்று உப்பு அள்ளி அவரும் கைதானார். அப்போது சென்னை
நகரில் சிலர் ஒன்று சேர்ந்து ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் உப்பு அள்ளி போராட்டம்
நடத்தினர். அந்த அகிம்சை வழிப் போராட்டத்தில் ஒரு தொண்டராகக் கலந்து கொண்ட ஐயா ம.பொ.சி.
அவர்களுக்கு பிரிட்டிஷ் போலீஸ் கொடுத்த பரிசு பிரம்படி. இதுதான் அவர் பெற்ற முதல் போர்த்தழும்பு.
தொடர்ந்து நடந்த சட்டமறுப்பு இயக்கம், அன்னியத் துணி மறுப்பு, கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில்
பங்கேற்று ஊர்வலம் ஆர்ப்பாட்டம் என்று இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளம். கள்
இறக்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கள் எதிர்ப்பில் தீவிரமாக கலந்து
கொண்டது இவரைச் சார்ந்த உறவினர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை உருவாக்கியது.
உப்பு
சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து சட்ட மறுப்பு இயக்கம் தீவிரம் அடைந்தது. அதில் சென்னையில்
நடந்த மறியலில் பின்னாளில் ராஜாஜியின் சுயராஜ்யா இதழின் ஆசிரியராக இருந்த காசா சுப்பா
ராவ், பின்னாளில் சென்னை மாகாண பிரதான அமைச்சராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியார்
ஆகியோரோடு ஐயாவும் கலந்து கொண்டார். அப்போதெல்லாம் தொண்டர்களை போலீசார் தடியால் அடித்து
ரத்த விளாராக ஆக்கினர். அப்படி அடிபட்ட தொண்டர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக தேசபக்தர்
யு.ராமராவ் என்பார் “காங்கிரஸ் மருத்துவ மனை” ஒன்றை சென்னை நகரில் நடத்தினார். இந்த போராட்டம் இந்தியாவில் வலுப்பெறுவதைக் கண்டு
அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்டு இர்வின் காந்திஜியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு
வட்டமேஜை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த மாநாடு தோல்வியில் முடிவடைந்தது
என்பது அனைவருக்கும் தெரியும்.
கள்ளுக்கடை மறியலும் ஜாதிப் பிரஷ்டமும்.
1931இல்
சென்னை நகரம் முழுவதும் கள்ளுக்கடைகளை மறியல் செய்வது என்று காங்கிரசார் முடிவு செய்தனர்.
தீரர் சத்தியமூர்த்தி தலைமையில் அமைந்த ஒரு குழு இந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை
நடத்தத் தொடங்கியது. அந்த குழுவுக்குச் செயலாளர்களில் ஒருவராக சிலம்புச் செல்வர் இருந்தார்.
கள்ளுக் கடை வாசலில் காந்தி கொடியைத் தூக்கிக் கொண்டு போய் நின்று கொண்டு அங்கு கள்
குடிக்க வருபவர்களைப் பணிவோடு கள் குடிக்காதீர்கள், குடியைக் கெடுக்காதீர்கள் என்று
தொண்டர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஐயா அவர்களே கள் இறக்கும் குலத்தில் பிறந்தவர் ஆனதால்
அவரே கள்ளுக்கடை மறியல் செய்வது அவரது ஜாதிக்காரர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது.
அதனால் விரோதம் வளர்ந்தது. தங்கள் ஜாதிக்காரனே தங்களுக்கு எதிராக செயல்படுவது கிராமணி
குலத்தாருக்குப் பிடிக்கவில்லை. இவரோ பிழைப்புக்கான அச்சுக் கோர்க்கும் தொழிலையும்
பார்த்துக் கொண்டு, அரசியலுக்காக கள்ளுக் கடை மறியலையும் செய்து வந்தார்.
இவர்
கள் குடிப்பதை எதிர்த்ததால் இவரது தந்தையும் தம்பியும் கள் குடிப்பதை நிறுத்தி விட்டனர்.
ஆனால் அந்தக் காலத்தில் கள் இறக்குவதும், கள் விற்பனை செய்வதுமான தொழிலில் இருந்த கிராமணி
இனத்தில் இவர்கள் மட்டும் தான் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அந்த காலகட்டத்தில் தான்
ஐயா அவர்கள் மேடையேறி அவரது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அதிலும் கிராமணிகள் கூட்டத்தில்
அவர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர் பேசிய பேச்சு அது. அதன் பயனாய் அவர்கள் கிராமணிகள்
இருக்கும் தெருவிலிருந்து பிரிந்து போய் ஒரு சேரியில் குடியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.
இவர் குடும்பம் அங்கு குடிபோன போது அங்கு வசித்தவர்கள் இவர்களை மிகவும் அன்போடு நடத்தினார்கள்.
புரட்சிகரமான
எண்ணங்கொண்ட ஐயாவுக்கு அப்போது ஒரு அபூர்வமான யோசனை தோன்றியதாம். அதாவது ஒரு ஹரிஜனப்
பெண்ணை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் என்ன என்கிற யோசனைதான் அது. ஆனால் அதை வெளியில்
சொல்லவோ, செயல்படுத்தவோ இயலாதவராக கூச்ச சுபாவ முடையவராக இருந்ததால் அது நிறைவேறவில்லை.
இது குறித்து அவர் சொல்லும் கருத்துக்களைப் பார்ப்போம்.
“அந்த நாளில் கலப்பு மணங்கள் பெருகினால் சாதி வேற்றுமைகள்
ஒழிந்து விடுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது வெறும் மாயை என்பதனைப் பிற்காலத்தில்
உணர்ந்தேன். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட ஜாதி உயர்வு தாழ்வு உணர்ச்சிகளிலிருந்து
விடுதலை பெறவில்லை. கலப்பு மணத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்கூட சாதிகளற்ற
சமுதாயத்தின் குடிமக்களாக வளர்வதில்லை. தந்தையின் சாதியைச் சார்ந்தே வளர்கின்றன.
ஒரு புரட்சியின் மூலம் சமுதாயத்தில் பொருளாதார
சமத்துவமும் எல்லோருக்கும் கல்வியறிவும் ஏற்பட்டு விடுமானால், சாதிக் கொடுமைகள் மறைந்தொழியும்
என்றே நான் நம்புகிறேன். சோசலிச சமுதாயம் அமைக்கப் படாதவரை சாதி ஒழிப்புப் பிரச்சாரம்
விழலுக்கிரைத்த நீராகத்தான் முடியும்.” (சிலம்புச்
செல்வரின் “எனது போராட்டம்” முதல் பாகம் பக்.71,72)
3. தியாகத் தழும்புகள் - முதல் சிறைவாசம்.
1932 செப்டம்பர் மாதத்தில்
சென்னை கடற்கரையில் ராஜத் துவேஷப் பிரசுரம் ஒன்றை விநியோகித்தமைக்காக இவர் கைது செய்யப்பட்டார்.
இன்றைய நிலைமை அன்றைக்கு இருந்திருந்தால் இவரை ஒரு திருமண மண்டபத்தில் உட்கார வைத்து
உயர்தர உணவகத்திலிருந்து பகல் உணவு வாங்கித் தந்து, மாலையில் மரியாதைகளோடு விடுதலை
ஆகியிருப்பார். இவரது துரதிர்ஷ்டம் இவர் பிரிட்டிஷார் ஆட்சியில் சுதேசிகளுக்காக அல்லவா
கொடி பிடித்தார். இவர் வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு மூன்று மாதக் கடுங்காவல்
தண்டனையும் அத்துடன் ரூ.300 அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும்
மூன்று மாத கடுங்காவல் தண்டனை, ஆக மொத்தம் இவருக்கு ஆறு மாத காலம் சிறைவாசம். இதில்
கொடுமை என்னவென்றால், இப்போது போல் மறுநாளே மேல் முறையீடு செய்து வெளியில் வரமுடியாது.
அதனால் இவருக்கு சிறையில் “சி” வகுப்பு அதாவது கீழ் வகுப்பு கொடுத்து உள்ளே தள்ளினார்கள்.
காங்கிரஸ் கட்சி வளாகத்தில்
வ.உ.சி. சிலை திறப்பு விவகாரம்.
1940-41 காலகட்டத்தில் ம.பொ.சி.
வடசென்னை காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக பதவி வகித்தார். அப்போது அவருக்கு ராஜாஜி,
தீரர் சத்தியமூர்த்தி போன்ற பெருந்தலைவர்களின் பழக்கம் உண்டானது. வடசென்னை காங்கிரசில்
ஐயா பதவி வகித்த சமயம் அந்தப் பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
சுயமரியாதை இயக்கமும் அங்கு பலம் பொருந்தியதாக விளங்கியது. இவ்விரு எதிரணிக் கட்சிகளுக்கு
மத்தியில் காங்கிரசை வளர்ப்பதில் ஐயா மிகவும் சிரமப் பட்டார். அந்த காலகட்டத்தில்தான்
காங்கிரசின் எதிரிகள் வாழ்ந்து வந்த வடசென்னையில் ம.பொ.சி. அவர்கள் பாரதி விழாவை மிகச்
சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்தார். அந்த விழாக்களில் தமிழறிஞர்கள் திரு.வி.க.,
தெ.போ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோரைப் பேச வைத்தார்.
1936 நவம்பர் 18ஆம் தேதி கப்பலோட்டிய தமிழன் என வர்ணிக்கப்பட்ட
வ.உ.சிதம்பரம் பிள்ளை காலமானார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிக தீவிரமான
சுதந்திரப் போர் வீரராகவும், காங்கிரசின் தூணாகவும் விளங்கிய வ.உ.சி. தன்னுடைய சிறைவாசத்துக்குப்
பிறகு காங்கிரசிலிருந்து விலகியே இருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது மரணம்
நிகழ்ந்தது. அவர் காலமான செய்தியை வெளியிட்டு தமிழக பத்திரிகைகள் எதுவும் அனுதாபமோ,
இரங்கலோ தெரிவித்து எழுதவில்லை. தமிழ்நாடு காங்கிரசும் தன் பங்குக்காவது அவருக்கு ஒரு
இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. இதனால் எல்லாம் மனவருத்தமடைந்த
ஐயா ம.பொ.சி. தியாகி வ.உ.சிதம்பரனாரின் உருவச்சிலை ஒன்றை சென்னையில் நிறுவ முயற்சிகள்
மேற்கொண்டார். அதற்காக சென்னை காங்கிரஸ் மாளிகையின் முன்பு அவர் சிலையை நிறுவ நினைத்தார்.
அவருடைய அந்த முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதற்குக் காரணமாக இருந்த
சம்பவம், வ.உ.சி. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் நம்பிக்கை இல்லாமல் 1920இல் காங்கிரசை விட்டு வெளியேறியிருந்தார்.
அவரைத் தங்கள் பக்கம் இழுக்க ஜஸ்டிஸ் கட்சி முயன்றும் வ.உ.சி. அதற்கு இணங்கவில்லை.
மேலும் காந்தியடிகளிடமிருந்த அவருடைய மரியாதையும் மதிப்பும் மாறாமலே இருந்து வந்தது.
ம.பொ.சி.
அவர்கள் சிதம்பரனாருக்குச் சிலை அமைப்பதற்கு காங்கிரசில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதை கட்சி ஏற்றுக் கொண்டதே தவிர, தீரர் சத்தியமூர்த்தி தலைவர் என்ற முறையில் கட்சியிலிருந்து
பணம் செலவழிக்க மறுத்து விட்டார். அதனால் ஐயா பல்வேறு தொழிலாளர் அமைப்புகளிடமிருந்து
நிதி திரட்டி முழு உருவச் சிலை அமைக்க நிதி இல்லாமல் அவருடைய மார்பளவு சிலையொன்றை தயாரித்தார்.
அந்தச் சிலையைத் திறக்க அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் எவரும் சம்மதிக்கவில்லை என்பதால்
முதுபெரும் தலைவராக இருந்த சேலம் விஜயராகவாச்சாரியரிடம் சம்மதம் பெற்றார் ஐயா. விழாவுக்கு
தலைமை வகிக்க தலைவராக இருந்த சத்தியமூர்த்தி மறுத்தார். ஆனால் பின்னாளில் சென்னை நகர
மேயராக இருந்த டி.செங்கல்வராயன் வேண்டிக் கொண்டதற்கிணங்க தலைமை ஏற்க சத்தியமூர்த்தி
ஒப்புக் கொண்டார். ஆனால் சிலை திறப்புக்கு விஜயராகவாச்சாரியாருக்கு பதிலாக டி.எஸ்.எஸ்.ராஜனை
ஏற்பாடு செய்து விட்டார் சத்தியமூர்த்தி.
இப்படி
இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம்
செய்து, கொள்கை அடிப்படையில் விலகிவிட்ட ஒரு தலைவருக்கு சிலை அமைப்பதில் அத்துணை துன்பங்களை
அனுபவித்து ஒருவழியாக தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலக வாசலில் வ.உ.சியின் மார்பளவு சிலையை
நிறுவி அவருக்கு ஒரு விழாவை எடுத்து, அதில் ராஜாஜியையும் பேச வைத்த பெருமை ஐயா சிலம்புச்
செல்வருக்கு உரித்தாகும். வரலாறு மறந்து போயிருந்த வ.உ.சி. அவர்களின் தியாகத்தை வெளியுலகம்
நன்கு தெரிந்து கொள்வதறாக அவர் வரலாற்றை “கப்பலோட்டிய தமிழன்” எனும் அடைமொழியோடு எழுதி
வெளியிட்டார். இந்த அடைமொழிதான் இன்றளவும் மக்கள் நெஞ்சங்களில் நீங்காமல் நிலைத்திருக்கிறது.
யுத்த ஏற்பாடுகளில் ஒத்துழையாமை
பிரிட்டிஷ் இந்திய சர்க்காரின் யுத்த நடவடிக்கைகளில்
அவர்களோடு நாம் ஒத்துழைக்கக் கூடாது என்று மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்காகத் தனி
நபர் சத்தியாக்கிரகம் நடைபெற்றது. நாட்டில் யுத்தம் காரணமாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது;
ஆகையால் யுத்தத்தில் அரசுக்கு ஒத்துழைக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்வது தண்டனைக்குரிய
குற்றமாக அறிவிக்கப் பட்டது. இந்த தனிநபர் சத்தியாக்கிரகம் 1940 அக்டோபர் 17இல் தொடங்கியது. மகாத்மா காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட
தனி நபர்கள் ஒவ்வொரு நாளும் சத்தியாக்கிரகம் செய்து கைதாகி வந்தார்கள். தனி நபர் சத்தியாக்கிரகத்துக்கு
மகாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சத்தியாக்கிரகி ஆச்சார்ய வினோபா பாவே, பின்னாளில்
பூமிதான இயக்கம் நடத்திய பெருமகனார். காந்திஜியின் இந்த தனி நபர் சத்தியாக்கிரகம் பல
முனைகளிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்த போராட்டத்தை சில மிதவாத காங்கிரசார்கூட
“மாப்பிள்ளை சத்தியாக்கிரகம்” என்று வர்ணித்தனர். தனி நபர் சத்தியாக்கிரகத்தில் பங்கெடுக்கும்
போராளிகளை மாலை மரியாதைகளுடன் வழியனுப்புவர். அவர்கள் மக்கள் கூட்டத்தைக் கூட்டி ஓரிரு
வார்த்தைகள் பேசுவதற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள்.
இந்த சத்தியாக்கிரகம் செய்வோரை நீதிபதிகள் கேள்வி கேட்கும்போது, ஆமாம் என்று குற்றத்தை
ஒப்புக் கொள்ள வேண்டும், அவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டு சிறை புகவும் வேண்டும்,
அப்படித்தான் காந்தியடிகள் வகுத்தத் திட்டம்.
இதன்
அடிப்படையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக தனிநபர் சத்த்தியாக்கிரகம் செய்து தண்டனை
பெற்று சிறை புகுந்தனர். 1941 மே மாதம் 15ஆம் தேதி இந்த போராட்டத்துக்குத் தேர்வானார் சிலம்புச்
செல்வர். போர்க்களம் புகும் வீரனுக்கு அளிக்கப்படும் பிரிவு உபசாரம் நடைபெற்று, இவர்
போராட்டம் நடக்கவிருந்த வடசென்னை மரக்கடை வாசலுக்குச் சென்ற போது அங்கும் ஏராளமான கூட்டம்.
அங்கு சத்தியாக்கிரகிக்கு என்று ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அதன் மீது ஏறி நின்று
சுற்றிலும் கூடியிருந்த மக்கட் கூட்டத்தைப் பார்த்து ஐயா வியந்து போனார். மக்களுக்குத்தான்
தன் மீது எத்துணை அன்பு என்று அவருக்கு பெருமிதம். உடனே அவர் மக்களைப் பார்த்து உரையாற்றத்
தொடங்கினார். ஓரிரு வார்த்தைகள்தான் பேசியிருப்பார், உடனே போலீஸ் பாய்ந்து வந்து அவரைக்
கைது செய்தனர். கைதான இடத்திலிருந்து அவரை எழும்பூர் பிரதம மாகாண மேஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு
அழைத்துச் சென்று குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.
தண்டனை
வழங்குமுன் மாஜிஸ்டிரேட் தண்டனை பெறுவோரின் சமூக அந்தஸ்துப் படி சிறையில் ஏ வகுப்பு,
அல்லது பி அல்லது சி வகுப்பு தருவார். அதற்காக மாஜிஸ்டிரேட் இவரைப் பார்த்து “உமக்கு
சொத்து ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார். இவர் இல்லை என்று பதில் சொன்னார். அப்படி
வீடு வாசல் ஏதேனும் இருந்தால் பி வகுப்பு கிடைக்கும். சமூக அந்தஸ்து அதிகம் உள்ளவர்களானால்
ஏ வகுப்பும், ஒன்றுமில்லாதவர்களுக்கு சி வகுப்பும் கிடைக்கும். இவர் தனக்கு சொத்து
எதுவும் இல்லை என்றதும், சி வகுப்புதான் என்று உணர்ந்த நிலையில் மாஜிஸ்டிரேட் இவருடைய
மனைவி பெயரில் ஒரு வீடு இருப்பது தெரிந்தவர் என்பதால் மறுபடி அதே கேள்வியைக் கேட்டும்,
இவர் சொத்து எதுவும் இல்லை என்று பதில் சொன்னதால் ஆறு வார கடுங்காவல் விதித்து சி வகுப்பு
அளித்தார். ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையை எதிர்பார்த்த இவருக்கு ஆறு
வாரங்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது.
தண்டனைக்
காலம் முழுவதும் இவர் சென்னை மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அதே
சிறையில் தண்டனை பெற்ற ஏராளமான காங்கிரசாரும் இருந்தனர். அப்படி இவரோடு சென்னை சிறையில்
அடைபட்டிருந்தவர்களில் சென்னை சதிவழக்கில் விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள் பட்டியலில்
கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம் ஆகியோரும் இருந்தனர். ஆனால்
கம்யூனிஸ்ட்களான அவர்கள் இதர கைதிகளுடன் கலந்து இருக்கக் கூடாது என்பதற்காகத் தனி கொட்டடியில்
தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அரசியல்
கைதிகளுடைய அந்த நாள் சிறை வாழ்க்கை ஒன்றும் இன்று போல திருப்தியாக இருந்ததில்லை. கொட்டடியில்
மாடுகள் அடைக்கப்படுவது போல கூட்டமாகவும், தனித்தனியாகவும் அடைத்து வைக்கப்படுவார்கள்.
சிறையில் இருக்கும்போது இவர்களுக்குப் பணி எதுவும் கிடையாது. ஆகையால் பிறருடன் உரையாடவும்,
பாடவும், புதிய செய்திகளைப் பிறர் சொல்லக் கேட்பதுமாக இவர்கள் பொழுது போய்க் கொண்டிருக்கும்.
ஐயா
ம.பொ.சியின் இந்த சிறைவாசத்தின் போது சென்னை மத்திய சிறைக்கு மிக அருகில் இருந்த ரிப்பன்
கட்டடத்தின் மணிக்கூண்டு மணிக்கொருதரம் இரவில் மணி அடித்து இவருடைய தூக்கத்தைக் கெடுக்குமாம்.
ஐயாவுடைய அரசியல் வாழ்வில் இவருடைய அந்தஸ்து, சொத்து இவற்றை வைத்துக் கொடுத்து வந்த
சி வகுப்பு, பின்னர் பல போராட்டங்கள் நடந்த காலத்தில் கொடுக்கப் படவில்லை என்பதையும்
பி அல்லது ஏ வகுப்பிலேயே வைக்கப்பட்டிருந்ததாக அவரே பதிவிட்டிருக்கிறார். இப்படியாக
அவருடைய தனி நபர் சத்தியாக்கிரக சிறை வாழ்க்கை ஆறுவார காலத்தோடு முடிவுக்கு வந்தது.
4. 1942 ஆகஸ்ட் புரட்சி
பம்பாயில் 1942 ஆகஸ்ட் 7,8,9 தேதிகளில் அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டி கூடுவதாக இருந்தது. அந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம்
குறித்தும் முன்னதாகவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டி ஒவ்வொரு டிசம்பர் மாதமும் கூடும். அதற்கு முன்பாக ஜூலை மாதத்தில் காரியக் கமிட்டி
கூடி அந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட வேண்டிய தீர்மானங்கள் முறித்து முடிவு செய்வார்கள்.
அதனால் ஒவ்வோராண்டும் எந்த பிரச்சினை தீர்மானமாகக் கொண்டு வரப்படும் என்பது முன்னரே
அறிவிக்கப் பட்டு விடும். அப்படி அந்த ஆண்டு வரக்கூடிய அந்தத் தீர்மானம் “க்விட் இந்தியா”
என்பது. மகாத்மா காந்தியடிகளும் பம்பாய் காங்கிரசில் பேசும்போது இந்த சொல்லைத்தான்
உபயோகித்தார். அதனை மொழிபெயர்த்த பத்திரிகைகளும்
காங்கிரஸ்காரர்களும் “இந்தியாவிலிருந்து வெளியேறு” என்று சொல்ல வேண்டிய கோஷத்தை இவர்கள்
“வெள்ளையனே வெளியேறு” என்றே எழுதவும், பிரச்சாரம் செய்யவும் தொடங்கி விட்டனர். மகாத்மா
காந்திஜி அவர்கள் தான் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறேனே தவிர பிரிட்டிஷ்
மக்களை அல்ல. ஆகவே க்விட் இந்தியா எனும் கோஷத்தை மொழிபெயர்த்தவர்கள் பிரிட்டிஷ் மக்களை
வெளியேறு என்று சொல்வதாக பொருள் தொனிக்கச் செய்துவிட்டார்கள். ஆனால் காந்திஜி விரும்பியது
பிரிட்டிஷார் ஆட்சியை வெளியேறத்தான் சொன்னார் என்று கருத்து கொண்டிருந்தார் ஐயா ம.பொ.சி.
அவரே சொல்கிறார் அவரும்தான் அப்படி கோஷமிட்டதாகவும், ஆனால் பின்னர்தான் புரிந்தது அந்த
மொழிபெயர்ப்பு மூல கோஷத்துக்கு ஒத்துப்போவதில்லை என்று.
ஆகஸ்ட்
புரட்சி அறிவிப்பு வரும்போது அரசு எந்தமாதிரியெல்லாம் அடக்கு முறைகளைக் கையாளும், காங்கிரசார்
எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்சி முன்கூட்டியே முடிவெடுத்திருந்தது.
அந்த வேலைத் திட்டத்தை தலைமை எல்லா மாநில கட்சித் தலைமைக்கும் அனுப்பி யிருந்தது. அப்போது
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் சென்னை காங்கிரஸ் கமிட்டி செயலராக இருந்த
ம.பொ.சியிடம் சில பணிகளை ஒப்படைத்திருந்தார். அந்த பணி என்னவென்றால், இந்த போராட்டம்
நடைபெறும் போது பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், உயிர்ச்சேதம்
எதுவும் நேராத வகையில், அரசு இயந்திரத்தை மட்டும் முடக்கும் வகையில் நடந்து கொள்ளவேண்டுமென்று
அறிவுறுத்தியிருந்தது.
1942 ஆகஸ்ட் 9ஆம்
நாள் மதுரை மாவட்டத்தில் மீனாட்சிபுரம் எனும் ஊரில் நடைபெறவிருந்த மாவட்ட காங்கிரஸ்
மாநாட்டுக்கு ம.பொ.சி. சென்றார். ஆகஸ்ட் 7 அன்று சென்னையை விட்டுப்
புறப்பட்டு மறுநாள் 8ஆம் தேதி மதுரை சென்றடைந்தார். அன்றுதான் பம்பாய் காங்கிரஸ் க்விட் இந்தியா தீர்மானத்தை
நிறைவேற்றியது. ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டு அது எப்படி, எப்போது தொடங்கப்படும்
என்பதையெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுக்கும் முன்பாக அரசாங்கம் இவர்களையெல்லாம்
உடனடியாக கைது செய்து அடக்கு முறையை ஏவிவிட்டது. காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. பம்பாய்க்குச்
சென்ற தலைவர்கள் ஒருசிலர் தவிர மற்ற அனைவரும் கைதாகினர். நாடு முழுவதும் காங்கிரஸ்
அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.
அந்த
காலகட்டத்தில் தலைநகரான சென்னையில் ஆந்திரத் தலைவர்கள் அதிகம் இருந்தனர். தமிழகத் தலைவர்களுடன்
அபிப்பிராய பேதம் கொண்டு சென்னை நகர் தங்களுக்குத்தான் என்று கோஷமிட்டு பின்னர் போராட்டம்
நடத்திய இவர்கள் தங்களுக்குள் இருந்த பிணக்கை தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளாமல், காங்கிரஸ்
அனுப்பிய ரகசிய சுற்றறிக்கையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குக் கொடுத்து துரோகம் செய்து
விட்டனர். அதன் பயனாய், அந்த சுற்றறிக்கையில் கண்டிருந்த விவரங்களை பிரிட்டிஷ் பார்லிமெண்டில்
அப்போதைய இந்தியா மந்திரி அமெரி என்பார் வெளியிட்டுப் பேசினார்.
பம்பாயில்
காந்திஜியும் இதர தலைவர்களும் கைதான உடனேயே நாடு முழுதும் போராட்டம் வெடித்தது. எங்கும்
வன்முறை தலைவிரித்தாடியது. அவர்களை வழிநடத்தவோ, போராட்ட பாதை எதுவென்று வழிகாட்டவோ
பெருந் தலைவர் யாரும் வெளியில் இல்லாத சூழலில், பயங்கரவாதம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
நாடெங்கும் போராட்டம், கடையடைப்புகள், தடைகளை மீறுதல், ஊர்வலங்கள் இதற்கிடையே ஆங்காங்கே
சில வன்முறை சம்பவங்கள், இப்படி போராட்டம் விரிவடையத் தொடங்கிவிட்டது. ரயில்கள் எரிக்கப்பட்டன,
தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன, தபால் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன இப்படி ஏராளமான
சம்பவங்கள்.
மதுரைக்குச்
சென்றிருந்த ம.பொ.சி. கைதாகும் நிலைக்கு ஆளானார். ஆனால் அப்போது அந்தப் பகுதியில் காங்கிரஸ்
தலைவராக இருந்த புலி மீனாட்சிசுந்தரம் என்பார் இவரை திருமங்கலத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஐயாவை திருமங்கலம் ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு வழியனுப்பி
வைத்தார்.
அவர்
ஏறியிருந்த ரயில் மதுரையை அடைந்த போது மதுரை நிலையத்தில் மதுரை ஏ.வைத்தியநாதய்யர்,
சிதம்பர பாரதி போன்ற தலைவர்கள் கைதாகி அதே ரயிலில் ஏற்றப்பட்டனர். ம.பொ.சி.யை அப்போது
மக்களுக்கு அவ்வளவு அறிமுகம் இல்லாத நிலைமை இருந்ததாலும், இவர் மூன்றாம் வகுப்புப்
பெட்டியில் கூட்டத்தோடு கூட்டமாக சாதாரண மனிதனைப் போல பயணம் செய்ததாலும் இவரை யாரும்
அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அங்கு போன பின்னர்தான் காங்கிரஸ் அலுவலகம் சீல் வைக்கப்பட்டிருப்பதையும்,
தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதையும் தெரிந்து கொண்டார். தானும் சிறைப்பட வெண்டியிருக்கும்
என்பதை தாம்பரம் நிலையத்திலேயே செய்தித்தாட்கள் மூலம் அறிந்து கொண்டார்.
தாம்பரத்தில்
இறங்கி அவர் குடியிருந்த திருப்போரூர் சென்று அவரது குடும்பத்தாரைக் கண்டார். அவர்
என்ன ஆனாரோ என்ற கவலையில் இருந்த அவருடைய குடும்பத்தார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனாலும் எந்த நேரத்திலும் ஆபத்து வரும் என்பதைப் புரிந்து வைத்திருந்தார்கள்.
அடுத்த
மூன்று நாட்கள் சென்னை நகரில் பலரையும் சந்தித்து போர் முறை பற்றியெல்லாம் விளக்கிச்
சொல்லிவிட்டு தலைமறைவாகவே செயல்பட்டு வந்தார். அப்போதுதான் கைது, தண்டனை, சிறைவாசம்
என்றதும் பலர் எப்படியெல்லாம் சாமர்த்தியமாக இவரை கழற்றிவிட முயன்றனர் என்பதைக் கண்டு
வருந்தினார். ராயபுரத்தில் இருந்த கஜபதி நாயுடு, ஸ்ரீராமுலு நாயுடு சகோதரர்கள் இவரைத்
தங்கள் வீட்டில் தங்க வைத்திருந்தனர். இப்படி ரகசியமாகத் தன்னுடைய பணிகளைச் செய்து
வந்தவரை ஆகஸ்ட் 13 அன்று நாயுடுவின் இல்லத்தில்
புகுந்து பிடிவாரண்டுடன் போலீஸ் இவரைக் கைது செய்தனர்.
சென்னை
ராயபுரத்தில் கைதான ஐயாவை வேலூர் மத்திய சிறையில் கொண்டு போய் அடைத்தனர். ஆகஸ்ட் புரட்சியில்
ஏராளமான கைதிகள் உள்ளே வருவார்கள் என்று வேலூர் சிறையில் பெண்கள் சிறையை காலி செய்து,
அரசியல் கைதிகளை அங்கே அடைத்து வைத்தனர். அங்கு சென்னையில் பிரபல காங்கிரஸ் தலைவரான
ஆதிகேசவலு நாயக்கர், காமராஜர், ஆந்திர கேசரி டி.பிரகாசம் உட்பட பல முன்னணித் தலைவர்கள்
இவருக்கு முன்பாக அங்கே இருந்தனர்.
ஒரு
நாள் சிறை அதிகாரிகள் கைதிகளில், ம.பொ.சி. உட்பட முப்பது பேரை காட்பாடி ரயில் நிலையம்
அழைத்துச் சென்று அங்கு சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஒகோ, நம்மை
சென்னை சிறையில் அடைக்கப் போகிறார்கள் என்று நினைத்திருந்த இவர்களுக்கு ஏமாற்றம். சென்னையில்
இவர்களை டெல்லி செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டார்கள். சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இவரைப்
பார்க்க இவருடைய தம்பி வந்திருந்தார். ரயில் புறப்படும் நேரத்தில் இவரைப் போலவே தோற்றம்
உள்ள இவரது தம்பியை இவர் என்று நினைத்து போலீஸ் அவரைக் கொண்டு போய் வண்டியில் ஏற்றிவிட்டது.
பிறகு விவரம் தெரிந்து அந்த கோமாளித்தனத்தை ரசித்திருக்கிறார்கள்.
மறுநாள்
ரயில் நாகபுரியை சென்றடைந்தது. அங்கே அனைவரையும் இறங்கச் சொல்லி அங்கிருந்து நூறு மைல்
தொலைவில் இருந்த அம்ரோட்டி (அமராவதி) சிறைக்குக் கொண்டு சென்றனர். தமிழகத்தில் கைது
செய்யப்பட்ட இவர்களைக் கொண்டு போய் வடக்கே வெகு தூரத்தில் இருந்த சிறையில் அடைக்க வேண்டிய
அவசியம்தான் என்ன? அதற்குக் காரணம் இருந்தது. அந்தந்த மாநிலத்து கைதிகளை அங்கேயே வைத்திருந்தால்
ஏதேனும் ரகசியச் செய்திகள் மூலம் ஆங்காங்கே கலவரத்தைத் தூண்டிவிடுவார்கள் என்பதால்,
அவர்கள் அறியாத புதிய இடத்தில் கொண்டு போய் சிறை வைத்தார்கள். அடக்கி ஆளவும், அடிமைப்
படுத்தவும் நல்ல அனுபவம் கொண்ட ஆங்கிலேயர்களின் சாமர்த்தியத்தை பாராட்டாமல் இருக்க
முடியாது.
அமராவதி
அல்லது அம்ரோட்டி என அழைக்கப்பட்ட அந்த சிறை கைதிகளுக்கு எந்தவித வசதியும் செய்து தராத
பழமையில் ஊறிக் கிடந்த சிறை. அந்த சிறைவாசத்தில் தான் அனுபவித்த சிரமங்களையெல்லாம்
ஐயா தன் நூலில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த ஊரில் வெயில் மிக அதிகமாக
இருக்கும். ஐயாவின் சிறை அறையில் இவருடன் இருந்தவர் செட்டிநாட்டைச் சேர்ந்த அரு.ராம.சொக்கலிங்கம்
செட்டியார் என்பவர். அவருடைய செல்வாக்கினால் ஐயாவுக்குத் தேவையான தமிழ் இலக்கிய நூல்களை
அவர் மகன் ராமையா என்பவர் அம்ரோட்டி சிறைக்கு அனுப்பி வைத்தார்.
ஐயா
அவர்கள் தனது சிறைவாசத்தை தமிழ் இலக்கியங்களைக் கற்கும் கலாசாலையாக மாற்றிக் கொண்டார்.
ஆசிரியர் என்று எவரும் இல்லாமல் தானே அவற்றைப் படித்து பொருளுணர்ந்து அவற்றில் புலமை
பெற்றார். இன்னது என்று இல்லாமல் சமய இலக்கியங்கள் தொடங்கி, சங்க இலக்கியம் வரை அனைத்து
தமிழலக்கியங்களையும் கற்று வரத் தொடங்கினார். அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்
என்று இவற்றையெல்லாம் படிக்கப் படிக்க அவர் மனக் கண்ணில் ஒரு புதிய தமிழகம் உருவாவது
போல உணர்ந்து கொண்டார். அதன்படி தமிழகம் அவர் உயிராகவும் அதன் வடவெல்லை திருவேங்கட
மலையாகவும், தெற்கெல்லை குமரி முனையாகவும் அறிந்து மகிழ்வெய்தினார்.
தமிழிலக்கியம்
ஒரு புறம் அவருக்குப் புதிய தமிழகத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த அதே சமயம் சுவாமி
விவேகானந்தரின் நூல்களிலும் இவருக்கு நாட்டம் பிறந்தது. இப்படி இவர் இலக்கிய உலகில்
நீந்திக் கொண்டிருந்த சமயம் அந்த இடத்தின் அதீதமான குளிரும், கடுமையான வெயிலும் ஒத்துகொள்ளாமல்
இரண்டு மாத காலத்திற்குள் உடல் நலம் கெட்டு நோயுடன் சிரமப்பட்டார். அவருக்குக் குடல்
நோய் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடல்
நிலை மோசமான நிலையில் இவரை சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று
மருத்துவம் பார்க்க, அதே சிறையில் இருந்தவரும், பின்னாளில் இந்திய ஜனாதிபதியாக ஆனவருமான
வி.வி.கிரி அவர்கள் நடவடிக்கை எடுத்தார். அப்படி சிகிச்சை பெறும் காலத்தில் திருவண்ணாமலை
அண்ணாமலைப் பிள்ளை அவர்கள் ஐயாவுடன் மருத்துவ மனையில் துணைக்கு இருந்தார். ஒருமாத காலம்
மருத்துவ மனையில் கழித்த பின்னர் மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததனால் 15 நாள் பரோலில்
விடுதலையானார். மனைவி உடல்நலம் கெட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் இவரும்
உடல் நலம் கெட்டு உருத்தெரியாமல் இளைத்திருந்த நிலையில் மீண்டும் அம்ரோட்டிக்குச் செல்ல
விருப்பமின்றி தமிழ்நாட்டு சிறைக்கே அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கை வைத்தார். அதன்படி
அவர் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
வேலூர்
சிறை ஐயா அவர்களுக்கு ஒரு கல்விச்சாலை போல இருந்தது. ஆர்.வெங்கட்ராமன், டி.எஸ்.அவிநாசிலிங்கம்
செட்டியார், கே.எம்.வல்லத்தரசு போன்றவர்கள் ஆளுக்கொரு பொருளில் வகுப்புகள் எடுத்து
ஐயாவின் அரசியல் அறிவுடன் பொருளாதர, தத்துவக் கல்வியையும் போதித்தனர். இப்படி காலம்
ஓடிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் இவர் வேலூரிலிருந்து தஞ்சாவூர் இளம் குற்றவாளிகள்
சிறைக்கு மாற்றப்பட்டார். எனினும் ஐயாவின் உடல் நிலை தஞ்சை சிறையில் மிகவும் மோசமானது.
அப்போது அங்கு தஞ்சை சிறையில் ஓ.பி.ராமசாமி ரெட்டியார், மதுரை ஏ.வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர்.சுப்பராமன்
ஆகியோரும் இருந்தனர். ஐயாவின் உடல்நிலை மோசமடைந்ததை யொட்டி இவரை விடுதலை செய்துவிட
அதிகாரிகள் அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்தனர். அதன் விளைவாக இவரை 1944 ஜனவரி 4ஆம்
தேதி அரசாங்கம் விடுதலை செய்தது. 1942 ஆகஸ்ட் 13இல் சிறை புகுந்த ஐயா, வேலூர், அம்ரோட்டி, மீண்டும்
வேலூர், தஞ்சை ஆகிய சிறைகளில் இருந்துவிட்டு கிட்டத்தட்ட 17 மாதங்களுக்குப் பிறகு விடுதலையானார்.
தியாக
சீலராக வேலூர் சிறைக்குள் மிடுக்குடன் சென்ற ஐயா, தஞ்சை சிறையில் இருந்து விடுதலையான
போது படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டு, சக கைதிகள் பார்ப்பதற்காக
சிறைக்குள் ஊர்வலமாக வந்து பிறகு யாரும் அறியா வண்ணம் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க
வைத்து நான்கு சிறைக் காவலர்கள் அதைத் தூக்கிக் கொண்டு ரயில் நிலையத்துக்குக் வந்து
ரயிலில் ஏற்றிவிட்டனர். அப்போது வழியில் இந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் “ஐயோ! பாவம்.
ஏதோ அனாதை பிணம் போலிருக்கிறது” என்று பேசிக் கொண்டு போனதையும் இவர் கேட்டு மனம் வருந்த
நேர்ந்திருக்கிறது. இப்படி உடல் வருத்தமும், மன வருத்தமுமாக சிறைவாசம் முடிந்து சென்னை
திரும்பிய வரலாறு மனத்தை உருக்குவதாக இருக்கிறது.
5. தமிழரசுக் கழகம் பிறந்தது, சோதனைகள் நிறைந்தது.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் அமைப்பு வேறு,
சுதந்திரத்துக்குப் பிறகு அந்தந்த மொழி பேசுவோர் இருக்கும் மாநிலம் தனித்துவத்துடன்
மாநில சுயாட்சி பெற்று இந்தியக் குடியரசின் ஒரு அங்கமாக இருக்க “புதிய தமிழகம்” ஒன்றை
உருவாக்கும் எண்ணம் ஐயா அவர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. ஐயா காங்கிரஸ்
கட்சியில் ஒரு முக்கியமான தலைவராக இருப்பதால், அந்தக் கட்சியின் முயற்சியால் சுதந்திர
இந்தியாவில் அவர் விரும்பும் ஒரு சுயாட்சித் தமிழகத்தைப் படைத்து விடலாம் என்று தீவிரமாக
நம்பி செயல்பட்டார்.
அந்த
காலகட்டத்தில் திராவிடர் கழகம் “தனித் திராவிட நாடு” கோரி வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கேட்கும் திராவிட நாடு என்பது தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரம், கர்நாடகம்,
கேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதி. ஆனால் அதே காலகட்டத்தில் ஆந்திரத்துத் தெலுங்கு
மக்கள் “விசால் ஆந்திரா” என்று தனி ஆந்திர மாநிலம் கோரிப் போராடினர். மலையாள மக்களோ
“ஐக்கிய கேரளம்” வேண்டுமென்றனர். கர்நாடகத்துப் பகுதிகள் அப்போதைய சென்னை மாகாணத்தில்
இருந்தவர்களோடு மைசூர் தனி சமஸ்தானமாக விளங்கியதால் அவர்கள் இணைந்து ஒரு கன்னட ராஜ்யம்
அமைக்கவே விரும்பினர். இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் அவர்களையெல்லாம் உள்ளடக்கிய,
அவர்கள் சம்மதமில்லாமலே ஒரு திராவிட நாட்டை உருவாக்கிட முடியுமா என்கிற ஐயம் ஐயாவுக்கு
இருந்தது. ஆகவே நடக்க முடியாத ஒரு கற்பனையை நோக்கி முடிவில்லா பயணம் செய்வதைக் காட்டிலும்
நடக்கக் கூடிய தனித்தமிழ்நாடு சுதந்திர இந்தியாவின் கட்டமைப்புக்குள் வந்தே தீரவேண்டுமென்கிற
அவா ஐயாவுக்கு இருந்தது.
எந்தவொரு
புதிய திட்டத்துக்கும் ஒரு தொடக்கம் வேண்டுமல்லவா? அந்தத் தொடக்கம் புதிய தமிழகத்துக்காக
ஐயா அவர்கள் சென்னை மண்ணடி எனும் பகுதியில் லிங்கி செட்டித் தெருவில் இருந்த அவருடைய
“தமிழ் முரசு” பத்திரிகை அலுவலகத்தில் உருவானது. தமிழ் உணர்வுள்ள பல இளைஞர்களை அழைத்து
அங்கு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் அவர். அந்தக் கூட்டத்துக்கு சென்னை மற்றும்
வெளியூர்களிலிருந்து ஆர்வமுடைய இளைஞர்கள் வந்து கூடினார்கள். வரலாற்றையே உருவாக்கக்
கூடிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் திரு வி.க., தெ.போ.மீனாட்சிசுந்தரனார்,
மு.வரதராசன், அன்பு கணபதி போன்ற தமிழ் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தக்
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஐயா அவர்கள் பல கீழை தேசங்களில் எல்லாம் தமிழர்கள் பிழைப்புக்காகச்
சென்று அங்கு அவர்கள் படும் பாடுகளை மனம் உருக விளக்கினார். அவர்களுக்கெல்லாம் ஆதரவாக
நம் தாய்த் தமிழ்நாடு இருக்க சர்வ வல்லமை பொருந்தியதாக நமது மாநிலம் “புதிய தமிழகமாக”
உருவெடுக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்திப் பேசினார். கூட்டத்தினர் ஆலோசித்து இறுதியில்
தமிழரின் உரிமைகளுக்காக, தமிழர்களின் துன்பங்களைப் போக்க, தமிழ் மொழி அரியாசனம் ஏற,
ஒரு இயக்கத்தைத் “தமிழரசுக் கழகம்” எனும் பெயரில் உருவாக்கினார்கள். வரலாற்றில் இடம்பெறப்
போகும் இந்த தமிழ் அமைப்பு உருவான நாள் 1946 நவம்பர் 21. இந்த அமைப்பு முதன் முதலில்
எடுத்துக் கொண்ட செயல் திட்டம் அடுத்து வரும் பொங்கல் திருநாளை “தமிழர் திருநாள்” என்று
கொண்டாடுவதுதான். அன்று தொடங்கியதுதான் பொங்கல் என்றும் சங்கராந்தி என்றும் ஒரு சமயச்
சடங்காக நடத்தி வந்த திருவிழா தமிழர்களின் உழவர் திருவிழாக ஆகவும், அந்த விழாவுக்காக
வாழ்த்து அட்டைகள் அனுப்பி வாழ்த்துவதும் தொடங்கியது.
ம.பொ.சி.
அவர்கள் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கிய காலகட்டம் எப்படி இருந்தது என்பதைச் சிறிது பின்னோக்கிப்
பார்க்க வேண்டும். தெலுங்கர்களும், மலையாள மக்களும் அவரவர்க்கென்று தனி மாநிலம் கோரி
விசால் ஆந்திரம் என்றும், ஐக்கிய கேரளம் என்றும் பெயரிட்டு அதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அந்தோ தமிழகம் மட்டும் இவர்களில் ஒரு பகுதியினரைத் தன் மாநிலத்தினுள் வைத்துக்
கொண்டு, இங்குள்ள பெருவாரியான தமிழர்களின் உரிமைகளையும், பெருமைகளையும் பாதுகாக்க எந்தவித
முயற்சியுமின்றி கிடந்த நிலையில் தமிழரசுக் கழகத்தின் எழுச்சி ஒரு புத்துணர்ச்சியைக்
கொடுத்தது. ஆனால் திராவிடம் பேசிய கட்சியினர் இந்த தனி சுயாட்சி பெற்ற மாநில கோரிக்கைக்கு
ஆதரவளிக்கவில்லை. தமிழர்களில் தங்கள் சுயாட்சி குறித்து ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
எனினும் ஐயா ம.பொ.சி. அவர்களின் குரல் “உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம்”
என்று இருந்தது. சுயாட்சி உரிமை பெற்ற தமிழகம் அகில இந்திய தலைமையின் கீழ் ஒரு அங்கமாகச்
செயல்படும் என்பது அவரது கருத்து.
ஒருவழியாக
1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர தின விழா சென்னை கடற்கரையில்
மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் சுதந்திரப் போராட்டத்தில் தன்
பங்கு கணிசமாக இருந்தது என்பதில் மனத் திருப்தியுடன், அடுத்து அமையப்போகும் “புதிய
தமிழகம்” உருவாக்குதல் குறித்து அவர் எண்ணத் தொடங்கினார்.
அந்த
காலகட்டத்தில்தான் தமிழகத்தின் எல்லைகள் குறித்து நிலைமையை கவனிக்கத் தொடங்கினார்.
அப்போது வடவேங்கடம் முதல் தென் குமரி வரை தமிழகம் என்று சொல்லப்பட்ட நிலைமை அப்படியேதான்
இருக்கிறதா என்பதை நேரடியாகப் போய் கவனிப்பதற்காக அந்தந்த பகுதிகளுக்குச் சென்று நேரடியாக
ஆராய்ந்து பார்த்தார். தமிழ் பேசும் பல பகுதிகள் தெற்கே திருவிதாங்கூர் சமஸ்தான எல்லைக்குள்
இருப்பதைக் கண்டார். அதே போல் வட எல்லையில் சித்தூர் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் தெலுங்கு
பேசும் தமிழர்கள் அதிகம் இருந்ததையும், அந்தப் பகுதிகள் எல்லாம் சென்னை நகர் உட்பட
ஆந்திரர் தமதே என்று உரிமை கொண்டாடுவதையும் கண்டார். “மதராஸ் மனதே” என்று ஆந்திர கேசரி
டி.பிரகாசம் தலைமையில் ஆந்திரர்கள் தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கே உரிமை கொண்டாடி
போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அந்த சமயம் இவர் வடஎல்லை நிலைமை நேரில் அறிந்து கொள்வதற்காகத்
திருப்பதிக்குப் பயணம் மேற்கொண்டார்.
திருப்பதி
பயணத்தில் பல தமிழரசுக் கழக அன்பர்கள் ஐயாவுடன் புறப்பட்டுச் சென்றனர். 1947 ஆகஸ்ட்
16ஆம் தேதி, சுதந்திர தினத்துக்கு மறுநாள் ஐயாவும் இதர தொண்டர்களும் சென்னையிலிருந்து
அரக்கோணம் செல்லும் ரயில் வண்டியில் பயணம் செய்து திருவாலங்காட்டை அடைந்தனர். அங்கு வடவெல்லை போராட்டத்துக்குக் காரணமாக இருந்த
மங்கலங்கிழார் என்பாரும் வேறு சிலரும் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். அன்று
மாலை அதே ஊரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி சுயநிர்ணய உரிமைகள் படைத்த தமிழ் நாடு குறித்து
பேசினார்கள்.
தொடர்ந்து
மறுநாள் கனகம்மாசத்திரம் எனும் ஊரில் இவர்கள் பேசிய கூட்டத்தில் தெலுங்கு பேசுவோர்
கலவரம் செய்தனர். அதனை ஒருவாறு எதிர்கொண்டு அங்கிருந்து இவர்கள் திருத்தணிக்குச் சென்றார்கள்.
திருத்தணியில் எல்லா கடைகளிலும் தெலுங்கு மொழியில் பலகைகள் காணப்பட்டன. அன்று அங்கு
நடந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கர்கள் கலவரம் செய்து கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.
எனினும் தமிழ்த் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி முடித்தனர். தொடர்ந்து வடக்கே நகரி எனும்
ஊருக்குச் சென்றபோதும் கடும் எதிர்ப்பையும், எதிர்ப்பு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் இவைகளை
எதிர் கொண்டனர். மேலும் தொடர்ந்து சென்று புத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பலத்த
எதிர்ப்புகளுக்கிடையே ம.பொ.சி. பேசினார். இப்படி வழிநெடுக தெலுங்கர்களின் எதிர்ப்பையும்
மீறி இவர்கள் திருப்பதி சென்றடைந்தனர். அங்கு
இவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்ததோடு அந்த ஆர்ப்பாட்டத்தில் “மீசைக்கார கிராமணியே
திரும்பிப்போ” என்று கோஷங்களை எழுப்பினர். இப்படி எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்துத்
திருப்பதியில் பொதுக் கூட்டமொன்றில் மிக விரிவாக ஐயா அவர்கள் பேசி தங்கள் நியாயத்தை
எடுத்துரைத்தார். இந்திய சுதந்திர நாளை அடுத்து, மறுநாளே ம.பொ.சி. அவர்கள் வடவெல்லை
போராட்டத்துக்கு அச்சாரமாக ஒரு சூராவளி சுற்றுப் பயணத்தை பலத்த எதிருப்புகளுக்கிடையில்
முடித்து ஊர் திரும்பினார்.
சுதந்திரத்துக்குப்
பிறகு மாநிலங்கள் சீரமைக்கப்படும் போது மொழிவாரி மாநிலங்கள் அமையலாம். அப்படி அமையுமானால்
தமிழ்நாடு தன்னுடைய பிரதேசங்களை பிற மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதை வைத்துக்
கொள்ளும் நிலைமை வந்து விடக்கூடாது என்று சேதமில்லாத தமிழ்நாட்டை உருவாக்க ஐயா விரும்பினார்.
இவருடைய இந்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், ஆந்திரர்களை விடுங்கள், தமிழ்நாட்டில்
கூட இதர தலைவர்கள் இவரை சந்தேகித்தனர். தமிழ்நாட்டில் காலூன்ற நினைத்து கட்சி நடத்தும்
திராவிடக் கழகத்தை எதிர் கொள்ள “புதிய தமிழகம்” அமைக்க விரும்பி ஐயா எடுத்த நடவடிக்கைகளைக்
காங்கிரஸ் தலைவர்களே எதிர்த்தார்கள். இவர் பெரிதும் நம்பியிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களும்
இவருடைய தனித்தமிழ் நாடு கோரிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
அடுத்து
அதே ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி சென்னையில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஹாலில் தமிழரசுக்
கழகத்தின் முதல் மாநில மகாநாடு கூட்டப்பட்டது. அந்த சமயத்தில்தான் டெல்லியில் சுதந்திர
இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் அமைப்பு தேவையென்று கருதி அரசியல் நிர்ணயசபை கூடி விவாதித்துக்
கொண்டிருந்தது. அப்படி சுதந்திர இந்தியாவுக்கென்று புதிய அரசியல் அமைப்பு உருவாகுமானால்,
அதற்குட்பட்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக மாநில
அரசியல் நிர்ணய அமைப்பும் உருவாக வேண்டுமென்று தமிழரசுக் கழகம் எண்ணியது. இந்த மாநாட்டில்
தமிழ்க்கொடியொன்று வடிவமைக்கப் பட்டது. வெள்ளைப் பின்னணியில் மூவேந்தர்களின் சின்னங்களான
வில், புலி, மீன் ஆகிய உருவங்கள் பொறித்த கொடிதான் அது. அப்போது தமிழ்பேசும் பகுதிகளின்
வடவெல்லையில் பெரும் பகுதிகள் தெலுங்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் அவற்றையெல்லாம்
மீட்டெடுக்க “வடக்கெல்லை பாதுகாப்புக் குழு” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கிடையே
காங்கிரசில் வழக்கம் போல தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் கோஷ்டி மோதல் ஏற்படத் தொடங்கியது.
அவை பிறர் அறிய நடைபெறாவிட்டாலும் ரகசியமாக ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பதாக நிலைமை
மாறி இருந்தது. ம.பொ.சி. ஐயாவுக்கு அவர் தனிக்கட்சி தமிழரசுக் கழகம் எனும் பெயரில்
நடத்துகிறார் என்பதால் அவர் மீது பலருக்குக் காழ்ப்பு. அது அப்போது அதாவது 1948 ஜனவரியில்
கோவையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வெளிப்பட்டது. ஐயா ம.பொ.சி. ஓரங்கட்டப்பட்டு இதர
கோஷ்டியாரால் காமராஜ் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கோவை மகாநாட்டில்
காமராஜ் அவர்களுக்கும் ஐயா அவர்களுக்குமான மோதல் மாநாட்டு மேடையிலேயே பலர் அறிய அரங்கேறியது.
எனினும் முடிவில் ஒருவரை யொருவர் பாராட்டிக் கொண்டு மாநாடு முடிவடைந்தது.
காந்திஜியின் மரணம்.
இந்த
மாநாடு நடந்த ஒருசில நாட்களில் டெல்லியில் மகாத்மா காந்தி கொலையுண்டு மாண்டார். அது
இந்திய தேசிய வாதிகளைக் குறிப்பாக காங்கிரஸ் காரர்களை நிலை குலைய வைத்துவிட்டது. காந்திஜியின்
பரம பக்தரான ஐயா அவர்கள் பட்ட துயரத்தை அவரே எழுதி வைத்திருக்கிறார். காந்திஜியின்
மரணம் குறித்து ஐயா அவர்கள் எழுதியுள்ள உணர்ச்சி மிக்க வரிகள் சிலவற்றை மட்டும் இங்கே
பார்ப்போம். “.... ஜன சமுத்திரத்தின் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு உத்தமரின்
உடலை ஒரு பிடி சாம்பலாக்கி ஜல சமுத்திரத்தில் கரைத்து விட்டோம். ... மறக்க முயலுகிறோம்
முடியவில்லை. உப்பு வரியை உடைத்தே தீருவேன் என்று தண்டி யாத்திரை நோக்கிச் சென்ற கால்கள்
– கதியற்ற ஹரிஜன மக்களுக்கு நிதி தேடிய கைகள் – படைக்கஞ்சாப் பகைவனும் பார்த்தவுடன்
நடுங்கும் வீரத்திரு மார்பு – பாட்டாளி மக்களுக்குப் பரிந்து பேசிய அவர் வாய் – அறிவு,
கருணை, அன்பு, அறம் அத்தனையும் கைகோர்த்துக் களிக்கூத்தாடும் திருமுகம் இவற்றை நாம்
மறந்தாலும் நம் மனம் மறக்க மறுக்கிறதே!” அவர் மேலும் சொல்வது, அடிகளாரின் மரணத்தால்
நான் என் வழிகாட்டியை இழந்து விட்டேன். காந்தியடிகள் இல்லாத பாரதம் சந்திரன் இல்லாத
வானம் போலவே எனக்குத் தோன்றுகிறது. காந்தியடிகள் மறைந்த நாளிலே இமயம் சாய்ந்தது போன்ற
விபத்து இந்தியாவிற்கு ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன்” இப்படி எழுதுகிறார் ஐயா
ம.பொ.சி.
6.
தமிழரசுக் கழகம் வளர்ந்த கதை.
தமிழரசுக்
கழகம் தொடங்கிய இரண்டாண்டுகளில் அது மிக வேகமாக வளரத் தொடங்கியது. நாடு போற்றிய பல
தமிழறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் தமிழரசுக் கழகத்தில் உறுப்பினரானார்கள். அப்போது
திரைப்படக் கவிஞர்களாக விளங்கிய திரு கு.சா.கிருஷ்ணமூர்த்தி, திரு கா.மு.ஷெரீப், திரு
கு.மா.பாலசுப்ரமணியம், கவிஞர் வானம்பாடி போன்றோர் தமிழரசுக் கழகத்தில் அங்கம் வகித்தனர்.
ஏராளமான தமிழறிஞர்கள் தமிழரசுக் கழகத்தில் இணைந்து தமிழும் தேசியமும் வளர அயராது பாடுபடத்
தொடங்கினர். தான் தொடங்கிய தமிழரசுக் கழகம் மிக வேகமாக வளர்ந்து வருவது அவருக்குப்
பெருமை அளிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு பக்கம் தாங்கள் செய்த சாதனைகளைக் கூட மக்களிடம்
எடுத்துரைக்கும் வாசாலகம் இல்லாத காங்கிரஸ் தலைவர்கள். மறுபுறம் தங்கள் அடுக்கு மொழியில்
நல்ல தமிழ் பேச்சுடன் மேடையேறிய திராவிட இயக்கத்தார். இப்படி இவ்விரு தமிழக அரசியல்
நிலவரத்தில் தானும் ஓர் பழுத்த காங்கிரஸ் காரராக இருந்தும், தமிழ், தமிழர், தமிழ்நாடு
எனும் உணர்வால் தனித்து ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டியிருந்தது. காங்கிரசுக்குள் இருந்து
கொண்டு அவர் தமிழ், தமிழர் என்றால், தேசியம் பேசிய காங்கிரசார் அதனை விரும்ப மாட்டார்கள்.
அதனால் தான் தமிழரசுக் கழகம் தேசிய உணர்வோடு, ஒன்றுபட்ட இந்தியவில் தன்னாட்சி சுதந்திரம்
பெற்ற தமிழகம் அமைக்க பாடுபட்டுக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே இவர்
தனி இயக்கம் நடத்துவதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஏற்கவில்லை. எதிரணியிலோ திராவிட
இயக்கத்தார் தங்கள் பேச்சுத் திறமையால் மட்டுமே மக்களைக் குறிப்பாக இளைய சமுதாயத்தினரைத்
தங்கள் வசம் ஈர்க்கத் தொடங்கி விட்டனர். காங்கிரசில் அவர்களுக்கு ஈடுகொடுத்து நல்ல
தமிழில் பேச ஐயாவை விட்டால் வேறு யாரும் இல்லாத நிலையில் இவரையும் விட்டுவிட்டால் தங்கள்
கட்சிக்கு பாதகமாகப் போய்விடும் என்று இவரைப் பொறுத்துக் கொண்டார்கள். அதுதான் அன்றைய
நிலைமை.
இந்த
சூழ்நிலையில் இந்தியாவுக்குப் புதிய அரசியல் நிர்ணயச் சட்டம் வந்து 1950 ஜனவரி 26ஆம்
தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த நாளை குடியரசு நாள் என்று கொண்டாடுகிறோம். அந்த சட்டத்தின்
அடிப்படையில் இந்தியா முழுவதற்கும் எல்லா மாநிலங்களுக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும்
1952ஆம் ஆண்டு பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. திராவிட இயக்கம் நேரடியாகத் தேர்தலில்
கலந்து கொள்ளவில்லையே தவிர இதர சில்லறை கட்சிகளின் வேட்பாளர்களையும், தங்களுடன் ஒத்துப்
போகக்கூடிய சில சுயேச்சை வேட்பாளர்களையும் ஆதரித்துத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
காங்கிரஸ் கட்சியோ பழைய வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷங்களுடன் மட்டும்
இவர்களை எதிர்கொள்ள திணற வேண்டியிருந்தது. போதாதற்கு அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில்
கம்யூனிஸ்டுகளுக்கும் நல்ல செல்வாக்கு இருந்து வந்தது. அதிலும் ஆந்திரப் பகுதிகளில்
அவர்கள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தினர். இப்படிப்பட்ட போராட்ட களத்தில் ஐயா ம.பொ.சி.
அவர்களின் தலைமையில் ஒரு தமிழரசுக் கழகப் பேச்சாளர்கள் களத்தில் குதித்துப் பிரச்சாரத்தை
மேற்கொண்டார்கள்.
ஒரு
பக்கம் திராவிட இயக்கத்தாரின் பிரச்சாரம், மறுபுறம் ஆந்திர காங்கிரஸ் தலைவர்களின்
“மதறாஸ் மனதே” பிரச்சாரத்தை எதிர்த்து முழக்கம் இப்படி ஐயாவின் தேர்தல் பணியில் பசி
தாகம் பார்க்காமல் ஊர் ஊராய்ச் சென்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக தேர்தல்
முடிவுக்கு வந்து முடிவுகள் வெளிவந்தன. என்ன சோதனை? அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில்
தமிழக எல்லைக்குட்பட்ட தொகுதிகள் மொத்தம் 190. அதில் காங்கிரஸ் 96 இடங்களைக் கைப்பற்றியது.
அந்த வெற்றிக்கு ஐயா ம.பொ.சியின் சூறாவளி சுற்றுப் பயணமும், பிரச்சாரமும் தான். இதை
மாநிலத்தில் வெற்றி பெற்ற பல காங்கிரஸ் உறுப்பினர்களும் மனதார உணர்ந்து நன்றி சொன்னார்கள்.
ஆனால் காங்கிரஸ் தலைமை இவரது உழைப்பையும், அதனால் கட்சி வேட்பாளர்களுக்குக் கிடைத்த
வெற்றியையும் பாராட்டி இவரைப் பெருமைப் படுத்தியிருக்கலாம். என்ன செய்வது?
காங்கிரசின்
வெற்றி இன்னும் கூட பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது மாநிலத்தில் நிலவிய
கடுமையான உணவுப் பஞ்சம் இவர்கள் வெற்றிக்கு எதிராக அமைந்து விட்டது. அது கம்யூனிஸ்ட்டுகளுக்கும்,
இதர உதிரிக் கட்சிகளுக்கும் சாதகமாக அமைந்து விட்டது.
ஐயா
ம.பொ.சியின் இந்த முதல் தேர்தல் பிரச்சாரம் தனக்கு எந்த பதவியும் தேவை என்பதற்காக அல்ல.
கொள்கையில் பிடிப்பும், தேசபக்தியும் தான் அவரை இதுபோன்ற போராட்டங்களைச் சந்திக்கும்படி
ஆயிற்று. ஆக, அவரது தமிழரசுக் கழகம் தொடங்கியது, முதல் பொதுத்தேர்தலில் பலம் கொண்ட
எதிரிகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து நல்ல வெற்றிகளை ஈட்டியது இதெல்லாம் கூட அவரது
இன்னொரு அறப் போராட்டமாகவே கருத இடமிருக்கிறது.
தூது
சென்றவர்கள் 28-5-1952 அன்று சென்னை திரும்பி ராஜாஜி முதல்வர் ஆவதற்கு நேரு சம்மதம்
தெரிவித்துவிட்டதாக குமாரசாமி ராஜாவிடம் தெரிவிக்க அவர் காமராஜ் உட்பட மற்ற தலைவர்களுக்கும்
தெரிவித்தார். அப்போது ராஜாஜி முதல்வராக வருவதை காமராஜ் ஆதரித்துப் பேசினார்.
ராஜாஜி
சென்னை மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும்
பதவியேற்றார். ஐயா ம.பொ.சி. மட்டும் ராஜாஜியிடம் அவர் சென்னை மாகாண முதல்வராக வருவதை
இப்போது உள்ள சூழ்நிலையில் இதர தலைவர்கள் வரவேற்றாலும், எந்த நேரத்திலும் அவர்கள் ராஜாஜிக்கு
எதிராக திரண்டெழுவார்கள் என்று எடுத்துரைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராஜாஜி அந்த
அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் பயனை வெகு விரைவில் எதிர் கொண்டார்.
ராஜாஜி
சில உதிரிக் கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்து, அந்தக் கட்சித் தலைவர்களுக்கெல்லாம்
அமைச்சர் பதவி கொடுத்து வைத்துக் கொண்டார். நிலைமை ஏதோ சீரானதைப் போலக் காணப்பட்டாலும்,
எந்தவொரு சிறு செயலும் பெருந்தீக்கு வித்திட்டுவிடும் என்பதை ஐயா மிக நன்றாக உணர்ந்திருந்தார்.
அப்படிப்பட்ட ஒரு சிறு பொறி எழுந்து அவரைக் கவிழ்ந்தது என்பதை நாடறியும்.
ராஜாஜி
அமைச்சரவை அமைத்த பின்னர் தனக்கு உட்கட்சியிலேயே எதிர்ப்புகள் வராமல் இருக்க தேவையானவற்றை
செய்ய முயன்றார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக ஐயா ம.பொ.சி. வருவார் என்ற யூகம்
பத்திரிகைகளில் வெளியாகின. ஆனால் ராஜாஜியோ தனக்கு கட்சியின் உதவி கிடைக்க வேண்டுமானால்
காமராஜை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வதற்கு ஏற்பாடு செய்தல் நல்லது
என்று விரும்பினார். அதோடு ம.பொ.சி. அவர்களைக் காங்கிரஸ் தலைவராக ஆக்கினால் காமராஜர்
தலைமையிலான காங்கிரசார் விரும்ப மாட்டார்கள், அதனால் தனக்கு எதிர்ப்பு வரலாம் என்பதாலும்
ராஜாஜி காமராஜே தலைவராக வருவதை விரும்பினார்.
இந்த
சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரசுக்கு டாக்டர் பி.சுப்பராயன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் சுப்பராயன் ஐயா ம.பொ.சியை தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருக்க வேண்டுமென்று
வற்புறுத்தினார். ஆனால் தனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டு கட்சியை வலுப்படுத்த
தான் மாநிலம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்வேன் என்று உறுதி அளித்தார்.
1952
அக்டோபர் மாதத்தில் சென்னை மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தல் வந்தது. அதில் காங்கிரசுக்காக
வெகுவாக பாடுபட்டு உழைத்தவர் ஐயா ம.பொ.சி. அவருடைய பிரச்சார பலம் தான் சென்னை மாநகராட்சியை
காங்கிரஸ் கைப்பற்ற உதவியாக இருந்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். அப்படி
இவர் செனை மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்ற காரணமாக இருந்ததால் தான் சென்னை தங்களுக்கே
என்று முழக்கமிட்ட ஆந்திரர்களின் கோரிக்கை நிராசையாகியது, சென்னை தமிழகத்தின் தலைநகராக
ஆனது என்பது வேறு ஒரு வரலாறு.
7. பண்ணையாள் சட்டமும் ம.பொ.சி. பிரச்சாரமும்
வெகு காலமாக தஞ்சை மாவட்டத்தில் உழுபவர்களுக்கே நிலம்
சொந்தம் என்று கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் தஞ்சை
மாவட்ட நிலச் சுவான்தார்கள் தவிர இதர நில உடைமையாளர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும்
நிலம் இருந்த பொதிலும் அவர்களே அங்கு தங்கி விவசாயம் பார்ப்பதில்லை. வேறு யாரிடமாவது
நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அவர்கள் அளிக்கும் குத்தகை நெல்லில் காலம் கடத்தி வந்தார்கள்.
அப்படி நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளிடம் கம்யூனிஸ்ட்டுகள் சென்று நிலத்தை உழுது பயிரிட்டு
விளைச்சல் கண்டு அதனைக் கொண்டு போய் நிலச்சுவான்தார்களிடம் கொட்டுவது என்ன நியாயம்.
நிலத்தை யார் உழுது பயிர் செய்கிறார்களோ அவர்களுக்கே நிலத்தின் விளைச்சல் சொந்தம் என்ற
கருத்து பரப்பப் பட்டது. இதற்காக சீனிவாச ராவ், பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி போன்ற
பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் தஞ்சை மாவட்ட கிராமங்கள் தோறும் அமாவாசைக் கூட்டங்கள்
நடத்தி அனைத்து விவசாயக் குத்தகைதார்களையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதே
நேரத்தில் மாயவரத்தில் இருந்த காங்கிரஸ் தியாகி ஜி.நாராயணசாமி நாயுடு போன்றவர்கள் நில
விளைச்சல் விவகாரத்தில் பயிரிடுவோருக்கு பங்கும், நில உடைமையாளர்களுக்குப் பங்குமாக
பிரித்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. அதில் மாயவரம் நாராயணசாமி நாயுடு
தவிர, பட்டுக்கோட்டை சீனிவாச ஐயர் எனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆகியோரும் இணைந்து இவ்விரு
பிரிவினருக்கு அறுபது நாற்பது எனும் விகிதத்தில் விளைச்சலை பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்ற
கோரிக்கை வைத்தார்கள். ராஜாஜி இவர்கள் கோரிக்கையை ஏற்று பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்
என்றொரு அதிரடி சட்டத்தைக் கொண்டு வர அவசர சட்டமொன்றைப் பிறப்பித்தார்.
23
ஆகஸ்ட் 1952 அன்று பிறப்பிக்கப்பட்ட அந்த சட்டத்தின் பெயர் பண்ணையாள் பாதுகாப்புச்
சட்டம். ஒரு வேலி நிலத்துக்கு (6 ஏக்.66 சென்ட்) அளவுக்கு மேல் நிலமுள்ளவர்களிடம் சாகுபடி
செய்யும் எந்த சாகுபடியாளரையும் நிலத்தை விட்டு வெளியேற்றக் கூடாது என்பது ஒரு ஷரத்து.
பண்ணை யாட்களுக்கு 6 மாத சம்பளம் அல்லது ரூ.150 அளித்து எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை
விடுவிக்க வேண்டும். இந்த சட்டத்தின் படி மிராசுதார், பண்ணையாள் என்கிற உறவு மாறி,
விவசாயத் தொழிலாளர்கள் தினக்கூலிகளாக மாற்றப்பட்டனர். இதன் விளைவாக விவசாய வேலை இல்லாத
நாட்களில் குறிப்பாக ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வேலை வாய்ப்பு எதுவும்
பண்ணையாட்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆகையால் அதுபோன்ற சந்தர்ப்பங்களில்
நிலச் சொந்தக்காரர்களிடம் நெல்லோ அல்லது இதர தானியங்களோ வாங்கிக் கொண்டு, அறுவடைக்
காலங்களில் கூலியில் குறைத்து வாங்கிக்கொண்டு வேலை செய்ய வேண்டும். அது தவிர வாங்கிய
கடனை அடைக்க வேண்டுமானால் குடும்பம் முழுதுமே உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அவசரச்
சட்டம் என்பது ஒருநாள் திடீரென்று ஒரு சட்டத்தை அவசரச் சட்டம் என்று பிரகடனப் படுத்தி
அமல்படுத்துவது, அதன் பின் அந்த மசோதாவை சட்டமன்றத்தில் வைத்து விவாதித்து சட்டமாக்குவது
என்பது. இதனை ராஜாஜி பெரிதும் விரும்பி இந்த பண்ணையாள் சட்டத்துக்கு ஒரு அவசரச் சட்டத்தைப்
பிறப்பித்தார்.
அவசரச்
சட்டம் பற்றிய எந்த விவரமும் வெளிவராத நிலையில் ராஜாஜி தஞ்சாவூருக்குச் சுற்றுப் பயணம்
மேற்கொண்டார். தஞ்சை மிராசுதார்களின் அழைப்பின் பேரில் அவர் தஞ்சை ராமநாதன் செட்டியார்
ஹாலில் பேசுவதற்காக சென்னையிலிருந்து புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் புறப்பட்டு
காலை நாலறை மணிக்குத் தஞ்சை வந்து இறங்கினார். அவருடன் ஐயா ம.பொ.சி. சி.சுப்பிரமணியம்
போன்ற பல தலைவர்களும் வந்தார்கள். அதே ரயிலில் வந்த தி இந்து பத்திரிகையில் ஒரு அவசரச்
சட்டம் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் பிறப்பிக்கப் பட்ட செய்தியும்
இருந்தது. இந்த செய்தி ராஜாஜியை தஞ்சைக்கு அழைத்த நிலப்பிரபுக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. இவரோ நமக்கு பாதகமான ஒரு சட்டத்தை அவசர சட்டமாகப் பிரகடனம் செய்திருக்கிறார்,
இவரை இன்று நாம் தஞ்சையில் பாராட்டிப் பேசி பொதுக்கூட்டம் நடத்த வேண்டும், இது முடியுமா
என்கிற குழப்பம் அவர்களுக்கு. கூட்டத்தை ரத்து செய்து விடலாமா என்றுகூட சிந்தித்தார்கள்.
ஆனால் முதலமைச்சர் தங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார், அவரை எப்படி அவமதிப்பு செய்வது.
ஒருவழியாக ராஜாஜியின் கூட்டம் ராமநாதன் செட்டியார் ஹாலில் அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில்
என்ன நடக்கும், நிலப்பிரபுக்கள் எப்படி நடந்து கொள்வார்கள், ராஜாஜி என்ன சொல்லப் போகிறார்
என்றெல்லாம் பெரிய எதிர்பார்ப்போடு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட
நிலப் பிரபுக்களில் ஒருவரான வடபாதிமங்கலம் வி.எஸ்.தியாகராஜ முதலியார் ஏற்பாடு செய்திருந்தார்.
ராஜாஜி
கொணர்ந்திருந்த பண்ணையாள் பாதுகாப்புச் சட்டமென்பது நிலவுடைமையாளர்களுக்கும், நிலத்தில்
பாடுபடும் பண்ணையாட்களுக்கும் இரு பிரிவினருக்கும் பயன்படத் தக்கதோர் சட்டம். ஆனால்
இதில் இரு பிரிவினருக்கும் மனவருத்தம், ராஜாஜி மீது கோபம். அப்போதெல்லாம் தஞ்சை ஜில்லாவில்
நெல் அறுவடை சமயத்தில் இரு சாராருக்கும் தகராறு நிகழும், போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
அதனைப் போக்கவே இந்த சமாதான முயற்சி. ஆனால் இதை இரு தரப்பாரும் எதிர்த்ததுதான் வேடிக்கை.
தஞ்சை
கூட்டத்தில் ராஜாஜி பேசினார். அவர் பேச்சு முழுவதும் நிலப் பிரபுக்கள் மீது நிலமற்ற
விவசாயக் கூலிகளின் கோபம் நியாயமானது என்று பேசிக் கொண்டிருந்தார். நிலப் பிரபுக்களுக்கோ
சங்கடம். அப்போது அந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து “தி இந்து” பத்திரிகை தலையங்கம் எழுதியிருந்தது.
அதற்கு பதிலளித்து ராஜாஜி பேசினார். உழவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையானால் நிலப்பிரபுத்வம்
இங்கு அடியோடு அழிந்துவிடும் என்பது போல அவர் பேசினார். அந்தக் கூட்டத்தில் ராஜாஜி
ஐயாவை அழைத்து, “கிராமணி, நீங்கள் இன்னும் சில நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருந்து
எல்லா ஊர்களுக்கும் சென்று இந்த சட்டத்தின் நியாயம் பற்றி உங்கள் பாணியில் பேசுங்கள்”,
மக்கள் சமாதானமாகிவிடுவார்கள் என்று சொன்னார். அதன் அடிப்படையில் ஐயா அவர்களும் தஞ்சை
தவிர, பல ஊர்களுக்கும் சென்று பேசிக்கொண்டு வந்தார்.
ம.பொ.சி.
அவர்களின் தஞ்சை மாவட்ட சுற்றுப் பயணம் ஒரு அச்சுறுத்தலுக்கிடையே நடந்ததாயினும் போகுமிடங்களில்
எல்லாம் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. திருவாரூரில் தமிழரசுக் கழகத் தொண்டர்கள்
இவருக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். மாயவரத்தில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் பேசிவிட்டு
இவர் சென்னை சென்றார்.
8. ராஜாஜியின்
புதிய கல்வித் திட்டமும் மாயவரம் தாக்குதலும்
ராஜாஜியின்
சென்னை மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்தது அவருடைய புதிய கல்வித் திட்டம்.
ராஜாஜி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 1953-54ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த புதிய
கல்வித் திட்டம் உருவானது. இந்த புதிய கல்வித் திட்டம் பற்றி ராஜாஜி நாட்டின் கல்வித்
துறை நிபுணர்களையோ அல்லது சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களையோ, கட்சித் தலைமையையோ கலந்தாலோசிக்காமல்
செயல்படுத்த முனைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது அவருடைய எதேச்சாதிகாரப் போக்கு
என்று ஆளும் காங்கிரஸ் தரப்பிலேயே குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு எதிர்க்கட்சிகளின்
கருத்து எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுமா? அவர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
அது
என்ன ராஜாஜியின் புதிய கல்வித் திட்டம்? அது வெறும் ஷிஃப்ட் முறைதான். நிறைய பேர் படிக்க
வேண்டும், பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையோ குறைவு என்ன செய்வது? ஒரே பள்ளியில் காலையில்
ஒரு குழுவினர், மாலையில் இன்னொரு குழுவினர் என்று ஒரு பள்ளியை இரு பள்ளியாகப் பிரிப்பது.
ஒரு பொழுது படித்த மாணவர்கள் இன்னொரு பொழுதில் என்ன செய்ய வேண்டும். அங்குதான் பிரச்சனை
எழுந்தது.
காலையில்
மூன்று மணி நேரம் படிக்கும் மாணவர்கள் பிற்பகலில் தங்களுக்கு அருகாமையில் நடக்கும்
ஏதாவதொரு தொழிலில் பயிற்சி பெறலாம். சரி! அப்படி எந்தத் தொழிலும் அருகாமையில் நடக்கவில்லை
என்று வைத்துக் கொண்டால் அவர்கள் என்ன செய்யலாம்? மாணவர்களுடைய பெற்றோர்கள் என்ன தொழில்
செய்கிறார்களோ அதில் பயிற்சி பெறலாம் என்றார் ராஜாஜி. வந்தது வினை! ஐயோ, ராஜாஜி குலத்தொழிலை
அறிமுகப் படுத்துகிறார். குல்லுகபட்டர், கபட வேடதாரி என்றெல்லாம் வசைமாரி பொழிந்தது
எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, ஆளும் கட்சியின் ஒரு பகுதியினரும் தான்.
ஒரு
வேளை பள்ளி என்றால் அதிகப்படியாக மேலும் 45 லட்சம் மாணவ மாணவியர் படிக்க முடியும் என்றெல்லாம்
சொல்லப்பட்டது. ஊகூம் கேட்பாரில்லை. ராஜாஜி புகுத்த விரும்பிய புதிய கல்வித் திட்டத்தினால்
அதுவரை போதிக்கப்பட்ட பாடங்களில் எதுவும் குறைக்கப்படவோ, கைவிடப் படவோ இல்லை. ஆனால்
பேச்சு வாக்கில் அப்பன் செய்யும் தொழிலை மகன் செய்ய இந்தத் திட்டம் வழி வகுக்கிறது
என்று சொல்லிவிட்டாரல்லவா? வேறு என்ன வேண்டும், எதையாவது பிடித்துக் கொண்டு தொங்கும்
வழக்கம் கொண்ட நம்மவர்கள் சும்மா இருப்பார்களா? போச்சு நமது சுதந்திரம் போச்சு. வர்ணாசிரமக்
கல்வியை ராஜாஜி புகுத்த நினைக்கிறார் என்று தி.மு.க. போர்க்கொடி உயர்த்தியது. ஜூலை
14இல் அவர்கள் நேரடி நடவடிக்கையில் இறங்கினர். ஆங்காங்கே வன்முறை தோன்றியது. புதிய
கல்வித் திட்ட எதிர்ப்பு என்பது பிராமண எதிர்ப்பாக உருவெடுத்தது. தொடக்கத்தில் கருத்து
எதையும் சொல்லாத தமிழக காங்கிரஸ் பிறகு ஒரு கட்டத்தில் எதிர்க்கவும் தொடங்கியது. டால்மியாபுரம்,
தூத்துக்குடி ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டினால் தி.மு.க.வுக்கு அனுதாபம்
பெருகியதை வைத்து கல்வித் திட்ட எதிர்ப்பிலும் அவர்கள் தீவிரம் காட்டினார்கள்.
1957
செப்டம்பர் 6ஆம் நாள் மாயவரத்தில் தமிழரசுக் கழகத்தின் மாநாடு நடந்தது. அதில் ம.பொ.சி.
ராஜாஜியின் புதிய கல்வித் திட்டத்தை ஆதரித்துப் பேசினார். அவர் பேசும்போது கூட்டத்தில்
சிலர் இடையூறு செய்தனர். கோஷங்களை எழுப்பி பேசமுடியாதபடி செய்தனர். அதையெல்லாம் முறியடித்து
ஐயா பேசி முடித்தார். ராஜாஜியின் கல்வித் திட்டத்தைத் தமிழரசுக் கழகம் ஆதரித்து தீர்மானம்
நிறைவேற்றியது
கூட்டம்
முடிந்து ஐயா தங்கியிருந்த இடத்துக்கு நண்பர்களுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார். அதுவே
ஒரு ஊர்வலம் போல தோற்றமளித்தது. வழியில் ஒரு சந்து, அங்கு சரியான வெளிச்சம் இல்லாத
இடம். அங்கு திடீரென்று ஒரு கும்பல் இவர்களை வழிமறித்து மண்ணை வாரியிறைத்து கலவரத்தில்
ஈடுபட்டனர். அந்த சந்தடியில் யாரோ ஒருவன் தடித்த இரும்புக் கம்பியால் ஐயாவின் நெற்றியில்
ஓங்கி அடித்தான். அவர் முகத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அங்கு தாக்குதல் நடத்தியவர்களுக்கும்
ஐயாவின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக ஆனது. நண்பர்கள் ஐயாவை உடனடியாக
மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று காயத்துக்குக் கட்டுப் போட்டு ஒரு நாள் அங்கேயே தங்கிவிட்டு
மறுநாள் போகலாம் என்று அறிவுறுத்தினர். ஆனால் ம.பொ.சி. அன்று இரவே சென்னைக்கு வண்டி
ஏறிவிட்டார்.
மறுநாள் ஐயா எழும்பூர்
ரயில் நிலையத்தில் வந்திறங்கியபோது போலீஸ் டெபுடி கமிஷ்ணர் ஒருவர் வந்து, ஐயா தாக்கப்பட்ட
செய்தி முதலமைச்சருக்குத் தெரிந்து விட்டது. அவர் தங்களை நலம் விசாரித்துவிட்டு வரச்
சொன்னார் என்று அதிகாரி சொன்னார். “சொற்ப காயம் தான்; பயம் ஒன்றும் இல்லை” என்று பதில்
சொல்லிவிட்டு இல்லம் சென்றார் ஐயா. ஆனால் காவல்துறை அதிகாரிகள் அவர் வீட்டுக்குச் சென்று
அவரை அழைத்துக் கொண்டு போய் ராயப்பேட்டை மருத்துவ மனையில் சேர்த்து அங்கு 6 நாட்கள்
இருந்து சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பினார்
இந்தத்
தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் ஐயாவை ஒரு சாட்சியாக விசாரித்தனர். நீதிபதி ஐயாவின் கருத்தைக் கேட்டபோது
அவர் சொன்னார், குற்ற வாளிகளை மன்னித்து விடுதலை செய்வதையே தான் விரும்புவதாகச் சொன்னார்.
நீதிபதி குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்துவிடுவதாகச்
சொன்னார். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து சிறை சென்றனர்.
தொடர்ந்து
ராஜாஜியின் கல்வித் திட்டத்தை திராவிடக் கட்சிகள் எல்லாம் அதை குலக் கல்வித் திட்டம்
என்ற பெயர் சூட்டி ராஜாஜியை நாக்கு தழும்பேறும் அளவுக்கு வசைபாடிக் கொண்டிருந்தனர்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து ராஜாஜி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப்
போய்விட்டார். புதிய தலைவராக காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த முதலமைச்சர் ஆனார்,
ராஜாஜியின் கல்வித் திட்டம் கைவிடப்பட்டது.
9. தியாகி
மான்யம் வேண்டாம்!
அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு
சிறைசென்ற தியாகிகளுக்கு பட்டா நிலங்கள் தியாகி மான்யமாகக் கொடுக்கப்பட்டது. இதை கேலி
செய்யும் விதமாக தமிழகத்தில் இருந்த சில கட்சிகள் காங்கிரஸ் தியாகிகளை ஐந்து ஏக்கர்
என்று சொல்லி கேலி செய்து வந்தனர். ஐந்து ஏக்கர் நிலம் பெற்ற ஏராளமான தியாகிகள் உண்டு.
பலர் தங்களுக்கு தியாகி மான்யமாக நிலம் தேவையில்லை என்று மறுத்து விட்டனர். ஐயா அவர்களுக்கும்
அதுபோல மானியம் கேட்டு மனுச் செய்திருந்தால் உடனே கிடைத்திருக்கும். ஆனால் அவர் இதற்கெல்லாம்
ஆசைபட்டவரில்லை. ஆனால் இது குறித்து விசாரித்து தியாகிகளுக்கு நிலம் வழங்கும் பணிக்கு
நியமிக்கப் பட்டிருந்த ராமகிருஷ்ண ஐயர் என்பார் இவரை ஒரு முறை சந்தித்தபோது தியாகி
நிலத்துக்கு மனுப் போட்டிருக்கிறீர்களா என்று கேட்டார். ஐயா அதுபோல நான் எதற்கும் மனுப்
போடவில்லை என்றார். ஐயரோ, அது போகட்டும் நீங்கள் பல முறை தியாகம் செய்து சிறை சென்றவர்,
நீங்கள் ஆகஸ்ட் புரட்சியில் சிறைப்பட்ட நாளை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டு அது
1942 ஆகஸ்ட் 13 என்பதைக் குறித்துக் கொண்டு போனார்.
பிறகு
ராமகிருஷ்ண ஐயர் முயற்சி எடுத்து ஐயா அவர்களுக்கு செங்கல்பட்டை அடுத்த பாலூர் எனும்
கிராமத்தில் 5.71 ஏக்கர் நிலம் இவருக்கு மானியமாக ஒதுக்கப்பட்டது. அந்த நிலம் சாகுபடி
பண்ணுகின்ற வளமான நிலம். அவருக்கு ஒதுக்கப்பட்ட பட்டா நிலத்தில் இருந்த மரங்களுக்காக
இவரிடம் ரூ.150 வசூல் செய்யப்பட்டது. இதற்குச் சில நாட்கள் கழிந்து மதுரையில் ராஜாஜி
தியாகி மான்யங்களாக நிலம் வாங்கிக் கொள்வதை கடுமையாக எதிர்த்தார். அவருடைய இந்த பேச்சைக்
கேட்டு ம.பொ.சி. அவர்கள் தனக்கு மான்யமாகக் கொடுத்த நிலத்தை அரசாங்கத்துக்கே திரும்ப
அளித்து விட்டார். ஆனால் ஐயா அவர்கள் தியாகி மான்யத்தைத் திருப்பித் தந்துவிட்டார்
எனும் செய்தியை ராஜாஜியிடம் சொல்லவே இல்லை. பின்னர் ஒரு முறை கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
கேட்டபோதுதான் இந்த செய்தியைச் சொன்னார், அப்போதும் ராஜாஜிக்கு இது தெரியாது என்றே
சொன்னார்.
தான்
தியாகி நிலம் வேண்டாம் என்று அறிவிப்பை அடுத்தவருக்குத் தெரியாமல், குறிப்பாக ராஜாஜிக்குக்
கூட தெரிவிக்காமல் தன் மனசாட்சிக்கு மட்டுமே பணிந்து அந்த முடிவை எடுத்தார். விளம்பரம்
தேடும் எண்ணம் இருந்திருந்தால் பத்திரிகை நிருபர்களைக் கூட்டி தான் செய்யும் தியாகத்தை
ஊரறியச் செய்திருப்பார்கள். விளம்பரம் தேடும் அரசியல் வாதி அவர் அல்ல என்பதை இந்த செயல்
ஒன்றே நிரூபிக்கும்.
9.
ஆந்திரப் பிரிவினையும் அதன் விளைவுகளும்.
சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைந்த
பிறகு ஆந்திரர்கள் தனி ஆந்திர நாடு கோரி போராட்டங்கள் நடத்தினர். தமிழ்நாட்டில் ம.பொ.சி.
அவர்கள் சென்னை மாகாணத்தை மொழிவாரி நாடுகளாகப் பிரிக்க வேண்டுமென்று கோரி கிளர்ச்சிகளைத்
தொடங்கினார். இதில் முரண் என்னவென்றால் ஒரு பக்கம் மொழிவாரி மாநிலம் கோரி போராடிக்
கொண்டு ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கும் தமிழரசுக் கழகம் முழு ஆதரவு கொடுத்து
வந்தது. மொழிவழி மாநிலம் பிரிவதில் ராஜாஜிக்கு உள்ளுக்குள் சம்மதம் என்றாலும் அதை வெளியில்
காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சிக்கும் சரி, ஆட்சிக்கும்
சரி ஆந்திரர்களால் தொல்லை நேர்ந்து கொண்டிருப்பதை ராஜாஜி விரும்பவில்லை.
ராஜாஜி
ஆட்சி புரிந்த போது எதிர்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதிகம் இருந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஆந்திர பகுதிகளில் இருந்து தேர்வானவர்கள். ஆந்திரா தெலுங்கு
பேசும் மக்களுக்காகத் தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டால் எஞ்சியுள்ள தமிழ்ப் பிரதேசம்
அமைதியாக இருக்குமென்பது அவர் கணக்கு. ஆனால் ஜவஹர்லால் நேரு ஆந்திரப் பகுதியை தனி மொழிவாரி
மாநிலமாகப் பிரிக்க சரியான நேரம் இதுவல்ல என்று கருதி வந்தார்.
இப்படி
மொழிவாரி மாநிலம் அமைவது ஊசலாட்டம் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த
ஒரு காங்கிரஸ் தொண்டர், பொட்டி ஸ்ரீராமுலு எனும் பெயர் கொண்டவர் ஆந்திர தனி மாநில கோரிக்கைக்காக
சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். மிக சாதாரணமான அப்பாவித் தொண்டரான அவரை யாரோ சில
ஆந்திர தலைவர்கள் தூண்டிவிட்டுத்தான் அவர் உண்ணா நோன்பு இருந்தார் என்கிற பேச்சும்
அடிபட்டது. அதை நிரூபிப்பது போல ஆந்திர பெரும் தலைவர்கள் சிலர் உண்ணா நோன்பிருக்கும்
அவருக்கு அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கெல்லாம் தனி ஆந்திர மாநிலம்
தேவை என்பதோடு சென்னை நகரும் அவர்களுக்கு வேண்டுமென்பதே முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.
நீண்ட நாள் உண்ணாவிரதம் இருந்து பொட்டி ஸ்ரீராமுலு இறுதியில் ஒரு நாள் உயிர்த்தியாகம்
செய்தார், விளைவு ஆந்திரப் பகுதிகள் எங்கும் ஒரே கலவரம் போராட்டம், டெல்லி செல்லும்
ரயில்கள் எதுவும் ஓடவில்லை, அரசு நிர்வாகம் சில நாட்கள் அந்தப் பகுதிகளில் ஸ்தம்பித்தது.
இவற்றின்
விளைவாக பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய நாடாளுமன்றத்தில் 19-12-1952 அன்று ஒரு பிரகடனம்
வெளியிட்டார். அதன்படி தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் 2-10-1953இல் பிரித்துத்
தனி மாநிலமாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆந்திராவில் அமைதி நிலவத் தொடங்கியது.
தகராறுக்கு இடமில்லாத தெலுங்கு பேசும் மாவட்டங்களை ஆந்திராவில் இணைக்கவும், சென்னை
அதன் தலைநகராக இருக்காது என்றும், தலைநகர் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று நேரு அறிவித்திருந்தார்.
அத்தோடு
ஆந்திரப் பிரிவினை முடிவுக்கு வந்து விடவில்லை. மதறாஸ் மனதே எனும் ஆந்திரரின் குரல்
ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த நிலையில் தமிழரசுக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு
1953 ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் கூடியது. அந்த மகாநாட்டில் சென்னை நகரை
ஆந்திராவுக்குக் கொடுக்கக் கூடாது என்றும், நகரை இரு பிரிவாகப் பிரித்து இருவருக்கும்
பகிர்ந்து கொடுக்கும் எண்ணத்தையும் தமிழரசுக் கழகம் கடுமையா எதிர்த்து தீர்மானங்கள்
நிறைவேற்றியது.
மாநிலங்கள்
பிரிக்க அமைக்கப்பட்ட வாஞ்சுவின் குழுவினர் மூன்று முடிவுகளை அறிவித்தது. சென்னை இரு
மாநிலங்களுக்கும் தலைநகராக தற்காலிகமாக இருக்கும் என்றும், இரு மாநிலங்களுக்கும் ஒரே
கவர்னர் என்றும், இரண்டுக்கும் ஒரே நீதிமன்றம் என்றும் சிபாரிசு செய்தது. இவ்வளவெல்லாம்
ஆனபிறகு 25-3-1953இல் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஆந்திர பிரிவினைக்கு ஓர் இறுதி
வடிவம் கொடுத்தார். அதன்படி 1-10-1953இல் தனி ஆந்திர மாநிலம் உருவாகும். மாநிலத்தின்
தலைநகர் மாநிலத்தின் உட்பகுதிக்குள்ளே இருக்கும் போன்ற சில முடிவுகளை அறிவித்தார்.
அந்த
சூழ்நிலையில் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் ஐயா ம.பொ.சி. “தலை கொடுத்தேனும் தலை
நகரைக் காப்போம்” என்ற கோஷத்தை எழுப்பினார்.அதற்கு அப்போதைய மேயர் டி.செங்கல்வராயன்
உறுதுணையாக இருந்தார். முதலமைச்சர் ராஜாஜியும் மெளனமாக நடப்பதைப் பார்த்துக் கொண்டு
ஐயாவின் முயற்சிகளுக்கு ஊக்க சக்தியாக விளங்கினார்.
இந்திய
சுதந்திர தினத்துக்கு மறுநாளே ம.பொ.சி. அவர்கள் வடக்கெல்லை ஊர்களுக்குப் பயணம் போன
வரலாற்றை முற்பகுதியில் பார்த்தோம் அல்லவா, அந்த நாள் முதல் பண்டிட் ஜவஹர்லால் நேரு
நாடாளுமன்றத்தில் ஆந்திர பிரிவினை அறிவிப்பு நாள் வரை ம.பொ.சி. அவர்கள் வடக்கெல்லை
விவகாரத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார். தகராறுக்கு இடமில்லாத தெலுங்கு மொழி
பேசும் பகுதிகள் அனைத்தும் ஆந்திராவுக்குச் சேரும் எனும் அறிவிப்பில் சித்தூர் மாவட்டமும்
அடங்கியிருந்தது. சித்தூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் வாழும் மக்கள் தமிழர்கள்,
தேவைக்காக அவர்கள் தெலுங்கு மொழி பேசிக் கொண்டிருந்தனர் என்பதால் சித்தூர் மாவட்ட ஊர்களை
அவ்வளவு எளிதாக தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்குக் கொடுப்பதில் ம.பொ.சி. அவர்களுக்கு
சம்மதமில்லை.
வடக்கெல்லையை
பாதுகாக்க தமிழரசுக் கழகம் ஒரு குழுவை அமைத்து அதற்கு திருத்தணி வக்கீல் கே.விநாயகம்
என்பவரை செய்லாளர் ஆக்கினார். “தளபதி” என்று வடக்கெல்லை போராட்டத்தில் அழைக்கப்பட்டவர்
இந்த விநாயகம் தான்; அந்தப் பெயரை அவருக்கு இட்டவர் ஐயா ம.பொ.சி. சித்தூர் மாவட்டத்தில்
தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் வடக்கெல்லை பாதுகாப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
அந்தப் பகுதிகளையெல்லாம் மாநிலம் பிரியும் போது தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கை
வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி 1953 ஏப்ரல் 8 அன்று “தமிழ் ராஜ்யக்
கோரிக்கை” நாளாக அனுசரிக்க அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ்
கட்சியில் ஐயாவின் குரல் மட்டும் தான் தனித்து ஒலித்துக் கொண்டிருந்தது. இதர காங்கிரசாரில்
பெருவாரியானவர்கள் ஆந்திரா அல்லது சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சித்தூர் மாவட்டம்
முழுவதும் ஆந்திராவுக்குப் போவதை ஆதரித்தனர். ஆந்திரத் தலைவர்களான டி.பிரகாசம், நீலம்
சஞ்சீவ ரெட்டி தவிர சித்தூர் மாவட்ட வாசிகளான துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்,
துணை சபாநாயகர் அனந்தசயனம் ஐயங்கார் ஆகியோர் சித்தூர் முழுவதும் ஆந்திராவுக்குப் போவதை
ஆதரித்தனர். அவ்வளவு ஏன் தமிழரான ஆர்.வெங்கட்டராமனும் சித்தூர் மாவட்டத்தில் நாம் எந்த
உரிமையும் கொண்டாட முடியாது என்று அறிக்கை விட்டார்.
சித்தூர்
மாவட்டத்தில் இருந்த திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், திருத்தணி, பல்லவனேரி, கங்குந்திக்குப்பம்
ஆகிய ஆறு தாலுக்காக்களைத் தமிழகத்தோடு சேர்க்க வெண்டுமென்பது ஐயாவின் கோரிக்கை. மேற்சொன்ன
பகுதிகள் அனைத்தும் தமிழகத்தோடு ஒட்டும் உறவுமாக இருந்த பகுதிகள் என்றாலும் திருப்பதி
உள்ளிட்ட சில பகுதிகள் நம் கையை விட்டுப் போய் வெகு நாட்கள் ஆகிவிட்டன. அந்த ஆறு தாலுக்காக்களில்
சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய மூன்று பகுதிகளில்தான் தமிழர் அதிகம் இருந்தனர்.
இதனைத்
தொடர்ந்து வடவெல்லை போராட்டம் வலுப்பெற்று வந்தது. ஏப்ரல் 1953 9ஆம் தேதி அந்தப் பகுதிகளில்
கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தார். அது வெற்றி பெற்றது. தொடர்ந்து பதினைந்து நாட்கள்
மறியல் போராட்டம் நடந்தது. அந்த நாட்களில் ம.பொ.சி. திருத்தணியில் தங்கி இருந்து எல்லா
இடங்களுக்கும் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தார். அவர் காந்தியவாதி அல்லவா,
அவர் போராட்டம் காந்திய வழியில்தான் நடந்தது. அவர் போராட்ட முறையில் பொதுமக்களுக்கோ,
காவல் துறையினருக்கோ எந்தவித தொல்லையும் தராமல் அமைதியாக நடந்ததை அனைவருமே பாராட்டினர்.
1953
மே மாதம் 18 அன்று புத்தூரில் எல்லை பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடப்பதாக இருந்தது.
அன்று மாலை புத்தூரில் அவ்வூரில் இருந்த சிவய்யா எனும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்
ஒருவர் தெலுங்கு இளைஞர்களைக் கூட்டிக் கொண்டு தெருத் தெருவாக தமிழர்களுக்கு எதிரான
ஒரு ஊர்வலத்தை நடத்தினார். அந்தக் குழுவினருக்கு காவல் துறையும் துணையாக இருப்பதாக
ஐயாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது. அங்கு தமிழருக்கும் தெலுங்கருக்குமான ஒரு பெரிய கலவரத்தை
உருவாக்க முயற்சிகள் நடப்பதாக செய்தி பரவியது. இதற்கிடையே கூட்டம் நடந்தது. தெலுங்கர்கள்
ம.பொ.சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பிக் கொண்டு கூட்டத்தினர் மீது கல்லெறிந்து தாக்குதல்
நடத்தினர். சிலர் கையில் சவுக்குக் கட்டைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்து வந்தனர்.
சித்தூர் தமிழர்கள் பெருங்கூட்டமாக மேடையில் இருந்தவர்களைப் பாதுகாப்பு வளையத்துக்குள்
வைத்துப் பாதுகாத்தனர். இத்தனை களேபரங்களையும் அங்கிருந்த போலீசார் பார்த்து ரசித்துக்
கொண்டிருந்ததுதான் வேதனை தரும் விஷயம். போதாத குறைக்கு ஒரு அதிகாரி வந்து நீங்கள் அனைவரும்
உடனடியாக ஊரை விட்டு ஓடிவிடுவதுதான் நல்லது என்று உபதேசமும் செய்தார். இப்படி தெலுங்கர்களும்,
காவல் துறையும் இணைந்து செய்த சதியில் ஒரு அதிகாரி தமிழர் இவர்களை சாமர்த்தியமாகப்
பாதுகாத்து திருத்தணிக்குக் கொண்டு சேர்த்தார் அந்த அதிகாரி, அவர் திருநெல்வேலி தமிழர்.
முதலமைச்சர்
ராஜாஜி ஐயாவின் இந்தப் போராட்டத்தினால் ஆந்திரர், தமிழர் கலவரம் வந்துவிடக் கூடும்
என்று அஞ்சினார். மேலும் அப்படி மொழிவாரியாக பிரிந்தால் தனக்கு அது பாதமாக இருக்கும்
என்று எண்ணி ஐயாவை போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
அவர்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு வடவெல்லையில் சித்தூர் மாவட்ட ஊர்களில் நடந்த போராட்டக்
களத்தை சென்னை நகருக்கு மாற்றிக் கொள்வது என்று முடிவெடுத்தனர். ஆனால் அதற்குள் ஒரு
எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு விட்டது. திருத்தணியில் திடீரென்று தமிழ் இளைஞர்கள்
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னை பம்பாய் எக்ஸ்பிரஸ் ரயிலை அரக்கோணத்தை அடுத்த
இச்சிப்புத்தூர் அருகே நிறுத்தி இரண்டு மணி நேரம் சிறைபிடித்து விட்டனர். போலீஸ் கலவரக்காரர்களைத்
துரத்தி அடித்து பலரை கைது செய்து, ஊரில் 144 தடை உத்தரவு பிறப்பித்து விட்டனர். அன்றிரவு
செய்தி கேள்விப்பட்டு திருத்தணி சென்ற ம.பொ.சி மற்றும் தலைவர்கள் தலையிட்டு வன்முறை
இனி நிகழா வண்ணம் அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு போராட்டம் அமைதியான முறையில் நடந்து
தொண்டர்கள் கைதாகி சிறை சென்றனர்.
என்னதான்
தலைவர்கள் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த முயற்சி செய்தாலும், உணர்ச்சி வசப்பட்டு
கீழ்மட்ட தொண்டர்கள் ஏதேனும் வன்முறை செயல்களில் ஈடுபட்டு போராட்டத்தையே திசை திருப்பி
விடுகின்றனர். திருத்தணி விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. ஆகையால் தலைவர் ம.பொ.சி.
முதலமைச்சர் ராஜாஜியுடன் விவாதித்து இதற்கொரு முடிவை காண விரும்பினார்.
இதற்கிடையே
முதல்வர் ராஜாஜியிடமிருந்து ஐயாவுக்கு ஒரு தந்தி வந்தது. அதில் வடக்கெல்லை போராட்டத்தை
உடனடியாக நிறுத்திவிட்டு சென்னை வந்து தன்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் ஐயா போராட்டத்தை இந்த நிலையில் நிறுத்திவிட்டு சென்னை போக விரும்பவில்லை. ராஜாஜிக்குத்
தன் நிலைமை குறித்து விளக்கமாக ஒரு கடிதம் எழுதிவிட்டு போராடி கைதானார். இவரை விசாரித்த
நீதிபதி இவருக்கு ஆறுவார கால சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அப்போது உயர்
போலீஸ் அதிகாரியாக இருந்த திரு ராஜரத்தினம் அவர்கள் ஐயாவை வேலூர் அழைத்துச் செல்ல வந்திருந்தவர்,
ராஜாஜியிடமிருந்து வந்த இன்னொரு செய்தியையும் சொன்னார். அது நேரு சித்தூர் மாவட்ட தமிழ்ப்
பேசும் பகுதிகள் பற்றி ஒரு கமிஷன் அமைக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என்ற செய்திதான் அது.
ம.பொ.சி.
சென்னை திரும்பியதும் முதலமைச்சர் ராஜாஜியைச் சென்று பார்த்தார். அப்போது தங்கள் வேண்டுகோளைப்
புறக்கணித்துவிட்டு நான் போராட்டம் நடத்தியதில் உங்களுக்கு வருத்தமொன்றும் இல்லையே?
என்றார் ஐயா. ராஜாஜி சொன்னார், “தமிழகத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்தீர்கள்,
நான் அரசுக்கு நடந்து கொள்ள வேண்டிய முறையில் நடந்து கொண்டேன்” என்றார் பெருந்தன்மையுடன்.
இந்த
நிலையில் ஐயாவை காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக
கட்சியை விட்டு ஏன் நீக்கக்கூடாது என்று ஒரு நோட்டீஸ் வந்தது. அதன் பின் அவர்களே நேரு
இந்தப் பிரச்சினையில் ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்று சொல்லி முடித்து வைத்துவிட்டதால்
ஐயா மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. வடக்கெல்லை போராட்டமும் அந்த கமிஷன் முடிவை எதிர்பார்த்து
நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் முடிவு வரும்போது அது தமிழர்களுக்கு பாதகமாக இருக்குமானால்
மீண்டும் போராடுவது என்ற முடிவினை எடுத்தார்கள். ஆக,
வடக்கெல்லை போராட்டம் ஒரு தீர்மானமான முடிவுக்கு வராமலே மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
11. தாய்க் கட்சியா? தனிக்கட்சியா?
சிலம்புச்
செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஒரு புடம் போட்டெடுத்த தியாகி, தேசபக்தர், விளம்பரத்தை
விரும்பாதவர், எந்த சொந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து அரசியலில் ஈடுபட்டவரில்லை என்பதையெல்லாம்
முந்தைய அவரது நடவடிக்கைகள் மூலம் பார்த்தோம். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ்
கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாகச் சேர்ந்து படிப்படியாகத் தனது தன்னலம் கருதா தொண்டினாலும்,
பேச்சாற்றலினாலும், தமிழ் உணர்வாலும் படிப்படியாக உயர்ந்து ஒரு நல்ல தலைமைப் பதவிக்கு
ஏற்றவராக வாழ்ந்த அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
1954ஆம்
ஆண்டு அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரராக இருந்து கொண்டே தங்களைச் சுற்றியுள்ள ஆந்திரர்களும்,
கேரளத்து மலையாள மக்களும் தத்தமக்கு ஒரு தனி சுயேச்சையான மொழிவாரி மாகாணம் அமைக்கவும்,
தங்களது மாநில எல்லைகளை நிர்ணயம் செய்து கொள்ளவும் செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம்
தமிழகத்தில் அந்த உணர்வை முன்னெடுத்துச் செல்ல ஐயா மட்டுமே முயற்சி செய்து கொண்டிருந்தார்.
தமிழகத்தின் எல்லைகளை வடக்கேயும் தெற்கேயும் மற்றவர்கள் வசம் வைத்துக் கொண்டிருந்த
நிலையில் தமிழர்கள் தங்கள் எல்லைகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது கண்டு ம.பொ.சி.
அவர்கள் தமிழகம் மொழிவழி மாநிலமாக ஆகும்போது அதன் வடக்கெல்லைப் பகுதிகளிலும் தெற்கெல்லைப்
பகுதிகளிலும் உள்ள தமிழ்ப்பேசும் மக்கள் உள்ள பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சேதமில்லா தமிழ்நாட்டை
உருவாக்க நினைத்து தமிழரசுக் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதனையோர் கலாச்சாரக் கழகமாக
நடத்தி வந்தார். அதன் மாநாடுகள் முதல்நாள் இலக்கிய மாநாடு என்றும், இரண்டாம் நாள் திராவிட
எதிர்ப்பு மாநாடு என்றும், மூன்றாம் நாள் அரசியல் மாநாடு என்றும் நடத்தி வந்தார். இலக்கிய
மாநாட்டில் தமிழகத்து தலைசிறந்த அறிஞர்கள் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். திராவிட
இயக்கங்களை ஐயாவைப் போல் எதிர்த்தவருமில்லை, அவர்களது வாதங்களை எதிர்த்துத் தவிடு பொடியாக்கியவரும்
இல்லை. காங்கிரசில் நல்ல பேச்சாற்றல் உள்ள தலைவராக ஐயாவும், அவருடைய தொண்டர்களுமே சிறந்து
விளங்கி வந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே இன்னொரு
கட்சியை வைத்துக் கொண்டு அதை கலாச்சாரக் கழகம் என்று சொல்லிக் கொண்டு இவர் நடந்து கொள்வதை
காங்கிரசில் சில தலைவர்கள் விரும்பவில்லை. ராஜாஜி இருந்தவரை அவர் ஐயாவை நன்கு புரிந்து
கொண்டவர் என்பதால் அவர் காலத்தில் காங்கிரஸ் மாநில தலைவர்களாக இருந்தவர்கள் இந்த விஷயத்தில்
தலையிடவில்லை. ஆனால் ராஜாஜி ராஜிநாமா செய்துவிட்டு எதிலும் பங்கேற்காமல் தானுண்டு ராமாயணம்,
மகாபாரதம் என்று படித்து சுவையாக நூல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். அதன் பின் காங்கிரஸ்
தலைவராக வந்த எல்.எஸ்.கரையாளர், காமராஜ் ஆகியோர் கட்சிக்குள் இது என்ன தனிக் கட்சி
என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த
சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருந்த ஆர்.வெங்கட்டராமன் ஐயாவுக்கு
20-7-1954இல் ஒரு கடிதம் எழுதினார்.
அதில் அவர் தமிழரசுக் கழகத்தைக் கலைத்துவிட்டு காங்கிரசில் தொடருங்கள், தவறினால் காங்கிரசிலிருந்து
விலக்கப்படுவீர்கள் என்றும் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து ஐயா அவர்கள் காமராஜ்
அவர்களை நேரில் சந்தித்து பேசினார். அவரும் ஐயாவிடம் சுமுகமாக பேசினாலும் தன்னுடைய
கருத்தை வலியுறுத்தி காங்கிரசில் இருப்பதானால் தமிழரசுக் கழகத்தைக் கலைத்து விடுங்கள்
அல்லது வெளியேற வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டார். ஐயாவும் சரி இப்போதே நாம்
இருவரும் காங்கிரஸ்காரர்களாகப் பிரிகிறோம், மீண்டும் சந்திக்கும்போது காங்கிரஸ்காரர்களாக
அல்லாமல் நண்பர்களாக சந்திப்போம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.
ம.பொ.சி.
அவர்கள் உடனடியாக தமிழரசுக் கழகத் தோழர்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் காங்கிரசில்
நாம் தொடருவதென்றால் நாம் நமது உரிமைகளை இழக்க வேண்டியிருக்கும். அதனால் கழக உறுப்பினர்கள்
காங்கிரசிலிருந்து விலகுவதானால் அதனை அனுமதிக்கிறோம் என்று எழுதினார். உறுப்பினர்கள்
விலகவேண்டும் என்று சொல்லவில்லை, அவர்களுக்கு முடிவு எடுக்கும் உரிமையை கொடுத்திருந்தார்.
அதன்படி
ஓரிரு தலைவர்கள் மட்டுமே காங்கிரசை விட்டு விலகினார்கள், தொண்டர்கள் பெரும்பாலும் காங்கிரசிலிருந்துவிலகி
தமிழரசுக் கழகத்தில் தொடர்ந்தார்கள். அப்படியொரு முடிவினை ஐயா எடுக்க வில்லையானால்
தமிழகத்துக்குப் பல இழப்புகள் நேர்ந்திருக்கும். வடக்கில் திருத்தணி முதலான ஊர்கள்
நமக்கு இல்லாமல் போயிருக்கும், தெற்கே பல ஊர்கள் நமக்கு இல்லாமல் போயிருக்கும். தமிழரசுக்
கழகம் தமிழர்களின் உரிமைகளைக் காக்க வேண்டுமென்பதற்காக எதிர்காலத்தில் தனக்கு கிடைத்திருக்க
வேண்டிய உயர்வுகள், பதவிகள் அனைத்தையுமே ஐயா தியாகம் செய்டுவிட்டு இந்த முடிவை எடுத்தார்கள்.
ஐயாவினுடைய இந்த முடிவை தமிழகத்துப் பத்திரிகைகள் அனைத்துமே பாராட்டின. காங்கிரசின்
பத்திரிகை “பாரததேவி” கூட ஐயாவின் வெளியேற்றம் தவிர்க்க முடியாதது என்று எழுதியதோடு,
அவருடைய அளவிடற்கரிய சேவையைப் பாராட்டியிருந்தது.
காங்கிரசிலிருந்து
பிரிந்து ஐயாவுடன் இணைந்த தலைவர்களில் வேலூர் வி.கே.குப்புசாமி, பேராசிரியர் ந.சஞ்சீவி,
கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம், கவிஞர் வானம்பாடி, கவிஞர்
கா.மு.ஷெரீப், டி.கே.எஸ்.சகோதரர்கள், சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, சீர்காழி ஜி.சுவாமிநாதன்
(இவர் தஞ்சை பாஃர்ம் புராடாக்ட்ஸ் நிறுவன அதிபர், தஞ்சை பெசண்ட் அரங்கின் தலைவராகவும்
இருந்தார்) வெளவாலடி சம்சுதீன் ஆகியோரைச் சொல்லலாம். இவர்களைத் தவிர பிரபல சினிமா தயாரிப்பாளர்
எம்.ஏ.வேணு, கலைஞர் ஏ.பி.நாகராஜன் ஆகியோரும் கழகத்தில் இருந்தனர்.
காங்கிரஸ்
கட்சியின் அகில இந்திய தலைமை இப்படியொரு தொண்டர்கள் கூட்டத்தைக் கட்சியை விட்டு அனுப்பவதில்
சம்மதமில்லாமல், அவசரப்பட்டு அவர்கள் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டு கடிதங்கள்
அனுப்ப வேண்டாம், எதிர்காலத்தில் எல்லை விஷயத்தில் என்ன மாற்றங்கள் வருகிறது என்பதைப்
பார்த்து பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து
விட்டார்கள். கட்சி பிளவு பட்டாலும் விரோதங்கள் தொடராமல் நட்புரிமையோடு உறவு நிலைத்திருக்கும்படியாக
ஐயா வழிநடத்தினார்.
இப்படியாக
தமிழகத்தின் வடக்கெல்லாம் போராட்டம் காரணமாக ம.பொ.சியும் அவரது தமிழரசுக் கழகத் தொண்டர்களும்,
தீவிரமான தேசபக்தர்களாக இருந்தும், சுதந்திரப் போராட்டத்தில் சர்வபரித் தியாகங்களைச்
செய்திருந்தும், தமிழ் உணர்வோடு எல்லைகளைக் காப்போம் என்று தனிக் குரல் எழுப்பியதால்
தாய்க் கட்சியிலிருந்து நீங்கியிருக்க வேண்டிய நிலைமை வந்தது. என்றாலும் கூட கடைசி
வரை, மூச்சு உள்ளவரை ஐயா அவர்கள் ஒரு தேசிய வாதியாக, தேசபக்தராக ஒரு காங்கிரஸ் உணர்வாளராகவே
வாழ்ந்தார் என்பதை இந்த நாடு அறியும்.
12. தமிழகத்து தெற்கெல்லைப் போராட்டம்.
ஆங்கேலேயர்கள்
இந்தியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டாலும் இங்கே நம்மவர்கள் ஆட்சி
என்பது எல்லா வகையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கடந்த கால பிரச்சனைகளுக்கு
முடிவு கட்டி ஒரு உதாரணமான ஜனநாயகமாக மலர்வதில் பல இடையூறுகள் ஏற்பட்டன. மாநிலங்கள்
பிரிக்கப்பட்ட போது தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாகவே கருத இடம் இருக்கிறது. ஒருங்கிணைந்த
சென்னை மாகாணத்தில் ஒட்டிக் கொண்டிருந்த தெலுங்கு பேசும் பிரதேசங்கள் ஆந்திரா என்று
பிரிக்கப்பட்ட போதும், கன்னட பிரதேசங்கள் கர்நாடகாவிற்குப் போன பிறகும், மலபார் பகுதிகள்
பிரிந்து கேரளா என்று உருவானபோதும், தமிழர், தமிழ்நாடு எனும் எண்ணத்தை வளர்க்காமல்
தங்களுடன் இணைந்திருந்த பகுதிகள் ஒருவழியாகப் போயிற்று என்றுதான் நினைத்தார்களே தவிர,
இப்போது உருவாகியிருப்பது தமிழ்நாடு என்பதையோ, அங்கு தமிழும் தமிழர்கள் வாழ்வும் சிறந்து
விளங்க ஆக்க பூர்வமாகச் செயல்பட வேண்டுமென்கிற எண்ணமோ உருவானதாகத் தெரியவில்லை.
என்றும்
போல நிர்வாகம் தொடர்ந்து பாரம் குறைந்து செயல்பட்டுக் கொண்டிருந்ததே தவிர தமிழர் உணர்வை
வளர்க்கவில்லை. அந்தப் பணியை வடக்கெல்லை போராட்டம் நடத்தி அதை பாதியில் நிறுத்தி வைக்க
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட நிலைமையில் தெற்கே திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட
தமிழ்ப் பிரதேசங்களைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டுமென்கிற உணர்வு மாநிலத்தை ஆண்டு
கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
அந்தக்
குறையைப் போக்கிட ம.பொ.சி. அவர்கள் தனது தமிழரசுக் கழகக் கிளைகளை தென் தமிழ்நாட்டில்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட தமிழ்ப் பகுதிகளில் 1953இல் தொடங்கப்பட்டது.
அதற்கடுத்த 1954ஆம் ஆண்டில் தெற்கெல்லைப் பகுதிகளை திருவிதாங்கூரிலிருந்து பிரித்து
தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசோடு தமிழரசுக்
கழகமும் இணைந்து பாடுபடத் தொடங்கியது.
திருவிதாங்கூர்
தமிழ்நாடு காங்கிரஸ் எனும் பெயரால் இயங்கி வந்த திரு நேசமணியின் கட்சியும், ம.பொ.சி.
அவர்களின் தமிழரசுக் கழகமும் ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுகின்ற கட்சிகள்தான் என்றாலும்,
திரு நேசமணியின் தலைமையில் இயங்கிய கட்சி தமிழரசுக் கழகத்தை தங்கள் சாதனைகளில் பங்கு
போட வந்திருப்பவர்களாகக் கருதினர்.
ஒரே
நோக்கம் இரு கட்சியினருக்கும் இருந்த போதும், மனிதர்களுக்கே இயல்பான சுயநலம் இரண்டையும்
இணைந்து செயல்பட முடியாமல் வைத்திருந்தது. தென் திருவாங்கூர் தமிழ்ப் பகுதிகளான அகஸ்தீஸ்வரம்,
தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகியவை திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு தனி மாவட்டமாக
அங்கீகரித்து சமஸ்தானமும், திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும் பாளையங்கோட்டையில் ஒரு
உடன்பாட்டை எட்டியிருந்தது. இந்த ஒப்பந்தத்துக்கு தமிழ்நாடு காங்கிரசும் அங்கீகாரம்
அளித்திருந்தது.
இந்த
முடிவுக்கு சம்மதமில்லாத சில தென் திருவாங்கூர் தமிழினத் தலைவர்கள் அவர்கள் கட்சி பிளவுபட்டது.`
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பிளவுபட்ட திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும்
இணைந்து 1954 ஆகஸ்ட் 11ஆம் நாளை “விடுதலை நாள்” அனுசரித்தது. இவ்விரு கட்சிகளும் சேர்ந்து
நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் காவல்துறை மார்த்தாண்டம்
எனும் ஊரில் அடக்குமுறையைக் கையாண்டு கூட்டத்தைத் துப்பாக்கிச் சூடு நடத்திக் கலைத்தது.
அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் சுட்டுக் கொலையுண்டனர். அந்தத் தியாகிகளின்
உடல்கள் உறவினர்களிடம் கூட கொடுக்காமல் கொண்டு போய் கொளுத்திவிட்டனர். இத்தனை கொடுமைகளையும்
செய்தவர் அப்போது பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பட்டம் தாணுப்பிள்ளை எனும் முதலமைச்சர்தான்
காரணம் என்பது தெரிந்தது.
செய்தியறிந்து
சிலம்புச் செல்வர் சென்னையிலிருந்து புறப்பட்டு நாகர்கோயில் சென்றார். திருநெல்வேலியிலிருந்து
பேருந்தில் சென்று கொண்டிருந்த ஐயாவை ஆரல்வாய்மொழி எனுமிடத்தில் போலீஸ் மறித்து தலைவரைக்
கீழே இறக்கினர். அவர் கைது செய்யப்படலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் எங்கிருந்தோ
வந்த தொலைபேசி செய்தி கேட்டு அந்த அதிகாரி ஐயாவை “நீ போகலாம்” என்று சொல்லி விடுவித்து
விட்டார். இடையில் நடந்தது என்ன? அந்த மர்மத்துக்கு மறுநாள் கிடைத்த செய்திகளில் விடை
கிடைத்தது. எங்கிருந்தோ அவருக்கு வந்த தந்தியில் இவரைக் கைது செய்யவேண்டாம் என்று உத்தரவு
வந்ததாம்.
பட்டம்
தாணுப்பிள்ளை உத்தரவால் 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி நடந்து ஆறு மாத
காலத்திற்குள் பட்டத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அப்படி பட்டத்தைக் கவிழ்த்தவர்கள்
காங்கிரஸ் கட்சியினர். அப்போது திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதிகளான
கொச்சி சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, நெய்யற்றின்கரை, விளவங்கோடு, கல்குளம்,
அகத்தீஸ்வரம், தோவாளை ஆகிய 9 தாலுக்காக்களைத் தமிழ்நாட்டுடன் இணைக்கத்தான் போராட்டங்கள்
தெற்கெல்லையில் நடைபெற்றது.
இதில்
தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழர்களே.
ஆனால் தமிழர்கள் போராடிக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டுத் தலைவரே “குளமாவது, மேடாவது”
என்று எள்ளி நகையாடியதால் இந்தப் போராட்டம் நீர்த்துப் போய் அந்தப் பகுதிகள் தமிழகத்துக்குக்
கிடைக்காமல் போய்விட்டது.
எனினும்
திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட தமிழ் பேசும் பகுதிகள் அனைத்தும் தமிழகத்தோடு இணைந்ததும்,
அந்தப் பகுதிதான் கன்யாகுமரி மாவட்டம் என்பதும் வரலாறு சொல்லும் செய்தியாகும். இந்த
சாதனையைப் படைத்த அனைத்துத் தலைவர்களுக்கும், அது நேசமணி, ஐயா ம.பொ.சி. பி.எஸ்.மணி,
தாணுலிங்க நாடார், நாஞ்சில் மணிவர்மன், காந்திராமன் போன்ற போராட்டக் காரர்கள் அனைவருக்கும்
தமிழ் மக்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
13.
தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்.
1937இலிருந்து
தனி மாநிலம்
பற்றியும் தலைநகர் பற்றியும் பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. மொழிவாரி
மாநிலம் பிரிந்த போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு மொழி பேசும்
ஆந்திரா பிரிந்த போது, ஆந்திர மாநிலத்துக்குச் சென்னை நகரே தலைநகரமாக இருக்க வேண்டுமென்கிற
கோரிக்கையை ஆந்திரத் தலைவர்கள் முன்வைத்துப் போராடினர். அந்த போராட்டத்துக்கு ஆந்திர
கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் முன்னிலை வகித்து நடத்திக் கொண்டிருந்தார். வரலாற்று
பூர்வமாக சென்னை நகரம் தெலுங்கர்களுக்கே சொந்தம் என்றும், தொடக்க நாட்களில் தெலுங்கு
பேசும் மக்களே சென்னை நகரில் வசித்தார்கள் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை
வலியுறுத்தி “மதறாஸ் மனதே” எனும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு ஆந்திரர்கள் போராடத்
தொடங்கினார்கள்.
பிரிவினைக்கு
முந்தைய சென்னை மாகாணத்து தமிழ் மக்கள் தாங்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்படுவதாக
கவலையடைந்தார்கள். சென்னை மாகாண அரசாங்க நிர்வாகத்தில் ஆந்திரர்களின் செல்வாக்கே அதிகமாக
இருந்து வந்தது என்பது ஒன்று. அரசின் உயர் பதவிகளில் மலையாள மொழி பேசுவோரின் ஆதிக்கம்
இருந்தது என்பது மற்றொன்று. 1912 தொடங்கியே தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கென்று
தனி மாநிலம் தேவை என்பதை உணர்ந்திருந்தார்கள். மாநிலத்தின் தேவையை உணர்ந்தது போல தலைநகரம்
எது என்பதில் அவர்களுக்கு ஒரு நிலையான கருத்து இல்லை. 1912இல் “தேசாபிமானி” எனும் பத்திரிகை
வால்டேர் நகரமே தெலுங்கு தேசத்தின் தலைநகராக இருக்க ஏற்றது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தது.
விஜயவாடா நகரமே சரியான தேர்வாக இருக்குமென்ற மாற்றுக் கருத்தும் முன்வைக்கப்பட்டது.
அதற்குக் காரணம் விஜயவாடாதான் மாநிலத்தின் மையப் பகுதியாக அமைந்திருக்குமென்பது அவர்கள்
கருத்து. ரயில் மார்க்கத்திலும் எல்லா திசைகளும் வந்து கூடுகின்ற ஊர் என்பதும் அந்த
கருத்துக்கு வலுசேர்த்தது.
இவற்றுக்கெல்லாம்
மாற்றாக சென்னை நகரத்தின் மீதும் அவர்களுக்கு ஒரு கண் இருந்தது. காரணம் இந்த நகரத்தில்தான்
பல மொழி பேசும் மக்கள் வசிக்கிறார்கள், இந்தப் பகுதியிலுள்ள ஒரு பெரிய நகரம், ஆகையால்
சென்னையே ஆந்திரத்தின் தலைநகரமாக இருக்க வேண்டுமென்கிற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து வெளியான “தி மெட்ராஸ் மெயில்” எனும் ஆங்கில நாளேடு ஆந்திரா, தமிழ்நாடு
ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சென்னை நகரம் இருக்கலாம் என்று எழுதியிருந்தது.
ஆனால் அந்தத் திட்டத்தை அமல்படுத்துவது அத்தனை சுலபமல்ல என்பதையும் அது உணர்ந்து எழுதியிருந்தது.
ஒரே நகரத்தை இரு மாநிலங்களுக்கும் தலை நகரமாக வைத்துக் கொள்வதில் இருக்கும் சிரமங்களைக்
கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னொரு கருத்தும் வெளியிடப்பட்டது. அது சென்னை நகரை இரு
பாகமாகப் பிரித்து, கூவம் நதிக்கு வடக்கிலுள்ள நகரம் ஆந்திராவுக்கு என்றும், கூவத்தின்
தென் பகுதி சென்னை மாகாணத்துக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த
சூழ்நிலையில் தலைநகர் பிரச்சனை பெரிதாக வெடிக்குமானால், ஆந்திர மாநிலம் பிரிவது காலதாமதம்
ஆகும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினார்கள். மதறாஸ் சட்டமன்றத்தில் இந்தப் பிரச்ச்னையை
ஏ.ரங்கசாமி ஐயங்கார், எம்.எல்.சி., எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் ராஜாஜி தனித்தனி
மொழிவாரி ராஜ்யம் அமைவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்காத நிலையில் தலைநகர் பிரச்சனையில்
அவரவர்களுக்கு எது நல்லது என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார். சட்டசபையில்
ஆந்திர உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள் ஒரு மனுவைத் தயாரித்து மந்திரிசபை
மூலம் கவர்னர் லார்ட் எர்ஸ்கின் அவர்களிடம் கொடுக்கப் பட்டது. கவர்னர் தலைநகர் முறித்து
முடிவெடுக்கும் முன்பாக ஆந்திர உறுப்பினர்கள் சென்னை தங்களுக்குத்தான் என்றனர்; தமிழ்ப்
பிரதேச உறுப்பினர்கள் சென்னை தங்களுடையது என்றனர். இதற்கிடையே குரங்கு மத்தியஸ்தம்
போல கவர்னர் சென்னை இரண்டு மாநிலத்துக்குமே தலைநகராக இருந்துவிட்டுப் போகட்டுமே என்றார்.
அது நிர்வாகத்துக்கும் வசதியாக இருக்கும் என்றார் அவர். கவர்னர் எர்ஸ்கின் இந்தியா
மந்திரிக்கு எழுதிய சிபாரிசு கடிதத்தை லார்டு செட்லாண்ட் என்பவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
தனி ஆந்திரம் அமைவதை ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது ஆந்திர உறுப்பினர்கள் மத்தியில்
நிலவிய கருத்து ராஜாஜியின் செல்வாக்கினால்தான் இப்படியொரு முடிவை இங்கிலாந்து அரசு
எடுத்திருக்கிறது என்பதுதான். அது முதல் மொழிவழி மாநிலம் அமைப்பது என்கிற முடிவு மத்திய
அரசின் முடிவையொட்டியே இருக்கும் என்ற கருத்து நிலவத் தொடங்கியது.
1947
ஜனவரி 19ஆம் நாள் தமிழ்நாடு காங்கிரசின் மகாநாடு கோயம்புத்தூரில் நடந்தது. அதில் பேசிய
எம்.பக்தவத்சலம் தெலுங்கு பேசும் மக்கள் சென்னையைத் தலைநகராகக் கேட்பதை ஆட்சேபித்துப்
பேசினார். ஆந்திரரான பட்டாபி சீதாராமையா தொடர்ந்து தனி ஆந்திராவுக்காகப் போராடி வந்தார்.
அதனையொட்டி மொழிவழி மாநிலம் பிரிப்பது குறித்து மத்திய அரசு ஒரு முடிவுக்கு வரவேண்டி
இருந்தது. அதற்காக மத்திய அரசு தர் என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. அந்த கமிஷன்
கொடுத்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம் பிரிந்து ஆந்திரம், பிரிக்கப்படும். ஆனால் தலைநகர்
எது என்பதை எல்லைக் கமிஷன் அமைத்துதான் முடிவெடுக்க முடியும் என்று கூறியது.
அது
முதல் இரு தரப்பிலும் சென்னை உனக்கா எனக்கா என்ற பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இது குறித்த சில சுவையான நிகழ்வுகளைப் பார்க்கலாம். நமது இந்த மாநிலம் 1968ஆம் வரை
“மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரில்தான் அரசாங்க அலுவல்களில் குறிப்பிடப்பட்டு வந்தது.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது இந்த மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயரைத் தமிழ்நாடு
என்று மாற்றவேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. அப்படி தமிழ்நாடு எனும் பெயர் மாற்றத் தீர்மானம்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது சி.என்.அண்ணாதுரை காலத்தில். அப்போது இந்த பெயர்
மாற்றத்துக்காகப் பாடுபட்ட ஐயாவை முதலமைச்சராக இருந்த சி.என்.ஏ. மிகவும் பாராட்டினார்.
அப்போது 1967 – 71 காலகட்டத்தில் ஐயா அவர்கள் தமிழக சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராகப்
பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் சென்னை நகரத்தைப் பற்றிய விவரங்கள் எல்லாம் விரிவாகப்
பேசப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில் சென்னையை ஆந்திரர்கள் உரிமை கொண்டாடியபோது அதனை எதிர்த்துக்
குரல் கொடுத்தவர் ஐயா ம.பொ.சி. என்பதை அனைவரும் பாராட்டிப் பேசினர்.
இந்திய
தேசத்துக்கு சுதந்திரம் நெருங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் தெலுங்கு மக்கள் “மதறாஸ்
மனதே” என்று பெருங்குரல் எழுப்பிக் கோரிக்கை விடுத்தனர். அதை எதிர்த்து எழுந்த ஒரே
தமிழ்க் குரல் ஐயா ம.பொ.சியினுடையது என்று வரலாறு சொல்கிறது. ஆந்திராவை தெலுங்கு பேசும்
மக்களுடைய மாநிலமாகப் பிரிக்கவேண்டுமென்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு 58 நாட்கள் உண்ணா
நோன்பிருந்து உயிரை விட்டார். அவருடைய மரணம் மாநிலப் பிரிவினைக்கு அடிகோலியது.
1953இல் தனி தெலுங்கு பேசும் ஆந்திரம் உருவானது. ஒருவாறாக தெலுங்கு பேசும் மக்களுக்கு
ஆந்திரம் பிரிந்துவிட்ட போதிலும் தலைநகர் பிரச்சனை மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு நேரத்தில் சென்னை தமிழகத்துக்கு இல்லாமல் போய்விடுமோ எனும் பயமும் ஏற்பட்டது. பிறகு
சென்னையை இரு பிரிவுகளாகப் பிரித்து வடக்கை ஆந்திரத்தின் தலைநகராகவும் தென் சென்னையை
தமிழகத்தின் தலைநகராகவும் ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதற்காக 1956இல்
போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது
சென்னை மாநகராட்சி மன்றத்தில் தலைநகர் பிரச்சினை விவாதிக்கப்பட்ட பொது ஐயா அவர்கள்
எழுப்பிய கோஷம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது என்றுகூட சொல்லலாம். அவர் அவையின்
உள்ளே கடுமையான குரலில் பேசிக் கொண்டிருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு ஒரு கோஷம் எழுப்பினார்.
அது “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்பது அது. அவர் உள்ளே பேசிய அடுத்த
கணம் அதே கோஷம் வெளியில் காத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பரவி அங்கும் அதே
கோஷம் எழுப்பியது தமிழர் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி
சென்னை நகரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை தமிழரசுக் கழகம் நடத்தியது. அதுபோன்ற
போராட்டங்களில் சென்னை மாநகர மேயராக இருந்த டி.செங்கல்வராயன் அவர்களும் கலந்து கொண்டு
ஆதரவு தெரிவித்து பேசியது ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது. தமிழக மக்கள் ஐயா அவர்கள்
தலைமையில் எழுப்பிய எதிர்ப்புக் குரல் டெல்லி வரை சென்று சென்னை நகர் தமிழ்நாட்டின்
ஏகபோக தலைநகராக அங்கீகரிக்கப்பட்டது என்பது வர்லாற்றில் பதிவாகியுள்ள உண்மை.
14. மீண்டும் வடக்கெல்லை அழைத்தது.
வடக்கெல்லையில் போராட்டத்தைத் தொடங்கி ஒருவழியாக
மத்திய அரசின் எல்லைக் கமிஷன் அமைப்பு பற்றிய உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு இனி எல்லாம்
நன்றாகவே நடக்கும் என்று எண்ணியிருந்த எண்ணத்தில் கல் விழுந்தது. தெற்கெல்லைப் போராவது
முடிவுக்கு வந்த பின்னும் வடக்கெல்லை இழுத்துக் கொண்டே இருந்தது. காரணம் ஆளும் காங்கிரஸ்
கட்சியில் ஆந்திரத் தலைவர்களின் செல்வாக்கும், மத்திய அரசு அவர்களுக்குக் காட்டிய சலுகைகளுமே
தாமதத்திற்குக் காரணமாக அமைந்தது.
வடவெல்லை
கமிஷன் உருவாக்கப்படும், அது உண்மை நிலைமையை ஆராய்ந்து மத்திய அரசிடம் கொடுக்கும்,
அதன் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் தமிழ்ப் பேசும் பகுதிகள், அல்லது பல கிராமங்கள்,
நகரங்கள் தமிழ்நாட்டுடன் இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலைமை சிறிது சிறிதாக மாறத்
தொடங்கியது. பிரச்சினைக்குரிய இரு மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் மாறினார்கள். தமிழகத்தில்
ராஜாஜி போய் காமராஜர் வந்தார். ஆந்திராவில் டி.பிரகாசம் போய் பி.கோபால ரெட்டி வந்தார்.
பிரச்சினை
எங்கே முடிவுக்கு வந்துவிடுமோ என்கிற எண்ணத்தில் ஆந்திரர்கள் ஒரு புதிய பிரச்சனையைக்
கிளப்பினர். தமிழகத்திற்குட்பட்ட ஓசூர் பகுதியை ஆந்திரத்துடன் இணைக்க வேண்டுமென்பது
அந்தக் கோரிக்கை. ஓசூர் தமிழரோ, தெலுங்கரோ அதிகமுள்ள பகுதி அல்ல. அது கன்னடர் அதிகமுள்ள
பகுதி. அவர்கள் தமிழகத்தில் இருப்பதையே விரும்பினர், ஆகையால் அந்த ஓசூர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மீண்டும்
வடக்கெல்லை போராட்டத்துக்காக ஐயா ம.பொ.சி. 1955இல் ஒரு போராட்டத்தைத் துவக்கினார்.
சென்னை சட்டமன்றம் எதிரில் மறியல் போராட்டம் நடந்தது. வடக்கெல்லை ஊர்களில் இருந்து
ஏராளமான தொண்டர்கள் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டமன்ற மறியல் தொடர்ந்து
நடந்து வந்தது. அதில் கலந்து கொண்டு ம.பொ.சி. அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய
சிறையில் வைக்கப்பட்டார். இந்த சிறைவாசம் குறித்து ஐயா சொல்லும்போது, தான் எட்டு முறை
சிறை வைக்கப்பட்டதாகவும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆறு முறையும், ராஜாஜி ஆட்சி காலத்தில்
ஒரு முறையும் காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த முறையும் ஆக மொத்தம் எட்டு முறை சிறைவாசம்
பெற்றேன் என்கிறார்.
1956
செப்டம்பர் 28இல் “எல்லைக் கமிஷன் கோரிக்கை நாள்” அனுசரிக்கப்பட்டது. பிரதமர் நேருவுக்கு
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே
சென்னை மாகாணம் எனும் பெயரை மாற்றி தமிழ்நாடு என்று வைக்கவெண்டும் என்ற கோரிக்கையோடு,
வேறு பல கோரிக்கைகளையும் முன் வைத்து விருதுநகரில் சங்கரலிங்க நாடார் என்பவர் உண்ணாநோன்பிருந்து
காலமானார். அவருடைய நினைவாகவும், சிறையில் இருக்கும்போது இறந்து போன மேலும் இரண்டு
தமிழரசுக் கழகத் தொண்டர்கள் நினைவாகவும் அஞ்சலி செலுத்த “தியாகிகள் தினம்” 1956 நவம்பர்
18இல் அனுசரிக்கப்பட்டது. மத்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த வல்லப பந்த்
அவர்கள் நல்லெண்ணத்துடன் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் முடிவின்படி எல்லைகள்
சீரமைக்கப்படும் என்ற உறுதிமொழி தரப்பட்டது.
திரு படாஸ்கர் கமிட்டி சிபாரிசு.
தமிழக
ஆந்திர எல்லைப் பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டார். அவர்
மத்திய அமைச்சரவையில் சட்டத்துறைக்குப் பொறுப்பு வகித்த ஹெச்.வி.படாஸ்கர். இவர் உடனடியாகத்
தன் பணிகளை மேற்கொண்டார். சென்னை வந்த படாஸ்கரை 1956 டிசம்பர் 26இல் ஐயா அவர்கள் நேரில்
சந்தித்து தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஐயா அவர்களின்
கோரிக்கைகளில் இருந்த நியாயங்களை உணர்ந்த படாஸ்கர் தமிழகத்தின் உரிமைகளுக்குத் தான்
நியாயம் வழங்குவேன் என்ற உறுதிமொழியைத் தந்துவிட்டுச் சென்றார்.
சுவாமியே
வரம் கொடுத்த பின் பூசாரி மறுப்பதைப் போல ஆந்திர அரசு ஒரு சுமுக முடிவுக்கு ஒத்துழைக்கவில்லை.
இதனால் எல்லைப் பிரச்சினை நீண்டுகொண்டே போயிற்று. உடனடியாக ஐயா அவர்கள் மத்திய உள்துறை
அமைச்சர் கோவிந்த வல்லப பந்து அவர்களை நாடினார். அவருடைய தலையீட்டை அடுத்து படாஸ்கர்
அறிக்கை தமிழ்நாடு முதல்வருக்கும் ஆந்திர முதல்வருக்கும் அனுப்பப் பட்டது.
ஆனால்
படாஸ்கர் தீர்வுக்கு தமிழ்நாட்டில் ஆளும் தரப்பிலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அது அமல்படுத்தப் படுமானால் தமிழக கிராமங்கள் பல ஆந்திரத்துக்குப் போய்விடும் என்பது
அவர்கள் கருத்து. ஆரணியாற்றின் தலைப்பு இப்போது தமிழக எல்லைக்குள் இருப்பது ஆந்திராவுக்குப்
போய்விடும், அதனால் நீர்ப்பாசனம் தமிழகப் பகுதிகளில் பாதிக்கப்படும் என்பது அவர்களது
அச்சம்.
இடையில்
பல்வேறு குழப்பங்கள், அச்சம், அவநம்பிக்கை இவற்றுக்கிடையே ஐயா அவர்களது விடா முயற்சியின்
காரணமாக ஆந்திரா தமிழக முதல்வர்கள் ஐதராபாத்தில் சந்தித்து விவாதித்து படாஸ்கர் பரிந்துரைகளை
இரு மாநிலங்களும் ஏற்பதாக முடிவினை அறிவித்தனர். அப்படி படாஸ்கர் பரிந்துரைத்தவைகள்தான்
எவைகள் என்பதைப் பார்க்கலாம்.
*திருத்தணி
தாலுகா முழுவதும் ஒரெயொரு கிராமம் தவிர, அடுத்து சித்தூர் தாலுகாவில் 30 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் ஆக
322 கிராமங்கள் ஆந்திராவுக்குப்
போகவிருந்தவை பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டது.
*இந்த
இணைப்பால் தமிழகத்தின் மக்கட்தொகை 2,39,502 பேர் என்று அதிகரித்தது.
*தமிழ்நாட்டில்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த திருவள்ளூர் பொன்னேரி தாலுகாவிலிருந்து சில கிராமங்கள்,
ஆரணியாறு அணைக்கட்டு உட்பட ஆந்திராவுக்குப் போகும்.
*இந்த
மாற்றங்களின் விளைவாக ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 பேர் தமிழக சட்டமன்றத்துக்கு வருவார்கள், தமிழ்நாடு
சட்டமன்ற உறுப்பினர் யாரும் ஆந்திராவுக்குப் போகமாட்டார்கள்.
*ராஜ்யசபைக்கு
ஆந்திராவுக்கு ஒரு இடம் குறையும், தமிழ்நாட்டுக்கு அந்த ஒரு இடம் கிடைக்கும்.
*இந்த
மாற்றம் காரணமாக தமிழர் பெரிதும் வணங்கிடும் புண்ணியத் தலங்களான வள்ளிமலை, திருவாலங்காடு,
திருத்தணி ஆகிய ஊர்கள் தமிழகத்துடன் இணைக்கப்படும்.
இப்படிப்பட்ட
இந்த பரிந்துரை 1957லேயே இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்
பட்ட போதிலும் அதை அமல்படுத்தப்படுவது தாமதமாகி 1960இல்தான் முடிந்தது.
ஐயாவின்
தொடர்ந்த போராட்டத்தினாலும், தமிழ் மக்கள் அளித்த பேராதரவினாலும், மத்திய அரசில் அங்கம்
வகித்த சில தலைவர்களின் நல்லெண்ணத்தாலும் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டு 1956 நவம்பர் 1 அன்று தமிழ் வழங்கும் பகுதிகள் தனியரசாக உருவாகியது.
தெற்கே தோவாளை, அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய ஐந்து தாலுக்காக்கள் திருவிதாங்கூர்-கொச்சியிலிருந்து
பிரிக்கப்பட்டு தாய்த்தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி.
அவர்களின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான தொண்டர்களின் விடாமுயற்சியின்
விளைவாக, தமிழர்களின் கோரிக்கைகள் மீது கரிசனம் கொண்டு வட இந்திய பெருந்தலைவர்கள் சிலர்
ஒத்துழைப்புடன் நீண்ட கால கனவு நனவாகி தனித் தமிழ் மாகாணம் உருவானது.
தமிழ்நாடு
உருவாகக் காரணமாக இருந்த சிலம்புச் செல்வரின் வாழ்க்கை ஒரு நீண்ட வரலாற்றுப் பெட்டகம்.
அதன் போராட்டப் பகுதிகளையும், ஐயா அவர்கள் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து
உயர்ந்து தமிழர்களின் கவனைத்தை ஈர்த்து உயர்ந்து நின்ற ஒரு தியாகத் தமிழனாக அறியப்படவும்
காரணமாக இருந்த ஒரு சில நிகழ்ச்சிகளை இந்நூலில் பார்த்தோம். அவருடைய ஒவ்வொரு போராட்டத்தையும்,
அதனால் தமிழர் அடைந்த நலன்களையும் சொல்ல இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன, அவற்றை
முடிந்தபோது தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் படித்து அறிந்து போற்ற வேண்டும்.
வாழ்க தமிழ்! வாழிய தமிழகம்!! வாழிய
பாரதத் திருநாடு!
இந்த நூல் எழுதப் பயன்பட்ட நூல்கள்:--
1.
தலைவர்
ம.பொ.சியின் “எனது போராட்டம்” பகுதி 1, 2 ஆகிய நூல்கள்.
2.
“
“ “விடுதலைப் போரில் தமிழகம்”
1, 2 ஆகிய நூல்கள்.
3.
“
“ “சட்ட மன்றத்தில் சுயாட்சிக்
குரல்”
4.
“தடைகளை வென்று தலைமை பெற்ற ம.பொ.சி” திரு பெ.சு.மணி