பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 8, 2014

ஞானரதம் - Part 2

ஞானரதம் - கந்தர்வலோகம் - இன்ப உலகம்

மறுநாள் மனத்திடம், "இப்போது, எங்கே போகலாம்?" என்று கேட்டேன்.
"துன்பக் கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய் வருவோமே" என்றது.
"நன்று கூறினை" என நான் மகிழ்ச்சி பாராட்டி, அப்பால் முன்போலவே எனது ஞானத்தேரில் ஏறிக் கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே கண்ட காட்சிகளையும், அனுபவித்த போகங்களையும் என்னால் கூடியவரையும் உள்ளது உள்ளவாறு கீழே எழுதுகிறேன். அந்தப் போகங்களிற் சில, தற்காலத்தில் நமது தேசத்து ஜனங்களால் மதிக்கப்பெறும் ஆசார தர்மங்களுக்கு விரோதம் என்று நம்மவர் கருதுவார்களாயின், அதன் பொருட்டு, என் மீது பழி கூறலாகாது. இந்த பாரததேசத்தில் தற்காலத்திலே வாழும் அடிமை ஜனங்கள் "இந்த இன்பம் அதர்மமானது. அந்தச் செய்கை அகாரியமானது" என்று தர்மப் பிரசங்கங்கள் செய்யும்போது, உண்மையாகவே எனக்கு நகைப்புண்டாகிறது. மகரிஷிகளுக்கும் தேவதைகளுக்கும் சந்ததியாராகத்தோன்றியவர்களாயினும், தற்காலத்தில் இந்நாட்டு ஜனங்கள் உலகத்திலுள்ள
எல்லா அநாகரிக ஜனங்களைக் காட்டிலும் கடைப்பட்டவர்களாயிருக்கிறார்கள். மிருகப் பிராயமாகக் காடுகளிலும் தீவுகளிலும் ஆடையில்லாமல், காதுகளிலும் உதட்டிலும் மூக்கிலும் துவாரங்கள் செய்து, சங்குகளையும் வளையங்களையும் தொங்கவிட்டுக் கொண்டு, மேலெல்லாம் பச்சை குத்தியவர்களாகத் திரியும் ஜனங்களுக்குக் கூட சுதந்திரம் உண்டு. இந்தத் தேசத்தார் அப்பெரும் பாக்கியத்தை இழந்து விட்டார்கள். இந்நாட்டில் கல்வி மங்கிப் போய்விட்டது. நூற்றிலே தொண்ணூறு ஜனங்கள் "அ" (ஆநா) எழுதச் சொன்னால் தும்பிக்கையொன்று வரைந்து ஆனை எழுதக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள். நமது சாஸ்திரங்களெல்லாம் செல்லரித்துப் போய்விட்டன. தேசத்து ஞானக்களஞ்சியத்திற்குக் காப்பாளிகளாக இருந்த பிராமணர் மடைத் தவளைகளைப் போலச் சிற்சில மந்திரங்களைச் சம்பந்தமில்லாமல் யாதொரு பொருளும் அறியாமற் கத்துகிறார்களே யல்லாது, உண்மையான ஞானப் பெருமை இவர்களுக்கு லவலேசமும் இல்லாமல் போய்விட்டது. மகரிஷிகளின் வழியில் தோன்றிய பிராமணர் மடைத் தொழில் செய்வதும், நீசர்களிடம் போய்த் தொண்டு புரிந்து பணம் வாங்கிப் பிழைப்பதும், இதைக் காட்டிலும் இழியனவாகிய எண்ணற்ற பிரவிருத்திகளிலே காலங்கழிப்பதும் சர்வ ஜனங்களும் அறிந்த விஷயங்களேயாம். இந்நாட்டின் கலைகள் அனைத்தும் மறைந்து போய்விட்டன. வீரியம் போய்விட்டது. பலம், சுகம், செல்வம் முதலிய நற்பொருள்களெல்லாம் அகன்று விட்டன. மனங்குன்றி உடல் சோர்ந்து உண்ண உணவின்றிக் கண் குழிந்து போயிருக்கும் அடிமை ஜாதியார் இந்நாட்டில் மகாபரிதாபகரமான வாழ்க்கை நிகழ்த்துகின்றார்கள்.
இன்ப நாடாகிய கந்தர்வ லோகத்தைப் பற்றிப் பேசி வருமிடத்தே, இத் துன்ப நாடாகிய பாரத தேசத்தைப் பற்றிச் சில வசனங்கள் எழுதிய பிழையை
ந்நூல் படிக்கும் நண்பர்கள் பொறுத்தருள் செய்யுமாறு வேண்டுகிறேன். தர்மமே சூனியமாகப் போயிருக்கும் இத் தேசத்தில் சிலர் கந்தர்வலோகச் செய்திகளைப் பற்றி நான் எழுதப்போகும் விஷயங்கள் எழுதத்தகாதவை என்று கருதக்கூடும் என்ற சந்தேகம் எனக்குண்டாயிற்று. தர்மாதர்ம நிச்சயம் புரியும் அதிகாரமே இந்த அடிமை ஜனங்களுக்குக் கிடையாது என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டாகவே மேலே கண்ட வசனங்கள் எழுதப்பட்டவை யாகும். இது நிற்க.
கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினையுடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று; அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. "இது என்ன ஒலி! எங்கிருந்து வருகிறது?" என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை. கண்களோ பரவசமடைந்து போயின. அங்குள்ள மாடங்களும், மாளிகைகளும், கோயில்களும், கோபுரங்களும், நாடக சாலைகளும் - எல்லா வீடுகளும் சந்திர கிரணங்களைப் போன்ற, குளிர்ந்த, இனிய பொன்னொளி வீசிக் கொண்டிருந்தன. இவற்றிலும், மற்ற மண், கல், கரை முதலிய எல்லாப் பொருள்களிலுமே அவ்வொளி அநேகவிதமான வர்ண வேறுபாடுகளுடன் கலந்திருக்கக் கண்டேன்.
இதை வாசிப்பவர்களே, நீங்கள் எப்போதாயினும் மாரிக்காலத்தில் மழையில்லாத மாலைப்பொழுதிலே கடற்கரை மணல் மீது இருந்துகொண்டு, வானத்தின் மேற்புறத்தில் சூரியன் அஸ்தமிக்கும்போது, ரவி கிரணங்கள் கீழ்த்திசையிலுள்ள மெல்லிய மேகங்களின் மீதும் இடையிடையே
தெரியும் வான வெளிகளின் மீதும் வீச, அதனின்றும் ஆயிரவிதமான மெல்லிய அற்புதகரமான வர்ண வேறுபாடுகள் தோன்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த அடிமை நாட்டிலே உங்களுக்குப் பிரகிருதி தேவியின் சௌந்தர்யங்களைப் பார்த்துப் பரவசமடைய சாவகாசம் அடிக்கடி ஏற்பட்டிராது. ஆனால், மேற்கூறப்பட்ட வர்ணக் காட்சியை ஒரு முறையேனும் கண்டிருக்க மாட்டீர்களா? அவ்வாறு கண்டிருப்பீர்களானால், நான் பார்த்த கந்தர்வ லோகத்தின் இயற்கை ஒரு சிறிது உங்களுக்குத் தெரியும்படி சொல்லக்கூடும். அங்கும் அநெக விதமான மேன்மை பொருந்திய திரவத்தன்மை கொண்ட வர்ண பேதங்களே காணப்பட்டன. ஆனால் அவற்றுடன் சந்திர கிரணங்களிள் மோகினித்தன்மை கலப்புற்றிருந்தது.
இந்த ஒளியிலும், இன்னிசையிலும் களிப்புற்று நான் ஒரு க்ஷணம் இருக்கு முன்னாகவே, ஒரு கந்தர்வ யுவதி என் முன் வந்து, "வாராய், மானுட வாலிப, உனக்கு எங்கள் உலகத்தின் புதுமைகளையெல்லாம் காட்டுகின்றேன்" என்று கைகோத்து அழைத்துச் சென்றாள். நான் அந்த யுவதியின் வடிவைக் கண்டு மயங்கி மூர்ச்சித்து விடுவேன் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆயினும், அறிவைச் சிறிது ஸ்திரப்படுத்திக் கொண்டு, அவளை நோக்கி, "இங்கிருந்து நகர்வதற்கு முன்பு முதலாவது ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு விடை கூறவேண்டும்" என்றேன்.
"கேள்" என்று அவள், பொன் வீணை யொன்று மனிதர் பாஷையிலே பேசுவது போலச் சொல்லினள்.
"இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே! அது எங்கிருந்து வருகிறது?" என்றேன்.
"மேலே பார்" என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரைகளினிடையே, கொலுவீற்றிருக்கக் கண்டேன்.
"அவருடைய கிரணங்கள்" என்றாள்.
"சந்திர கிரணங்களா! சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.
"சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நான்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கேகூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும்" என்றாள். இதைக் கேட்டு வியப்படைந்து, பிறகு அந்த யுவதியுடனே நடந்து சென்றேன்.
"பற" என்றாள்.
நான் கலீரென்று நகைத்துப் "பறக்கவா சொல்லுகிறாய்!" என்று வியப்புற்றேன்.
பால் போல வெண்மை கொண்ட வானத்தாற் செய்த இரண்டு சிறகுகள் அவளுக்கிருப்பதை நான் கண்டேன். முன்பு நோக்கிய போதே எனக்கு மூர்ச்சையுண்டாகத் தக்கதாகவிருந்த அந்த யுவதியைச் சிறிது வருணித்துப் பார்க்கலாமா? ஏதோ முயற்சி செய்கின்றேன்.
சந்திரகலை வீசும் முகம். அதன்மீது சிறியதும் மூன்று விரல் உயரமுடையதுமாய், மலர்களாற் செய்யப்பட்ட ஓர் கிரீடம். உயிரென்ற வண்டு வீழ்ந்து, சிறகிழந்து தள்ளாடும் கள்ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள். தின்பதற்கல்லாது, தின்னப்படுவதற்கமைந்தன போன்ற பற்கள்.
தனது பாலிறகுகளால் விகாரஞ் செய்யப்படாத திவ்விய உருவம். தீண்டுவோன் உடற்குள்ளே இன்ப மயமான மின்சாரம் ஏற்றுகின்ற கைகள். மண்ணுலகத்துப் பெண்களைப் பேசுமிடத்து கந்தர்வச் சாயல் என்கிறார்கள். இவளது இயலையும், சாயலையும் என்னென்பேன்? தெய்வ இயல், தெய்வச் சாயல்.
"மண்ணுலகத்தவனாக இருந்தபோதிலும் நல்ல பார்வைகள் பார்க்கிறாய்" என்று நாண முணர்த்தி, "யோசித்துக் கொண்டு நில்லாதே, பற" என்றாள்.
"உன் பெயரென்ன?" என்று கேட்டேன்.
"வெகு நேர்த்தி! நானொன்று சொன்னால் நீ யொன்று பேசுகிறாய், என் பெயர் எதற்கு?"
"சொல்லு, பார்ப்போம்."
"என் பயர் - பர்வதகுமாரி. என்னை, சாதாரணமாக, குமாரி என்று அழைப்பார்கள்."
"நல்லது, நான் உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா?"
"ஓ"
"சரி, பர்வதகுமாரி, நான் பறப்பதெப்படி? உன்னைப் போல எனக்கு இறகுகள் இருக்கின்றனவா?" என்று கேட்டேன்.
"நான் வந்தபொழுது என்மீது இறகுகள் இருக்கக்கண்டாயா?" என்றாள்.
"உன் முகத்தைக் கண்டு பரவசமடைந்ததில் இறகுகளைக் குறிப்பிட முடியவில்லை. நீ பறக்கும் பிரஸ்தாபம் தொடங்கிய போதுதான் பார்த்தேன்."
"ஸ்துகி பிறகு பேசலாம். ஆரம்பத்திலே இறகுகள் கண்ணுக்குத் தெரிந்ததா? சொல்."
"தெரியவில்லை."
"இந்த உலகத்தில், பறக்கவேண்டுமென்ற நினைவுண்டானவுடனே, இந்த வெண்மை நிறங்கொண்ட வானிறகுகள் தோன்றுகின்றன. நீ பறக்க வேண்டுமென்று உள்ளத்திலே சங்கற்பஞ் செய்துகொள்."
"சரி"
"இப்போது என் கண்ணுக்குள்ளே உன் வடிவத்தைப் பார்."
பட்டப் பகற்போல் வீசிய நிலா வொளியிலே, அவளுடைய அழகிய கண்களுக்குள் உற்றுப் பார்த்தேன். அங்கே, எனது வடிவம் கந்தர்வ ரூபமாகத் தோன்றியது கண்டு வியப்படைந்தேன். ஆகா! நான் கனவுகளிலே என்னைக் கண்ட போது தோன்றிய வடிவம்! நோயற்றது; சுருங்கலற்றது; மண் தன்மையில்லாதது; சௌந்தரியமானது. எனக்கும் இரண்டு வான இறகுகள் திடீரென்று முளைத்திருக்கக் கண்டேன். எனது ரூபம் இத்தனை மாறுபாடு அடைந்திருப்பதைக் கண்டு களிப்புற்று உடனே அவள் முகத்தையும் பார்த்தேன். எனது கண்குறிப்பை நோக்கி என் மனதிடையே அப்போது நிகழ்ந்த எண்ணத்தை அவள் அறிந்துகொண்டு விட்டாள்.
"அடா! உன்னைக் கண்ணுக்குள் பார்க்கச் சொல்லிய தன்றோ பிழையாய்விட்டது" என்றாள்.
"ஏன்?" என்று கூறிச் சிரித்தேன்.
"இதுவரை நீ உன்னை மனித சரீர முடையவனாகவும், என்னைக் கந்தர்வ சரீர முடையவளாகவும் எண்ணி நடத்தி வந்தாய். இனி என்னை 'இணை' யென்று கருதி விடுவாய்."
"பிரியரூபிணி! நான் ஈசனாய் விட்டபோதிலும் உன்னைக் கண்டு வியப்படைவதை நீக்கமாட்டேன். எனினும், நான் உன்னை இணையாகக் கருதுவதில் உனக்கு சந்தோஷந்தானே?"
"ஓ"
பிறகு கண்களைக் கலந்தோம். 'கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில.'
"பற" என்றாள்.
புதிதாக உள்ளத்திலே எழுந்த காதற் கிளர்ச்சி கொண்டோ, அல்லது இறகுகளின் உதவி கொண்டோ அல்லது காந்தத்தின் பின்னே செல்லும் ஊசியென அவள் பறந்து செல்வதை இயற்கை முறையாற் பின்பற்றியோ, அவளோடு நானும் பறந்து செல்வேனாயினேன். இறகுகளின் உதவிகொண்டு பறந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில், பறத்தல் அத்தனை சுலபமாகவும், சகஜமாகவும் தோன்றிற்று.
"எங்கே போகிறாய்? உனது மாளிகைக்கா?" என்று கேட்டேன்.
"என் வீடு, உன் வீடு என்ற பேதக் கதையெல்லாம் இங்கே கிடையாது. இது ஸ்வேச்சாலோகம்; முற்றிய ஞானத்திலே எவ்வாறு அபேதநிலை ஏற்படுகிறதோ, அது போல பரிபூர்ணமான போகத்திலேயும் அபேத நிலை தோன்றுகிறது. இங்கே எல்லோருக்கும் எல்லா மாளிகைகளும் உரிமைதான். யார் எங்கு வேண்டுமென்றாலும் யதேச்சையாக வாழலாம். நான் உன்னைக் கடலோரத்தில் சுகந்த மாளிகைக்கு அழைத்துப் போகிறேன்."
"அபேதம், பேதம் என்ற மிகப் பெரிய பேச்சுகள் பேசுகிறாயே? வேதாந்தம் எங்கே படித்தாய்?"
"போக நிலை நன்றாக உணர்ந்தவர்களுக்கு அத்வைத ஞானம் இயற்கையிலேயே உண்டாகும். போகமறியாதவர்கள் பேசும் அத்வைதம் பொய். உங்கள் மண்ணுலகத்திலே அந்த ஞான நடிப்பு மிகுதியாக உண்டு. எங்களுக்கு அபரோக்ஷ ஞானம் சுலபம். பரோக்ஷமும் எளிதுதான். இங்கிருந்து உபசாந்தி லோகம் வெகு சமீபம். போக மூர்த்தியாகிய விஷ்ணுவும், யோக நாதனாகிய சிவனும் ஒன்றே யென்பதை அறியாயா? இதெல்லாம் போகட்டும். இப்போது ஞானம் பேசத் தருணமன்று. கீழெல்லாம் பார்" என்றாள்.
நகரத்திலே இரண்டு பனை யுயரத்தில் பறந்து போய்க்கொண்டு கந்தர்வநாட்டு மாளிகைகள், சங்கீத சாலைகள், லீலா மண்டபங்கள் - என்பவற்றின் அற்புதங்களை யெல்லாம் நோக்கிச் சென்றேன்.
பறப்பதிலே உண்டான இன்பம் கொஞ்சமன்று. மண்ணுலகத்திலுள்ள சகல ஜந்துக்களிலும் பட்சிகளே அதிக சுகம் அனுபவிப்பதாகக் கருதவேண்டும். ஓடும் தண்ணீரிலே நீந்துவது சிறிது நேரம் இன்பமாயிருக்கும். ஆனால், வானத்தில் நீந்திச் செல்வது சதா இன்பம். அதிலும் பர்வதகுமாரியைப் போல் ஓர் வழித்துணை கிடைக்குமாயின், வாழ்நாள் முழுவதும் பறந்து கொண்டே யிருக்கலாம். ஐரோப்பியர்கள் கந்தர்வ போகங்களையே ஆதர்சமாகக் கொண்ட ஜாதியார். வான ரதங்கள் செய்து நடத்துகிறார்கள். ஆனால், அவர்களிடம் தமோகுணம் அதிகமாதலால், அந்தப் புதுமையை இன்ப வழிகளிலேயே விருத்தி செய்துகொண்டு போகத் தெரியவில்லை. வான ரதங்கள் ஏற்பட்டு இன்னும் சரியாக நடத்தத் தெரிவதற்கு முன்னாகவே, 'எதிர்காலத்துப் போர்கள் வானத்திலேயே நடக்கக் கூடுமல்லவா?' என்ற விஷயத்தைப் பற்றிப் பலவாறு ஆலோசனைகள் செய்யத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு ஞாபகமெல்லாம் யுத்தத்திலேயும், கொலையிலேயும் இருக்கிறபடியால், அவற்றை அனுசரிக்கத் தகுதியில்லாதவர்களாகிறார்கள். இது நிற்க.

யக்ஷர் நாட்டிற்கு வந்த ஆரம்பத்திலே எனக்குப் பொறுக்க முடியாத மயக்கமும் திகைப்பும் விளைந்திருந்தன என்று மேலே கூறியிருக்கிறேன். அவை சிறிது சிறிதாக நீங்கி இன்பவுணர்ச்சி மட்டும் மிஞ்சி நின்றது. அறிவிலே தெளிவுண்டாயிற்று. காலையில் விழித்தெழுந்து, முகந்துடைத்துக் கடலருகே சென்று பார்ப்பவனது கண்ணுக்குப் புலப்படுவது போல, வானத்திலே பறந்து செல்லும் எனக்குக் கீழே யிருந்த விஷயங்களெல்லாம் மிகத் தெளிவோடு விளங்கலாயின. அப்பொழுது நான் கண்டுசென்ற செய்திகளையெல்லாம் விஸ்தரிக்க வேண்டுமானால் ஆயிரம் அத்தியாயங்கள் போதா. ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

No comments: