பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 8, 2014

ஞானரதம் - Part 7

ஞானரதம் - தர்மலோகம்

சில தினங்களின் பிறகு, ஒரு நாள் ஞான ரதத்தில் ஊர்ந்து தர்மலோகத்திற்குப் போனேன். கந்தர்வ லோகத்திற்குப் போனவுடன் தேரிலிருந்து இறங்கி யதேச்சையாகத் திரிந்ததுபோல, இங்கும் சஞ்சரிக்கலாமென்று கருதித் தேரை விட்டு இறங்கினேன். அப்போது, தெளிந்த வதனமும், அகன்ற அடங்கிய விழிகளும், கருமையாகச் சுருள்கள் அமைந்த தாடியும், வலக்கையிலே ஒரு சுவடியும் கொண்ட ஒரு வாலிபன் என் முன்னே வந்து, "தேரை விட்டிறங்க வேண்டாம். அதிலேயே இரு; நானும் ஏறிக் கொள்ளுகிறேன். உன்னுடன் வந்து உனக்கு இந்நாட்டின் விஷயங்களைக் காண்பிக்கவேண்டும் என்று எனக்குத் தர்மதேவதையின் கட்டளை" என்றான்.
நான் அவனைக் கண்டவுடனே, அவனிடம் எனக்கு ஒரு விதமான அச்சமும் மதிப்பும் ஜனித்தன. அவனைப் போன்ற துணைவன் இருந்தால் பல அரிய விஷயங்கள் தெரிவதுடன், நற்கதியும் பெறலாம் என்று எனக்கு எக்காரணத்தாலோ மிக நிச்சயமாகத் தோன்றியது. அந்த வாலிபன் தேர்மீது வந்து ஏறிக்கொண்டான். மறுபடியும் அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தேன். ஆகா! என்ன அற்புத வடிவம்! அவன் தேகத்திலே ஒரு சுருங்கல் கிடையாது. ஒரு கோணல் இல்லை. அவனது அங்கங்களெல்லாம் தத்தம் இயற்கையளவுக்குச் சிறிதும் மாறுபடாமல் கணித தேவதையால் அமைக்கப்பட்டன போன்று விளங்கின. உடல் முழுவதும் ஒரு பிரகாசம் காணப்பட்டது. அது கந்தர்வ லோகத்தவரிடம் காணப்பெற்ற மயக்குந் தன்மை கொண்ட 'லாகிரி'ப் பளபளப்பன்று; இயற்கையின் திகழ்ச்சி. பிரகிருதியிலே, மலர், செடி முதலிய தத்தம் கடைமைகளை நேர்மையுறச் செலுத்தும் பொருள்களிலே, ஓர் விதமான திகழ்ச்சி தெரியவில்லையா? அவ்வகைப் பட்டது. சாஷ்டாங்கமாக அவன் பாதத்தில் விழுந்து வணங்கினேன். அவன் "தர்மம் சர," (அறத்தை ஒழுகு) என்று ஆசீர்வாதம் செய்தான்.
பின்பு, "மகனே, என் பெயர் தபஸ். நான் இந் நாட்டில் வழி காட்டும் தொழில் உடையவன். அவரவர்கள் எவ்வெத் தருமங்களைக் காண விரும்புகிறார்களோ அவ்வவற்றைக் காட்டுவேன்.
திமிங்கல முதல் புழுவரை ஒவ்வோருயிர்க்கும் அததற்குரிய தருமங்கள் உண்டு. நட்சத்திரங்கள் சூரிய சந்திரன் முதலாக அணுக்கள் வரை ஒவ்வொரு வஸ்துவுக்கும் உரிய தர்மங்களுண்டு. மேலும், ஒன்றிற்கே காலதேச வர்த்த மானங்களுக்குத் தக்கபடி தருமங்கள் மாறுபடுகின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வர வேண்டுமானால், பதினாயிரம் வருஷங்கள் போதா. ஆதலால், நீ எந்த தர்மங்களை முக்கியமாக அறிய விருப்பமுள்ளது என்று குறிப்பிடுவாயோ, நான் அவற்றை மட்டும் உனக்குக் கொண்டு காட்டுவேன். வேறு பல விஷயங்களையும் நீ பொதுப்படையாகப் பார்த்துக்கொண்டு போகலாம்" என்று கூறினான். அதற்கு நான், "முனிவரே, நான் பிராமண தருமத்தையும், க்ஷத்திரிய தருமத்தையும் அறிய விரும்புகிறேன்" என்றேன்.
"நல்லது, என்னுடன் வா; பிரதமத்திலே அறக்கடவுளின் ஆலயத்தில் போய் வழிபாடு செய்துவிட்டு வரலாம்" என்றான். இருவரும் உடன் சென்றோம்.
இடைவழியில் என்ன பொருள்கள் உள்ளதென்பதைப் பார்க்கக்கூட முடியாதபடி கண் மூடித் திறக்கு முன்பாகத்தூய வெண்மை நிறங்கொண்ட ஸ்படிகத்தால் மிக விசாலமாகக் கட்டப்பட்ட ஓர் ஆலயத்தினருகே வந்து சேர்ந்தோம். பின்புறத்திலிருந்திறங்கித் தபோமுனி முன் செல்ல, நான் அவரைத் தொடர்ந்து, அவ்வாலயத்துக்குள்ளே இருவரும் புகுந்தோம். "ஜயதர்ம ராஜாய, ஜயயமாய, ஜய வைவஸ்வதாயா, ஜய ஸூர்ய தேஜஸ்வினே, ஜய மஹோக்ராய, ஜய மஹாசாந்தாய," என்ற ஒலிகள் கேட்டன. என் மனம் திடுக்கிட்டது. கை கால்கள் நடுங்கின. உடம்பெல்லாம் வெயர்த்து விட்டது. பதறிப் போய், "முனிவரே, எங்கே அழைத்துச் செல்லுகிறீர்?"
