பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 22, 2012

சித்தக்கடல்


சித்தக்கடல்

மகாகவி பாரதியார் 1915இல் "சித்தக்கடல்" எனும் சிறு நூலில் 1915 ஜூலை 1ஆம் தேதி என்று தேதியிட்டுக் கீழ்வருமாறு எழுதுகிறார்.

"இந்த மனமாகிய கடலை வென்றுவிடுவேன். பல நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும் பாடு தேவர்களுக்குத்தான் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய சம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும்.

'சலோ! தெய்வமுண்டு. அது அறிவு மயம். அந்த அறிவுக் கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக் குழாயை அஹங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அஹங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும் தெய்வ ஞானமும் எனக்கு உண்டாகும்."
----

புகையிலைச் சாற்றினால் தலை குறுக்கிறது. 20 தரம் புகையிலையை நிறுத்தி விடுவதாக ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூடவில்லை. ஸம்ஸ்காரம் எந்தனை பெரிய விலங்கு பார்த்தாயா? மகனே, ஸம்ஸ்காரங்களைச் சக்தியினால் வென்றுவிடு.
----

உடல் படுத்துக் கொண்டது. உடலை வைரம் போல இலாகவமுடையதாகவும், சிங்கத்தைப் போல வலியுடையதாகவும் செய்ய வேணும். உடனே வசப்படாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந்துன்பந்தான். உடம்பே! எழுந்து உட்காரு. உடம்பு எழுந்துவிட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்துவிட வேண்டும்.
----

வயிறு வேதனை செய்கிறது. உஷ்ண மிகுதியால், நோயற்று இருப்பதற்குச் சக்தியை ஓயாமல் வேண்டிக்கொள். நோயில்லையென்று மனத்தை உறுதி செய். மனம் போல் உடல்.
----

மகனே! உடல் வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம், நீ யந்திரி.

ஜூலை 2.

வியாதி பயம், சோம்பர். இன்று காலைப் பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன. செ... வழக்கம்போல் வந்தான். பரமேஸ்வரி, மகாசக்தி - உன்னிடத்தில் அமரத்தன்மை கேட்கிறேன். என்னை மனக்கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும். உன்னை எப்போதும் சிந்தனை செய்து கொண்டும், உனது மஹா அற்புதமான உலகத்தை எப்போதும் கண்டு தீரா மகிழ்ச்சியடைந்து கொண்டும், தர்மங்களை இடைவிடாமல் நடத்திக் கொண்டும் வருந்திறமை எனக்கு அருள் செய்ய வேண்டும்.

மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக்கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதை வசப்படுத்தி விடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்துமுன் சித்தந்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வன்ஹால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்.

பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமலும் வஞ்சகமில்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடுக்க வேண்டும்.

நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடும் என்று கருதி நமது துர்ப்பலங்களை எழுத லஜ்ஜை உண்டாகிறது. பராசக்தீ! என் மனத்தில் அந்த லஜ்ஜையை நீக்கிவிட வேண்டும்.

பாரதியினுடைய மனநடைகளை எழுதப் போகிறேன். நான் வேறு, அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்தில் கட்டுண்ட சிறு ஜந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப்படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்டாகாதபடி அருள் செய்ய வேண்டும்.

எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ, அதைக்காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்று இல்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த அகில உலகத்துக்கு ஆதாரம். அகிலம் நமக்கு மூன்று வகையாகத் தெரிகிறது. -- ஜடம், உயிர், அறிவு என இவை தம்முட் கலந்தன. அறிவுலகத்திலே பல படிகள் இருப்பதாக யோகிகள் நிச்சயித்திருக்கிறார்கள்.

இவற்றுள் ஜடத்துக்கு உயிரும், உயிருக்கு அறிவும் காரணமாமென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மூலப் பொருளாய், இவையனைத்தையும் தனது உறுப்புக்களாகக் கொண்டு, இவையனைத்தும் தானாய், இவையனைத்தின் உயிர்நிலையாக ஒரு பொருள் உண்டு. அதனை மஹாசக்தி என்கிறோம். அதை இடைவிடாமல் தியானம் செய்வதால் உனது குறைகள் எல்லாம் நீங்கும். பெரிய பொருளை இடைவிடாது பாவனை செய்யும் அறிவுதான் பெருமையடைகிறது.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தீயை த்யானம் செய்யுமானால் அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு. ----


பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுதவேண்டும், கடிதங்கள் எழுதவேண்டு. சோம்பர் உதவாது. வெற்றிலை போடுவதைக் குறைக்க வேண்டும். பணமில்லாததைப் பற்றிக் கவலைப் படலாமா? மூடா, மூடா, மூடா, நாம் சுத்த அறிவில்லையா? உலக வ்யவஹாரங்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆணவக் காட்டிலே அகப்பட்ட சித்தத்தின் விருப்பப்படி இந்த உலகில் ஏதாவது நடக்கிறதா? சாகாத ஜந்து உண்டா? எல்லா ஜந்துக்களும் உயிரை ஓயாமல் காக்கின்றன. அதில் பயனுண்டா? உயிரே ஜீவனுடைய வசமில்லாதபோது வேறெதைப் பற்றிக் கவலைப்படுவதிலேயும் என்ன பயன்? பராசக்தியின் கட்டளைப்படி உலகம் நடக்கிறது. உனக்கு வேண்டிய இன்பங்களை அவளிடம் வேண்டிக் கொள். அவல் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு சுகமாக இரு.

எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும்.

"உத்யோகினம் புருஷஸிம்ஹ முபைதி லக்ஷ்மீ"

பராசக்தியைத் தியானம் செய்து கொண்டேயிருந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். உடலும் உயிரும் ஒளி பெற்று வாழும். நூறு வயதுக்குக் குறைவில்லை. இது ஸத்தியம். நூறு வயது நிச்சயமாக வாழ்வாய். மனிதனுக்கு இயற்கையிலே நூறாண்டு ஏற்பட்டது. இயற்கை தவறாமல், மூடக் கவலைகளில்லாமல் இருந்தால் நூறு வயது அவசியம் வாழலாம். மகனே! அச்சத்தைப் போக்கு.

மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்? பராசக்தீ, எனது கருவிகரணங்களிலே நீ பரிபூரணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்க வேண்டும்.

இன்பமில்லையா?

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ.

உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா?

முதலாவது எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாகிவிட்டது. இரண்டு மாதகாலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழு துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம், பய, பயம், பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய், உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் -- தீராத குழப்பம். எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்கள் எல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி எனது குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிவப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்.

தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்லுவதில் பயனில்லை. அவளும் உன் சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிறாள்.இயன்றவரை உண்மையோடுதான் இருக்கிறாள். அவளையும் நீ சம்ரக்ஷணை செய்ய வேண்டும்.

அவளுக்கு நோயின்மை, கல்வி, கவலையின்மை, பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

எனது க்டும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது. தாயே! ஸம்மதந்தானா?

மஹாசக்தீ! என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதையூற்று ஏற்படுத்திக் கொடு.

ஓயாமல் வியாதி பயங்கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ! தூ! தூ! கோழை!

புகையிலை வழக்கம் தொலைந்துவிட்டது, பராசக்தியின் அருளால். இனிக் 'கஸரத்' வழக்கம் ஏற்பட வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு, வலிமையுடையதாக வேணும். இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி, நன்றாக ஓடி, உடலை நன்கு காத்துக் கொண்டிருக்க வேணும் - பராசக்தியின் அருளால்.

செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா, பொய் வாய்தா, பொய் வாய்தா - தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ!

மஹாசக்தீ, நீயிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் - சரி! இப்போது உன்னை வையமாட்டேன். என்னைக் காப்பாற்று, உன்னைப் போற்றுகிறேன்.

பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்குட நீ தண்டனை செய்து கொள். எனக்கு அதிலே சந்தோஷமில்லை. எனக்குப் பிறர் செய்யும் தீங்குகளை நீ தவிர்க்க வேண்டும். நான் உன்னையே சரணடைகிறேன்.

சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி
வெல்க, பராசக்தி வெல்க!
----1 comment:

 1. ////பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமலும் வஞ்சகமில்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடுக்க வேண்டும்.////

  இந்த மகாகவி எத்தனை உரிமையை அன்னை பராசக்தியிடம் எடுத்துக் கொள்கிறான் பாருங்கள். பராசக்தீ என்று ஒரு நண்பனை உரிமையோடும்... சில நேரங்களில் குழந்தைகள் (என் மகன் கூட அப்படி அவனது அம்மாவை அழைப்பதை கவனிக்கிறேன்) உரிமையோடு பெற்றவளை சற்று அதட்டினார் போல அழைப்பது. அதற்கு அந்த அன்பு மிக்கத் தாய் புன் முறுவலோடு அவளும் இவனை அதட்டினார் போன்று சிரித்தவாறு, என்னாடா!!!!!.... என்று வருவாள்! அப்படியாகத் தான் இந்த தாய் மகன் உறவு இருந்திருக்கிறது.

  ////குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாகிவிட்டது. இரண்டு மாதகாலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழு துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம், பய, பயம், பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய், உன்னை வாழ்த்துகிறேன்////

  அடுத்து என் குழந்தையை வியாதியில் இருந்து காத்தாய் எங்களையும் காத்தாய்.... அதற்கு அவன் நன்றி கூறவில்லை எத்தனை உரிமையோடு பெருமைப் பட அதற்கு நான் உன்னை வாழ்த்துகிறேன் என்கிறான். எத்தனை அன்னியோன்யம் நெருக்கம்.

  பிறகு அவளை சீண்டுகிறானாம்!!..

  ////மஹாசக்தீ, நீயிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் - சரி! இப்போது உன்னை வையமாட்டேன். என்னைக் காப்பாற்று, உன்னைப் போற்றுகிறேன் /////

  அவன் அழைக்கும் போதே அவளை எந்தளவுக்கு தீர்க்கமாக நம்பி இருக்கிறான் என்பதை முதல் வார்த்தையே ''மஹாசக்தீ'' என்பதே சொல்லும். அடுத்ததாக நீயும் உனக்கும் அறிவு இருப்பதை யார் கண்டார் என்பவன்.... சரி சரி நான் உன்னை இப்போது வையமாட்டேன் என்கிறான். அவளே இல்லையென்று சந்தேகம் வருமாயின் அவளை ஏன்? அப்படி உயர்வாக விழிக்க வேண்டும். இல்லையென்று முடிவுக்கு வந்தவன் சரி சரி நான் இப்போதுன்னை வைய மாட்டேன் என்கிறான்.

  இப்படி அவளோடு அன்பாகவும், அதிகாரம் செய்தும் அவளைச் சீண்டியும் இருக்கும் காட்சி அவளிடம் இவன் கொண்ட நெருக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இதற்கு மேலாக அவன் செய்தது போல் சித்தம் (விருப்பம்) அதுவானால் புத்தியும் அதுவே ஆகும், புத்தியே அதுவானால் அறிவும் அதுவே ஆகும். இந்த ஒருத்துளி அறிவு அந்தப் பெருங்கடலாவதும் அப்படியே என நம்பி துணிந்து ஏகாந்தத்திலே இருக்க கடுமையாக முயற்சித்து பிறகு வெற்றியும் பெற்று இருப்பதை வேறு சில பாடல்களிலே காணவும் முடிகிறது. இருந்தும் இறைவனின் விருப்பம் எதுவென்று யாரறிவார். அப்படி ஓளி பெற்றவர்களை கருவியாகக் கொண்டு அவர்களின் அந்த ஜீவ முக்திப் பெற்ற ஆத்மாவை அந்த பரம் பொருள் இயக்குகிறது என்றும் வேறொரு இடத்திலேக் குறிப்பிடுகிறான் பாரதி.

  இதிலே கவனிக்க வேண்டிய ஓன்று, அதுவே என்னை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்த்கிறது. எத்தனை இளவயது, அதில் எத்தனை ஏழ்மை, வறுமை, கொடுமை, வியாதி அத்தனையையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு இவன் எப்படி இப்படி முக்திக்கு பேரொளியில் கலப்பதைப் பற்றிய சிந்தனையிலே ஆழ்ந்தான் என்பது தான் அது. ஆனால் அத்தனைக்கும் ஈடு கொடுத்து அவனோடு இருந்து அவனுக்கு ஆறுதலாக இருந்த அந்த தாயை, செல்லம்மாவை என்னவென்று சொல்லிப் புகழ்வது.

  இவனுக்கு பால்ய திருமணம் மாத்திரம் நடக்காமல் இருந்திருந்தால் இவன் பெரும் துறவியாகி இன்னொரு விவேகானந்தராக மீண்டும் உலகை வலம் வந்து உலக நன்மைக்கு இன்னும் பல காரியங்கள் ஆற்றி இருப்பான் என்பதை உறுதியாக நம்ப வழி இருக்கிறது. அந்தப் பேரொளியில் கலப்பதே பிறவியின் லட்சியம் என்னும் வேதாந்தக் கருத்தை ஆழ்மனதிலே பதித்தே செயலும் புரிந்து வெற்றி பெற்று இருக்கிறான் பாரதி.

  நல்ல தொருப் பதிவு, பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

  வாழ்க வளர்க பாரதியின் புகழ்!

  ReplyDelete

You can give your comments here