பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 3


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 3

கிருஷ்ணதேவ ராயர். 

கிருஷ்ணதேவ ராயர் காலம் ஒரு பொற்காலம். இவர் 1509 முதல் 1529 வரை அரசாண்டார். துளவ சாம்ராஜ்யத்தின் மூன்றாவது சக்கரவர்த்தி இவர். இந்த ராஜ்யம் உச்ச கட்ட புகழில் இருந்த காலத்தில் இவர் அரசாண்டார் என்பது கவனிக்க வேண்டிய அம்சம். இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த சக்கரவர்த்திகள் வரிசையில் வைத்துப் போற்றப்படும் மன்னர்களுள் இவரும் ஒருவர். இவருக்குத்தான் எத்தனையெத்தனை விருதுகள், பட்டங்கள்? "கன்னட ராஜ்யாதிபதி" (Lord of Kannada Empire), மூன்று மன்னர்களுக்கு மன்னர் (Andhra Bhoja and Mooru Rayara Ganda) இப்படிப் பல.

தென்னாட்டில் அப்போது சிறு சிறு ராஜ்யங்களை ஆண்டுகொண்டிருந்த தட்சிண சுல்தான்கள் என அழைக்கப்பட்ட பீஜப்பூர், கோல்கொண்டா, பாமினி சுல்தான்கள், ஒடிஷா ராஜா ஆகியோரை வெற்றி கொண்டு வீராதிவீரராகச் சிறப்போடு விளங்கினார். இவருடைய ராஜ்யத்தில்தான் பெருமைக்குரிய தென்னிந்திய கணிதமேதை நீலகண்ட சோமையாஜி என்பவர் வாழ்ந்திருந்தார். தென்னிந்தியாவில் அரசாண்ட ஹிந்து மன்னர்களில் வலிமை மிக்கவராகக் கிருஷ்ணதேவ ராயர் விளங்கிவந்தார். இவர் காலத்தில் போர்த்துகீசிய பயணிகளாகப் பல வந்திருக்கின்றனர். இவருடைய நிர்வாகத் திறமைக்கு உறுதுணையாக சிறந்த அமைச்சர்கள் விளங்கிவந்தார்கள். 

கிருஷ்ணதேவ ராயர் ஒரு கிருஷ்ண ஜெயந்தியன்று முடிசூட்டு விழாவை வைத்துக் கொண்டார். தலைநகரமாக விஜயநகரம் சீரும் சிறப்போடும் விளங்கியது. அருகிலேயே நாகலாபுரம் எனும் நகரத்தையும் அமைத்துக் கொண்டார். மன்னர் கிருஷ்ணதேவராயர் ஒன்றும் ஆஜானுபாகுவான உடல்வாகு கொண்டவரல்ல. நம் திரைப்பட கதாநயகர்களைப் போல சாதரண தோற்ற முடையவர். எளிதில் அணுகக் கூடியவர், இன்முகமும், உபசரிப்பும் இவருடைய சிறப்புத் தகுதிகள். நாட்டில் குற்றங்களைத் தடுப்பதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் அதிகப்படியான கடுமையைக் காட்டியவர். சில நேரங்களில் அடக்கமுடியாத கோபத்தையும் இவர் வெளிக்காட்டுவார். 

உடல் ஆரோக்கியத்தை இவர் மிக கச்சிதமாகப் பேணிக் காப்பாற்றி வந்தார். தினமும் நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எப்போதும் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்ந்தார். நிர்வாகத் திறமை மட்டுமல்லாமல், போர் என்றால் புலிக்குணமும் உடையவராக இருந்ததால் இவரைப் போரில் புலி என்றே புகழ்ந்து வந்தனர். போர் என்றால் தன்னை மட்டும் காத்துக் கொள்ளும் குணமுள்ளவரல்ல இவர், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களை யெல்லாம் சென்று பார்த்து அவர்களை சிகிச்சைக்கு அனுப்பிவைத்து குணமாகும்வரை கவனித்துக் கொள்ளும் பண்பு உள்ளவர்.

விஜயநகர மன்னர்களிலேயே கிருஷ்ணதேவ ராயர் காலத்தில்தான் அதிகமான போர்களில் இவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவருடைய போர்த் தந்திரம் பற்றி விரிவாகவே எழுதுகிறார்கள். இவர் எந்தவிதமான போர்தந்திரத்தைக் கடைப்பிடிப்பார் என்று சொல்ல முடியாதாம். தோற்கும் நிலையை மாற்றி வெற்றி பெற வைக்கும் சாமர்த்தியம் படைத்தவர் இவர் என்கிறார்கள். இவர் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து ஆண்டுகள் வரை போர்க்களம்தான் இவருடைய இருப்பிடம். சதா போர், முற்றுகை, வெற்றி இப்படிப் போயிற்று அவரது வாழ்க்கை. பாமனி சுல்தான்கள் எனப்படும் தென்னக சுல்தான்கள்தான் இவருடைய பிரதான எதிரிகள். இவர்கள் தவிர ஒடிஷா பகுதியில் ஆட்சி புரிந்து வந்த கஜபதி வம்சத்தாரும் இவரோடு சதாகாலம் போரில் ஈடுபட்டு வந்தார்கள். உள்ளூர் எதிரிகள் போதாதென்று இவர்களுடன் போரிட அப்போது கடல் வழியாக வியாபாரம் செய்ய வந்த போர்த்துகீசியர்களும் சேர்ந்து கொண்டார்கள். கொண்டவீடு ரெட்டிகள் என்போரும் வேறு சிலரும் கூட விஜயநகர மன்னரோடு மோதித் தோற்றுப் போனார்கள்.

தட்சிண சுல்தான்கள் செய்த கொடுமை என்னவென்றால் சமயம் வாய்க்கும் போதெல்லாம் இவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் இருக்கும் ஊர்களுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது என்பது அவர்களுடைய பொழுது போக்காக இருந்து வந்தது. இந்த கொடுமை கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 1509இல் அப்படியொரு முறை பீஜப்பூர் சுல்தான் மகமூது விஜயநகர சாம்ராஜ்ய எல்லைக்குள் புகுந்து திவானி எனுமிடத்தில் கொள்ளை அடிக்கும்போது கிருஷ்ணதேவராயரின் படை அவர்களை எதிர்த்துப் போரிட்டு தோற்று ஓடவைத்தார்கள். அந்தப் போரில் சுல்தான் கடுமையாகக் காயமடைந்து தோற்று ஓடிப்போனார். ரெய்ச்சூர் ராயர் வசமானது அங்கு ஆட்சிபுரிந்த யூசுப் அடில்கான் போரில் கொல்லப்பட்டான். இப்படி காலமெல்லாம் கைகள் ஓங்கியிருந்த பாமனி சுல்தான்கள் இந்த தோல்விகளைக் கண்டு கலகலத்துப் போயிருந்த சமயம் பார்த்து கிருஷ்ணதேவராயர் பீடார் மீது படையெடுத்துச் சென்றார். கோல்கொண்டா சுல்தான் ராயரின் அமைச்சர் திம்மருசுவால் தோற்கடிக்கப்பட்டார்.

அடிக்கிற காற்றில் அம்மியும் குழவியுமே பறக்கும்போது, சின்னஞ்சிறு ஆட்சியாளர்கள் ராயர் முன்பு எம்மாத்திரம்? ஒடிஷா கஜபதி ராஜாக்களின் சிற்றரசர்களாக இருந்தவர்கள் அனைவரும் தோற்றோடிப் போனார்கள். கிருஷ்ணா நதிக்கரை வரையிலும் ராயரின் ஆளுமை பரவிக் கிடந்தது. உம்மாத்தூர் ராஜா கங்கராஜு என்பார் ராயரிடம் போரிட்டுத் தோற்றுப் போனார். தோல்வி தந்த அவமானம் 1512இல் அவர் காவிரி நதியில் வீழ்ந்து உயிர் நீத்தார். அவருடைய ராஜ்யம் ஸ்ரீரங்கப்பட்டணத்துடன் இணைக்கப்பட்டது. 1516-17 காலகட்டத்தில் ராயரின் ஆட்சி கோதாவரி நதிக்கரை வரை பரவியது.

ஆந்திர ராஜ்யத்தின் பெரும்பகுதியை ஒடிஷாவின் சூர்யவம்சி கஜபதி ராஜாக்கள் ஆண்டு வந்தனர். ஆந்திரா தெலுங்கானா ஆகிய பகுதிகள் இவர்களுடைய ஆளுமையின் கீழ் அப்போது இருந்தது. ஒடிஷா பகுதி முழுவதும், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் ஆகிய பிரதேசங்களும் அப்போது கஜபதி ராஜாக்கள் வசம் இருந்து வந்தது. உம்மாத்தூர் வெற்றிகளையடுத்து கிருஷ்ணதேவராயர் தன்னுடைய பார்வையை இந்த கஜபதி ராஜா மீது திருப்பினார். அப்போது ராஜாவாக இருந்தவர் கஜபதி பிரதாப ருத்ர தேவ். விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெரும்படை 1512இல் உதயகிரியை முற்றுகையிட்டது. இந்த முற்றுகை சுமார் ஒரு வருஷ காலம் நீடிக்கவே, கஜபதி ராஜாவின் படைகள் உண்ண உணவின்றி பட்டினி கிடக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். படை வீரர்கள் அவரவர் போரைவிட்டுவிட்டு ஓடத் தொடங்கி விட்டார்கள். ராயரின் அமைச்சர் திம்மரசு கஜபதி ராஜா கோட்டைகளுக்குச் செல்லும் இரகசிய சுரங்கப் பாதைகளைக் கண்டறிந்து உள் நுழைந்து, எதிர்த்து வந்த அந்தக் காலத்திய வாட்போரில் தீரர்களான இளவரசர் வீரபத்ரனோடு போர் புரிந்து வென்றார். தாங்கள் வென்ற பகுதிகளுக்கு திம்மரசுவே கவர்னராக அமர்த்தப்பட்டார். இந்த வெற்றிகளையடுத்து ராயர் கலிங்கத்தின் இதயப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்; அத்தோடு கஜபதி ராஜாவின் ஆளுகை முடிவுக்கு வந்தது.

கிருஷ்ணதேவ ராயருக்கு திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி. தன் மனைவிகளான திருமலாதேவி, சின்னமதேவி ஆகியோருடன் அங்கு சென்று பெருமாளை வழிபட்டிருக்கிறார். தன் மனைவிகளோடு பெருமாளை ராயர் வழிபடுவதுபோன்ற சிற்பத்தை இப்போதும் திருப்பதியில் காணலாம். அந்தக் கால வழக்கப்படி மன்னர்கள் போர் புரிந்து பக்கத்து ராஜ்யங்களுடன் நட்புறவு கொள்வார்கள்; இல்லையென்றால் எதிரிகளாயிருந்தாலும் அவர்களது மகளை, எத்தனை மனைவியர் இருந்தாலும் மேலும் ஒரு மனைவியாகத் திருமணம் செய்து கொண்டு விடுவார்கள். அப்படித்தான் கஜபதி வம்சத்து ராஜா பிரதாபருத்ரன் என்பவர் கிருஷ்ணதேவ ராயருடன் போரிட்டு வெல்ல முடியாமல் தன் மகள் அன்னபூர்ணா தேவியை அவருக்கு மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துவைத்து நட்புறவு கொண்டுவிட்டார். அத்துடன் ஒடிஷாவுடன் நடந்த போரில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு கிருஷ்ணா நதிக்கு அப்புறம் கஜபதி ராஜாக்களும், தென்புறம் விஜயநகர சாம்ராஜ்யமும் நிர்வகித்துக் கொள்வது என்று முடிவாகியது. இந்து மன்னர்கள் இருவருக்கிடையே கடுமையான போர்கள் நடந்த நிலைமை மாறி இருவரும் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்கி நட்பு கொண்டது தெற்கே இந்து அரசர்கள் அரசாள வழிவகை செய்துவிட்டது.

போர்த்துகீசியர்கள் ஐரோப்பாவிலிருந்து இந்த நாட்டுக்கு வாணிபம் செய்து பிழைக்க வந்தார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்துமே இந்திய மன்னர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். வெடி மருந்துகள், பீரங்கி என்று அவர்களது போர் ஆயுதங்களும், கடற்படையும் இவர்களுக்கு சற்று பயத்தைக்கூட ஏற்படுத்திவிட்டது எனலாம். வீரத்துக்காக அப்படியெல்லாம் இந்திய மன்னர்கள் பயப்படவில்லை என்று வாதம் செய்தாலும் உண்மை அதுதான். அதனால்தானோ என்னவோ கிருஷ்ணதேவ ராயரும் இந்த அன்னிய தேசத்தவர்களை நட்புறவு கொண்டு போரைத் தடுத்துவிட்டனர். இந்தியாவின் மேற்குக்கடற்கரைப் பிரதேசத்தில் ஓரிடத்தை 1510இல் இந்த போர்த்துகீசியர்கள் வந்து தங்கிக் கொண்டு வாணிபம் செய்ய தாரைவார்த்தனர். அந்த இடம்தான் கோவா.

இந்த போர்த்துகீசியர்களிடமிருந்து ராயர் நல்ல அரேபிய குதிரைகளையும், பீரங்கிகள், வெடி மருந்துகள் இவற்றைப் பெற்றுக் கொண்டு தன் படைகளை வலுப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாட்டில் இருப்பதைப் போல நல்ல சுத்தமான தண்ணீரை மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் வழிவகைகளையும் அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டு அவற்றைத் தன் விஜயநகரத்தில் அறிமுகம் செய்தார். 

இப்படி வெளிநாட்டு உறவு ஒரு புறமும், உள்நாட்டுப் போர்கள் தட்சிண சுல்தான்களுடனும் நடந்து கொண்டிருந்தது. கோல்கொண்டா படைகளை ராயர் வெற்றி கொண்டார் அவர்களின் படைத் தளபதியைச் சிறைபிடித்தார். பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில்ஷாவைத் தோற்கடித்தார். ராயருடைய போரில் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது 1520 மே மாதம் 19ஆம் தேதி பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில்ஷாவுடன் நடந்த போர்தான். இந்த போரில் விஜயநகரப் படைகள் 16000 வீரர்களை இழந்தது. கடுமையான முற்றுகைக்குப் பின் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூர் கோட்டை பிடிபட்டது. இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் விஜயநகரப் படைகளின் தளபதியாக இருந்த பெம்மசானி ராமலிங்க நாயுடு என்பவர். இந்த சாதனைக்காக ராமலிங்க நாயுடு விஜயநகர மன்னரால் விருதுகள் முதலியன அளித்து கெளரவிக்கப்பட்டார். இந்த ரெய்ச்சூர் முற்றுகையில் விஜயநகரப் படையில் ஏழு லட்சம் காலாட்படை வீரர்களும், முப்பத்தி இரண்டாயிரத்து சொச்சம் குதிரைப் படையினரும், ஐநூத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகளும் பங்கு பெற்றனவாம். இந்த யுத்தத்தின் முடிவில் குல்பர்கா கோட்டை தரைமட்டமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. இந்த குல்பர்க்காதான் பாமினி சுல்தான்களின் தலைநகராக விளங்கிய இடம். இந்த வெற்றியை அடுத்து விஜயநகர சாம்ராஜ்யம் தென் இந்தியா முழுவதும் ஏகசக்ராதிபதியாக விளங்கியது.

1524இல் கிருஷ்ணதேவ ராயர் தன்னுடைய மகன் திருமலைராயரை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்வித்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டம் அதிக நாட்கள் அவர் உயிரோடு இல்லை, இளமையிலேயே மரணமடைந்து விட்டார். இயற்கை மரணமல்ல, யாரோ விஷம் வைத்து அவரைக் கொன்று விட்டார்கள். யார் இதனைச் செய்திருப்பார்கள் என்று தீர விசாரித்தபின் அமைச்சர் திம்மருசுதான் செய்திருக்க வேண்டுமென எண்ணி மன்னரின் நம்பிக்கைக்கு உகந்த அந்த அமைச்சரின் கண்கள் குருடாக்கப்பட்டன. 

இதற்கிடையே மன்னர் கிருஷ்ணதேவராயர் பீஜப்பூர் சுல்தான்கள் வசம் இருந்த பெல்காமைக் குறிவைத்தார். அதன் மீது படையெடுத்து பெல்காமைத் தங்கள் ராஜ்யத்தோடு இணைத்துக் கொள்ள மன்னர் விரும்பினார். ஆனால் மனிதன் ஒன்று நினைக்க, இறைவன் வேறொன்று நினைக்கிறான். கிருஷ்ணதேவராயர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு வந்த உடல்நலக்கேடு அவர் உயிரை 1529இல் பறித்துக் கொண்டுவிட்டது. காலமெல்லாம் பல மன்னர்களாலும், வீராதி வீரர்களாலும் செய்ய முடியாத காரியத்தை அவருக்கு வந்த வியாதி செய்து முடித்துவிட்டது. இளமையிலும், புகழின் உச்சியிலும், வீரர்கள் போற்றும் இடத்திலும் இருந்த ராயர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

கிருஷ்ணதேவ ராயரின் மறைவுக்குப் பின் அவருடைய இளவல் அச்சுததேவ ராயர் ஆட்சிக்கு வந்தார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீரம் செறிந்த வரலாற்றில் கிருஷ்ணதேவ ராயரின் பங்கு மகத்தானது. அவருடைய ராஜ்யத்தின் பெருமையையும், கலை, கலாசாரம், ஆலயம் ஆகிய வற்றின் மகோன்னதம் இன்றும்கூட ஹம்பி நகரின் இடிபாடுகளில் நம்மால் காணமுடிகிறது.


No comments: