காந்திமதிநாதரும் மகாகவியும்
எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பார் தமிழ்ப் புலவர். பாரதியினும் வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.
"ஆண்டில் இளையவன் என்றந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்"
"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?
"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்"
வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். அதுதான் பண்பாடு.
வயதில் மூத்த காந்திமதிநாதனை பாரதி அவமதித்து அவரைச் சின்னப் பயல் என்று பாடிவிட்டார் எனும் செய்தியை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள், உடனே அவன் மாற்றிப் பாடி அவரைப் பெருமைப் படுத்தியதையும் எடுத்துரைக்க வேண்டும்.
3 comments:
பாரதி என்ற பட்டம் இந்த சுப்பையாவிற்கு பதினோராவது வயதிலேக் கிடைத்ததாக அறிகிறோம். அப்படி இருக்க இப்படி ஒரு நிகழ்வு எத்தனையாவது வயதிலே நிகழ்ந்தும் இருக்க வேண்டும்.
அந்த வயதில் இத்தனை விவேகமும், சாதுர்யமும் ''சீறுவோர் சீறியும்'' அதே நேரம் பெரியோரைப் போற்றியும் எத்தனை பெரிய மனிதனாக அச்சிறு வயதினிலே இருந்திருக்கிறான். தன்னை ஒரு சிறந்தக் கவி என்றுக் காண்பித்த பிறகு. தான் ஒரு சிறந்த மனிதன் என்பதையும் காண்பித்தும் இருக்கிறான்.
அவனின் பார்வை அவரின் வயதிலே தான் இருந்திருக்கணும் செயலில் இருந்திருக்காது; இருப்பதாக கொண்டாலும்.. செயலுக்கு முன்னது வயதிற்கு பின்னது. இருந்தும் சூரியனில் சிறியது என்ன; பெரியது என்ன; அதன் ஒளிரும் தன்மையிலும் வித்தியாசம் காணுமோ!
வாழ்க வளர்க பாரதியின் புகழ்!
நன்றி. வாழ்க பாரதியின் புகழ்! வாழ்க பாரதம்!
பாரதியோ சின்னப்பயல்?
பார் அதி போற்றும் சின்னப் பயிலகம் தானே!!
Post a Comment