பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16

தஞ்சையில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சி காலம்.

1633 முதல் 1673 வரையிலான நாற்பது ஆண்டுகள் விஜயராகவ நாயக்கர் தஞ்சையை ஆண்டு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் அவருக்கு அமைதியே இல்லாமல் போய்விட்டது. எப்போதும் கலகம் சண்டை, எதிரிகள் தொல்லை என்று அவர் அமைதியின்றி ஆட்சிபுரிந்தார். எப்போதும் சண்டை நடந்து கொண்டிருந்ததால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டது. நாட்டு மக்களில் ஆண்கள் போரில் ஏராளமானோர் இறந்து போனார்கள். ஆட்சிக்கு வந்து சுமார் பத்து வருஷங்கள் அவர் அமைதியாகத்தான் ஆட்சியை கவனித்து வந்தார்.

அவர் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நியர்கள் வந்து குடியேறினர். நாகப்பட்டினத்தில் போர்த்துகீசியர்களும், தரங்கம்பாடியில் டச்சுக்காரர்கள் என்று இங்கெல்லாம் அந்நியர்களின் குடியிருப்பு ஏற்படலாயிற்று. 

'மன்னாருதாசவிலாசம்' எனும் நூலின்படி மன்னர் விஜயராகவ நாயக்கர் ராஜசந்திரா என்பவரின் மகள் காந்திமதி என்பாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மன்னருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருந்ததாகத் தெரிகிறது. 

நீண்ட நெடுங்காலம் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் முடிவு சோகமான முடிவு. தந்தை ரகுநாத நாயக்கரைப் போலவே இவரும் கலை ஆர்வலர். இவர் வயது முதிர்ந்த பின்னர்தான் போர்க்களத்தில் கொலையுண்டார் எனினும் இவரது வாழ்க்கை சிறப்பானது. தற்கொலைப் படையைப் போல தன் வீட்டுப் பெண்டிரை பலி கொடுத்து அவரும் அவருடைய மகனுமாகப் போர்க்களம் போனார்கள். 

மதுரை சொக்கநாத நாயக்கர்:

மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்தில் முத்து அழகாத்ரி நாயக்கர் என்பவரின் மகன் இந்த சொக்கநாத நாயக்கர். இவர் பதவி ஏற்றுக்கொண்ட சமயம் இவருக்கு வயது 16. அந்த இளம் வயதில் இவர் மதுரையில் இருந்த முசல்மான் படைகளை வெளியே விரட்டிவிட்டார். செஞ்சியின் மீது பெரிய படையொன்றை அனுப்பி அந்த கோட்டையைப் பிடித்துக் கொண்டார். வயதில் இளையவரான மன்னரை ஏமாற்றி இவரது படைத் தலைவர்கள் நன்றாகக் கொள்ளையடித்தார்கள். இவரது நடவடிக்கைகளில் மனம் கசந்த மதுரை வாசிகள் இவருக்கு எதிராகக் கலகம் செய்யவும் முயன்றனர். அப்படி நடந்த கலகத்துக்குத் தலைமை தாங்கியவரும் சொக்கநாதரிடம் படைத்தலைவராக இருந்தவர்தான். இந்த தளபதியின் குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில் மன்னர் இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்பாக அந்த தளபதி கட்சி மாறி முன்பு விரட்டப்பட்ட முகமதியர் படைகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். அவர், தான் சேர்ந்து கொண்ட படையை திருச்சினாப்பள்ளி மீது திருப்பி அதைப் பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

அந்த துரோகி தளபதிக்கு எதிராகப் போரிட சொக்கநாதர் அனுப்பிய படையின் தளபதியும் மன்னருக்கு எதிராக எதிரிகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன சொக்கநாதர் தானே படைத் தலைமையை ஏற்றுக் கொண்டு புரட்சிப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு அவர்களை தஞ்சைக்கும் செஞ்சிக்குமாக விரட்டிவிட்டார்.

சொக்கநாதர் பெற்ற வெற்றி ஓராண்டு கூட நிலைக்கவில்லை. மறு ஆண்டில் தோற்று ஓடிப்போன படைகள் மீண்டும் ஒன்று சேர்ந்து திருச்சினாப்பள்ளியையும், மதுரையையும் சூறையாடிவிட்டுப் போய்விட்டார்கள். போரின்போது அவர்கள் இழைத்த மனிதாபிமானம் இல்லாத கொடுமைகள் சொல்லும் தரமன்று. திருச்சினாப்பள்ளியைப் பிடித்துக் கொண்ட அந்த கும்பலுக்கு சொக்கநாதர் பெருமளவில் செல்வத்தை அள்ளிக் கொடுத்து சமாதானமாகப் போக நேர்ந்தது. இந்த கும்பலின் பின்னணியில் இருந்தவன் சந்தாசாஹேப். இந்த போரில் தனக்கு உதவி செய்ய முன்வராத தஞ்சை நாயக்கர் மீதும், ராமநாதபுரம் சேதுபதி மீதும் சொக்கநாதருக்கு ஆத்திரம். ஆகையால் அவர் ராமநாதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்று வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். இந்தப் போரில் ராமநாதபுரம் மறவர் படைகள் மறைந்திருந்து தாக்கி சொக்கநாதரைப் பின்வாங்கும்படி செய்தது குறிப்பிடத் தக்கது.

ராமநாதபுரத் தாக்குதலை யடுத்து சொக்கநாதரின் பார்வை தஞ்சாவூரின் பக்கம் திரும்பியது. அங்கு வழியில் வல்லம் கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு தஞ்சையின் மீது போரிட்டு விஜயராகவரை கொடுமையாக வெட்டிக் கொன்றார்கள். அத்தோடு நான்கு மன்னர்கள் மட்டுமே ஆட்சிபுரிந்த தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. விஜயராகவர் போர்க்களத்தில் கொலையுண்டு மாண்டு போவதற்கு முன்பு அவர் வெடிமருந்து வைத்து வெடித்து அரண்மனைப் பெண்களையெல்லாம், சொக்கநாத நாயக்கர் மணம் பேசிய தன்னுடைய மகள் உட்பட அனைவரையும் கொன்றுவிட்டார்.

தான் மணம்புரிய விரும்பிய பெண் மாண்டுபோனதில் சொக்கநாதருக்கு மிகுந்த வருத்தம். அந்தப் பெண் நல்ல அழகி, அதுமட்டுமல்ல நல்ல புத்திசாலிப் பெண். இந்த விவகாரங்கள் எல்லாம் தொடங்குமுன்பாகவே சொக்கநாத நாயக்கருக்கும் இந்தப் பெண்ணுக்கும் ரகசிய காதல் மலர்ந்திருக்கிறது. அந்த ரகசியத்தை அங்கு பணிபுரிந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி ராஜா விஜயராகவரிடம் சொல்லிவிட்டாள். அதனால் ஆத்திரமடைந்த விஜயராகவர் அந்தப் பெண்ணையும் ஈவு இரக்கம் காட்டாமல் கொன்றுவிட்டார்.

இந்த துயர சம்பவத்துக்குப் பிறகு மதுரை சொக்கநாதரால் அமைதியாக அட்சிபுரிய முடியவில்லை. தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவார். இறந்து போன பெண்ணின் சாம்பலை அங்கிருந்த நீர்நிலைகளில் தூவினார். சதா அந்த நினைவாகவே காலத்தைப் போக்கினார் சொக்கநாதர்.

தஞ்சையை, அதன் மன்னரைப் போர்க்களத்தில் வெட்டிப் போட்டுவிட்டு ராஜ்யத்தை அபகரித்துக் கொண்ட சொக்கநாதர் தஞ்சையைத் தன் சகோதரன் அழகிரியிடம் கொடுத்து ஆளச் சொல்லிவிட்டு மதுரை வந்துவிட்டார். துயரக் கடலில் வீழ்ந்துவிட்ட சொக்கநாதருக்கு மதுரையையும் சரியாக ஆளமுடியவில்லை, தஞ்சையில் இருந்த அழகிரியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை.

தஞ்சையின் சுதந்திரப் பறவையாக பதவியேற்ற அழகிரிக்கு அங்கு பெரிய சோதனை காத்திருந்தது. போரில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்பட்டு, அரண்மனைப் பெண்டிர் வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டபோது மரணமடைந்தவர்கள் தவிர ஒரு ராணியும், ஒரு வேலைக்காரியும் ராஜாவின் குழந்தையொன்றோடு தப்பி நாகைப்பட்டினம் சென்றதைப் பார்த்தோமல்லவா? அந்த விஜயராகவரின் மகன் செங்கமலதாஸ் என்பவன் நாகைப்பட்டினத்தில் ஒரு தனவணிகர் வீட்டில் வளர்ந்தான். 


No comments:

Post a Comment

You can give your comments here