பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 11

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 11


ரகுநாத நாயக்கர் காலத்து கலைகளும் கர்நாடக இசையும்.

ரகுநாத நாயக்கருக்கு கர்நாடக இசையில் ஆர்வம் அதிகமிருந்ததால் அதை மக்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினார். மன்னருடைய தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கில் இயற்றப்பட்ட கர்நாடக இசை கீர்த்தனைகளில் அதிகம் கவனம் செலுத்தலானார். தமிழ்நாட்டில் தெருக்கூத்து போல, தெலுங்கு கன்னடம் பேசும் பகுதிகளில் வழங்கிவந்த கிராமியக் கலையான "யட்சகானம்" எனும் கலையில் இவர் அதிக ஆர்வம் காட்டினார். வாத்திய இசையில் வீணை வாத்தியம் வாசிப்பதிலும் இவர் வல்லவராக இருந்தார். யட்சகானத்துக்காக பாடல்களையும் இவர் இயற்றியிருக்கிறார். 

க்ஷேத்ரவ்யர் என்பவர் புகழ்பெற்ற வாக்யேயக் காரர். அவர் தஞ்சைக்கு வந்து மன்னருக்காக பல பதங்களை இயற்றித் தந்திருக்கிறார். நாயக்க மன்னர்கள் அனைவருமே சிறந்த வைணவ பக்தர்கள் என்பதால் இவர் பல பெருமாள் கோயில்களை புனரமைப்பு செய்து கொடுத்திருக்கிறார். கும்பகோணம் நகரத்தில் அமைந்திருக்கும் புகழ்வாய்ந்த ராமஸ்வாமி ஆலயம் இவரால் கட்டப்பட்ட கோயில். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகமும், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி ஆலயத்தின் கோபுரமும் இவரால் கட்டப்பட்டவை. கும்பகோணத்தை அடுத்த ஒப்பிலியப்பன் கோயிலை விரிவு படுத்தியும், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தின் விரிவாக்கத்தையும் இவரே செய்து முடித்தார். திருவையாறு கோயிலுக்கு தேர் அமைத்துக் கொடுத்து, தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து வைத்தார். பசுபதிகோயிலிலும் தேரோட்டம் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்தார்.

இசைக் கருவிகளுள் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் கரங்களில் தவழும் இசைக் கருவி வீணை. மிகப் புனிதமான இந்த இசைக் கருவி இவர் காலத்தில் இருந்த அமைப்பை மாற்றி இப்போது நாம் பார்க்கும் வீணை அமைப்பை இவர்தான் உருவாக்கினார். இசைக் கலையில் வல்லவரான இவர் ஜயந்தசேனா எனும் புதிய ராகமொன்றையும் ராமானந்தா எனும் தாளத்தையும் கண்டுபிடித்தார். தெலுங்கு மொழியில் பல இசைக் காவியங்களையும் எழுதி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவைகளில் சில பாரிஜாதப்ரஹரணமு, வான்மீகிசரித்திரம், ருக்மணிபரிணயம், யக்ஷகானம், ராமாயணம் முதலியன. சங்கீத சுதா எனும் சம்ஸ்கிருத நாடகமும், பரதசுதாவும் இவரால் எழுதப்பட்டவை.

ராமபத்ராம்பா, மதுரவாணி, செமகுரு வெங்கடராஜு, கிருஷ்ணத்வாரி ஆகியோர் இவருடைய காலத்தில் சிறந்த அறிஞர்களாக விளங்கியவர்கள். மன்னன் ரகுநாத நாயக்கர் குதிரை சவாரி செய்வதிலும், வாட்போரிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

வேதவித்துக்களாகத் திகழ்ந்த பிராமணர்களிடம் மன்னருக்கு அபிமானம் அதிகம் இருந்தது. இவர் காலத்தில் அமைந்துக் கொடுக்கப்பட்ட அக்ரஹாரங்களில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு ஏராளமான வசதிகளும், வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஏழை பிராமணர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் இவர் ஏராளமாக உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். ஸ்ரீரங்கம் கோயில் பராமரிப்புக்காக இவர் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு எழுதி வைத்தார். மாத்வ குருவான விஜயேந்திர தீர்த்தருக்கும் அவருடைய கும்பகோணம் மடத்துக்கும் ஏராளமாக சொத்துக்களை எழுதிவைத்தார்.

ரகுநாத நாயக்கரே சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தமையால் இவரது அரசவையில் கற்றுணர்ந்த பல தேர்ந்த கல்விமான்களும் கவிஞர்களும் நிறைந்திருந்தனர். ரகுநாத நாயக்கரை கல்வியில் ஒரு கடலாகக் கருதினால் அவர் அவையில் இருந்த பல அறிஞர் பெருமக்களும் அந்தக் கடலில் வந்து கலக்கும் நதிகளாகக் கருதப்பட்டனர். அவர் காலத்தில் சரஸ்வதி தேவியானவள் தஞ்சை ராஜ்யத்திலேயே குடியேறிவிட்டாளோ என நினைக்குமளவுக்கு கல்வியில் சிறந்த நாடாக இந்த நாடு திகழ்ந்தது என்று ராமபத்ராம்பா எனும் பெண் கவிஞர் வர்ணிக்கிறார். அறிஞர்களும் இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் மன்னரால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அரசவையில் இருந்த மாபெரும் அறிஞர்களூள் அமைச்சர் கோவிந்த தீக்ஷதரும் அவருடைய இரு மகன்களும் அடங்குவர். அவர்கள் யக்ஞநாராயண தீக்ஷதர், கவி வேங்கடமுகி ஆகியோராவர். 

ஐரோப்பியர்களுடனான உறவு.

டென்மார்க்கிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் இந்தியா வந்து குடியேறி வர்த்தகம் செய்து வந்த ஐரோப்பிய வியாபாரிகளிடம் இவர் நல்ல உறவு வைத்திருந்தார். ரகுநாத நாயக்கர் அரசப் பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக சென்னப்பட்டினம் அருகில் சாந்தோம், கடற்கரைப் பட்டினமான நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் போர்த்துகீசியர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கி நடத்தி வந்தனர். டச்சுக்காரர்களும் தங்கள் பங்குக்கு 1610இல் புதிதாகத் தொழிலைத் தொடங்கினர். இங்கிருந்த மன்னர்களுக்கு போர்த்துகீசியர்களிடம் நல்லெண்ணம் இருக்கவில்லை, ஆனால் டச்சுக்காரர்களை முழுமனதோடு ஆதரித்து வந்தனர். ஓரளவுக்கு போர்த்துகீசியர்களை அடக்கி வைக்க இதை ஒரு உபாயமாகக்கூட இவர்கள் பயன்படுத்தி வந்தனர். 

டேனிஷ்காரர்கள் கடற்கரைப் பட்டினமான தரங்கம்பாடியில் 1620இல் ஒரு குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களுடைய கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாக ஜான்சன் என்பவரும் புராக்டன் என்பவரும் தஞ்சாவூருக்கு வந்து அரசவையில் மன்னன் ரகுநாத நாயக்கரைச் சந்தித்திருக்கின்றனர். மன்னரிடம் அவருடைய பிரதேசத்தில் வியாபாரம் செய்வதைப் பற்றி வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். அவருடைய சம்மதத்தின் பேரில் 1624இல் கம்பெனி சார்பில் ஒரு தூதுக்குழு காரைக்காலுக்கு வந்து இறங்கி பின்னர் தஞ்சாவூர் சென்று மன்னரை அரசவையில் சந்தித்திருக்கின்றனர். 

கிழக்கிந்திய கம்பெனி வியாபாரிகளின் தூதுக்குழுவை மன்னர் அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, அவர்கள் காரைக்காலில் வியாபாரத்தைத் தொடங்க அனுமதி அளித்திருக்கிறார். முதலில் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு இப்படி அனுமதி கொடுத்தாரே தவிர, பிறகு என்ன நினைத்தாரோ என்னவோ அவர்கள் ஆண்டொன்றுக்கு 7000 ரியால் வாடகை கேட்டிருக்கிறார். மன்னர் ஏன் இப்படி மாறினார் என்பதற்கு ஆங்கில கம்பெனியார் சொன்ன காரணம் மன்னர் போர்த்துகீசிய, டேனிஷ் வியாபார நிறுவனங்களின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு இப்படி நடந்து கொள்கிறார் என்று காரணம் கற்பித்தனர். 

மன்னருடைய உத்தரவை ஏற்றுக் கொள்ளாத கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியான ஜான்சன் இங்கிலாந்துக்குத் திரும்பிவிட்டார். ஆனால் இப்படி மன்னரின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டு, நாடு திரும்பிய ஜான்சனின் நடத்தையை கம்பெனி ஏற்றுக் கொள்ளவில்லை. கிழக்கிந்திய கம்பெனியார் புதுச்சேரியையும் தங்கள் வியாபாரத் தலமாக ஆக்கிக் கொள்ள செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்கள் மூலம் முயன்று பார்த்து அதிலும் தோல்வி கண்டனர்.

ரகுநாத நாயக்கரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ரகுநாத நாயக்கர் ஆட்சி புரிந்தாலும் தஞ்சை சோழமண்டலத்தின் எல்லைகளையும் தாண்டி அவரது ஆட்சி விரிவடைந்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர், திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி, காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி, வேலூர் அருகில் நெடுங்குன்றம் மற்றும் நாரத்தம்பூண்டி ஆகிய இடங்களிலும் இவர் காலத்திய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சைப் பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே எல்லா துறைகளிலும் சாதனை படைத்தவராகவும், கல்வி அறிவு மிக்கவராகவும், இசை, இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவராகவும், போர்க்கலையில் தேர்ந்தவராகவும் விளங்கிய முதன்மையான மன்னர் ரகுநாத நாயக்கரே! இவருக்குப் பிறகு இவருடைய குமாரர் விஜயராகவ நாயக்கர் தஞ்சை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.


No comments: