பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 15

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 15

மதுரை நாயக்கர்களின் தஞ்சை மீதான இறுதி யுத்தம்.

1673ஆம் வருஷம் மதுரை சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூருடனான இறுதி யுத்தத்துக்குத் தயாராகிவிட்டிருந்தார். இதற்கு முன்பு பார்த்த வரலாற்றுப் பின்னணியில் மதுரையும் தஞ்சையும் அடிக்கடி போரில் ஈடுபட்டிருந்தது தெரிகிறது. கடைசியில் மதுரை சொக்கநாத நாயக்கர் இராமநாதபுரம் சேதுபதி விவகாரத்தில் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டிருந்ததால் அப்போது தஞ்சை விஜயராகவ நாயக்கர் எடுத்த போர் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட முடியாமல் போயிற்று. அதோடு தங்கள் வசமிருந்த வல்லம் உள்ளிட்ட பல இடங்களைத் தஞ்சாவூரிடம் இழக்க நேர்ந்தது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சொக்கநாத நாயக்கர் இப்போது தஞ்சாவூர் மீது தங்கள் முழு பலத்தையும் உபயோகித்து போருக்குக் கிளம்பிவிட்டார்.

மேற்சொன்ன காரணங்கள் தவிர மதுரை சொக்கநாத நாயக்கருக்கு இன்னொரு சொந்த விஷயமும் இந்த போருக்குக் காரணமாக இருந்தது. சொக்கநாத நாயக்கர் இளைஞன், இவருக்கு தஞ்சை விஜயராகவ நாயக்கரின் பெண்ணைத் திருமணத்துக்குக் கேட்டு தூதர்களை தஞ்சைக்கு அனுப்பினார். ஆனால் தஞ்சையில் விஜயராகவ நாயக்கர் இந்த சம்பந்தத்துக்கு விருப்பமில்லாமல், மதுரையில் பெண் கொடுக்க மறுத்ததோடு தூது வந்தவர்களையும் அவமதித்து விட்டார். தனக்குப் பெண் கொடுக்க மறுத்த விஜயராகவ நாயக்கர் மீது ஏற்பட்ட கோபமும் கூட இந்த படையெடுப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்புகூட இவ்விரு ராஜ்யங்களுக்கிடையே பெண் கொடுத்தல், திருமணம் செய்தல் இவை நடந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. விஜயராகவ நாயக்கரின் தந்தையார் ரகுநாத நாயக்கர் மதுரை அரச வம்சத்தில்தான் பெண் எடுத்திருந்தார் என்பதும், மதுரை திருமலை நாயக்கர் தஞ்சை நாயக்கர் வம்சத்து பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் திருமலை நாயக்கர் திருமணம் செய்துகொண்ட தஞ்சாவூர் ராஜகுமாரி மதுரையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் என்பதும்கூட இப்போது விஜயராகவ நாயக்கர் தங்கள் பெண்ணை மதுரைக்குக் கொடுக்க மறுத்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் நம்பும்படி இருக்கிறது. 

இப்படியெல்லாம் இவ்விரு ராஜ்யங்களுக்கிடையே திருமண பந்தங்கள் இருந்திருந்தும், இந்த முறை தஞ்சை பெண்ணை சொக்கநாதருக்குக் கொடுக்க மறுக்கக் காரணம் அரசியல் காரணமாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மதுரை சொக்கநாத நாயக்கருக்கு மைசூர் எதிரியாக இருந்த காரணத்தால், அவர்களை எதிர்க்க விஜயராகவ நாயக்கரின் நட்பு தேவைப்பட்டிருக்கலாம், அதற்காகக் கூட தஞ்சையில் பெண் கேட்டு அவர் தூது அனுப்பியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த விஷயம் இன்னொரு கோணத்திலும் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தஞ்சை நாயக்கர்கள் தங்கள் எஜமானர்களான விஜயநகர பேரரசோடு திருமண பந்தம் உள்ளவர்கள் என்பதால், அப்படிப்பட்ட சக்கரவர்த்தி உறவு எதுவும் இல்லாத மதுரையோடு திருமணம் செய்ய விருப்பமில்லாததும் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. எது எப்படியோ மதுரை சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூர் மீது படையெடுப்பது உறுதியாகிவிட்டது.

