பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 10

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 10

ரகுநாத நாயக்கர். (1600 - 1634)

அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே பதவிக்கு வந்துவிட்டவர் அவருடைய குமாரர் ரகுநாத நாயக்கர். தஞ்சை நாயக்கர் பரம்பரையில் மூன்றாவது மன்னர் இவர். 1600 தொடங்கி 1634 வரையிலான காலகட்டத்தில் இவர் தஞ்சையை ஆண்டார். இதே 1600இல்தான் இங்கிலாந்து நாட்டில் இந்தியாவுக்கு வந்து வாணிபம் செய்வதற்காக கிழக்கிந்திய கம்பெனி எனும் ஒரு ஸ்தாபனம் உதயமானது. பின்னாளில் இந்த கிழகிந்திய கம்பெனி இந்தியாவின் பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு முன்னூறு ஆண்டுகள் கோலோச்சிய வரலாறும் பின்னாளில் நடந்திருக்கிறது.

தஞ்சையை ஆண்ட நான்கு நாயக்க மன்னர்களில் இவர்தான் சிறப்பானவர் என்று சொல்கிறார்கள். இவர் காலம் தஞ்சை ராஜ்யத்தின் பொற்காலம். காரணம் கலை, இலக்கியம், கர்நாடக இசை போன்ற துறைகளில் தஞ்சை சிறந்து விளங்கியது. அச்சுதப்ப நாயக்கரின் மூத்த மகன் இவர். தனக்கு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எல்லா தெய்வங்களையும் பிரார்த்தித்துப் பிறந்த மகன் இந்த ரகுநாத நாயக்கர். ராஜாவின் அன்பிற்குரிய புத்திரன் என்பதால் மிக அருமையாகப் போற்றப்பட்டு வளர்க்கப்பட்டார் ரகுநாதர். இளம் வயதிலேயே சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். போர்க்கலையிலும் வல்லவராக விளங்கினார் ரகுநாதர். தந்தையார் ராஜாவாக இருந்த போதே இவரை யுவராஜாவாக நியமித்திருந்ததால் நிர்வாக விஷயங்களிலும் நன்கு தேர்ந்தவராக இருந்தார் இவர். 

இவருக்கு அன்றைய ராஜ வம்சத்தின் வழக்கப்படி பல மனைவியர் இருந்தனர். மூத்த பட்டத்து ராணியாக இருந்தவர் கலாவதி என்பார். இவருக்குப் பல ஆசை நாயகிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ராமபத்ராம்பா என்பவர். இவர்தான் நாயக்கர் வரலாற்றை இலக்கியமாக நூலாக்கித் தந்தவர். விஜயநகர சாம்ராஜ்யம் சிறப்புற்று விளங்கிய காலத்தில் தட்சிண சுல்தான்கள் எனும் தென்னாட்டு சுல்தான்களோடு போர் நடப்பது வழக்கமாக இருந்தது. தன்னுடைய இளம் வாலிப பருவத்திலேயே ரகுநாதர் கோல்கொண்டா சுல்தானுடன் போர் புரிந்திருக்கிறார். 

அச்சுதப்பர் வாழ்ந்த காலத்திலேயே இவர் யுவராஜாவாக அக்கப்பட்டாரல்லவா? அப்படி இவர் யுவராஜாவாக நியமிக்கப்பட்ட ஆண்டு 1600. அதுமுதல் பதினான்கு வருடங்கள் அதாவது 1614 வரை இவர் தன் தந்தைக்கு உதவியாக செயல்பட்டு வந்தார். 1614க்குப் பிறகு ரகுநாதரே ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்யத் தொடங்கி விட்டார். அதுமுதல் 1634 வரையில் இவர்தான் தஞ்சை நாயக்க ராஜ்யத்தின் ஏகசக்ராதிபதியாக விளங்கினார்.

ரகுநாத நாயக்கர் காலத்தில் போர்கள்.

ரகுநாத நாயக்கர் தன்னுடைய ஆட்சி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறார். விஜயநகர பேரரசு சார்பிலும் போரிட்டார், தன்னுடைய ராஜ்யத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த சில சிற்றரசர்களோடும் போரிட்டார், கடல்கடந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்த போர்த்துகீசியர்களுடனும் போரிட்டு வெற்றி பெற்றார். அவற்றை விவரமாகப் பார்ப்பதற்கு முன்பாக அந்த யுத்தங்களின் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

இவர் காலத்தில் விஜயநகர சக்கரவர்த்தியாக இருந்தவர் இரண்டாம் ஸ்ரீரங்க ராயர். இவர் ஒரே ஒரு ஆண்டு மட்டும் அரசராக இருந்தவர் என்பது தெரிகிறது. இவருக்கும் ஜக்கராயா என்பவருக்கும் விஜயநகர் அரசர் பதவிக்கு போட்டி இருந்தது. இருவரும் எதிரிகளாகப் போர் புரிந்தனர். இவர்களுக்குள் நடந்த போரில் இரண்டாம் ஸ்ரீரங்க ராயர் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த தஞ்சை ரகுநாதர் ஜக்கராயர் மீது போர்தொடுத்தார். ஜக்கராயரின் மீது போரிடும் முன்பாக ஜக்கராயரின் கீழ் செஞ்சி ராஜாவுக்குக் கீழுள்ள ஒரு சிற்றரசனாக இருந்த சோழகன் என்பவர் கொள்ளிடம் அருகில் இருந்த கோட்டையில் இருந்து கொண்டு ரகுநாதரைத் தடுத்துப் போர் புரிந்தார். இந்த சோழகரை கும்பகோணம் வரை துரத்தியடித்துவிட்டு கொள்ளிடத்துக் கோட்டையையும் பிடித்துக் கொண்டார் ரகுநாதர்.

சோழகருக்கு எதிரான போர்.

ராமபத்ராம்பா எழுதியுள்ள வரலாற்றுக் காவியத்தில் சோழகருக்கு எதிரான போர் பற்றி குறிப்பிடுகிறார். கொள்ளிடம் அருகே ஆற்றுக்கிடையே அமைந்த தீவு ஒன்றை ஆண்டுகொண்டிருந்தவர் சோழகர். இவர் செஞ்சி மன்னனுக்குக் கீழ்படிந்த ஒரு சிற்றரசன். செஞ்சியை ஆண்டவரும் ஒரு நாயக்க மன்னரே. இந்த சோழகர் ஆண்ட பகுதியொன்றும் பெரும் நிலப்பரப்பு அல்ல. ஏதோ பெயருக்கு ராஜா என்றாலும் இவர் வழிப்பறி செய்து பொருள் சேர்த்துக் கொண்டிருந்தார் என்கின்றனர். ஆழ்வாரில் ஒருவரான திருமங்கை மன்னனே பெருமாள் கைங்கர்யத்துக்காக வழிப்பறி செய்தாரல்லவா? அதனால்தானோ என்னவோ இந்த சோழகரும் வழிப்பறி செய்து வாழ்ந்தார். இவரை எப்படியாவது அடக்கி வைத்துவிட எண்ணி ரகுநாத நாயக்கர் முடிவு செய்து இவரோடு போரிட முடிவு செய்தார்.

முதலில் ரகுநாத நாயக்கர் இந்த சோழகரின் தலைமையகத்தைத் தாக்கினார். கும்பகோணத்துக்கு அருகில் இருந்தது இந்தப் பகுதி. சோழகருக்கு கிருஷ்ணப்ப நாயக்கர், போர்த்துகீசியர்கள், முகமதிய வியாபாரிகள் ஆகியோர் உதவி செய்தனர். அந்த பலத்தைக் கொண்டு அவர் பலம் பொருந்திய ரகுநாதரை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் இறுதியில் ரகுநாத நாயக்கர் பீரங்கிகளைக் கொண்டு குண்டு மழை பொழிந்து போரில் வெற்றிக் கொடி நாட்டினார். சோழகரைப் பிடித்து அவருடைய குடும்பத்தாரோடு சிறையில் தள்ளி அவர்களுடைய தொல்லைக்கு ஒரு முடிவு கட்டினார்.

இதனைத் தொடர்ந்து ரகுநாத நாயக்கர் அப்போது யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போர்த்துகீசியர்கள் மீது போர்தொடுத்தார். அங்கு சென்று அவர்களோடு போரிட்டு வென்றபின் ஊர் திரும்பினார். அந்தப் போர் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

யாழ்ப்பாணப் படையெடுப்பு.

சின்னஞ்சிறிய பகுதியின் தலைவனாக இருந்த போதிலும், பலம் பொருந்திய பல நண்பர்களையும் போர்த்துகீசியர்களையும் சேர்த்துக் கொண்டு வல்லமை பொருந்திய தஞ்சை நாயக்க மன்னரை எதிர்த்துப் போரிட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சோழகர். இவருடன் நடந்த போரில் இவருக்கு ஆதரவாக இருந்த போர்த்துகீசியர்களை தண்டிக்க எண்ணினார் ரகுநாத நாயக்கர். இந்த படையெடுப்புக்கு ரகுநாத நாயக்கரே தலைமையேற்று படை நடத்திச் சென்றார். 

சோழகருக்கு எதிரான போருக்காகச் சென்றவர் தேவிகோட்டையை விட்டுப் புறப்பட்டு கடற்கரை ஓரமாகவே தெற்கு நோக்கித் தன் படையுடன் கிளம்பினார் ரகுநாத நாயக்கர். யாழ்ப்பாணத்தில் போர்த்துகீசியர்களால் துரத்தப்பட்ட யாழ்ப்பாண அரசனும் அவர்கூட இருந்தான். அப்படி அவர்கள் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த மார்க்கத்தில் காவிரி நதி கடலோடு கடக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தார்கள். அதன் வழியாக மன்னார்குடாவை வந்து அடைந்தது நாயக்கர் படை. மன்னார்குடாவிலிருந்து கடலில் படகுகளை வரிசையாக நிற்கவைத்து அதனை ஒரு பாலம் போல அமைத்து அதன் வழியாக நாயக்கர் படை யாழ்ப்பாணத்தை அடைந்தது. ஆங்காங்கே கடலில் மர மிதவைகளும் உபயோகிக்கப்பட்டன.

அங்கு யாழ்ப்பாணத்தில் நாயக்கர் படைகளுக்கும் போர்த்துகீசியர்களுக்குமிடையே நடந்த போரில் அந்நியர்கள் தோற்று ஓடினார்கள். பலரும் கடல் வழியாக தோணிகள் மூலம் தப்பிச் சென்றார்கள். இந்தப் போரில் ரகுநாத நாயக்கர் போர்த்துகீசியர்களுக்கு பலத்த தோல்வியைக் கொடுத்தபின் உள்ளூர் அரசனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனை அரசனாக அமரச் செய்தார்.

கடல்கடந்து சென்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் தஞ்சை நாயக்கர் படைகள் வெற்றி பெற்று போர்த்துகீசியர்களை அங்கிருந்து துரத்தியடித்தது. வெற்றி பெற்று சொந்தமாக்கிக் கொண்ட யாழ்ப்பாணத்துக்கு அந்த தேசத்து ராஜா ஒருவரை பதவியில் அமர்த்திவிட்டு ரகுநாத நாயக்கர் ஊர் திரும்பினார். பாவம் அந்த ராஜா, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ராஜ்யத்தை ஆண்டபின் 1619இல் அவரை பதவியிலிருந்து தூக்கியடித்த உள்ளூர் எதிரிகள் அவரைக் கொன்றும் போட்டனர்.

அதன் பின் விஜயநகர மன்னர் ஸ்ரீரங்காவைக் கொன்ற ஜக்கராயர் மீது பார்வையைத் திருப்பினார். திருச்சிக்கருகில் இருக்கும் தோப்பூர் எனுமிடத்தில் பல லட்சம் வீரர்கள் கொண்ட இரு பக்கத்துப் படைகளும் மோதின. இந்தப் போரில் ரகுநாத நாயக்கர் வெற்றி பெற்றார். இந்த தோப்பூர் யுத்த வெற்றியை ஒரு வெற்றி ஸ்தூபி எழுப்பி கொண்டாடினார், அதன் பின்னர் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியைப் பிடித்துக் கொண்டார்.

அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே அவர் தலைமையில் அவருடைய மகன் ரகுநாத நாயக்கர், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர், யாழ்ப்பாணத்திலிருந்து ஓடிவந்து தங்கியிருந்த அந்நாட்டு அரசர் ஆகியோர் கூடி விஜயநகர பேரரசருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் ஜக்கராயர் மீதும் தெற்கே அவருடைய ஆதரவாளரான சோழகர் மீதும் படையெடுப்பது பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் ரகுநாத நாயக்கர் இப்போது இந்தப் படையெடுப்பையும் நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

தோப்பூர் யுத்தம்.

அந்த காலகட்டத்தில் தோப்பூர் யுத்தம் என்பது மிகவும் பெரிய யுத்தமாகக் கருதப்பட்டிருக்கிறது. வட நாட்டில் நடந்த பல யுத்தங்கள் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்ட அளவுக்கு இந்த தோப்பூர் யுத்தம் எழுதப்படவில்லையாதலால் இதனைப் பற்றி பலரும் அறிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 1616 டிசம்பர் 16ஆம் நாள் இந்த யுத்தம் நடந்திருக்கிறது. ரகுநாத நாயக்கர் பற்றி ராமபத்ராம்பா எனும்அவருடைய ஆசைநாயகியொருவர் எழுதிய வரலாற்று நூலில் இந்த விவரம் குறிக்கப்படுகிறது. 

இந்த தோப்பூர் யுத்தத்துக்காக ரகுநாத நாயக்கர் தன் படைகளுடன் சென்று திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமார்நேரி எனும் ஊரில் 1616ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே சென்று முகாமிட்டிருந்தார் என்றும் தொடர்ந்து அந்த வருஷம் டிசம்பர் மாதம் தோப்பூர் யுத்தம் நடந்ததாகவும் தெரிகிறது. இந்த தோப்பூர் யுத்தத்தின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இப்போது பார்ப்போம்.

ரகுநாத நாயக்கர் தஞ்சாவூரில் திறமை மிக்க அரசாட்சியைக் கொடுத்து வந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமையில் வாரிசுரிமைப் போர் துவங்கியது. வேலூர், சந்திரகிரி ஆகிய இடங்களில் இந்த வாரிசுரிமைப் போர் தொடர்ந்து நடைபெற்றது. தக்ஷிண சுல்தான்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்து அது சின்னாபின்னமடைந்த நிலையில், விட்ட குறை தொட்ட குறையாக விஜயநகர மன்னர்கள் மேலும் தெற்கே வேலூர் சந்திரகிரி ஆகிய இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த அரசர் வரிசையில் இரண்டாம் வெங்கட ராயரின் தம்பி கொப்புரி ஜக்க ராயர் என்பவர் இருந்தார். இவருக்கு ஒரு ஆசை நாயகி, ஆடம்பரமும், பதவி மோகமும் கொண்ட ராணியாகத் திகழ்ந்தார். அவர் பெயர் ஒபவம்மா. இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான். அவனுக்குத்தான் ராஜ்யத்தை ஆளும் உரிமை என்று இந்த ஒபவம்மா தூண்டுதலினால் இரண்டாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசுரிமை பெற்றவரையும், அவருடைய முழு குடும்பத்தையும் வேலூர் சிறையில் கொன்றுவிட்டனர். 

இந்த சூதும் சதியும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க இந்த ஒபவம்மாவின் கணவர் ஜக்க ராயரை எதிர்த்து காளஹஸ்தி பகுதியை ஆண்ட எச்சமன் என்பவர் ராம தேவர் என்பவர்தான் பட்டத்துக்கு உரியவர் என்று கலகம் விளைவிக்கத் தொடங்கினார். வேலூர் சிறையில் அடைபட்டிருந்த இந்த ராமதேவரை இந்த காளஹஸ்தி அதிபர் விடுவித்து வெளிக் கொணர்ந்து விட்டார். ஜக்கராயர் மட்டும் என்ன இளைத்தவரா? இவர் போய் செஞ்சியை ஆண்டுகொண்டிருந்த நாயக்க மன்னரையும், மதுரையில் இருந்த முத்துவீரப்பரையும் சந்தித்து காளஹஸ்தி எச்சமனையும், ராமதேவரையும் எதிர்த்து போரிடும்படி தூண்டினார்.

காளஹஸ்திக்காரர் மட்டும் என்ன இளிச்சவாயனா என்ன? அவர் பங்குக்கு தஞ்சை ரகுநாத நாயக்கரை சந்தித்து ராமதேவனை பதவியில் அமர்த்த உதவி கேட்டார். ரகுநாத நாயக்கர் வஞ்சனையில்லாமல், தனக்கு இன்றும் என்றும் விஜயநகர சாம்ராஜ்யாதிபதிகள்தான் எஜமானர்கள் எனும் உணர்வுடையவராதலால் அவருக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் பழைய விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றுவிட்ட நிலையிலும், அதன் பிரிவுகளாக ஆங்காங்கே சிதறிக் கிடந்த நாயக்க வம்சத்து சிற்றரசர்கள் தங்களுக்குள் பதவிப் போராட்டத்தில் குதித்தனர். ஜக்கராயர் ஒரு பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளிக்கு அருகில் வந்து சேர்ந்தார். மதுரை முத்துவீரப்பர் தனது திருச்சினாப்பள்ளி படைகளுடன், செஞ்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் படைகளை வரவழைத்துக் கொண்டார். இவர்கள் தவிர கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய வந்து சேர்ந்திருந்த போர்த்துகீசியர்களிடமிருந்தும் படைவீரர்களைக் கேட்டுப் பெற்று தனக்கு உதவிக்காகக் கொண்டு வந்திருந்தார். 

விஜயநகரத்து படைகளை தன்னுடைய காளஹஸ்தி படையுடன் சேர்த்து எச்சமன் தலைமை வகித்து அழைத்து வந்தான். அப்படி அந்த படைகள் வரும் வழியில் தஞ்சைக்கு வந்து ரகுநாத நாயக்கரின் படைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். போதாதற்கு கர்நாடகப் பகுதிகளிலிருந்து படைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த படைகளும், டச்சுக்காரர்களும் இந்த படையில் சேர்ந்து கொண்டனர். இப்போது இரு கட்சிகள் ஒன்றுக்கொன்று மோத தயாராக நின்றன.

ஒன்று ஜக்கராயர் தலைமையில், மதுரை, திருச்சி, செஞ்சி, போர்த்துகீசியர் ஆகிய படைகள். எதிரில் விஜயநகர சாம்ராஜ்யப் படைக்கு காளஹஸ்தி எச்சமன் தலைமையில் தஞ்சை ரகுநாத நாயக்கர் படை, கர்நாடகப் படை, யாழ்ப்பாணப் படை, டச்சுக்காரர்கள் படை ஆகியவை எதிர் வரிசையில் நின்றன.

இவ்விரு படைவீரர்களும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தோப்பூர் எனுமிடத்தில் 1616ஆம் வருஷத்தில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு மோதினர். தோப்பூர் எனும் இந்த இடத்தில் கூடிய இவ்விரு படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் இருக்குமென்று சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். தென்னகத்தில் நடந்த போர்களில் மிக அதிக அளவில் வீரர்கள் கலந்துகொண்ட போர்களில் இந்த தோப்பூர் போரும் ஒன்று என்பது அவர்கள் கருத்து.

போர் உக்கிரமாக நடந்தது. விஜயநகர படைகள் எச்சமன், ரகுநாத நாயக்கர் ஆகியோர் தலைமையில் வீரமாகப் போரிட்டனர். ஜக்கராயர் தலைமையிலான படையால் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. போரின் உச்ச கட்டத்தில் ஜக்கராயர் எச்சமனால் கொல்லப்பட்டார். ஜக்கராயர் படைகள் தலைதெறிக்க ஓடத்தொடங்கினர். ஜக்கராயரின் தம்பி எதிராஜர் உயிர் பிழைக்க ஓடிவிட்டார். மதுரை முத்துவீரப்ப நாயக்கர் தப்பி ஓட முயல்கையில் எச்சமனின் தளபதியிடம் திருச்சினாப்பள்ளி அருகே மாட்டிக் கொண்டார். செஞ்சி மன்னர் செஞ்சி கோட்டை தவிர மற்ற எல்லா இடங்களையும் இழ்ந்து நின்றார். இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான ஒபவம்மாவின் வளர்ப்பு மகன் இரண்டாம் வெங்கடராயர் சிறைபட்டான். இந்த போரின் வெற்றியை தஞ்சை ரகுநாத நாயக்கரும், எச்சமனும் சிறப்பாகக் கொண்டாடினர். ராம தேவனுக்கு ராமதேவ ராயர் எனப் பெயர் சூட்டி 1617இல் மகுடம் சூட்டி, இதன் நினைவாக பல இடங்களில் வெற்றி ஸ்தூபிகளை எழுப்பி கொண்டாடினர். புதிய மன்னன் ராமதேவராயருக்கு அப்போது வயது 15. இப்படியாக சோழ மண்டலத்தில் நாயக்க மன்னர்களில் தலைசிறந்தவராகவும், கலை இலக்கியங்களில் மட்டுமல்ல, போரிலும் தான் வீரம் மிக்கவர் என்பதை நிரூபித்தார் ரகுநாத நாயக்கர். 

பிற போர்கள்:

சோழகருடனான யுத்தம், தோப்பூர் யுத்தம், யாழ்ப்பாண யுத்தம் ஆகியவை தவிர வேறு சில போர்களிலும் ரகுநாத நாயக்கர் ஈடுபட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் போரிட்டு போர்த்துகீசியர்களைத் துரத்திவிட்டு உள்ளூர் ராஜாவை பதவியில் அமர்த்திய பின்னர் அவரும் இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்டு புரட்சி ஏற்பட்டது அல்லவா? அந்த நிகழ்வுகளைத் தன்னால் தடுத்து நிறுத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் மட்டும் ரகுநாதருக்கு இருந்தது. அதனால் தொடர்ந்து போர்த்துகீசியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டேயிருந்தார். மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் 1620 ஆம் ஆண்டுவாக்கில் இருமுறை போர்த்துகீசியர்களுக்கு எதிராக போரிட்டு எழுந்தார்கள். ரகுநாதரும் அந்த காலகட்டத்தில் ஐந்து முறை படைகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை.

No comments: