பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 19, 2012

பேசித் தீர்த்துக் கொள்ளலாம்


நாவடக்கம்

நம்முள் பல பிரச்சனைகள் தோன்றுவதற்கு நம்முடைய பேச்சே காரணம். அவசியத்துக்கு மட்டும் பேசினால் போதாதா? சிலருக்கு எப்போதும் யாரிடமாவது ஏதாவது பேச வேண்டுமென்கிற அரிப்பு. அப்படி பேசுவதும் அறிவு பூர்வமாகவும், அவசியமானதாகவும் இருந்தால் நன்று. இல்லாவிட்டால் தீது. இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையானாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர். அரசியல் கட்சியார் நாங்கள் விவாதத்திற்குத் தயார் என்கின்றனர். ஒரு பிரச்சினையைப் பேசிப் பேசித் தீர்க்க முடியுமானால் உலகில் எந்தப் பிரச்சினையும் பூதாகாரமாக வளர வாய்ப்பில்லையே. வாசாலகத்தால் பேசியே பிறரை மடக்கி விட முடியும், அவர்களுடைய நியாயமான கருத்துக்களைக் கூட பொசுக்கி விட முடியும் என நினைப்பவர் பலர். இந்த விவாதம் அதாவது "தர்க்கம்" குறித்து பாரதி சொல்வதைப் பார்ப்போம்.

"விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக" (இது பைபிள் வாசகம்)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "பிறர் குணதோஷங்களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றி சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப் பற்றி யோசித்தல் வீண்."

'ஹெர்மஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து தேசம்) ஞானி: "மகனே! விவாதத்தில் நேரங்கழித்தல் நிழலுடன் போராடுவதற்கு நிகராகும்."

'ஸொக்ராதெஸ்' (சாக்ரடீஸ்) என்ற கிரேக்க ஞானி: "அறியாதார் பேச்சை நிறுத்தினாற் கலகமில்லை"

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன் தெரிந்து கொள்வான்."

திருவள்ளுவர்: "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."

"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர்."

2 comments:

Unknown said...

மிகவும் அற்புதக் கருத்துக்கள் எத்தனை உண்மையான வார்த்தைகள்.
பெரும்பாலும் தீயாரோடு சேர்வதில்லை, வாதிடுவதில்லை இருந்தும் அவர்தம் குணம் பற்றிப் வாதிடுவது யாவரும் செய்யும் ஒரு பழக்கமாகவே இருக்கிறது அது நிறுத்தப் பட வேண்டியதே இல்லை அவசியமானதே. நல்லதொரு அறவுரை!

'தீயார் குணம் உரைப்பதும் தீதே!' என்று தான் செய்யுளை முடிக்கிறார் ஒளவைப் பாட்டி.
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

snkm said...

நன்றி. வாழ்க பாரதம்!