என்று கேட்டேன். "யம சன்னிதானத்துக்கு" என்றார். "ஏன்? ஐயா, எதற்கு?" என்று அலறினேன். முனிவர் என் பக்கமாகத் திரும்பி என் மெய்யைத் தடவித் தமது விசாலமான அருள் விழிகளின் பார்வையை எனது கண்களிலே செலுத்தி, "அஞ்சாதே, அறத்துக்கு அஞ்சலாமா?" என்றனர். எனது பொறுத்தலரிய பயம் தெளிந்து விடும்போல் இருந்தது. அதற்குள் மூர்ச்சை போய் விழுந்து விட்டேன். அப்போடு சில கனவுகள் கண்டேன்.
"ஆ! என்ன தீய கனவுகள்! பெரிய பெரிய புழுக்கள் வந்து என்னை விழுங்குவது போலிருந்தது. ஐயோ! என்ன பாதகம் செய்தோ நரகத்தில் வந்து விழுந்துவிட்டேன். நரகத்தில் நெருப்பால் சுடுவார்கள், அங்கத்தையெல்லாம் வெட்டி வெட்டிச் சித்திரவதை செய்வார்கள் என்று சொன்னார்களே! அப்படி யெல்லாம் செய்தாலுங்கூட நான் பொறுத்திருப்பேனே, பொறுக்க முடியாத அசுசி கொண்ட உயிர்களுக்கும் பொருள்களுக்குமிடையே என்னைப் போட்டு இம்சை செய்கிறார்களே! ஈசா, அசுத்தமான எண்ணங்கள் எண்ணியதற்கும், அசுத்தமான வஸ்துக்களை விரும்பியதற்கும் இதுவா தண்டனை! ஐயோ! அந்த நாளில் தெரியாமற் போய்விட்டதே. உற்றார், நண்பர்கள், அயலார், எல்லோரும் அசுத்த சிந்தைகளில் ஆழ்ந்திருந்தபடியால், அவர்களுடைய சகவாசத்தாலல்லவோ, நானும் கெட்டுப்போய்விட்டேன். எனக்குத் தெரியாதே," என்று கூவினேன்.
"அதோ, அதோ, அதோ பார்! எனக்குத் தெரிந்தவர்களாக எத்தனையோ பேர் வந்து நான் படும்பாடுகளையே அனுபவித்துக் கொண்டு கிடக்கிறார்கள். சிலர் என்னைக் கண்டு வெட்கமடைகிறார்கள். ஓர் பிரமாண்டமான சங்கு பூச்சியின் கொம்புகளின் கீழ் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். சிலர் என்னைக் கண்டு அழுகிறார்கள்.
அப்பப்பா! நத்தை, நண்டு, பாச்சை, பல்லி - எல்லாம் பெரிய பெரிய ஆகிருதி - இவற்றினிடையேயும், இவற்றைக் காட்டிலும் அசுத்த வஸ்துக்களினிடையேயும், நான் கண்ட அனுபவங்களை இங்கே எழுதவும் கூச்சமுண்டாகிறது. மானிடர்களே! அசுத்த எண்ணங்களை நீக்குங்கள். அன்பினால் சொல்லுகிறேன். அசுசியான சிந்தனைகள் வேண்டாம் ஈசா, அனலிலே போடும், என்னை அனலிலே போடும். எனக்கு இந்த நிலை போதும், போதும். இனிப் பாவம் செய்யமாட்டேன்" என்று கூறி விம்மி விம்மி அழுதேன்.
"பின் பார்க்கிறேன். என்னை மற்றோரிடத்தில் போட்டிருந்தார்கள். என் மேலெல்லாம் நோய்கள் தோன்றி இருந்தன. கரிய குஷ்டம், யானைக்கால், பக்ஷவாதம், க்ஷயம், குன்மம்; ஒன்றா, இரண்டா? உடலிலே பிரியங் கொண்டு அதன் போஷணைக்காக அதர்மங்கள் செய்யும் மூடர்களே, உங்களை எச்சரிக்கின்றேன். ஐயோ! ஏன் கெடுகிறீர்கள்?"
சிறிது நேரம் கழிந்தது. நெருப்புக்குள்ளே என்னைச் சில பிசாசுகள் கொண்டு தள்ளின. ஆரம்பத்தில் அனல் வந்தாலும் பெரிதில்லை என்று எண்ணிய நான் அனற் குழியைக் கண்டவுடன் கால்களால் உதைத்தும், பல்லால் கடித்தும், கையால் மோதியும் அந்தப் பிசாசுகளிடமிருந்து திமிறிக்கொள்ள முயன்றேன். "ஐயோ! அவைகளுக்குத் தான் என்ன பலமடா? என்னை ஒவ்வொரு நெருப்புக் குழியாக முறையே போட்டுப் போட்டு எடுத்தன. மேல் தபிக்கிறதே, அங்கங்களெல்லாம் வேகின்றனவே. ஐயோ, வெட்டி வெட்டி ஆட்டிறைச்சியைத் தொங்க விடுவதுபோல் எனது கைகளையும், கால்களையும் தொங்கவிடுகிறார்களே என் முண்டத்தைத் தீப்பாறைகளில் மோதுகிறார்களே, என்னை எவரும் காப்பவர்களில்லையா? காப்பவர்களில்லையா? தபோமுனியே, வந்து ரக்ஷிக்கமாட்டாயா?" என்று கதறினேன். மூர்ச்சை தெளிந்து கண்களை விழித்துப் பார்த்தேன்.
தபோமுனி என் முகத்தை நீரால் துடைத்து, என்னைத் தூக்கி நிறுத்திக் கொண்டு தனது அருள் விழிகளிலே நீர் பொழிய, "மகனே, இனி, நீ சுகம் பெறுவாய். பிராப்த கருமங்கள் அனுபவித்தா லொழியத் தீரமாட்டா. நீ கண்ட கனவுகளை எல்லாம் மறந்துவிடு. முன் சென்ற துன்பத்திற்கு இப்போது நினைத்து வருந்துதல் பேதைமை. இனி, நல்லற வழியிலே நான் உன்னைக் கொண்டு சேர்க்கின்றேன். 'ஜய தர்மராஜாய' என்று சொல்" என்றார்.
"ஜய தர்மராஜாய" என்று வாழ்த்தினேன். பின்பு பல வளைவுப் பாதைகளின் வழியே சுற்றிச் சுற்றி என்னைக் கொண்டு போய், முனிவன் தர்மராஜாவின் சபையிலே கொண்டு சேர்த்தான். பளிங்குத் தளம், பளிங்குச் சுவர்கள், பளிங்குத் தூண்கள், வயிரச் சிங்காதனம். அதன் கீழே பொன்னாற் செய்யப்பட்ட பாம்பு, புலி இவற்றின் உருவங்கள் நசுங்கிக் கிடந்தன. சபா மண்டபத்திற்கு மேல்விதானம் கிடையாது. ஆகாயமே கூரை. சூரிய கிரணங்கள் நேரே தர்மராஜாவின் முடிமீது வந்து விழுகின்றன; அவருடைய ரத்தின மகுடத்தை ஜாஜ்வல்யமாகச் செய்கின்றன. சூர்யகுமாரனாதலால், அவனையும் அவன் சபையிலுள்ளோரையும் சூர்ய கிரணங்கள் சுடவில்லை யென்று தெரிந்து கொண்டேன். நெருப்பை நெருப்பு சுடுமா? தர்மராஜாவின் மகுடத்துக்கு நேரே உயர ஓர் அக்கினி வாள் இடைவானிலே பொறிகள் பறக்குமாறு தக தக வென்று ஒளி வீசி நிற்கின்றது. இது தர்மத்துக்கு ரக்ஷணை. தர்மத்தைப் பிறர் துன்பப்படுத்த வந்தால் அவர் தலையிலும், தர்மம் தானே சிறிது தவறுமாயின் அதன் தலையிலும் இவ்வாள் விழுந்து நாசப்படுத்திவிடும் என்பது அறிந்தேன்.

தர்மராஜாவின் முகத்தைப் பார்த்தேன். பால கங்காதர திலகரின் முகத்துச் சாயல் கொஞ்சம் தென்பட்டது. இலேசான சாயல். ஆனால், தர்மராஜா தாமே காலமாதலால், காலத்தினால் மனிதர் முகத்தில் ஏற்படுத்தப்படும் சிதைவுகள் அவருடைய திவ்விய வதனத்தில் காணப்படவில்லை. பொன் வர்ணமுடையதும் வயிர ஸாரங் கொண்டதும் ஆகிய ஒரு அற்புத உலோகத்திலே வார்த்து, அதனுள்ளே மகா சக்தி கொண்ட உயிர்த் திகழ்ச்சி செலுத்தப்பட்டிருக்கிறது போல விளங்கிற்று.
இத்தனைக்கும் மேலே, அருட்ஜோதி கூத்தாடுகின்றது. தர்மம் இரக்கமில்லாதது என்று நான் பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். சிங்காதனத்தைப் போலவே நெஞ்சமும் வயிரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாமென்று நினைத்தேன். அது பிழை. தர்மம் பக்ஷபாதமற்றது. குருட்டன்பு இல்லாதது. ஆனால், அருளும் விவேகமும் கலந்து வார்க்கப்பட்ட விக்கிரகம் தர்மம்.
தபோமுனி என்னைக் கொண்டு தர்மராஜாவின் திருமுன்னே நிறுத்தினார். தருமன் முகமலர்ந்து "வருக" என்று சொல்லி, "ஓம்" என்று ஆசீர்வதித்தான். அவன் வாய்திறக்கு முன்பாகவே நான் அவன் தாளில் வீழ்ந்து சாஷ்டாங்கமாக வணங்கி அவன் பாத விரல்களைக் கண்ணீரால் நனைத்துவிட்டு எழுந்து நின்றேன்.
தர்மன் என்னை நோக்கி "உனது பாவங்களெல்லாம் நீங்கிப் போயின. உன் குறைகளெல்லாம் தீர்ந்து நீ பரிபூர்ணம் பெறும் மார்க்கத்திலே செல்வதற்குத் தகுதியுடையவனாய் விட்டாய். இனி இந்திரிய விருத்திகளிலே உன் மனம் செல்லமாட்டாது. அற்பப் பொருள்களிலே ஆசை வைக்கமாட்டாய். ஆணவத்திலே அடங்கி நிற்க மாட்டாய். மனம் உன் வசப்பட்டு நீ சொன்னபடி யெல்லாம் கேட்கும். தபோமுனி நீ விரும்பியதையெல்லாம் காட்டுவான். உனக்கு மங்கள முண்டாகுக!" என்றான். அவனை மறுபடியும் வணங்கி விடை பெற்றுக்கொண்டேன்.
அடர்ந்ததோர் காட்டிற்கு என்னை முனி அழைத்துச் சென்றான். அதனருகே ஏறக்குறைய இருபது சிறிய கூரை வீடுகளுள்ள ஒரு கிராமம். ஒவ்வொரு கூரை வீட்டையும் சூழ்ந்து ஒரு தோட்டம். வீடுகள் நெருக்கமாகச் சேர்ந்திருக்கவில்லை. விஸ்தாரமான இடைகள் விட்டுக் கட்டப்பட்டிருந்தன. வனப்பு, சுத்தம், வணங்குதற்குரிய எளிமை என்னும் இம் மூன்று குணங்களுக்கும் ஒவ்வொரு வீடும் இலக்கியமாக விளங்கிற்று. அசுசியான தோற்றமேனும், நாற்றமேனும், அங்கு தேடித் தேடிப் பார்த்தாலும் கிடையாது. அவ்வனத்திலும் அதி சுத்தமாயிருந்த வீட்டிற்குள் நானும் முனிவனும் சென்றோம். அங்கே ஒரு பிராமணன் விசாலமான தோள்களும், ஞானச் சுடர் விடும் முகமும், பரந்த கண்களும், வெளுத்து நீண்ட தாடியும் உடையவனாக வீற்றிருந்தான்.
அவனுக் கெதிரே ஐந்தாறு சிஷ்யர்கள் சுவடிகள் கையிலே வைத்துக்கொண்டு பாடங் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் தபோமுனியும் போனவுடன் எங்களுக்கு வழக்கப்படி உபசாரங்கள் கூறி உட்கார வைத்து விட்டு, மாணாக்கர்களை நோக்கி: -
"மக்களே, இன்றைக்குப் பாடம் போதும், போய் வாருங்கள்" என்றான்.
நான் "பாடம் நடத்துங்கள். நாங்கள் இடையூறாக வந்ததைக் கருதவேண்டாம்" என்றேன். அதற்குப் பிராமணர் "அதனால் பாதகமில்லை. ஏற்கெனவே பாடத்தை முடிக்கும் நேரமாய்விட்டது. அதற்கேற்ப நீங்களும் வந்து சேர்ந்தீர்கள். உங்கள் வரவினால் பாடத்திற்கு விக்கினமில்லை. இந்த உலகத்தில் அவரவர் தர்ம சேவைக்கு விக்கினங்கள் ஏற்படமாட்டா" என்று கூறினான்.
தபோமுனி அந்த உபாத்தியாயரை நோக்கி, "கண்வாசாரியாரே, இவர்கள் என்ன பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டான். அதற்குக் கண்வர் "இவர்கள் கணிதசாஸ்திரம் படிக்கிறார்கள்" என்றார்.
தபோமுனி : - "முன் நான் வரும்போது சிற்ப சாஸ்திரம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்களே?"
கண்வர் :- "ஆம், அவர்கள் தொழிலாளிகள். இப்போது இருந்தவர்கள் பிரம, க்ஷத்திரிய என்னும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்."
"சர்வ சாஸ்திரங்களின் கடல்" என்று நான் வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டேன்.
அதுகேட்ட கண்வர் :- "அப்படி யொன்றுமில்லை. எனக்கு வேதாந்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இவற்றைத் தவிரச் சிற்பம், கணிதம் என்ற இரண்டுதான் தெரியும். வந்து கேட்கும் மாணாக்கர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன். அது எனது தர்மம்" என்றார்.
இவ்வளவு நேரத்தின் பிறகு தபோமுனி கண்வாசாரியாரிடம் என்னைச் சுட்டிக் காட்டி, "இவருக்குப் பிராமண தர்மத்தைக் காட்டவேண்டு மென்பதாகத் தங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்" என்றார். கண்வர் புன்னகைசெய்து, "ஆகா! சர்வ தர்மங்களுக்கும் தாமே மூலஸ்தானமா யிருக்கும்போது, என்னை ஒரு பொருளாகக் கருதி வந்தது வியப்பே. தமது கட்டளைக் கிணங்கி அவர் கேட்பதெல்லாம் கூறும் கடமையைச் சிரமேற்கொண்டிருக்கிறேன்" என்றனர். எனக்குத் தொடக்க முதலாகவே இருந்த ஆவலை எவ்வாறோ அடக்கி வைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அவர் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவனாய், அவ்வாசாரியனிடம் நியாயஸ்தலத்திலே சாக்ஷியிடம்
தபோமுனி அந்த உபாத்தியாயரை நோக்கி, "கண்வாசாரியாரே, இவர்கள் என்ன பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டான். அதற்குக் கண்வர் "இவர்கள் கணிதசாஸ்திரம் படிக்கிறார்கள்" என்றார்.
தபோமுனி : - "முன் நான் வரும்போது சிற்ப சாஸ்திரம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்களே?"
கண்வர் :- "ஆம், அவர்கள் தொழிலாளிகள். இப்போது இருந்தவர்கள் பிரம, க்ஷத்திரிய என்னும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்."
"சர்வ சாஸ்திரங்களின் கடல்" என்று நான் வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டேன்.
அதுகேட்ட கண்வர் :- "அப்படி யொன்றுமில்லை. எனக்கு வேதாந்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இவற்றைத் தவிரச் சிற்பம், கணிதம் என்ற இரண்டுதான் தெரியும். வந்து கேட்கும் மாணாக்கர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன். அது எனது தர்மம்" என்றார்.
இவ்வளவு நேரத்தின் பிறகு தபோமுனி கண்வாசாரியாரிடம் என்னைச் சுட்டிக் காட்டி, "இவருக்குப் பிராமண தர்மத்தைக் காட்டவேண்டு மென்பதாகத் தங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்" என்றார். கண்வர் புன்னகைசெய்து, "ஆகா! சர்வ தர்மங்களுக்கும் தாமே மூலஸ்தானமா யிருக்கும்போது, என்னை ஒரு பொருளாகக் கருதி வந்தது வியப்பே. தமது கட்டளைக் கிணங்கி அவர் கேட்பதெல்லாம் கூறும் கடமையைச் சிரமேற்கொண்டிருக்கிறேன்" என்றனர். எனக்குத் தொடக்க முதலாகவே இருந்த ஆவலை எவ்வாறோ அடக்கி வைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அவர் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவனாய், அவ்வாசாரியனிடம் நியாயஸ்தலத்திலே சாக்ஷியிடம்
கேட்பது போல் - ஆனால் வணக்கம், பக்தி, சிரத்தை, இவற்றுடன் - கேள்விகள் சோனாமாரியாகப் பொழிந்தேன். அவரும் சலிப்பில்லாமல், ஐயந்திரிபற மறுமொழிகள் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துக் கொண்டு வந்தார்.
சில கேள்விகளையும் உத்தரங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
கேள்வி : - "ஸ்வாமி. ஒருவன் பிறக்கும் போதே பிராமணனாகப் பிறக்கிறானா? அல்லது பயிற்சியால் பிராமணனாகிறானா?"
உத்தரம் : - "பிறக்கும்போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். "சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:" என்று பகவான் சொல்லி யிருக்கிறார்."
கேள்வி :- "ஸ்வாமி, இந்த விதி அனுபவத்தில் இருக்கிறதா?"
உத்தரம் :- "ஆம், எனது பிதா க்ஷத்திரியர்; நான் பிராமணன்; என் மக்கள் பன்னிரண்டு பேரில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களையெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய என்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, சுபாவம் முதலியவற்றைக் கருதி, உரியவாறு பயிலும்படி செய்திருக்கிறேன்."
கேள்வி :- "மண்ணுலகத்திலே பாரததேசத்தில்தான் வர்ணா சிரம பேதங்கள் இருக்கின்றன. அங்கே தாம் சொல்வது போல நடக்கவில்லையே?"

உத்தரம் :- "பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம பேதங்களிருப்பதாகச் சொல்வது பிழை. சகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம நெறி சீர்கெட்டு போயிருக்கின்றது. பூர்வத்திலே பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத்தான் இருந்தது. அதற்கு அந் நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துக்கள். புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய சகல நூல்களும் சாக்ஷி. இப்போது பாரத நாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறைதான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறி விட்டது. அது பற்றியே, அந்நாட்டினர், வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்."
கேள்வி: - "பிராமண தர்மங்களை எனக்குப் போதனை செய்ய வேண்டும்."
உத்தரம்: - "சங்கிரகமாகச் சொல்லுகிறேன். பிராமண வர்ணத்தார் ஒரு ஜன சமூகத்தின் அறிவுச் செல்வத்திற்குக் காவலாளிகள்; அறிவுப் பயிருக்கு உழவர்கள். அவரவர் தத்தம்மால் இயன்ற சாஸ்திரங்களைப் படித்து வைத்துக் கொண்டு அவற்றை வெவ்வேறு வர்ணத்தாருக்கு உரிமை நோக்கிக் கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பிப்பதற்கு, தமது உணவு மட்டிற்கு மேற்பட்ட எவ்விதமான கிரயமும் வாங்கலாகாது. 'எவன் வீட்டில் மறுநாள் ஆகாரத்திற்கு இன்றே நெல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் பிராமணன் ஆகமாட்டான்' என்று யாக்ஞ வல்கியர் சொல்கிறார்.
"ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரண மாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமற் பாதுகாப்பதே பிராமணன் கடமை யாதலாலும் பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர்
சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும். வைசிய தர்மம் குறைந்தால், அறிவு வகுப்பினர் தாம் வைசிய நூல் கற்பதும் கற்பிப்பதுமே முதற் கடமையாகக் கொண்டு, கையில் அகப்பட்டவர்களையெல்லாம் மெய்யான வைசியராக்கி விடுவார்கள். க்ஷத்திரிய தர்மங்திற்கும், பிராமண தர்மத்திற்கும் ஊனம் வர இடங்கொடுக்கவே கூடாது. க்ஷத்திரிய பிராமண தர்மங்களுக்கு ஊனம் நேரிடுமாயின் ஜன சமூகம் முழுவதுமே க்ஷீணமடைந்து போய்விடும்.
"அப்படி ஏதேனும் மகா விபத்து நேரிடக்கூடிய தருணத்தில், `அவரவர் தத்தம் தர்மங்களை மட்டுமே கருதி நிற்போம், மற்றவர் தர்மங்களை நாமேன் கருதவேண்டும்' என்று சும்மா இருத்தல் கூடாது. வீடு தீப்பற்றி எரியும்போது, தகப்பன் தன் காரியஸ்தலத்திற்கும், மகன் பள்ளிக்கூடத்திற்கும், பெண்கள் பூஞ்சோலைக்கும், தாய் கோயிலுக்கும், வேலைக்காரன் காய் கிழங்குகள் வாங்கும் பொருட்டுக் கடைக்கும், பரிசாரகன் சமையலுக்காகத் தண்ணீருக்கும், உல்லாசமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கலாமா? நெருப்பை அவிக்க முயல வேண்டியது எல்லோருக்கும் கடமை. காரியஸ்தலத்திற்குப் போவதைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; கோயில்களையும், பள்ளிக்கூடங்களையும் கள்வன் கொண்டுபோய் விடமாட்டான்; மறுநாள் கவனித்துக் கொள்ளலாம். விளையாட்டுக்குப் பூக்கொய்து வருதல் பெரிதன்று; காய்கிழங்குகள் பெரிதில்லை; சமையல் பெரிதில்லை. வீட்டிலே பற்றியிருக்கும் நெருப்பை அவிப்பது தான் பெரிது. அதற்குத்தான் எல்லோரும் பாடுபட வேண்டும். கலியிலே வர்ண வேறுபாடுகள் பொய்; வெறும் ஏமாற்று. பாரத நாட்டைப் பி நீர் கேட்டீர், பாரத நாட்டில் இப்போது கலி யுகம். ஆனால், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளில் கலியுகம் நீங்கிக் கிருதயுகம் பிறக்கப்போகின்றது. அப்போது அந்த நாட்டிலே உண்மையான வர்ணாசிரம பேதங்கள் ஏற்பட்டு விளங்கும். இப்போதிருக்கும் வஞ்சனைப் பேதங்கள் நீங்கிவிடும்.

"பாரமார்த்திகத்திலே பிரம்மஞான முடையவனே பிராமணன் என்ற பெயருக்குத் தகுதியுடையவனாவான். 'வஜ்ரஸூசிகை' என்ற உபநிஷத்திலே இதை நேர்த்தியாக எடுத்து விளக்கியிருக்கின்றார். ஆனாலும், விவகாரத்திலே உலகத்தாருக்கு அறிவுப்பயிற்சி கொடுக்கும் வகுப்பினர் பிராமணராவார்கள். சகலவிதமான நூல்களிலும் பயிற்சி கொண்டிருத்தல், அதனை உலகத்தாருக்குப் போதனை செய்து, உலகத்துத் தொழில்களெல்லாம் இனிது நடப்பதற்கு ஆதரவாயிருத்தல், லௌகிகப் பெருமைகளிலே ஆசையில்லாமை - இவையே சுருங்கச் சொல்லுமிடத்துப் பிராமண தர்மத்தின் சாராம்சங்களாகும்" என்று முடித்தார்.
பேசி முடிந்தவுடன் திடீரென்று எழுந்து வெளியே போனார். உடனே திரும்பி எங்களிடம் வந்து சந்தியா தியானத்திற்கு நேரமாய் விட்டதென்று தெரிவித்தார். மூவரும் எழுந்து, கிராமத்திற்கு வெளியே சிறிது தூரத்துக்கு அப்பால் மாஞ்சோலையை யடுத்துள்ள ஆற்றங்கரைக்குச் சென்றோம். சூர்ய கோளம் மேற்றிசை வானத்திலே பாதி மறைந்திருந்தது. மேகங்கள் எல்லாம் நெருப்புத் தீவுகள் போலத் தோன்றின. பிரகிருதி தேவி அற்புதமான அழகுடன் விளங்கினள். அத்தருணத்தில் ஸ்நாநம் முடித்துத் தனித்தனியாகத் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தனர். நான் "ஓம்" என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலாயினேன்.
ஜபதபங்கள் முடித்துக் கொண்டு மறுபடியும் கண்வ முனிவரின் வீட்டிற்கு வந்தோம். அங்கு நானும் தபோ முனிவரும் அவரிடம் விடைபெற்றுக் கொள்ள விரும்பிச் சில வார்த்தைகள் சொன்னோம். அதற்குக் கண்வர், "இராப் பொழுதாய்விட்டது. தாம் இருவரும் இன்றிரவை எனது சிறு குடிலிலேயே கழித்துக் கொண்டு போக வேண்டும்" என்றார்.
'எனக்கு உடனே, "மறுநாள் காலை ஆகாரத்திற்கு வீட்டிலே நெல் வைத்திருப்பவன் பிராமணனாக மாட்டான்" என்று சொல்லிய வசனம் ஞாபகத்திற்கு வந்தது. ஆதலால் அவர் மிகவும் எளியவராயிருப்பாரென்பது கருதி "வேண்டியதில்லை. நாங்கள் சென்று வருகிறோம், தயவுசெய்து மன்னிக்க வேண்டும்" என்றேன்.
கண்வமுனிக்கு எனது ஹிருதயம் தெரிந்து விட்டது.
"சகோதரா, தர்மமுள்ள இடத்தில் வறுமை கிடையாது. நீர் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். தயவுசெய்து இவ்விரவு தங்கியே போகவேண்டும்" என்றார்.
எனக்கு வெட்கம் பொறுக்க முடியவில்லை. தலைகுனிந்து விட்டேன். முனிவர்கள் இருவரும் புன்னகை செய்தார்கள். பின்பு, இராப்பொழுதை அங்கேயே கழிப்பதாகத் தீர்மானம் செய்து கொண்டோம்.
கண்வர் வீட்டு நடையிலே ஓர் பாயின்மீது உட்கார்ந்திருந்தபோது, கந்தர்வ லோகத்தில் சுகந்த மாளிகையின் மாடத்திலே பர்வத குமாரியுடன் பஞ்சணைமீது உட்கார்ந்திருந்த பொழுதைக் காட்டிலும், என் மனதில் அதிக சாந்தி ஏற்பட்டு விளங்கிற்று. கண்வரும் தபோ முனிவரும் வேதாந்த விசாரணை செய்யத் தொடங்கினார்கள். தபோமுனிவர் விவகாரத்தின் நடுவிலே சில அருமையான விஷயங்கள் சொல்லினர். அப்போது கண்வருடைய பத்தினியும் வந்து உட்கார்ந்து கொண்டு சிரவணம் செய்தாள்.

கண்வருடைய பத்தினியை நோக்கும்போது, வேதங்களிலே படித்திருக்கும் மைத்ரேயி முதலிய ஸ்திரீகளின் சித்திரம் மனவிழியிலே எழுந்தது. கற்பு, தெளிவு, அடக்கம், அறிவு, தயை என்ற குணங்கள் அனைத்தும் அந்த தேவியைச் சூழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. முனிவர்களின் ஜீவகளை சம்பாஷணை ரஸத்தால் இயக்கத்தில் விளங்குவதும், தேவியின் ஜீவகளை அடக்கத்தில் ஒளிர்வதும், ஒப்பு நோக்கும்போது மிக நான்றாயிருந்தது. சிறிது நேரத்திற்கு அப்பால் கண்வரின் குமாரன் வந்து தாயின் பக்கத்திலே உட்கார்ந்தான். ஆ! இந்த வாலிபனைத் தவவேடத்திலே கண்டபோது என் மனம் பொறுக்கவில்லை. இவனை ராஜ குமாரனாக அமுத விழிகொண்ட மாதர்களோடு கொஞ்சிக்கொண்டிருக்கப் பார்க்க வேண்டும். இவனைச் சேனாதிபதியாக வாலிப வீரர்கள் சேர்ந்திருக்கும் சைன்ய முகத்திலே பார்க்க வேண்டும். கிரக கணங்களை அழைத்துக் கொண்டு பால சூரியன் முன்வருவதைப் போலிருக்கும் இவனுக்கா மரவுரி? இவனுக்கா வெறும் தானியமும், காய் கனிகளும் சேர்ந்த உணவு? இவனுக்கா சுனை நீர்ப்பானம்? இவனுக்கா இடைவிடாத ஏட்டுக் கவலை, கடபட விவகாரம்? முனிவர் பன்னிரண்டு குமாரர்களிலே தவத்திற்கென்று இவனைத் தெரிந்தெடுத்தது பிழையென்று என் சிந்தைக்குப் புலப்பட்டது. நான் இப்படி யோசனை செய்து கொண்டிருக்கும்போதே முனிவர்களின் வேதாந்த தர்க்கம் முடிந்துவிட்டது. தபோமுனி என் சிந்தையை விழியால் நேருக்கு நேராகப் பார்த்தவர் போன்று, "இத்தனை ராஜ லக்ஷணம் வாய்ந்த குமாரனைத் தாம் பிராமண தர்மத்திற்கு எடுத்துக் கொண்டு, மற்றப் பிள்ளைகளை யெல்லாம் வெளியே அனுப்பி விட்டமைக்கு முகாந்தரம் தெரிவிக்க வேண்டும்" என்று கண்வரிடம் கேட்டார்.
கண்வர் மகனை நோக்கிக் "குழந்தாய், இன்றைக்கு சோதிஷத்திலே - அதாவது, வானத்து கிரக நக்ஷத்திரங்களை அளக்கும் கணித நூல். எருமை மாடு கெட்டுப்போனால், வழிசொல்லப் படிக்கும் பல நூலன்று - தரிசனாப்பியாஸம் (பார்த்துப் பழகல்) செய்ய வேண்டிய தினமாயிற்றே. நீ தனியே போயிருந்து நக்ஷத்திர ஸ்தானங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டு வா" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
மகனைப் பற்றிப் புகழ்ச்சியாகச் சில வார்த்தைகள் சொல்ல நேரிடுமாதலால், அவற்றை அவன் காதில் விழும்படி சொல்ல முனிவருக்கு விருப்பமில்லை. குமாரன் வெளியே சென்றான். பின்பு முனிவர் பின்வருமாறு சொல்லலாயினர்:-
"அதர்மத்தைக் கொல்வதைக் காட்டிலும், அஞ்ஞானத்தைக் கொல்வதற்கு அதிக வீரத்தன்மை வேண்டும். ஜனங்களுக்கு சரீர சம்பந்தமான இன்மைகளைத் தவிர்த்து ரக்ஷிப்பது சூத்திர, வைசியர்கள் கடமை. தர்மத்தை க்ஷத்திரியன் ரக்ஷிக்கிறான். நான் முன்பு சொல்லியபடி, ஞானத்தைப் பிராமணன் சம்ரக்ஷணை செய்கிறான். பிராமணனுக்கு அளவற்ற வீர்யம் வேண்டும். அளவற்ற தேஜஸ் வேண்டும். அளவற்ற திடமும் பராக்கிரமமும் வேண்டும். அஞ்ஞானத்தின் படைகள் எண்ணற்றன. அஞ்ஞான ஊற்று வற்ற வற்றத் தொலையாது. அஞ்ஞான விருக்ஷத்தின் வேர் ஆதிசேஷன் முடிவரையிலே உண்டு. அப்படைகளை வெல்வதும், அவ்வூற்றை வற்றடிப்பதும், அந்த விஷமரத்தை வேரறுப்பதும், சாமான்யமான காரியமன்று.
"மகாபாரதப் போரிலே, பார்த்தனைவிடக் கிருஷ்ணனுக்கு வேலை அதிகம். கிருஷ்ணனுக்கு எவ்வளவு வேலையுண்டோ, அவ்வளவு, வேலை வேதவியாசருக்கு முண்டு."
நானாவிதமான விஷயங்களைப்பற்றி சம்பாஷணை செய்துவிட்டு, இலேசான ஆகாரமுண்டு, பின் நித்திரைக்குப் போய்விட்டோம். மறுநாள் காலையில் எழுந்து தபோமுனிவரும் நானும் நித்யானுஷ்டானங்கள் முடித்துக் கொண்டு, சத்தியராமன் என்ற க்ஷத்ரிய வீரனுடைய மாளிகைக்குச் சென்றோம். தபோ முனிவர் வரவைக் கேட்டவுடனே, சத்தியராமன் எதிர்கொண்டு வந்து, உபசாரங்கள் பேசி ஓர் மண்டபத்திற்கு அழைத்துப் போய், எங்களை ஆசனங்களிலே அமர்வித்துத் தானும் வீற்றிருந்தான். முனிவர் மெல்ல என் கதையைத் தொடங்கினார். ன் தனது வீரத்தோள்கள் குலுங்க நகைத்துப் பின், "நான் காவலாளி, எனக்குச் சாதுரியமாகவும், தெளிவாகவும் ஒரு விஷயத்தை எடுத்து உபதேசிக்கும் திறமை கிடையாது. மேலும் தருமராஜனுடைய சேனைத் தலைவர்களில் என்னிலும் க்ஷத்திரிய குணங்களிலே சிறந்தோர் பலர் இருக்கின்றார்கள். அவர்களை யெல்லாம் விட்டுத் தரும திருஷ்டாந்தமாக அடியேனைத் தெரிந்து கொண்டதை, நான் பாக்கியமாகக் கருதுகின்றேனாயினும்,
எனது தகுதியின்மையைப் பற்றிய உணர்ச்சி என் மனதிலிருந்து மாறவில்லை" என்றான்.
பின்பு, என்னை நோக்கி, "தாம் கேள்விகள் கேட்டால் என்னால் இயன்றமட்டும் மறுமொழிகள் சொல்லி சந்தேக நிவர்த்தி செய்யக் காத்திருக்கிறேன்" என்று கூறினான்.
"க்ஷத்திரியனுக்குரிய கடமைகளிலே, முதற்பட்டதும், மற்றக் கடமைகளுக்கெல்லாம் ஆதாரமுமாகிய மூலதர்மம் யாது? அதை எனக்குத் தெளிவுறக் கூறவேண்டும்" என்றேன்.
முன்னே வீற்றிருந்த வீரனுடைய சிங்க முகத்திலே ஒளி வீசிற்று. கண்கள் அறிவுப் பொருளை உமிழ்வன போலத் தோன்றின. உடல் முழுவதிலும் ஒரு புதிய திகழ்ச்சியும், பூரிப்பும் கண்டேன்.
பரவசமடைந்து குரு சொல்லும் வசனங்களை அநுபவ நிலையிலிருக்கும் சீடன் கேட்பதுபோல அடங்காத தாகத்துடன் கேட்கலாயினேன்.
"மித்திரா, க்ஷத்திரியனுடைய கடமைகள் பலவற்றிற்கும் எது தாய் என்று கேட்டாய். க்ஷத்திரியனுடைய முயற்சிகளுக்கெல்லாம் அடியிலுள்ள ஊற்றெது வென்று வினவினாய். அதனைச் சொல்லுகிறேன், கேள். அது போர்! போர்தான் க்ஷத்திரியனுடைய முதல் தருமம். போர்தான் உண்மையான க்ஷத்திரியனுக்கு மூச்சு. போரே அவனுடைய உயிர். எந்த க்ஷணத்திலே போரை நிறுத்துகின்றானோ, அந்தக் கணத்திலே க்ஷத்திரியன் பேடியாய் விடுகிறான். பின்பு அவன் மரம், அவன் பிரேதம், அவன் பொய், அவன் பேசுதற்கரிய இகழ்ச்சியாக முடிக்கின்றான். மித்திரா, நான் உனக்கு வேதாந்த சாஸ்திரம் சொல்லக்கூடியவனன்று. அதர்மம் ஆதியிலே எப்படி உண்டாயிற்றென்பதை நமது முனிவர் போன்ற ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள். ஆனால், ஒரு செய்தி மட்டும் நான் அறிவேன். அதர்மம் எப்போதும் நமது முன்னே நிற்கின்றது. எதன் பொருட்டு நிற்கின்றது? உன் கையால் கொலையுண்டு சாகும் பொருட்டாக. அது என்ன சொல்லுகிறது? 'அப்பா, உன் கையிலேயுள்ள கோடரியை என் தலையிலே அடித்து என் தலையை இரண்டு கூறாகப் பிளந்து விடு' என்று சொல்லுகிறது.
"அதர்மங்கள் ரக்த பீஜமுடையவை. கொல்லக்கொல்ல மேன்மேலும் பிறந்துகொண்டே யிருக்கும். க்ஷத்திரியனுடைய கடமை யாதென்றால் அவற்றைத் தன் உயிருள்ளவரை வெட்டித் தள்ளிக்கொண்டே யிருக்க வேண்டும். நாள்தோறும் சூர்யன் இருளைச் சுற்றிச் சுற்றித் துரத்திக் கொலை செய்துகொண்டு வருகிறான். சூரியனே முதலாவது க்ஷத்திரியன். எங்கள் குலத்துக்குப் பிதா மகன்.
"அதர்ம நாசத்திற்காகப் போர் செய்துகொண்டே யிருப்பதுதான் க்ஷத்திரிய தருமமென்று சொன்னேன். அத்தொழிலுக்கு உரிய பயிற்சியும் சாதனங்களும் கைக் கொள்ளுதல் அவசியமென்று கூறுதல் மிகையாம்" என்று முடித்தான்.
நித்தியமாக இருக்கும் அதர்மங்களை நாம் அடிக்கடி கொல்வதில்தான் என்ன பிரயோஜனம் என்றெண்ணித் திகைக்கலானேன். அந்தக் கேள்வியை சத்தியராமனிடம் கேட்டதற்கு அவன் சிறிதேனும் மயங்குதலின்றிப் பின் வருமாறு உத்தரமளித்தான்.
"தமோகுணம் கேட்கின்ற கேள்வி! மித்திரா, கர்மம் (தொழில்) செய்யாமல் மனிதன் அரை க்ஷணமேனும் இருக்க முடியாது. நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே யிருக்கவேண்டும் என்பது விதி. அந்தக் கர்மத்தைக் கடலலைப்பட்ட துரும்புபோலச் செய்யாமல், சூர்யனை போலச் செய்வது பெருமையல்லவா? சாதாரண சரீர சுகங்களைப் பற்றிய காரியங்களிலே கூட மனிதன் இவ்வித யோசனை செய்வதில்லை. ஓயாமல் அழுக்காகும் உடலை நித்தியம் ஏன் தண்ணீரால் கழுவ வேண்டும்? கழுவக் கழுவ அதுதான் மேன்மேலும் அசுத்தப் பட்டுக்கொண்டு வருகிறதே, என்று யோசித்து எவனேனும் ஸ்நாநம் இல்லாமல் இருக்கிறானா? கணத்திலே தோன்றி அழியும் உடலுக்குச் செய்யும் உபசாரம் நிரந்தரமாகிய தர்மத்துக்குச் செய்யலாகாதா?
"மேலும், அதர்மம் தர்மத்திற்கு உணவு. ஆதலால் தர்மம் இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். இது நியாயமே. அதர்மம் முற்றிலும் இறந்து சூன்யமாய்ப் போய்விடுமானால், பின்பு தர்மம் உண்ண உணவில்லாமல் தானும் மடிந்துவிடும்" என்றான்.
* * *
தர்ம லோகத்தில் எனக்கு நெடுங்காலம் வசிக்கும் பாக்கியமில்லை. க்ஷத்திரிய வீரனுடைய வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு பலவிடங்களுக்கு என்னைத் தபோ முனிவர் கொண்டு சென்றார். அதன் பிறகு ஜீரணமாகாத ஓர் உணவு நெடுநேரத்திற்கப்பால் வயிற்று வலியுண்டாக்குவது போல, எனது புண்ணியத்தால் எரிக்கப்படாத ஓர் கர்மம் ஏதோ ஓர் மூலையினின்று வெளிப்பட்டு என் உள்ளத்திலே தர்ம சாதனைக்கு விரோதமாகிய ஓர் விருப்பத்தைக் கொண்டு நுழைந்தது. தபோமுனிவர் எனக்குப் பல தார்மிகப் புதுமைகளைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே அவ்விருப்பம் மீட்டுமீட்டும் எனது ஹிருதயத்தில் கிளைத்துக் கொண்டிருந்தது.
சில தினங்களுக்கப்பால், ஒரு சமயம் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தபோமுனி ஏதோ வேலையாகப் போயிருந்தார். பிராரப்த கர்மப் பயன்! நான் தனியேயிருக்கும்போது நீசமனம் இலேசாகப் பர்வதகுமாரியின் உருவத்தைக் கொண்டு எதிரே நிறுத்தியது. 'ஆ! என்ன இன்பமாயிருந்தது அந்தக் காலம்!' என்று நினைத்தேன்.
எதிரே நின்ற மோகன விக்கிரகம் இன்னும் - சிறிது நெருங்கிற்று. நான் அதைத் தழுவும் பொருட்டாக எழுந்தேன். எனது கைகளுக்கிடையே மின் வெட்டு முன் பர்வதகுமாரி வந்து நின்றாள். இதழ்களோடு இதழ் பொருத்தி ஒரு க்ஷணம் மோக பரவசத்திலே இருந்தேன். இரண்டு மூன்று பூமிகள் இடிந்து விழுந்ததுபோலப் "படேர்" என்று ஒரு சப்தம் கேட்டது. "கோ" என்றலறி மூர்ச்சை போட்டு விழுந்தேன்.
கண்ணை விழித்துப் பார்க்கும்போது பழைய திருவல்லிக் கேணியில் பழைய இடத்திலே என்னைச் சுற்றிச் சிலர் விசிறிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். "என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டதற்கு, "நீ பேய்கண்டவன்போல அலறினாய். நாங்கள் வந்து பார்க்கும்போது மூச்சில்லாமலிருந்தது. பலவிதமான சைத்யோபசாரங்கள் செய்தபிறகு இப்போது மூச்சு விடுகிறாய்" என்றார்கள்.
"ஐயோ, மூச்சுப் போயிருந்தாலும் பெரிய காரியமில்லையே, தர்மத்தைத் தவறிவிட்டேனே!" என்று கூறிக் கண்ணீர் சிந்தினேன்.


No comments:

Post a Comment

You can give your comments here