வரலாற்றாசிரியர்கள் மத்தியில் இன்னொரு சந்தேகமும் எழுப்பப்படுகிறது. தஞ்சை ரகுநாத நாயக்கர் நிச்சயம் மதுரை திருமலை நாயக்கருக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். மேலும் அப்படி திருமலை நாயக்கர் தன் மனைவியை, அதாவது தஞ்சை ரகுநாத நாயக்கரின் மகளைக் கொலை செய்திருப்பாரானால், பலம் பொருந்திய ரகுநாத நாயக்கர் அவரை சும்மா விட்டிருப்பாரா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. திருமலை நாயக்கர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் ரகுநாத நாயக்கரின் மகள் அச்சுத ரகுனாதாம்பா எனும் பெண் ஒருத்தி ரகுநாத நாயக்கருக்கு இருந்ததா என்ற ஐயப்பாடும் உண்டு.

இவை எல்லாவற்றையும் மீறி, விஜயராகவ நாயக்கர் வல்லத்தை மீண்டும் 1664இல் மீட்டெடுத்தது மதுரை நாயக்க மன்னரின் கெளரவத்தை பாதித்துவிட்டதால் இந்த யுத்தத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வல்லத்தை மட்டுமல்ல, முந்தைய போரில் தாங்கள் இழந்த அனைத்தையும் விஜயராகவர் மீட்டுவிட்டது மட்டுமல்லாமல், முன்னர் ஒப்புக்கொண்டபடி மதுரைக்கு கப்பம் கட்டவும் தஞ்சாவூர் மறுத்து விட்டதும் காரணமாக இருக்கலாம். 

சொக்கநாத நாயக்கர் மதுரை ராஜ்யத்தின் தளவாய் வேங்கடகிருஷ்ணப்ப நாய்க்கர், பேஷ்கார் சின்னத்தம்பி முதலியார் ஆகியோர் தலைமையில் மதுரை படைகளைத் தஞ்சையின் மீது தாக்குதல் நடத்த அனுப்பி வைத்தார். இவர்களோடு கன்னிவாடி எனுமிடத்தின் பாளையக்காரர் சின்ன கத்திரி நாயக்கர் என்பாரும் சேர்ந்து கொண்டார். இப்படி மதுரை படைகள் தங்கள் மீது தாக்குதல் நடத்த வந்து கொண்டிருக்கிறது என்கிற செய்தியைக் கேள்விப்பட்ட விஜயராகவ நாயக்கர் தஞ்சாவூர் படைகளை உடனே மதுரை படைகளை எதிர்கொண்டு வழிமறித்து அவர்கள் தஞ்சைக்கு வருவதறேகு முன்பே தாக்குதல் நடத்தும்படி ஆணை பிறப்பித்து அனுப்பி வைத்தார். ஆனால் வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கரின் மதுரைப் படை தஞ்சை படைகளைத் தோற்கடித்துவிட்டு வல்லம் கோட்டையைப் பிடித்துக் கொண்டது. வல்லத்தைப் பிடித்த சூட்டோடு தஞ்சை கோட்டையையும் நெருங்கி வந்து முற்றுகையிட்டது. 

நடந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்ட விஜயராகவர் தஞ்சை கோட்டைக்குள் இருந்த தங்கள் படைகளையெல்லாம் ஒன்றுதிரட்டிக் கொண்டு வேங்கடாத்ரி நாயக்கர் தலைமையில் கோட்டைக்கு வெளியே வந்து மதுரை படைகளோடு கடுமையாகப் போராடினார். எனினும் வெற்றி மதுரை படைகளுக்கே கிடைக்க, விஜயராகவரின் படைகள் பலத்த சேதத்தைச் சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தம் பற்றி இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது. மதுரை தளபதி வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர் விஜயராகவ நாயக்கருக்கு தூது அனுப்பி சில நிபந்தனைகளை விதித்து அவற்றுக்குக் கட்டுப்படுவதானால் அமைதி ஒப்பந்தம் செய்தி கொள்ளலாம் என்பதைத் தெரிவித்ததாகவும், விஜயராகவர் அதனை ஏற்காமல் போர் செய்ய முற்பட்டு படைகளுக்குத் தானே தலைமை ஏற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் போர் தொடங்கும் சமயத்தில் மன்னர் விஜயராகவ நாயக்கரின் குமாரன் மன்னாருதாஸ் என்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். தஞ்சையை ஆண்டுவரும் மன்னின் குமாரன் சிறையிலா? திகப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டதால், தன் மகன் தானே என்று புத்திரபாசம் காரணமாக அவனுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காமல் இருந்திருக்கலாம் மன்னர். ஆனால் விஜயராகவ நாயக்கர் நீதிநெறி தவறாமல் ஆட்சிபுரிந்தமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தன் மகனே ஆனாலும், தன் மகனைத் தேர்க்காலில் இட்டு தண்டனை கொடுத்த மனுநீதிச் சோழன் ஆண்ட தேசமல்லவா இது. அந்த ராஜகுமாரன் மீது எழுந்த குற்றச்சாட்டுதான் என்ன? பார்ப்போம்.

