பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 8, 2014

ஞானரதம் - Part 3

பந்தாட்டம்

"அவன் எனது தம்பி. அவன் பெயர் சித்தரஞ்ஜனன். அவன் குழந்தைப் பருவமாயிருந்த போதிலும், எங்கள் குல தெய்வமாகிய காமதேவனுடைய அருள் பெற்றவனாதலால், குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதிலே விருப்பமில்லாமல் கவிதைகள் புனைவதிலேயும், மோகனமாகிய பகற்கனவுகள் காண்பதிலேயும் பொழுது கழிக்கின்றான். ரோஜாப் பந்தை இந்தக் கிரீடராமன் மீது எறிந்த ரஸிகா என்ற அந்தக் கன்னிகையின் மீது சித்தரஞ்ஜனன் தெய்வீகமான காதல் செலுத்துகின்றான். இப்பொழுது அவன் ஏதோ கவிதை புனைகிறான் என்று தெரிகிறது. அவனை இங்கே அழைக்கிறேன். அவன் கவிதை கேட்பதில் உனக்குப் பிரியந்தானா?" என்றாள்.
நான் வியப்படைந்து, "எனக்கு அளவில்லாத பிரியம்" என்று சொன்னேன்.
பர்வதகுமாரி அவனிருக்குந் திசையை நோக்கிக் கையால் சைகை காட்டினாள். அவன் உடனே வான இறகுகள் விரித்துக் கண்ணிமைக்குமுன் நாங்களிருந்த உயர் வெளிக்கு வந்து விட்டான்.
பர்வதகுமாரி அவனைத் தழுவி முத்தமிட்டு, "இவர் நம் நாட்டிற்குத் தரிசனத்தின் பொருட்டு வந்திருக்கிறார். நமது விருந்தாளி" என்று என்னைக் காட்டினாள். பாலகன் என்னை நோக்கி "வந்தே" என்று வணங்கினான். நானும் அவனைத் தழுவி உச்சி மோந்து வாழ்த்துக் கூறினேன். பிறகு பர்வதகுமாரியைக் கடைக்கண்ணால் நோக்கிக் கவிதை விஷயத்தை நினைப்புறுத்தினேன்.
அவள் தம்பியைப் பார்த்து "ரஞ்சனா, இப்போது உன் மனதிற்குள்ளே ஒரு பாடல் புனைந்து கொண்டிருந்தாயே, அதைச் சொல். இவர் கேட்கவேண்டுமென்கிறார்" என்றாள்.
சிறுவன் சிறிது நாணமடைந்தான்.
நான் "குழந்தாய், லஜ்ஜைப்படாதே! சும்மா சொல்" என்றேன்.
அவன், மண்ணுலகத்துப் பிராகிருத பாஷையைப் போல் இருக்கும் இன்சொல் நிரம்பிய காந்தர்வ பாஷையிலே, ரஸிகா பந்தெறிந்ததன் பொருட்டுக் கிரீடராமன் சினமுற்றதைக் குறித்து ஓர் பாட்டுப் பாடினான். பர்வதகுமாரியின் தம்பியின் குரல் இன்பமாயிருந்ததென்று நான் எழுதவா வேண்டும்?
அவன் சொல்லிய பாடலை, எனது திறனற்ற தமிழ்ச் சொற்களிலே, சூரியனைச் சித்தரித்துக் காட்டுவதுபோல், ஒருவாறு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.
இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்றுரையா திருப்ப ஆலி முடியேறி மோதியதென் றருள் முகிலைக் கடுஞ்சொற்கள் மொழிவான் போலக் கடியேறு மலர்ப்பந்து மோதியதென் றினியாளைக் காய்கின்றானால் வடியேறு வேலெனவெவ் விழியேறி யென்னாவி வருந்தல் காணான்.
[இதன் பொருள்: - மேகத்திலிருந்து வெய்ய இடி தன் பக்கத்திலே விழ உடல் வெந்துபோனவன் ஒன்றும் சொல்லாது சும்மா இருக்க, ஆலங்கட்டி தலையிலே விழப்பெற்ற மற்றொருவன் மேகத்தின்மீது சினங்கொண்டு நிந்தை வார்த்தைகள் பேசுவது போல, வாசனை பொருந்திய ரோஜாப் பந்தைக் கொண்டு தன் மேலெறிந்துவிட்டாளென்று இன்ப வடிவத்தாளாகிய ரஸிகையைக் கோபிக்கின்ற இந்தக் கிரீடராமன் அவள் வடிவுற்ற வேல்களை எறிவதுபோல, விழிகளை என்மீது மோதிக்கொண்டே யிருப்பதால், என்னுயிர் வருந்துவதைக் காண்கிறானில்லை.]
ஞானரதம் - மதனன் விழா

சிறிது நேரத்திற்குப் பிறகு சித்தரஞ்ஜனன் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான். நாங்கள் அப்பால் பறந்து செல்லலாயினோம். போகும் வழியெல்லாம் நிலவுக்கதிர் செய்யும் மெல்லிய இசையும், மாடங்கள்தோறும் கந்தர்வ யுவதிகளும், வாலிபர்களும், குழந்தைகளும், பெரியோரும் ஆயிரவிதமான போகங்களிலே பொழுது கழிக்கும் காட்சியும் அற்புதமாயிருந்தன. பூலோகத்திலிருக்கும்போது நான் போகங்களில் இத்தனைவித முண்டென்பதைப் பிரதிபா சக்தியினால் கூடக் கண்டிருந்ததில்லை. கொஞ்சதூரம் போனவுடனே. பர்வதகுமாரி "அதோ, பார்!" என்று காட்டினாள்.
"அஹஹா! அஹஹா! அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.
அதிவிசாலமான மாடம் காணப்பட்டது. அதில் ஐம்பதினாயிரம் பேருக்குமேல் இருப்பார்கள் என்று தோன்றிற்று, பெரிய கூட்டம். ஆனால், பூலோகத்திலுள்ள கூட்டங்களைப் போல், ஒருவருக்கொருவர் நெருக்கி மேலே விழுந்து தள்ளி, கையால் ஒதுக்கி காலால் மிதித்து முகங்களைச் சுழித்துக் கொண்டு வெயர்த்து வெந்து போயிருக்கவில்லை. அந்த கந்தர்வக் கூட்டத்தார் வளைய வளைய அங்குமிங்கும் சலித்துக் கொண்டிருந்த போதிலும் ஒருவருக்கொருவர் சிறிதேனும் தொந்தரை செய்யாமல் விஸ்தாரமான இடம் விட்டு முக மலர்ச்சியுடன் ஸஞ்சரித்தனர். எதிரே ஸ்திரீகள் வந்து விலக இடமில்லாமற் போனால் உடனே இறகு விரித்து மேலே எழும்பி அந்த ஸ்திரீகள்
போனபிறகு இறங்கிக் கொள்வார்கள். இத்தனை பெரிய கூட்டம் இத்தனை மனோகரமாயிருந்ததைப் பார்த்து எனக்குண்டான வியப்பு கொஞ்சமில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் தழுவிக்கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதும், சில சமயங்கள் மிக வணக்கத்துடன் நமஸ்கரித்துச் செல்வதும், சிரித்துப் பேசுவதும் - என்ன அன்பு! என்ன மரியாதை! என்னால் வருணிக்குந்தரமன்று.
"பர்வதகுமாரி, அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.
"மாட நிலத்தினிடையே ஒரு மண்டபந் தெரிகிறது பார்."
"ஆம்."
"அங்கே கிளி வாகனத்தின்மீது என்ன வைத்திருக்கிறது?"
"மன்மத விக்கிரகம்."
"அவருடைய திருவிழா" என்றாள்.
அந்த மன்மத விக்கிரகத்தைக் கண்டவுடனே நான் ஸ்தம்பித்தவனாய் விட்டேன். "குமாரி, இது யாரால் செய்யப்பட்ட பிரதிமை?" என்றேன்.
"எங்கள் நாட்டுச் சிற்பிகளால்" என்றனள். எனக்குத் திடீரென்று பாரத நாட்டிலே சிலைத்தொழில் இப்போது சீர்குன்றி நாசமடைந்து போயிருக்கும் விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
"அடடா! கந்தர்வ நாட்டிற்கு வந்தும் அந்தக் கஷ்ட தேசத்தினுடைய ஞாபகம் மறக்கவில்லை" என்று வாய்விட்டுக் கூறினேன்.
போனபிறகு இறங்கிக் கொள்வார்கள். இத்தனை பெரிய கூட்டம் இத்தனை மனோகரமாயிருந்ததைப் பார்த்து எனக்குண்டான வியப்பு கொஞ்சமில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் தழுவிக்கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதும், சில சமயங்கள் மிக வணக்கத்துடன் நமஸ்கரித்துச் செல்வதும், சிரித்துப் பேசுவதும் - என்ன அன்பு! என்ன மரியாதை! என்னால் வருணிக்குந்தரமன்று.
"பர்வதகுமாரி, அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.
"மாட நிலத்தினிடையே ஒரு மண்டபந் தெரிகிறது பார்."
"ஆம்."
"அங்கே கிளி வாகனத்தின்மீது என்ன வைத்திருக்கிறது?"
"மன்மத விக்கிரகம்."
"அவருடைய திருவிழா" என்றாள்.
அந்த மன்மத விக்கிரகத்தைக் கண்டவுடனே நான் ஸ்தம்பித்தவனாய் விட்டேன். "குமாரி, இது யாரால் செய்யப்பட்ட பிரதிமை?" என்றேன்.
"எங்கள் நாட்டுச் சிற்பிகளால்" என்றனள். எனக்குத் திடீரென்று பாரத நாட்டிலே சிலைத்தொழில் இப்போது சீர்குன்றி நாசமடைந்து போயிருக்கும் விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
"அடடா! கந்தர்வ நாட்டிற்கு வந்தும் அந்தக் கஷ்ட தேசத்தினுடைய ஞாபகம் மறக்கவில்லை" என்று வாய்விட்டுக் கூறினேன்.
"உனது ரூபம் சிறிது காலத்திற்கு கந்தர்வ ரூபமாக மாறியிருந்த போதிலும், ஜன்மம் மாறவில்லை என்பதை அறி" என்றனள் குமாரி.
"அது போகட்டும், இப்படிப் பிரதிமைகள் உங்கள் நாட்டிலே அதிகமாக உண்டோ?" என்றேன்.
"நாளைக்கு உன்னை அமிர்த அருவிக்கு அருகேயுள்ள சித்திரசாலைக்கு அழைத்துச் செல்லுகிறேன். அப்போது எல்லாம் பார்க்கலாம்" என்றனள்.
இப்படிக் குமாரியுடன் பேசிக்கொண்டிருந்த நேரமெல்லாம் எனது விழிகள் கீழே தோன்றிய மன்மத விக்கிரகத்தினின்றும் அகலவில்லை.
"உங்கள் நாட்டுச் சிற்பிகளுக்கு இத்தனை சிற்பத் திறமை இருந்தபோதிலும் அநங்கனுக்கு உருவம் ஏற்படுத்தலாகாது என்பது தெரியவில்லை. இஃதோர் விந்தையே" என்றேன்.
"சபாஷ்! மனித நாட்டிலிருந்து வந்து, கந்தர்வத் தொழிலுக்குப் பிழை கூறத் தொடங்கிவிட்டாய்! எங்கள் நாட்டுக்குள்ளே இதைப்போன்ற பெருமைகொண்ட பிரதிமை வேறே கிடையாது. கொஞ்சம் உற்றுப் பார். எவ்வளவு உற்றுப் பார்த்தபோதிலும் உனக்கு அப் பிரதிமையைப் பற்றிய உண்மை சொன்னாலொழியத் தெரியாது."
அந்தப் பிரதிமை மண்ணாலேனும் பளிங்காலேனும் செய்யப்பட்டதன்று. மனோமய மாகிய நுண்வான் (ஸூக்ஷ்ம ஆகாசம்) கொண்டு செய்யப்பட்டது. மனதிலே பிறந்த காமதேவனுடைய உண்மை உருவம் இதுவே. இதைச் செய்த மயனை நாங்கள் த்விதீயப் பிரம்மா (இரண்டாம் பிரம்மா) என்று சொல்வதுண்டு. பிரம்மாவால் செய்யப்பட்ட காமதேவன் ஜீவஸஹிதனாக இருக்கிறான். இப் பதுமைக்கு உண்மையுயிர் இல்லாவிடினும் கலையுயிர் (சைத்திரிக ஜீவன்) கொடுக்கப்பட்டிருக்கின்றது" என்றனள்.
ஒவ்வொரு காட்சியைப் பற்றி எழுதும்பொழுதும், 'வியப்புற்றேன்', 'வியப்புற்றேன்' என்று ஒரே வண்ணமாக மீட்டும் மீட்டும் சொல்லி எனக்கு அலுத்துப் போய்விட்டது. கந்தர்வ நாடே வியப்பு நாடு.
"மன்மதனுடைய பிம்பத்துக்கருகே ரதி பிம்பத்தைக் காணோமே?" என்று கேட்டேன்.
"அது கந்தர்வலோக ரகஸ்யம். உன்னிடத்தில் சொல்லக் கூடாது" என்றாள்.
"நானும் தற்காலத்திற்கு கந்தர்வனென்பதை நீ மறந்து விடுகிறாய்!"
"அப்படியானால், நீ யோசனை செய்யும் விஷயத்தில் உனக்கே விளங்கும். அது போகட்டும். சற்றுக் கீழே யிறங்கி நான்றாக எல்லாவற்றையும் பார்ப்போம், வா. இங்கிருந்து பேசிக் கொண்டிருப்பதை விட அங்கே போய்ப் பார்ப்பது நலம்" என்றாள். சற்றுக் கீழேயிறங்கி அத்திருவிழாவின் வினோதங்களையெல்லாம் பார்த்தோம். இப்புறம், மன்மத விக்கிரகத்துக்குப் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன; அப்புறத்திலே மன்மதன் தகன கதை, அவன் திரும்பவும் உயிர்த்தெழுந்த பருவம் வரை, பிரதிமைக் காட்சிகளாலும், சித்திரக் காட்சிகளாலும் நன்கு விளக்கப்பட்டிருந்தது.
வஸந்த காலம் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். யதார்த்தத்திலேயே கந்தர்வ நாட்டில் அப்போது வஸந்த காலம். அதுபற்றியே காமன் திருவிழாக் கொண்டாடினார்கள். எனவே, கந்தர்வச் சிற்பர்களின் அற்புதத் தொழிலுக்குப் பிரகிருதி தேவியும் துணைபுரிவாளாயினள்.
பாடுகின்ற குயில்கள், மலர் புனைந்த மரங்கள், வாவி, கூடி விளையாடும் மான்கள், வண்டுகள் முதலாகத் தென்றல் கொண்டு வரும் மெல்லிய மகரந்தத்தூள் வரை, வஸந்த காலத்தின் காட்சிகளெல்லாம் உண்மையினும் உண்மையாகத் தோன்றின. அங்கு, தேவதாரு மரங்களால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய மண்டபத்தில் சூரிய காந்தக் கல் மேடையில் உட்கார்ந்து, சித்தத்தை யடக்கிய நிலையில் நிறுத்தி, முக்கண்களின் பார்வைகளையும் மூக்கின் நுனியிலே செலுத்தி அலையோய்ந்த சமுத்திரம் போல அசைவற்றிருந்த சிவபெருமானின் உருவப் பதுமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எதிரே, தவத்தால் மெலிந்த சௌந்தரிய தேவதை வந்து நிற்பது போல, தவவேடங் கொண்ட பார்வதிதேவி நின்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் பக்கத்திலே மதனன் தனது கரும்பு வில்லில் நாணேற்றிப் புஷ்ப பாணந் தொடுத்துக் காத்து நிற்பதுபோல ஓர் உருவம் நின்றது.
மற்றொரு பாரிசத்திலே, மன்மத தகனம் சித்திரித்துக் காட்டப்பட்டிருந்தது. பின்புறமாகத் திரும்பி, சத்திய தேவதை கொடுங் கோபத்தில் நிற்பது போலப் பரமசிவன் முகத்திலே கோபத்தழல் பொங்க நிற்பதும், அவனது நெற்றியிலுள்ள 'ஞான' விழியினின்றும் தீ வெள்ளமாகப் பாய்ந்து மன்மதனுடைய உருவில் நெருப்புப் பற்றி எரியும் காட்சியும் எழுதியிருந்ததைப் பார்த்து என் மனதிலே நடுக்கமுண்டாயிற்று. பர்வதகுமாரியின் கையோடு கோத்திருந்த எனது கையைப் படீரென்று பிடுங்கிக் கொண்டேன்.
பர்வதகுமாரி கடகடவென்று நகைத்து, "சித்திரத்துக்கு அஞ்சுகிறாய்!" என்றாள். அது வெறுஞ் சித்திரந்தான் என்று என் மனதில் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. கோயிலிடையில் மதன வடிவத்தில் அருகே ரதி யுருவம் காணாவிடினும், இங்கே அவனது எரியும் உடலருகே
ரதிதேவி, ஆ!! என்று கதறி நிற்பதுபோல எழுதியிருந்தது. அவள் முகத்தில் - உடல் முற்றிலும் - காணப்பட்ட சோகத்தையும் பரிதாபத்தையும் என்னால் வருணிக்க முடியாது. கந்தர்வச் சிற்பனுடைய சித்திர சலாகை எங்கே? எனது பேதையெழுதுகோ லெங்கே? எத்தனைக் கெத்தனை!
மற்றொரு பாரிசத்தில், சிவனுக்கும் விவாகம் முடிந்து பார்வதி பாகனாக விளங்குகிறார். ரதிதேவி வந்து வணங்கி நிற்கின்றாள். சிவன் புன்னகை பூத்து அருள் புரிய, மதனன் சாம்பலிலிருந்து மீண்டும் உயிருடன் எழுந்து சிவனையும் பார்வதியையும் முடியால் வணங்கிக்கொண்டு கையினால் அவ்விருவரின் மீதும் அம்புகள் தொடுக்கின்றான். பார்வதி ஐயனைத் தழுவிக்கொள்ளுகின்றாள். இவ்வாறு மதனன் கோயிலிலே இருக்கும் ஒவ்வொரு காட்சியின் முன்னேயும் கந்தர்வ ஜனங்கள் வந்து பலவாறாகத் தொழுது கொண்டிருந்தனர்.
சில ஸ்திரீகள் கையில் யாழ் வைத்துக்கொண்டு பாடினர். ஒரு பக்கத்தில் வாலிபரும் மாதர்களும் இணையிணையாகப் பலவிதக் கூத்துக்களாடி ஓர் வளையமாகச் சுற்றிக் கொண்டிருந்தனர்.


No comments:

Post a Comment

You can give your comments here