பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 8

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 8

அச்சுதப்ப நாயக்கர். (1560 -1614)

சேவப்ப நாயக்கரின் புதல்வர் அச்சுதப்ப நாயக்கர் என்பதையும், தந்தை காலத்திலேயே இவர் இளவரசராக இருந்து ராஜ்ய விஷயங்களைக் கவனித்து வந்தார் என்பதைப் பார்த்தோம். சேவப்ப நாயக்கருக்கு தஞ்சை மன்னன் என்கிற பதவியை வழங்கிய விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தியும் கிருஷ்ணதேவ ராயரின் தம்பியுமான அச்சுததேவ ராயரின் நினைவாக சேவப்பரின் மகனுக்கு அச்சுதப்ப நாயக்கர் என்று பெயரிடப்பட்டது. இவர் தஞ்சாவூர் ராஜ்யத்தை 54 ஆண்டுகள் சிறப்பாகவும், அமைதியாகவும் ஆட்சி புரிந்து வந்திருக்கிறார். இவர் தன் தந்தையிடம் யுவராஜாவாக பணியாற்றியதைப் போல இவர் காலத்தில் இவருடைய மகன் ரகுநாத நாயக்கர் தந்தைக்குத் துணை புரிந்து வந்தார்.

1560ஆம் ஆண்டு தொடங்கி 1580வரையிலான இருபது ஆண்டுகளில் தந்தைக்குத் துணையாக இருந்து கொண்டு ராஜ்ய பாரத்தை நடத்திக் கொண்டிருந்த அச்சுதப்ப நாயக்கர் 1580 தொடங்கி 1614 வரையிலான காலகட்டத்தில் ராஜ்யத்தின் மன்னனாக தனித்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் மக்கள் சுகமாகவும், அமைதியாகவும், நிலையான ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்தனர். 

சேவப்ப நாயக்கரின் மூத்த மகன் இந்த அச்சுதப்ப நாயக்கர். இவருடைய மனைவி மூர்த்திமாம்பா. இந்த அச்சுதப்ப நாயக்கரை சின்னசேவா அச்சுதா என்றும் சேவப்ப அச்சுதா என்றும்கூட குறிப்பிடுகின்றனர். அச்சுதப்ப நாயக்கர் தஞ்சாவூரை 54 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறார். இவருடைய காலத்தில் கட்டடக் கலையும், சிற்பக் கலையும், கலை இலக்கியங்களும் சிறப்பாக வளர்ச்சியடைந்தன. இசை, நடனம் போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன. இவருடைய 54 ஆண்டு ஆட்சிக் காலத்தின் முற்பகுதி பெரும்பாலும் அமைதியாகத்தான் நடைபெற்றது. ஆனால் அவருடைய ஆட்சியின் கடைசி கட்டத்தில் முகமதியர் படையெடுப்புகளாலும், போர்த்துகீசியர்களோடும் இவர் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இவர் விஜயநகர சக்கரவர்த்தியுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு வந்தார். அவர்கள் ஈடுபடும் போர்களில் எல்லாம் தஞ்சை மன்னரான அச்சுதப்ப நாயக்கர் பேருதவிகள் புரிந்தார். அச்சுதப்ப நாயக்கரின் வெற்றிக்குப் பின்புலத்தில் இருந்தவர் அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர். மகா பண்டிதரான கோவிந்த தீக்ஷிதரின் சாதுர்யம், அறிவாற்றல், செயல் திறன் இவைகளால் அவருக்கு மட்டுமல்ல, அவரது எஜமானரான அச்சுதப்ப நாயக்கருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இன்று வரை கோவிந்த தீக்ஷிதரின் பெயர் மக்களின் நினைவில் இருக்கிறதென்றால், அதற்கு அவருடைய செயற்கரிய சாதனைகளே காரணம்.

அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர் காலம் முழுவதும் இருந்து பிறகு ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள் சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு ஷோடச சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டி முடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

கும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள், அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை துலா கட்டம் என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர். அந்த இடங்களில் சிலவற்றில் இன்றும்கூட வேதபாடசாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஈச்சங்குடி பாடசாலையும் கும்பகோணம் ராஜா பாடசாலையும் சிறப்பானவைகள்.

"மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது" என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளை அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். "அத்வைத வித்யா ஆச்சார்ய" என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் "சங்கீத சுதாநிதி" எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல "திருவையாறு புராணம்" சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான "ரகுநாத பூபால விஜயம்", "ரகுநாத விலாஸ நாடகம்", "சாஹித்ய ரத்னாகரம்" ஆகியவை.

இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் "சதுர்தண்டி பிரகாசிகா" எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

புகழ்மிக்க கோவிந்த தீக்ஷதர் பற்றிய பாடல் ஒன்று திருவையாறு புராணம் எனும் நூலில் காணக் கிடைக்கின்றது. அது வருமாறு:-

"மலிபுனல் சூழ்சோணாடு தஞ்சையிற் காத்திடும் அரசர்
மதியமைச்சர் ஒலிமறைதேர் கோவிந்த தீட்சதராயன்
திருவாக்கு உடைமையாலே, கலியுகத்துச் சகராண்டு
மூவைஞ் நூற்றிருபதின்மேல் காணுமேழாய் பொலி
வருடத்தை யேரற்றுப் புராண வடமொழி தமிழாற் புகலுற்றேன்."

இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார். இவருடைய இறுதி நாட்களில் இவர் மங்களாம்பிகா ஆலயஹ்தில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார் என்கின்றனர்.

இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும். 

வல்லம்பிரகார யுத்தம்:

1579இல் மதுரையை ஆண்ட மன்னன் வீரப்ப நாயக்கர் தன்னை மிக அதீதமான வல்லமையுள்ள அரசன் என்று நினைத்துக் கொண்டு, தன்னை மன்னனாக ஆக்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தையே எதிர்த்துக் கொண்டார். விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டு மதுரையைச் சுதந்திர நாடாக இவர் அறிவித்து விட்டார். தான் பார்த்து பிடித்து வைத்த ராஜா தன்னையே எதிர்க்க வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போல இவன் பாய்கிறானே என்று விஜயநகரப் பேரரசர் இரண்டாம் வேங்கடபதி ராயர் பெரும் படையுடன் வீரப்பநாயக்கரை எதிர்த்துப் போரிட வந்து சேர்ந்தார். வழக்கம் போல சக்கரவர்த்திக்கு அடங்கிய தஞ்சை மன்னன் அச்சுதப்ப நாயக்கர் தனது படையுடன் விஜயநகர படைகளோடு சேர்ந்து கொண்டார். இவ்விரு படைகளும் தஞ்சையை அடுத்த வல்லம் எனும் ஊருக்கருகில் மோதிக் கொண்டன. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியின் படையும், தஞ்சை படையும் எதிர்த்துப் போரிடுகையில் மதுரைப் படைகள் தாக்குப்பிடிக்க முடியுமா என்ன? வெற்றி விஜயநகர படைகளுக்கும், தஞ்சை படைகளுக்கும்தான். வீரப்ப நாயக்கர் தோல்வியடைந்தார். 

போர்களில் வெற்றிபெற்ற மன்னர்கள் தங்கள் வெற்றி சிறப்புக்களை உடனடியாக கல்வெட்டிலோ அல்லது செப்புத் தகடுகளிலோ பதித்து வைத்து விடுவது வழக்கம். இதற்கு மாறாக அச்சுதப்பர் எந்த கல்வெட்டிலும் இந்த வெற்றிச் செய்தியையும் பதித்து வைத்ததாகத் தெரியவில்லை. ஒருக்கால் இப்போதைய அரசியல் வாதிகளைப் போல இருந்திருந்தால் தஞ்சை ராஜ்யம் முழுவதும் வெற்றிவிழாக்களைக் கொண்டாடியிருப்பார். நல்ல காலம் அப்போது அப்படிப்பட்ட அரசியல் நிலைமை இல்லை.

அவர் தன் வெற்றியை பறைசாற்றிக் கொள்ளவில்லையே தவிர புதுக்கோட்டை செப்பேடுகளில் இந்த விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். அந்த செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள ஆண்டில் வேங்கடபதி ராயர் சக்கரவர்த்தியாக இல்லை, அவர் அதற்குப் பிறகுதான் ஆட்சிக்கு வந்தார், ஆகவே இதில் ஏதோ தவறு இருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

போர்த்துகீசியர்களுக்கு எதிரான போர்.

நாகப்பட்டினத்துக்கருகில் அச்சுதப்ப நாயக்கர் 'பரங்கியர்'களுடன் போரிட்டு வெற்றி பெற்றதாக "சாஹித்யரத்னாகரம்" எனும் நூலில் ராமபத்ராம்பா எழுதுகிறார். பரங்கியர்கள் என்று பொதுவாக நாம் ஐரோப்பிய வெள்ளை நிறத்தவர்களைக் குறிப்பது வழக்கம். இங்கு குறிப்பிடப்படும் 'பரங்கியர்' அனேகமாக அப்போது அங்கு வந்து குடியேறியிருந்த போர்த்துகீசியர்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இலங்கையில் குடியேறியிருந்த போர்த்துகீசியர்கள் மெல்ல நாகப்பட்டினத்திலும் வந்து குடியேறினார்கள். தென்னாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளெங்கும் இவர்கள் வந்து குடியேறிய காலம் அது. கள்ளிக்கோட்டை, கோவா போன்ற இடங்கள் நீண்ட நெடுங்காலம் இவர்கள் வசம் இருந்தது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இவர்களுடைய முக்கியப் பணி உள்ளூர் வாசிகளை மதமாற்றம் செய்வது. அவர்கள் எங்கு குடியேறுகிறார்களோ அந்தப் பகுதி மக்களை உடனடியாக மதமாற்றம் செய்து விடுவது என்பது இவர்கள் வழக்கம். அதுபோலவே இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் இவர்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் இறன்கியதை யாழ்ப்பாண மன்னர் எதிர்த்தார். ஆனால் இவர்கள் காரியத்தில் குறியாக இருந்த காரணத்தால் யாழ்ப்பாண மன்னர் இவர்கள் மீது போர் தொடுத்தார். அந்தப் போரில் தங்களுக்கு உதவ வேண்டுமென்று தஞ்சை மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தார் யாழ்ப்பாண மன்னர்.

இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லப்படும் காலகட்டத்தில், அதாவது 17ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் போர்த்துகீசியர்கள் நாகப்பட்டினம் அருகிலும் வந்து குடியேறியிருந்தார்கள், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தையும் எப்படியாவது தங்கள் வசம் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்த நேரம். அதற்கான படையெடுப்புகளையும் அவர்கள் முனைப்புடன் செய்து வந்தார்கள். இருந்த சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில் யாழ்ப்பாண மன்னர் இவர்களுடைய முயற்சிகளை முறியடிக்க இந்த யுத்தத்தில் உதவும்படி தஞ்சை அரசருக்குக் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அச்சுதப்ப நாயக்கரும் தனது படைகளை அனுப்பி போர்த்துகீசியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். இவற்றுக்கு மேலும் வலுவூட்டும்படியான மற்றொரு செய்தி என்னவென்றால், அந்த சமயத்தில் தஞ்சை மன்னர் போர்த்துகீசியர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து குடியேறியிருந்த டச்சுக்காரர்களோடு நட்புரிமை கொண்டிருந்தார் என்பதுதான். இருக்கலாம் ஒரு ஐரோப்பிய எதிரியை முறியடிக்க மற்றொரு ஐரோப்பிய எதிரியுடன் கைகோர்த்தது, பின்னரும் பிரிட்டிஷ் பிரெஞ்சுக்காரகளை வைத்து பகடையாடியதை வரலாற்றில் பார்க்கிறோமே.


No comments:

Post a Comment

You can give your comments here