பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, December 25, 2012

மகாகவி பாரதியாரின் 131ஆவது பிறந்த நாள் விழா

மகாகவி பாரதியின் கருத்துக்கள் எந்த காலத்துக்கும் பொருந்தும்.
                     தாமரை இதழ் ஆசிரியர் சி.மகேந்திரன் பேச்சு.

"மகாகவி பாரதியார் நூறு ஆண்டுகளுக்கும் முன்பு அன்றைய சமுதாயத்தையும், அரசியலையும் படம்பிடித்துக் காட்டிச் சென்றிருக்கிறார். அவை அன்றைய நிலைமைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஆடி மகிழ்ந்த பாரதி அந்தச் சுதந்திரத்தைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு நாம் பெற்ற சுதந்திரம் என்னவாயிற்று என்பதை அவன் பார்த்திருந்தால் அவன் மனம் என்ன வேதனைப்படும் என்பதை நினைக்க நம் மனம் பதறுகிறது."

"தாமரை" இதழின் ஆசிரியரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளருமான சி.மகேந்திரன் திருவையாறு பாரதி இயக்கம் கொண்டாடிய மகாகவி பாரதியார் 131ஆவது பிறந்த நாள், பாரதி இயக்கத்தின் 35ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இப்படிப் பேசினார். 

அவர் மேலும் பேசுகையில் 'நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்' என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடிச் சென்ற பாரதி இன்று இருந்தால், இது நமக்கு உரிமையான நாடுதானா என்று அச்சப்பட்டிருப்பான். இங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் அப்படிப்பட்ட அச்சத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் நமது நாட்டின் சின்னஞ்சிறிய கிராமங்களில்கூட வாரச்சந்தைகள் நடைபெற்று வந்திருக்கிறது. கிராமத்து மக்கள் உற்பத்தி செய்யும் தானியங்களையும், விளைபொருட்களையும், கால்நடைகளையும் கொண்டு விற்கவும், பண்டமாற்று செய்து கொள்ளவும் இத்தகைய சந்தைகள் பயன்பட்டன. இன்று அயல்நாட்டு பெரு வர்த்தக நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தில் நுழைந்து இங்கு சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பதோடு, அவர்கள் விற்கும் பொருட்களை விளைவிப்பது, அதற்கான நிலங்களை வாங்குவது, அங்கெல்லாம் தங்கள் தொழிலாளர்களை நியமிப்பது போன்ற செயல்களால் இந்திய நாட்டு வியாபாரம், விவசாயம், சிறு வியாபாரம் முதலியவற்றை பூண்டோடு அழிக்க முன்வந்திருக்கின்றனர். 

இந்திய நாட்டில் இயற்கை வளங்களை நவீன அறிவியல் நுட்பங்களால் கண்டறிந்து எங்கெங்கு அரியவகையான தாதுப்பொருட்கள் கிடைக்கின்றனவோ, அந்த நிலங்களையெல்லாம் மொத்தமாக வாங்கி, அங்கு குடியிருக்கும் பழங்குடி மக்கள், கிராம மக்கள் முதலியோரை இடம்பெயர வைத்து நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப் படுத்திவரும் கேட்டை நம் நாட்டு மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படியே போனால் இந்தியா மீண்டும் அடிமைப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

'தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?' என்று சர்வேஸ்வரனிடம் முறையிட்டான் பாரதி. காரணம் தங்கள் குருதியையும், வியர்வையையும் சிந்திப் பெற்றது இந்தச் சுதந்திரப் பயிர். அதன் பெருமை தெரியாமல் மீண்டும் அதை அன்னியரிடம் அடகு வைக்கும் போக்கைக் கண்டு தேசபக்தி உடையவர்கள் வாய்மூடி இருக்க முடியுமா? இங்கு இளைஞர்களும், மாணவர்களும் கூடியிருக்கிறீர்கள். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இந்த நாடு மீண்டும் அடிமைப்பட்டுவிடாமல் காக்கும் பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் இந்த இளைஞர்கள் கூடியிருக்கிற அவையில் நாம் எதிர்கொள்ளவிருக்கிற அபாயத்தைப் பற்றிச் சற்று விரிவாகக் கூறுகிறேன்.

பாரதி வாழ்ந்த காலத்தில், தமிழர்கள் பிழைப்பை நாடி பல அந்நிய தேசங்களுக்குக் குறிப்பாக தென்னாப்பிரிக்கா, மொரீஷஸ், பிஜித் தீவுகள், இலங்கை போன்றவிடங்களுக்கு கங்காணிகள் ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்றனர். அங்கு சென்றால் தங்கக் கட்டியாக சம்பாதிக்கலாம் என்கிற ஆசையில் இவர்களும் அங்கெல்லாம் சென்று பட்ட துன்பங்களை பாரதி கவிதையில் வடித்துக் காட்டியிருக்கிறான். "கரும்புத் தோட்டத்திலே" எனும் பாடலில் பிஜித் தீவில் நம் தமிழ் மாதர் கால்களும் கைகளும் ஓய்ந்து வருந்துவதைச் சொல்லி, அவர்கள் விம்மி, விம்மி அழும் குரலை கேட்டிருப்பாய் காற்றே என்று கேட்டு கண்ணீர் வடிக்கிறார்.

நம் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டிய கடமை உங்களுக்கெல்லாம் இருக்கிறது. 'தேடிச்சோறு நிதம் தின்று, கூற்றுக்கு இரையெனப் பின் மாயும், வேடிக்கை மனிதர்களைப் போலன்றி' நீங்கள் உங்கள் உள்ளங்களில் ஒரு கனலை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. பாரதி எல்லா காலத்துக்கும் பொறுத்தமானவன் என்பதற்கு இன்றைக்கு நிலவும் சூழலே சாட்சி. 'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?' என்றான் பாரதி. ஆனால் இன்று தமிழகத்தின் நெற்களஞ்சியம் நீரின்றி வாடும்படி தண்ணீர் கொடுக்க மறுப்பதும் மனிதர் உணவை பறிப்பது ஆகாதா? எங்கோ குடகில் பிறந்து, கேரளத்தின் வயநாட்டு தண்ணீருடன் கர்நாடகம் வழியாக தமிழகம் வரும் தண்ணீரை, கர்நாடகம் நமக்குத் தர மறுப்பது ஏன்? மத்திய அரசும், நீதிமன்றங்களும் தீர்ப்பளித்தும் அவற்றை மதிக்காமல் ஒரு மாநிலம் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, இந்திய அரசியல் சட்டத்தை அவர்கள் மதிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்திய இறையாண்மைக்கே இது ஆபத்து அல்லவா?

நீங்கள் நடத்தும் இந்த இயக்கம் பாரதி இயக்கம். வெறும் சங்கமல்ல இதுவொரு இயக்கம். இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவ வேண்டும். இந்திய மக்கள் பரிபூரண சுதந்திரம் பெற்று மக்கள் ஒற்றுமையோடும், இறையாண்மைக்கு மதிப்பளித்தும், நாட்டு நலனைப் பேண வேண்டும்" என்று சி.மகேந்திரன் பேசினார்.

திருவையாறு பாரதி இயக்கம், தஞ்சை நியு டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம் இவை இணைந்து மகாகவி பாரதியாரின் 131ஆவது பிறந்த நாள் மற்றும் பாரதி இயக்கத்தின் 35 ஆண்டு நிறைவிழாவினை திருவையாற்றில் கொண்டாடியது.

விழாவில் காலை கல்லூரி மாணவர்களின் ஆய்வரங்கம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்கள். பிற்பகலில் இசைக்கல்லூரி மாணவியரின் இசையரங்கம் நடைபெற்றது.

நிறைவு விழாவிற்கு குறள்நெறிச் செல்வர் சி.நா.மீ.உபயதுல்லா தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பாரதி பவுண்டேஷன் அறங்காவலர் இரா.மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

(பாரதி இயக்கம் திருவையாறு, பாரதி இலக்கியப் பயிலகம், நியுடவுன் ரோட்டரி சங்கம், ரோட்டரி சமுதாயக் குழுமம் ஆகியோர் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு சிங்கப்பூரில் வசிக்கும் கோ.ஆலாசியம் அளித்த நன்கொடையும் பயன்பட்டது)

1 comment:

  1. மகாகவியின் கருத்துக்கள் புது வேதமாக கொள்ளப் படவேண்டியவைகள். வேதங்கள் எப்போதும் இந்த மானுடத்தையே குறிக் கோளாக கொண்டே எழுதப் பட்டன. அப்படி தான் பாரதியும் தனது ஆக்கங்களை சமைத்து இருக்கிறான் என்றால் அது மிகையாகாது. திருவாளர் சி.மகேந்திரன் கூறியது போல இந்த கஷ்ட சூழலையெல்லாம் கண்டு அவன் வெம்பி நோக வேண்டாம் என்று தான் இறைவன் மகாகவியை விரைவிலேயே அழைத்துச் சென்று விட்டான் போலும். இதுவரை உலகில் உண்டாகாத நோயிற்கு மருந்து கண்டு பிடிக்காது விஞ்ஞானம். ஆனால் இப்படியெல்லாம் வரும் என்று தனது மெஞ்ஞானத்திலே உணர்ந்த மகாகவி அதற்கு பல மருந்துகளையும் நமக்கு அளித்து விட்டு தான் சென்றும் இருக்கிறான். நாட்டில் நடக்கும் பெண் கொடுமைகள் எப்படி இருக்கின்றன என்பதை யாவரும் அறிந்திருக்கிறோம். அதனாலே 'ரெளத்திரம் பழகு' என்றான் பாரதி அதை இன்றைய சூழலில் திரு நிதிஷ் குமார் போன்ற அரசியல் வாதிகள் முழங்குவதியும் பார்க்கிறோம். பாரதி இன்றைய தேவையை அன்றே உணர்ந்ததற்கு இதுவே சாட்சி. இது போன்ற எத்தனையோ கருத்துக்கள் குவித்துச் சென்று இருக்கிறான். அவனின் வேத புறம் எத்தகையது, அது எத்தைகைய மக்களை இந்த உலகிற்குத் தரும் என்பதை உணரமுடிகிறது. பாரதி கண்ட போலீசைப் போன்ற சில போலீசார் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். பாரதி கூறியது போல் அவனின் கருத்துக்கள் முழுமையும் இன்னும் நானூறு ஆண்டுகள் போனாலும் அன்றையத் தேவையாகத்தான் இருக்கும். காலம் அவனை ஒதுக்க முடியாது. அவன் காலனை வென்றானில்லை என்றால் அது தவறு...அவன் காலத்தை வென்றவன்.

    வாழ்க வளர்க பாரதியின் தீர்க்க தரிசன சிந்தனைகள்! உலகம் உள்ளவரை உயிரோடு இருப்பான் பாரதி!!! அந்த மகாஞானியின் பிறந்த நாளை அருமையாக கொண்டாடிய பாரதி பயிலகத்தாருக்கு எனது நன்றிகளும். சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

    ReplyDelete

You can give your comments here