முனைவர் சிவ.சீதளா எனும் பேராசிரியர் "நாயக்கரின் நாட்டாண்மை" என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி இது. தஞ்சை விஜயராகவரின் மகன் இளவரசன் மன்னாருதாசன் தஞ்சையிலிருந்து புறப்பட்டு வெளியூர் சென்றுகொண்டிருந்தான். அப்படி அவன் சென்றது புதுக்கோட்டை செல்லும் பாதை. வழியில் தாகம் எடுத்ததால் இளவரசன் வழியிலிருந்த ஒரு நீர்ச்சுனைக்குச் சென்றானாம். அப்போது அங்கு சில பெண்கள் இருப்பதையும், அதில் ஒருத்தியின் பேரெழிலில் இளவரசன் மயக்கம் கொண்டதாகவும் தெரிகிறது. அப்போது அவ்விருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்ததாம். அந்தப் பெண்ணின் பெயர் மங்களாம்பிகை, தஞ்சை நாயக்க மன்னர்களின் அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் பெண் அவள். இவ்விருவரின் காதலை அறிந்து கொண்ட அரண்மனை ராயசம் வெங்கண்ணா என்பவர் இதனை அமைச்சர் கோவிந்த தீக்ஷதரிடம் சொல்ல, அவர் மகாராஜா விஜயராகவ நாயக்கரின் காதுகளில் போட, இந்த அபவாதம் நீங்க மன்னர் தன் மகன் மன்னாருதாசனைச் சிறையில் அடைத்ததாக அதில் குறிப்பிடப்படுகிறது.

அந்த மன்னாருதாசனை விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு விஜயராகவ நாயக்கர் போர்க்களம் செல்கிறார். அப்போது மன்னர் அக்கிராஜு எனும் தன்னுடைய பணியாளிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் போர்க்களம் செல்கிறார். போரில் விஜயராகவர் கொல்லப்பட்டால் உடனடியாக அரண்மனை அந்தப்புரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்த்துவிட வேண்டும். அரண்மனைப் பெண்டிர் எவரும் எதிரிகள் கையில் அகப்பட்டுவிடக் கூடாது என்பது கட்டளை.

போர் கடுமையாக நடந்தது; போர்க்களத்தில் விஜயராகவ நாயக்கரின் படை தோல்வி முகத்தில் இருக்கும்போது மதுரை தளபதி வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர் தஞ்சை ராஜகோபாலசாமி கோயில் வாசலில், வடக்கு வீதிக்கு அருகில் விஜயராகவரோடு போரிட்டுக்கொண்டே அவர் தலையை வெட்டி விடுகிறார். உயிர் போன மன்னரின் உடல் தரையில் விழுந்த செய்தி அரண்மனையை எட்டியவுடனேயே முன்னமே தீர்மானித்திருந்தபடி அரண்மனை அந்தப்புரத்தை அக்கிராஜு வெடிவைத்துத் தகர்த்துவிட்டான். அதில் உள்ளே இருந்த அத்தனை பேரும், மதுரை சொக்கநாத நாயக்கர் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளவரசி உட்பட அனைவரும் உயிரிழந்தனர். அதிலும் தப்பிப் பிழைத்தவர்கள் மூவர் இரு பெண்கள், ஒரு குழந்தை. அந்தக் குழந்தை மன்னரின் வாரிசு இளவரசனாக வளர்ந்த குழந்தையொருவன்.

தஞ்சை ராஜ்யம் மதுரையோடு இணைக்கப்பட்டது. சொக்கநாதரின் ஒன்றுவிட்ட தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சைக்கு மன்னராக முடிசூட்டி வைக்கப்பட்டார். 1673ஆம் ஆண்டு விஜயராகவ நாயக்கர் போர்க்களத்தில் கொல்லப்பட்டதோடு தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.


No comments: